தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கடை விரித்தால் கொள்வாருண்டு - அனந்து


தற்போது, தாராள மயமாக்கத்தின் பின், உணவு என்பது ஆலைமயமான உற்பத்தியை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இதனால் உணவை உற்பத்தி செய்யும் உழவன் தன் உற்பத்தியை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டி வருகிறது. உணவை வாங்கும் நுகர்வோரோ மிக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. மேலை நாடுகளில் பதப்படுத்த‌ப் படாத இயற்கை உணவை விற்பதோ, வினியோகம் செய்வதோ தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதும்படி சட்ட திருத்தங்கள் தொடர்ந்து செய்து வரப் படுகின்றன. (எடுத்துக் காட்டாக அதிவெப்பத்திற்குக் காய்ச்சாத பாலை விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும்).

ஆலைமயமான உணவில் உள்ள தீமைகளை நாம் 'அடிசில் பார்வை' மற்றும் 'அடிசில் தீர்வு' தொடர்களில் பார்த்து வருகிறோம். இச்சூழலில், உழவர்களுக்கு ஒரு நல்ல விலை கிடைக்கவும், நுகர்வோருக்கு 100% இயற்கையான உணவுகளை வினியோகம் செய்யவும் லாப நோக்கற்ற (அல்லது அளவான லாபத்தை நோக்கிய) சந்தை முயற்சிகள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. முன்பே தாளாண்மையில் கூறியது போல் பண்டை வாணிப முறையில் நல்லுறவு நிறைந்த வணிகம், பெரும் லாபமும் பேராசையும் இல்லாத சிறு வணிகம் இருந்தது. இன்று பள்ளிகள் முதல் மருத்துவம் வரை எல்லாவற்றிலும் தவறான மனிதர்கள், தவறான வழிமுறைகள் வந்துள்ள நிலையில் இயற்கை அங்காடிகளிலும் தவறானவர்களும் தவறுகளும் இருக்கத்தான் செய்யும். நாம் தான் நமது விழிப்புணர்வின் மூலம் பிரித்தறிய வேண்டும்.

அமெரிக்க (சந்தை) ஆளுமை எண்ணத்துடன் வந்த விளம்பரம் சார்ந்த நவீன வாணிப உத்திகள், பொதுவாக எதைப்பற்றியும் கவலைப்படாமல், அறியாமையும், சோம்பலும், குறுகிய சுயநலமுமாய் இயங்கும் சராசரி மானுடர்கள், இவையே இந்நிலைக்குக் காரணம். நமது பாரம்பரிய சிறிய வியாபாரம், அண்மை பொருளாதாரம், ஊரக வளர்ச்சி இவை எல்லாவற்றையும் விட்டு இன்று விளம்பரங்களும் கம்பனிகளும் நாம் என்ன உண்ண (வாங்க) வேண்டும் என்று கூறுவதை நம்பி செல்கிறோம். வாழ்கிறோம்.

நமது தாளாண்மை ஆசிரியர் கூறுவது போல்- “அண்மைப் பொருளாதாரத்தில் மைய‌ப் பொருளாதாரத்தைப் போன்ற ஒரு 'முகம் தெரியாமை' இருக்காது. எனவே ஏய்ப்பு என்பது பெருமளவில் கட்டுப்படுத்தப் பட்டதாகவே இருக்கும். உள்ளூர் சந்தையில் தக்காளி வாங்கினால் 'என்னப்பா போனவாரம் ஒரே அழுகல்?' என்று யாரும் கேட்டு விடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு இருப்பதால் வியாபார தந்திரம் ஒரு அளவோடுதான் இருக்கும். வாணிபத்தை முகமற்றதாக்குவதால் நுகர்வோருக்கு ஏற்படும் மிகப் பெரிய இழப்பு - இந்தத் தட்டிக் கழித்துப் பொறுப்பேற்காமல் விற்பனையாளர் தப்பித்துக் கொள்ள ஏதுவான சூழல்தான்.”

இந்தியா எங்கும் விவசாயிகளுடன் பணி புரியும் பல்வேறு அமைப்புகள், குறிப்பாக இயற்கை விவசாயிகளுடன் பணி புரிவோர், தங்களுக்கு நல்ல சந்தைகள் அமைவதில்லை என்று கவலைப் படுகின்றனர். வேறு பக்கம், வல்லுனர்கள் இந்த இயற்கை சந்தையானது பெரும் முதலைகள், லாப வெறி மட்டுமே கணக்கில் கொள்ளும் அரக்க கம்பனிக்கள்/முதலாளிகள் கையில் சென்று விடுமோ என்று அஞ்சுகின்றனர். இப்படிப் பொறுப்பற்ற சந்தைகள் ஒரு புறம், இன்னொரு புறம், பல விவசாயிகளும் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்ற நிலையில் நல்ல சந்தைகள் அமைத்தல் முக்கியம் அல்லவா? நெறிகளுடன், விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நியாய விலை , நஞ்சற்ற‌ தரமான பொருள், நேர்மையான வாணிபம், அறம் சார்ந்த பொருளாதாரம், இயன்றவரை அண்மைப் பொருளாதாரம் என்று 'இதயத்துடன்” சந்தை அமைய/அமைக்க முடியுமா?

இத்தேடலில் உதித்த செயல் திட்டம்தான், ஆஷா (நீடித்த நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பு) [ASHA - Alliance for Sustainable and Holistic Agriculture] அமைப்பு சென்னையில் ஏற்படுத்திய பயிலரங்கு. விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தின் முக்கியத்தை கூறுவதைப்போலவே நுகர்வோருக்கும், நகரங்களில் வசிப்போருக்கும் இயற்கை வேளாண் பொருட்கள் மற்றும் இயற்கை சந்தைகளைப் பற்றிப் பல களங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு இயற்கை சந்தைகளை பற்றிய ஒரு திறமை பகிர்தல் பயிலரங்கு ஒன்றினை சென்னையில் செப்டம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் அமைத்திருந்த‌னர். ஆஷாவின் நிறுவிய ஆர்வலரான கவிதா குருகன்டியும், ஆஷாவின் சந்தைகள் ஒருங்கிணைப்பாளரான (தாளாண்மையின்) அனந்துவும் சேர்ந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தியாவில் முதல் முறையாக, இக்கோட்பாடுகளுடன் செயல்பட்டு வரும் பல உதாரணங்களை/உதாரணர்களைக் கொண்டு வந்து பயில்விக்கச்செய்தது ஆஷா . சிறு, பெறு விவசாயக்குழுக்கள் இயங்கும் விதம், சிறு/பெரு (ரீஸ்டோர், ஓ எஃப் எம் போன்ற) அங்காடிகள், சங்கங்கள், ஊரக (இயற்கை) சந்தைகள், பெண்கள் குழுக்கள், பெரும் கூட்டுறவு சங்கங்கள், வெற்றிகரமாகவும் நெறிமுறைகளுடனும் இயங்கும் சில குழுக்களின் நிறுவனர்கள் அனைவரையும் கூட்டி வந்து, அவரவர் அனுபவங்களைப் பகிரச்செய்தது ஆஷா.

இப்பயிலரங்கம் முற்றிலும் நுழைவுக் கட்டணத்தைக் கொண்டே சிக்கனமாக, தற்சார்பாக, நடத்தப் பட்டது. மூன்று நாட்களும் நம் தமிழகத்தின் சிறுதானியங்களைக் கொண்டே பல்சுவை உணவு பரிமாறப்பட்டது. பல்வேறு உணவு முறைக்குப் பழக்கப்பட்ட பல்வேறு மாநிலத்தவரும் அதை மிகவும் பாராட்டி உண்டது ஒரு சிறப்பு. மும்பை ஐ.ஐ.ட்டியில் இருந்து வந்திருந்த ஒரு முனைவர் ” இங்கு பயிலரங்கமா, பாரம்பரிய உணவா எது சிறப்பாக இருந்தது என்று என்னால் முடிவு செய்ய இயலவில்லை” என்றார்!

பஞ்சாப், ஹரியான, ஜார்கண்ட், வங்காளம், கர்னாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, பாண்டி என பல இடங்களிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். 3 நாட்களின் இறுதியில் அனைவரும் தங்கள் ஊரில் நல்ல சந்தைகள்- இதயத்துடன் நிறுவுவதாக உறுதியுடன் சென்றுள்ளனர். இது நடந்தால் ஆஷா வேளாண் சமூகத்திற்கும் நுகர்வோருக்கும் ஒரு பெரும் பணி ஆற்றியதாக இருக்கும். ஒரு அரிய பகிர்வு பயிலரங்கு/ பட்டறை இது. சக்தியளிக்கும் சக்தியூட்டும் ஒரு பயிலரங்கமாக இது திகழ்ந்தது. எல்லோரும் மன நிறைவுடனும், மதி நிறைவுடனும் சென்றனர். நாடெங்கும் பல நல்ல சந்தைகளை எதிர்நோக்குவோம்!

பின் குறிப்பு

இந்த இயற்கை சந்தைக்கான பயிலரங்கு முடிந்த சில நாட்களிலேயே, பஞ்சாபிலிருந்து வந்திருந்த தோழர்கள் அங்கு சென்ற உடன் துரிதமாக சந்தை ஏற்படுத்தும் வேலையில் இறங்கினர். KVM என்னும் இந்த இயற்கை விவசாயக்குழுவின் நிறுவனர், உமேந்தர் தட், இந்த பயிலரங்கின் பாதிப்பு பெரியதாக இருந்ததாகவும் அதனால் உடனே செயல்பட வேண்டும் என்றும் நம்மை அங்கு அழைத்து பஞ்சாபின் பல்வேறு இடங்களிலிருந்தும் அவர்களது நிர்வாகிகளை வரவழைத்து இரண்டு நாட்கள் சிறு பயிலரங்கமும், செயல் திட்ட கூட்டமும் அமைத்து இன்று பல காத தூரம் இந்த சந்தைகான வேலைகள் கடந்து விட்டன. நமது ஓ எ ஃப் எம் (OFM) இயற்கை விவசாயிகள் சந்தையை போல் ஒரு சிறு குழு/கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படிண்டா, ஜலந்தர், சண்டிகர், லூதியானா, குருதாஸ்புர் என‌ 5 இடங்களில் உடனடியாகவும், மேலும் 5 நகரங்களில் இன்னும் 6 மாதங்களில் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி மேலும் ஒரிஸா, வங்காளம், ஆந்திரம் என்று பல இடங்களிலிருந்தும் அழைப்புகள் வந்துள்ளன. ஆக இயற்கை விவசாயிகளின் பொருள்களுக்கு, நல்ல இதய‌முள்ள நேர்மையான சந்தைக‌ள் எல்லா இடங்களிலும் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org