தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

சோலை இயக்கம் - குமரப்பா வழியில் - ராம்


பசுமையாளர் சங்கமம் என்ற கருத்தரங்கம் வேலூர் மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டை என்ற ஊரில் அமைந்துள்ள டாக்டர். ஜே.சி. குமரப்பா கிராமத் தொழில் சோலை என்ற நிறுவன‌த்தில் 2015, அக்டோபர் 19, 20 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இதை ஒருங்கிணைத்தவர் சோலை இயக்கத்தின் தலைவர் திரு. ஆர்.டி. ராஜன் அவர்கள். இதில் தற்சார்பு இயக்கத்தின் சார்பாக பாமயன், ராம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் முதலாக நூல் வெளியீடு நடைபெற்றது. தலைமைஉரையாக முனைவர் ம.பா. குருசாமி உரையாற்றினார். நூல் பெற்றுக் கொண்டு முனைவர் பென்னட் பெஞ்சமின் பேசினார். அத்துடன் அருட்சகோதரி முனைவர் ஆனிசேவியர் உரை நிகழ்த்தினார்.

இரண்டாவதாக கருத்தரங்கம் தொடங்கியது. இயற்கையைக் காக்கும் மனிதாண்மை என்ற தலைப்பில் ம.பா.குருசாமி, முனவர் காளியப்பன் உரையாற்றினர். இதற்கு தமிழகப் பசுமை இயக்கத்தின் தலைவர் வெ. ஜீவானந்தம் தலைமை வகித்தார். அடுத்ததாக தற்சார்பு, கிராமசுயராஜ்யம் என்ற தலைப்பில் கூத்தப்பாக்கம் இளங்கோ அவர்கள், முனைவர் ஆக்னஸ் ஆகியோர் பேசினார்கள்.

அடுத்து இயற்கை வேளாண்மை என்ற தலைப்பில், பாமயன், வேலூர் இயற்கை வேளாண்மை இயக்கத் தலைவர் கோ. புருசோத்தமன், சோலை இயக்கத்தின் ஜி. மேரி ஆகியோர் உரையாற்றினர்.

பின்னர் இயற்கை வழித் தொழில்முனைவு என்ற தலைப்பில் சமன்வயா திரு ராம். காதி கிராமத் தொழில் முன்னாள் இயக்குநர் திரு. மோகன்ராஜ் ஆகியோர் உரையாற்றினர். நூறு பேர்களுக்கு மேல் கலந்துகொண்டனர். விவாதங்கள் நடை பெற்றன. இதில் "கிராமிய இந்தியாவைப் பற்றிய குமரப்பாவின் பார்வையும் அதன் இன்றைய செயலாக்கமும்" என்ற தலைப்பில் ராம் அளித்த கட்டுரை :

“மிகப்பெரும் காந்தியவாதியான திரு.ஜே.சி.குமரப்பா அவர்கள், தன் காலத்துக்கு மிகவும் முற்பட்ட ஒரு பெரும் ஞானியாக, சமூக சீர்திருத்தாளராக, பொருளியல் மேதையாகத் திகழ்ந்தார். காந்திஜியையும், அவருடன் இருந்த மிகச் சொற்ப நபர்களையும் தவிர யாருமே குமரப்பாவை முழுதாய்ப் புரிந்து கொள்ளவில்லை. இன்று அனைத்து பூமண்டலப் பகுதிகளிலும், எல்லாக் கலாசார மற்றும் கோட்பாட்டுப் பின்னணிகளிலும், அனைத்து அரசியல் மற்றும் பொருளாதார மாதிரிகள் தோற்றுக் கொண்டிருக்கின்றன - அது பொதுவுடைமையாயினும், மக்களாட்சியாயினும், முதலாளியம் ஆயினும், மன்னராட்சி ஆயினும். மனித மனவளம் மற்றும் புவியின் வளநலம் ஆகியவை சீர்குலைந்து வருவதில் இருந்தும், வாழ்வைப் பற்றி எங்கும் பெருகி வரும் ஒரு அதிருப்தியைக் கொண்டும் இதை நாம் அறியலாம்.

இதற்குப் பற்பல காரண ஆய்வுகளில் நாம் இறங்கினாலும், இவற்றின் அடைப்படைக் காரணிகள் இரண்டே - மனித மனத்தைப் பண்படுத்துவதைப் புறக்கணிப்பதும், புவியின் நலத்தை முற்றும் புறக்கணிப்பதுமே அவை. எல்லாத் தோல்விகளுக்கும் ஆணிவேர் சுரண்டலும், பிடுங்கலும் என்பதை உற்று நோக்கினால் உணரலாம். மனித இனத்தின் அழிவும், சூழலின் நிலைத்தன்மை பற்றியும் முன்னெப்போதும் இல்லாத அளவு இப்போது பேசப்படுகிறது. நவீன வாழ்முறையால் ஏற்படுத்தப் பட்டுள்ள பல அழிவுகள் (சுரங்கம், அணுஆற்றல், மரபீனி விதைகள் போன்று) மீள இயலாத ஒருவழிப்பாதை எனினும், புவியின் மீட்சிக்கும், மனித இனத்தின் மீட்சிக்கும் இன்னும் நம்பிக்கை இருக்கிறது - அந்நம்பிக்கை குமரப்பா போன்ற அறிஞர்களின் குரலுக்குச் செவி சாய்ப்பதில் மட்டுமே இருக்கிறது.குமரப்பாவின் சிந்தனைகள், 60 வருடங்களுக்கு முன் அவை எழுதப்பட்டபோது இருந்ததை விட, இப்போது இன்னும் பொருத்தமாக, தேவையாக‌ இருக்கின்றன - மேலும் நாம் இப்படியே சிந்திக்காத அழிவுப்பாதையில் செல்வோமாயின் அழிவின் விளிம்பில் நிற்கும்போது அவை இன்றைவிடவும் பொருத்தமாக இருக்கக் கூடும்!

குமரப்பா ஒரு நிலைத்த நீடித்த பொருளாதாரத்தைப் பரிந்துரைத்தார்; பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் ஒரு பொருளியல் அது; பெரும் அளவு கிராமிய வாழ்வைச் சார்ந்த ஒரு கிராம இந்தியாவை அவர் கனவு கண்டார். சிறு கிராமங்கள் பஞ்சாயத்துக்கள் ஆகி, அண்மைப் பொருளாதார வடிவமைப்பினால், அண்மையில் உள்ள நிலம், நீர், மரங்கள், கனிமங்கள் போன்ற அனைத்து வளங்களும் மண்ணின் மைந்தர்களால் அண்மையில் பயன்படுத்தப் பட்டு அவர்களின் இன்றியமையாத‌ தேவைகளை நிறைவு செய்யவே பயன்படுத்தும் திட்டம் அது. கிராமத்தின் அறிவு கிராமத்தில் பயன்படாமல் நகரங்களுக்கும் (அதன் பின்னர் வெளி நாடுகளுக்கும்) சென்று வீணாவதை அனைவருக்கும் முன்பே அவர் கண்டறிந்தார். “கிராமங்கள் தொழில் முனைவோரும், விற்பன்னர்களும் வெளியேறுவதால் மிகவும் நலிவுறுகின்றன” என்று 60 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதினார்.

உலகெங்கும் உயிர்ம வேளாண்மையை ஆதரிக்கும் இயக்கங்கள் தோன்றும் முன்னரே, 1950களிலேயே, குமரப்பா வேதி உரங்களையும், உழவு டிராக்டர்களையும் கடுமையாக எதிர்த்தார். விளைநிலப் பயன்பாட்டில் உள்ள தவறான கொள்கைகளை அவர் அன்றே கண்டறிந்தார். பணப்பயிர்கள் என்று அழைக்கப்படும் கரும்பு, புகையிலை, சணப்பை, பருத்தி, அவுரி போன்றவை உண்மையில் பிரிட்டனின் தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருட்கள் என்றும், அவற்றை விளைவிக்க நம் விளைநிலங்களைப் பயன்படுத்தி விட்டுப் பின் உணவுப் பஞ்சம் ஏற்படுவதும், அதனால் இறக்குமதி செய்வதும் அண்மைப் பாமர மக்களைப் பட்டினி போடும் செயல் என்று மிகத் தெளிவாகப் பலமுறை நேரு அரசை எச்சரித்து எழுதியுள்ளார். உழவனின் வறுமைக்கு உண்மையான காரணி, விளைநிலத்தின் தவறான பயன்பாட்டால் அவன் தொழிற்சாலைகளுக்குக் கச்சாப் பொருட்கள் விளைப்பதே என்று அவர் அன்றே உணர்ந்திருந்தார் - 60 ஆண்டுகள் தொடர்ந்தும் இந்நிலைமை நீடிப்ப‌து நம் அவலமே!

குமரப்பா அறிவியலுக்கோ, தொழில்நுட்பத்திற்கோ எதிரியாய் இருக்கவில்லை; எனினும் அறிவியல் என்பது இயற்கையை அடக்கி ஆள முயலாமல், இயற்கையுடன் இசைந்து வேலை செய்யும்போதுதான் பொருள் உள்ளதாகிறது என்று முதன் முதலில் கூறியவர் அவர்தான். வங்கத்தைச் சேர்ந்த பொறியியல் மேதை சதீஷ் சந்திர தாஸ் குப்தாவின் அறிவியல் முயற்சிகளைக் குமரப்பா மிகவும் பாராட்டி இருக்கிறார். அகில இந்திய கிராமத் தொழிற்சாலைகள் என்னும் அமைப்பை உருவாக்கி அதில் அயராது பாடுபட்டார் குமரப்பா; அவர் அதில் உழைப்பாளியின் சிரமத்தைக் குறைக்கவும் அதே சமயம் அவரின் தொழில் திறமையைப் பாதுகாக்கவும் எண்ணற்ற கருவிகளைக் கண்டறிந்தார்.

உழைப்பாளியின் வேலையைப் பாதுகாப்பதும், கிராமத் தொழில்களை உருவாக்குவதும் குமரப்பாவின் திட்டங்களில் தலையாயதாக இருந்தன. சிறுவிவசாயிகளால் நடத்தப்படும் இயற்கை வேளாண்மையும், அதைச் சார்ந்த, அண்மைத் தேவைகளை உற்பத்தி செய்யும் கிராமியச் சிறு தொழில்களும் கொண்ட‌ தற்சார்பான கிராமங்களைக் குமரப்பா பரிந்துரைத்தார். கிராம சுயராச்சியம் என்பது அவருக்கு ஒரு கனவல்ல - நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு தீர்வு - உண்மையில் ஒரே தீர்வு!

தற்போது சூமாக்கர், வெண்டெல் பெர்ரி, ஹெலெனா நார்பர்க்-ஹாட்ஜ் , காலின் ட்ட்ஜ் போன்ற பல மேலைநாட்டு அறிவியலாளர்களும், பொருளியல் அறிஞர்களும் மையப் பொருளாதாரத்தில் இருந்து மீண்டு, தற்சார்பான கிராம வாழ்வையும், அண்மைப் பொருளாதார மாதிரிகளையும் உலகின் பிரச்சினைக்குத் தீர்வாகப் பரிந்துரைக்கின்றனர். ஆனால் இதன் நேர் எதிராக, இக் கருத்துக்களைப் பலவாயிரம் வருடங்களாக நடைமுறைப்படுத்திய நாமோ, “பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்படுத்துதல்” என்ற மேல்நாட்டு மாதிரியைக் கடைப்பிடித்து பெரும் ஆற்றல் பசியில் நம்மிடம் இருக்கும் வளங்களான நதிகள், நிலப்பரப்பு, காடுகள், இமயமலைத்தொடர், மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற விலைமதிக்க ஒண்ணாத செல்வங்களைக் காவு கொடுத்து வருகிறோம். நாம் செல்லும் திசையை மறுபரிசீலனை செய்து, பாதையை மாற்றிக் குமரப்பா கூறிய கிராமிய வாழ்முறையைக் கைப்பிடித்தால் நாம் இப்போதும் வென்று விடலாம்.

ஆனால் இதை எப்படிச் செயலாக்குவது? எல்லோரும் மண்குடிசைகளுக்கும், மாட்டு வண்டிகளுக்கும் திரும்பி விடமுடியுமா? இங்குதான் நாம் சூமாக்கர் சொன்ன பௌத்தப் பொருளியலில் இருந்து சில பாடங்களைச் செயலாக்கி ஒரு நடுப்பாதையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கிராமங்களைப் பாதுகாத்துப் புதுப்பிப்பது எப்படி? தற்போதைய இந்தியாவில் 50% மக்கள் 25 வயதிற்கு உட்பட்டவர்கள். எனவே கிராம முன்னேற்றம் என்பதற்குக் கிராமத்து இளைஞர்களைக் கிராமத்திலேயே இருத்துவது மிக முக்கியம். இதற்குத் தேவை கிராமத்தில் வேளாண்மை சார்ந்த சிறுதொழில்கள் மற்றும் தொழில்முனைவோர். இவற்றை எவ்வாறு உருவாக்குவது? சிறுதொழில் என்பதை எவ்வாறு கண்டறிவது? இதற்கு இரண்டு முக்கியக் குறியீடுகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

1. ஒரு வேலை உருவாக்கத் தேவைப்படும் முதலீட்டு லட்சங்கள்

2. ஒரு வேலைக்கு ஓர் ஆண்டிற்குத் தேவைப்படும் ஆற்றல்

இவ்விரு குறியீடுகளும் குறைவாக இருந்தால் அத்தொழில் நல்ல தொழில், வந்தனைக்கு உரிய தொழில். மிக அதிகமாக இருந்தால் அது நிந்தனைத் தொழில் - அழிவையே உருவாக்கும். உதாரணமாக 4300 கோடி ரூபாய் முதலீட்டில், 460 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்படும் ஒரு பன்னாட்டுக் கார் தயரிப்பு நிறுவனம் 4300 வேலைகளை மட்டுமே உருவாக்குகிறது! இதில் முதல் குறியீடான 100! அனைத்துமே இயந்திரங்களால் செய்யப்படும் ஆற்றல் பசியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தற்போது மைய உற்பத்தி முறைமையில், சேவைப் பிரிவில் ஒரு வேலை உருவாக்க 10 லட்சம் ரூபாய் முதலீடும், உற்பத்தித் துறையில் 1 கோடி முதலீடும் தேவைப் படுகிறது. இன்றைய கால கட்டத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஒரு வேலை உருவாக்க முடியுமா?

இக்கேள்விக்கு விடை காண தற்சார்பு இயக்கம் 4 சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. இயலும் என்று எங்கள் சிறு அளவில் நிரூபித்து உள்ளோம்.

அவையாவன:

1. துலா ஆடைகள்

இது ஒரு லாப நோக்கற்ற பருத்தி உடை தயாரிக்கும் தொழில். இயற்கையாய் விளைவிக்கப்பட்ட‌ மானாவாரிப் பருத்தியை உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்து, அது கையால் நூற்கப்பட்டு, நெசவு செய்யப்பட்டுப் பின்னர் இயற்கைச் சாயம் பூசப்படுகிறது (வேதிப் பொருட்கள் இன்றி). பின்னர் இத்துணி வகைகள் துணியாகவும், சட்டை, ஜிப்பா போன்ற உடைகளாகவும் தைத்து விற்கப்படுகின்றன. உற்பத்தியின் அனைத்துச் செயல்களும் சூழல்கேடு அற்றவையாகவும், குடிசைத் தொழில்களில் செய்யப் படுபவையாகவும் உள்ளன. (இது ஒரு மிகச்சிறந்த பகுத்துண்ணும் மாதிரி - இதனால்தான் காந்தியும், குமரப்பாவும் ராட்டையைச் சார்ந்து சிறு தொழில்களும் கிராம மலர்ச்சியும் இருக்க வேண்டும் என்றனர்).

இத்தொழிலுக்கான மொத்த முதலீடு: 25 லட்சம்

வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம்: 50 உழவர்கள், 50 நூற்போர், 15 நெசவாளர்கள், 5 இயற்கைச் சாயம் பூசுவோர் மற்றும் 5 தையற் கலைஞர்கள் . மொத்தப் பயனாளிகள் - 125

2. இயற்கை விவசாயிகளின் சந்தை

சென்னையைச் சார்ந்துள்ள இத்தொழில் முனைவு இயற்கை விவசாயிகளிடம் பொருட்களை வாங்கி அதை நுகர்வோரிடம் வினியோகம் செய்யும் ஒரு வாணிபம். லாப நோக்கற்ற இம்முனைவில் 15 கடைகள் உள்ளன. தலைமைக் கடை அடையாரில் உள்ளது. இதில் 7 பேர் வேலை செய்கிறார்கள். இவை தவிர 15 கடைகளில் 45 பேர் வேலை செய்கிறார்கள். மாதம் 15 முதல் 18 லட்சம் வரை இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப் படுகின்றன. 100 இயற்கை விவசாயிகளிடம் இருந்து பொருட்கள் நேரடியாகக் கொள்முதல் செய்யப் படுகின்றன.

முதலீடு: 25 லட்சம்

வேலைவாய்ப்பு : 52 பேர்

பயனாளிகள் : 100 விவசாயிகள்

3. பூர்ணா கிராமிய வேலைவாய்ப்பு முனைவு

சீர்காழியைச் சார்ந்த இத் திட்டம், இரண்டு செயற்பாடுகளை உள்ளடக்கியது

1. நெல் விவசாயிகளை இயற்கை வேளாண்மைக்கு ஊக்குவிப்பது விவசாயிகளுக்கு இயற்கைப் பயிற்சி அளித்து, விதைகள், மண்புழு போன்றவற்றை இலவசமாகக் கொடுத்து அதன் பின்னர் அவர்களிடம் இருந்து இயற்கை முறையில் விளைந்த நெல்லை 50% முதல் 80% வரை கூடுதல் விலை கொடுத்துக் கொள்முதல் செய்து அதைப் பல மாதங்கள் இருப்பு வைத்து அரிசியாக அரைத்து நுகர்வோரிடம் விற்கப் படுகிறது.

2. இயற்கைத் தேங்காயைக் கொள்முதல் செய்து கொப்பரை தயாரிப்பது 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் செய்யப் படும் இத்தொழில் , 10 பேருக்கு வேலை வாய்ப்பும், 20 விவ‌சாயிகளுக்கு நிரந்தர வருமானமும் தருகிறது.

4. சிரீராம் உணவுகள்

பொள்ளாச்சி ஆனைமலை வட்டத்தில் செயல் படும் இச்சிறுதொழில் ஒரு இயற்கைச் செக்கு. 3 HP மோட்டரிலேயே இய‌ங்கக் கூடிய இவ்வெண்ணை ஆலை, இயற்கை எண்ணையை மட்டுமே தயாரிக்கிறது. இயற்கைத் தேங்காய், எள், நிலக்கடலை போன்றவற்றைக் கொள்முதல் செய்து சீராக, மெதுவாக‌ இயங்கும் செக்கில் எண்ணை தயாரித்து விற்கப் படுகிறது. 12 லட்சம் முதலீட்டில் துவங்கப்பட்ட இச்சிறு தொழில் 15 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 விவசாயிகள் இதன் மூலம் பயன் அடைகிறார்கள்.

முடிவுரை

இன்று நம் நாட்டிற்கு உடனடித் தேவையான 30 கோடி வேலைகளை மையப்படுத்தப் பட்ட‌ பொருளதாரத்தாலோ, அந்நிய முதலீட்டாலோ உருவாக்க இயலாது. இம் மேம்படுத்துதல் மாதிரியைத் துரத்தி ஓட்டாண்டியாகி இருக்கும் கிரக்க நாட்டைப் பார்த்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். சந்தைச் சக்திகள் என்னும் எரி முன்னர் வைத்தூறு போல நம் இளைஞர்கள் அழியாது இருக்க வேண்டுமானால், வருமுன்னர்க் காப்போராய் நாம் காந்தி, குமரப்பா காட்டிய கிராம சுயராச்சியத்தை நோக்கிச் செல்ல வேண்டும். இதற்கு முதல் படி கிராமம் சார்ந்த‌ சிறு தொழில்களே. இவை சாத்தியம் என்று தன்னால் இயன்ற‌ அளவு தற்சார்பு இயக்கம் செயல்படுத்திக் காட்டியுள்ளது. அரசு தன் கொள்கைகளை மாற்றிக் கொண்டு கிராம மறுமலர்ச்சியைத் தீவிரமாகக் கைக்கொள்ளாவிடில் பின்னர் கிராமம், நகர‌ம் எல்லாமே விரைவில் திருவோடு ஏந்த வேண்டியதுதான்! “

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org