தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கற்பதும் கசடும் - வழிப்போக்கன்


நாம் இக்கட்டுரைத் தொடரில், மன அழுத்தம் நிறைந்த தற்கால மனப்பாடக் கல்விக்கு மாற்று ஏதும் உள்ளதா என்ற தேடலில் ஈடுபட்டுள்ளோம். சென்ற கட்டுரையில், கடவுக் கல்விக்கும் (qualification), கடைகாற் கல்விக்கும் (education) உள்ள வேறுபாட்டைப் பார்த்தோம். கல்வியின் குறிக்கோள் பொருள் ஈட்டுவதாகவே உள்ளது என்பதையும் ஒத்துக் கொண்டோம். நோக்கம் இதுவாய் இருக்கையில், கடவுக் கல்வி என்பது நல்ல வேலை பெற்றுத் தரும் துருப்புச் சீட்டாக உள்ளது. மேலும், மேலை நாட்டவரிடம் நம்மை விடச் செல்வம் அதிகமாக உள்ளதால் அவர்களிடம் கூலி வேலை செய்ய ஆங்கிலம் இன்றியமையாததாகி விடுகிறது. எனவே ஆங்கிலக் கல்விக்கு குமுகத்தில் பெரும் மரியாதை ஏற்பட்டு உள்ளது. இதன் எதிர்மறை விளைவாக நல்ல‌ தமிழ் கற்பதோ, பேசுவதோ ஒரு அவச்செயலாகி வருகிறது. மாதம் ஒருவராவது தாளாண்மையில் தமிழ் கடினமாக உள்ளது என்ற குற்றச்சாட்டை எழுப்புகின்றனர். ஆனால் அதே வாசகர்கள், ஆங்கில அகராதியை விலை கொடுத்து வாங்கிக் கடினமான சொற்களின் பொருள் தேடிக் கட்டுரைகளைப் படிப்பதைப் பெருமையாக எண்ணுகின்றனர்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட என் நண்பர்கள் பலரும் -அவர்களின் குழந்தைகளும்!-எனக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது என்றோ, தமிழ் எனக்குக் கடினம் என்றோ ஆங்கிலத்தில் சொல்வதைப் பெருமையாக எண்ணுகின்றனர். தாய்மொழியைத் தெரியாதது தாயைத் தெரிந்து கொள்ளாதது போன்ற ஒரு பெரும் இழிவன்றோ? இதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது? இதே போல் கணினிப் பொறியாளர்களாக வேலை செய்யும் பலரும் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களையும் அதன் தட்ப,வெட்ப மாறுதல்களையும், அவற்றின் நகரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். ஆனால், விழுப்புரம் எங்கு இருக்கிறது என்றோ, பிள்ளையார்பட்டி எந்த மாவட்டத்தில் இருக்கிறது என்றோ 98 விழுக்காடு பேருக்குத் தெரியாது.

இப்படி நாமே நம்மை விரும்பித் தாழ்த்திக் கொள்ளும்போது நம்மை மேலை நாட்டோர் ஏறி மிதித்துப் போவதில் என்ன ஆச்சரியம்? முதலில் நமக்குத் தன்னம்பிக்கை மிகவும் தேவை. ஆங்கிலம் தெரியாததில் எந்தக் கேவலமும் இல்லை - வளர்ந்த வசதியான நாடுகளான பிரான்ஸ், ஜப்பான், சீனா ஆகிய நாட்டவர் அடிப்படை ஆங்கிலம் தெரியாமலே மிக நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்நிய நாடுகளுடன் வேலை, வாணிபம் போன்றவற்றில் ஈடுபடும் போதுதான் ஆங்கிலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஒரு அமெரிக்க டாலர் 65 ரூபாயாகவும், ஒரு யூரோ 71 ரூபாயாகவும் இருக்கும் வரை, நாம் பொருள் ஈட்ட அந்நியருக்குக் கூலி வேலை செய்யப் போட்டியிடும் வரை ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்யும்.

எல்லாத் தொழிலுக்கும், தொழிலில் வேலையாளாய் இருப்பதற்கும் பிற மனிதர்களுடன் பணியாற்ற வேண்டும். இதில் அவையத்து முந்தியிருப்ப வேண்டுமாயின் மொழிவன்மை மற்றும் எண்கணிதம் இரண்டும் மிக அவசியம். இதைத்தான் "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்" என்றனர். வள்ளுவரும்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

என்றார்.

எனவே அடிப்படைக் கல்வி என்பது முதலில் இலக்கணம், கணக்கு இரண்டையும் கற்றுத் தர வேண்டும். இது தாய்மொழியில் இருப்பது மிக இன்றியமையாதது. தமிழில் இலக்கணமும், வாய்ப்பாடும் கற்றுத் தராத கல்வி முற்றும் வீணே. எழுவாய், பயன்நிலை, செயப்படுபொருள் கற்ற பின்னரே subject, object போன்ற ஆங்கில இலக்கணம் கற்க வேண்டும் - அதுவே பசுமரத்து ஆணி போல் பதியும். "காலே அரைக்கால் காசுக்கு நாலே அரைக்கால் வாழைக்காய் என்றால் காசுக்கு எத்தனை வாழைக்காய்?" என்று என் தந்தை எனக்கு வாய்வழியாய் அளித்த விளையாட்டுக் கணிதக் கல்வி இன்னும் எனக்கு நினைவில் பசுமையாய் இருக்கிறது.

இவ்வுண்மைகள் ஒரு புறமிருக்க‌, அவ்வைக் கிழவி சொன்னது போல் பொருள் என்னும் இன்றியமையாத‌ முடிவுக்கு, கடவுக் கல்வி ஒரு வழியாக உள்ளது. டாலரில் சம்பாதிக்கும் ஆசையினால் எல்லோருமே கணினிப் பொறியாளர்களாக விழைந்து, பி.ஈ என்பது ஒரு மிகத் தலையாய கடவுச்சீட்டாகி விட்டது. அந்த பி.ஈ சேர்வது என்னும் முடிவுக்கு, 12ம் வகுப்பு மதிப்பெண் ஒரு வழியாகி, அதற்கு மனப்பாடம் ஒரு வழியாகி, அத‌னால் பிறந்ததில் இருந்தே நெட்டுருப் போடப் பழக்கும் கல்வி அதற்குப் பயிற்சியாகி, இப்படி வழிகளே முடிவாகி அதனால் முற்றும் மூளையும், சிந்திக்கும் ஆற்றலும் மழுங்கி விட்ட அவல நிலைக்கு நாம் நம் குழந்தைகளைச் சிறைப்படுத்தி விட்டோம். எல்லாக் குமுகத் தளைகளையும் போல், இம்மாயக் கட்டுக்கு விடுதலையும், விடையும் புரிதலிலேயே இருக்கிறது.

முதலில் சில உண்மைகளை நாம் அலச வேண்டும். நல்ல வருவாய்க்கு, நல்ல வேலை என்று அழைக்கப்ப‌டும் பெருநிறுவன வேலை தேவையா? அந்த "நல்ல" வேலைக்கு, நல்ல படிப்பு என்றழைக்கப் படும் பி.ஈ தேவையா? அந்த "நல்ல" படிப்பிற்குப் பிறந்ததில் இருந்தே ஆங்கிலத்தில் நெட்டுருப் போட்டு மூளையை மழுக்கும் மடமைப் பள்ளிக் கல்வி தேவையா? இந்தப் படிகள் எதுவுமே நிரூபிக்கப் படாதவைதாம். நம் ஊகங்களே. உண்மை என்னவெனில், கடைகால் கல்வி வலுவாக இருந்தால், எந்த வயதில் வேண்டுமானாலும் நாம் என்ன தொழில் செய்ய விரும்புகிறோமோ அந்தத் தொழிலைச் சில வருடங்களில் கற்றுக் கொண்டு விற்பன்னர் ஆகி விடலாம். பின்னர் கடவுக் கல்வியானவற்றை அஞ்சல் கல்வி மூலம் எளிதாய்ப் பெற்று விடலாம். எடுத்துக் காட்டாக பள்ளிக்கே செல்லாத ஒரு சிறுவன், MBA Marketing என்று அழைக்கப்ப‌டும் சந்தை மேலாண்மைப் படிப்பை ஒரு இளைஞன் கற்க விரும்பினால், நேராக எட்டம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுப் பின்னர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பதினொன்றாம் வகுப்பில் தான் விரும்பிய பள்ளியில் சேர இயலும். அல்லது இதே போலப் பன்னிரண்டாம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுக் கல்லூரியில் சேர இயலும்.

இதற்கு ஐந்து முதல் ஏழு வருடத்தின் ஓய்வு நேரம் மட்டுமே தேவை. நாம் இப்போது செய்வது போல் 17 வருடங்கள் வாழ்க்கையை அடமானம் வைக்க வேண்டியதில்லை. பெற்றோர்களும் கடன் வாங்கிக் கல்லூரிக்கும் பள்ளிக்கும் அனுப்பத் தேவை இல்லை.

கல்வியில் அடிப்படை இலக்கணம், கணக்கிற்குப் பின் பொது அறிவும், மொழிவன்மையும் இருந்தால், எந்தப் படிப்பை வேண்டுமானாலும் நாம் தேர்ந்தெடுத்து வெகு விரைவில் அதில் விற்பன்னன் ஆக இயலும். இதற்கு எண்ணற்ற நூல்களை மனனம் செய்வது மடமையே - இது நம் தன்னம்பிக்கை இன்மையையே காட்டுகிறது. இதைத்தான் வள்ளுவர்

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்

என்றார்.

இன்னொரு நடைமுறை நிதர்சனம் என்னவென்றால், பெருநிறுவனங்களில் கல்விக்கு வேலையளிப்பதில்லை; நம் திறமைக்கே வேலை அளிக்கிறார்கள். இது பெரும்பாலும் கணினி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு நன்றாகவே பொருந்தும்.

எல்லாம் சரி, வீட்டிலேயே பாடம் கற்றால் குழந்தைகளுக்குப் பிற மனிதர்களுடன் பழக இயலாமலே போய்விடுமே என்ற நியாயமான கேள்வி எழும். குழந்தைகளை வீட்டிலேயே வைத்துக் கொண்டு வளர்ப்பது ஒரு சரியான வளர்ப்பு அல்ல என்பதே என் அனுபவம். பிற குழந்தைகளுடன் பேசி, சிரித்து, விளையாடி, உடல் அலுக்கத் திரிவதே அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. மேலும் தனியாக இருக்கும் குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டி முன்னும், கணினி முன்னரும் பெருமளவு பொழுதைக் கழித்துப் பழகி விடுவார்கள். தனிமையில் வளர்ந்தால் தன்னம்பிக்கை குறைந்து விடும்; பிற குழந்தைகள் ஏளனம் செய்வார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் விளையாட்டு என்பதே முற்றிலும் இல்லாமல் போய்விட்டது - குறிப்பாக நகரங்களில். நான்கு வயது முதலே போட்டியும், மதிப்பெண் எடுக்க வேண்டிய வலுக்கட்டாய‌மும், பொறாமையும், வீட்டுப் பாடமுமாய் இக்காலக் குழந்தைகளைப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாகவே இருக்கிறது. இதற்கென்ன தீர்வு?

இரண்டு தீர்வுகள் நடைமுறையில் சாத்தியம்:

1. இதே போல் அண்மையில் நான்கைந்து குழந்தைகளைச் சேர்த்துக் கொண்டு அவர்களைத் தனிக் கல்வி கற்பிக்கலாம். இது எல்லாராலும் செய்யக் கூடியதல்ல. நம்முடன் இந்தக் கோமாளிப் பாதையில் யார் நடக்கத் துணிவர்?

2. அருகில் உள்ள அரசுப் பள்ளிக்கு நம் பிள்ளைகளை அனுப்பலாம். தற்போது பொருளாதாரத்திலும், சமூகத்திலும் பிற்படுத்தப் பட்டவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இதனால் நடுத்தட்டு மக்களும், நடுத்தட்டுடன் சமமாய்க் கருதப்பட வேண்டும் என்று விரும்பும் கீழ்த்தட்டு மக்களும் ஆங்கிலத் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளில் நன்கு தேர்ந்தெடுக்கப் பட்ட ஆசிரியர்கள்தான் பாடம் நடத்துகிறார்கள். அதில் குழந்தைகளைச் சேர்ப்ப‌து எவ்விதத்திலும் குறைந்ததல்ல. வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளி, குறைந்த அளவு அழுத்தம், போட்டி போன்றவற்றுடன் ஓரளவு பாரம் குறைந்த கல்வி முறையில் படிக்க வைப்பது நல்லதே.

இதைப் பற்றிப் பேசும்போதே, கல்வி முறை மிகவும் சீர்குலைந்து விட்டது, நம்மால் இதை மாற்ற இயலாது என்ற சலிப்புத் தோன்றுகிறதல்லவா? இச்சலிப்பு நமக்கு மட்டும் உரித்தானது அல்ல. சென்ற நூற்றாண்டில், இன்று யாவரும் காப்பியடிக்கத் துடிக்கும் அமெரிக்காவில், ஜான் ஹால்ட் (1923 - 1985) என்னும் ஒரு மிகச் சிறந்த சிந்தனையாளர் இருந்தார்.

இவர் அப்போதைய அழுத்தம் நிறைந்த அமெரிக்கப் பள்ளித் திட்டத்தைச் சீர்திருத்த எண்ணி முயன்று தோற்றுப் பின் "பள்ளி என்பது குழந்தைகள் மூடர்கள் ஆகும் இடம்" என்று அறிவித்தார். பள்ளியின்மை (unschooling) என்ற கருத்தை உருவாக்கிப் பிரபலப் படுத்தினார். இவர் எழுதிய "குழந்தைகள் எப்படித் தோற்கிறார்கள்" (How children fail) மற்றும் "குழந்தைகள் எப்படிக் கற்கிறார்கள்" (How children learn) ஆகிய இரு நூல்களும் மிகவும் புகழ்பெற்றவை - கல்வியில் மாற்றுச் சிந்தனைக்கு வித்திட்ட புரட்சியாளர்களில் ஹால்ட் முக்கியமானவர். இவர் எழுத்துக்களில் சிலவற்றையும், சிந்தனைகளையும் பற்றி வரும் இதழ்களில் காண்போம்.

(தொடரும்)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org