தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பட்டினி, பசுவதை, பருப்பு - பரிதி


பசு வதைத் தடுப்பு தொடர்பான செய்திகள் அண்மைக் காலமாக மீண்டும் பரவலாக வெளியாகின்றன. அது போலவே, பருப்பு, பயறு வகைகளின் விலைகள் வேகமாக உயர்ந்துவருவதையும் நாம் படித்தும் நேரில் கண்டும் வருகிறோம். பல லட்சம் இந்தியக் குழந்தைகள் தம் ஐந்தாவது அகவை முடியுமுன்னரே இறந்துவிடுவதும் நம்மிடையில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் அவலம். பல கோடி மக்கள் தம் புரத்தச் சத்துத் தேவையை ஓரளவு நிறைவு செய்வதற்குப் பயன்படும் உணவு வகைகள் இம்மூன்றுடனும் நெருங்கிய தொடர்புள்ளவை. இவற்றின் அரசியல் பொருளாதரப் பின்புலத்தைப் பற்றி அடுத்த சில பக்கங்களில் காணலாம்.தாளாண்மை புலால் உணவை முற்றிலும் எதிர்க்கிறது - கொள்கை ரீதியாகவும் செயல் ரீதியாகவும். எனினும் பிறர் இதை உண்ணலாம், உண்ணக் கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை. தனிமனித உரிமை என்பது தன்னாட்சியின் அடிப்படை.

பஞ்சத்திற்கும் மதவாதத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஏழைகள்!

ஐந்து அகவைக்குட்பட்ட இந்தியக் குழந்தைகளில் 43 விழுக்காட்டினர் குறையெடை உள்ளவர்களாக இருப்பதாக 2008-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. உலகிலேயே மிக வறுமையான நாடுகளில் ஒன்றென அறியப்படும் சில நாடுகளில் இந்த விகிதம் எப்படி இருக்கிறது? சோமாலியாவில் 32 விழுக்காடு, ருவான்டாவில் 11 விழுக்காடு குழந்தைகள் குறையெடை உள்ளவர்களாக இருந்தனர். நம் அண்டை நாடான பாக்கிசுத்தானில் இது 32 விழுக்காடாக உள்ளது. [2014-இல் நடத்தப்பெற்ற துரிதக் கணக்கெடுப்பின்படி இவ்விகிதம் 29 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ஆப்ரிக்கச் சராசரியான 21 விழுக்காட்டினைக் காட்டிலும் இது மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு கொடிய நிலையிலும் இந்திய நடுவண் மற்றும் மாநில அரசுகளின் கோட்பாட்டு அறிக்கைகள் சத்துப் பற்றாக்குறையைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. அவ்வளவு ஏன், அரசியல் அரங்கில் அது பேசுபொருளாகக் கூட இல்லை! 2014-இல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது சாலை வசதிகள், மின்னுற்பத்தி, தொழிற்சாலைகள் போன்றவை குறித்து நிறையப் பேசப்பட்டது. ஆனால், நரேந்திர மோடி முதல்வராக இருந்த குசராத் மாநிலத்தில் கடும் சத்துப் பற்றாக்குறை நிலவியது குறித்து அந்தத் தேர்தல் பரப்புரைகளில் யாரும் பேசவேயில்லை. அனைத்திந்தியச் சராசரியைக் காட்டிலும் குசராத்தில் குறையெடையுள்ளவர்கள் விகிதம் அதிகம். அமெரிக்க நாளிதழ் ஒன்றுக்கு 2012-இல் அளித்த நேர்காணலில் இது குறித்துப் பேசிய மோடி, அம்மாநில மக்களில் பலர் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்றார்!

புலால் உண்ணாததுதான் கடும் சத்துப் பற்றாக்குறைக்குக் காரணம் என்று அவர் 2012-இல் சொன்னபோது அதைப் பலரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இறைச்சி, குறிப்பாக மாட்டிறைச்சி, இப்போது சூடான அரசியல் களமாகிவிட்டது. மாட்டிறைச்சி உண்பதை இந்தியக் குடியுரிமையுடன் இணைத்துப் பேசினார் அரியானா மாநில பா.ச.க. முதல்வர்! மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், அரியானா, குசராத் மாநில பா.ச.க. அரசுகள் மாட்டிறைச்சி உண்பதைக் குற்றச்செயலாக்கியுள்ளன. மாட்டிறைச்சி குறித்த சட்டங்கள் பல மாநிலங்களில் ஏற்கெனவே இருந்துள்ளன. எனினும், பா.ச.க. அரசுகள் இயற்றியுள்ள சட்டங்கள் மிகக் கடுமையானவை. எடுத்துக்காட்டாக, மகாராட்டிரத்தில் ஒருவர் மாட்டிறைச்சி வைத்திருந்தாலே சிறைக்கு அனுப்பப்படலாம்; அவர் மாட்டைக் கொன்றவராக இருக்கவேண்டியதில்லை.

இந்திய அரசியல்வாணர்கள் மக்களுடைய ஊட்டச் சத்துப் பற்றாக்குறையைப் பற்றிக் கவலைப்படாதது மட்டுமன்றி, சத்து மிக்க உணவுகளைத் தடை செய்வதில் குறியாக உள்ளனர் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலுள்ளது. சுமார் எட்டுக் கோடி இந்தியர்கள் எருமை அல்லது மாட்டிறைச்சி சாப்பிடுவதாக 2014 சூன் மாதம் முடிந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்திய மக்களுக்குக் குறைந்த செலவில் புரத்தச் சத்துத் தரக்கூடிய உணவுகளில் எருமை அல்லது மாட்டிறைச்சியும் ஒன்று. அக்டோபர் மாதம் மூன்றாவது கிழமையில் கொல்கத்தாவில் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்களைக் படம் 1ல் காணலாம். இது மோடி அவர்களுக்கும் தெரிந்ததுதான். (குசராத்தில் பலர் மரக்கறி உணவு உண்பதுதான் அம்மாநிலத்தில் கடும் சத்துப் பற்றாக்குறை நிலவுவதற்குக் காரணம் என்று அவர் சொன்னதை நினைவுகூருங்கள்!) இருப்பினும், மத வாதம் காரணமாக புரத்தச் சத்து மிக்க ஓர் உணவை அவரும் அவருடைய கட்சிக்காரர்களும் தடை செய்ய விரும்புகிறார்கள். மாட்டிறைச்சி என்பது வெகுமக்கள் உணவு என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். சுமார் எட்டுக் கோடி இந்தியர்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள் அல்லது வேறு விதங்களில் பாதிக்கப் பட்டவர்கள்; குறிப்பாக, தாழ்த்தப் பட்டவர்களும் இசுலாமியரும் இதில் அடங்குவர். பருப்பு வகைகளின் விலைகள் தாறுமாறாக ஏறி வருவது இவர்களைக் கடுமையாக பாதிக்கும். மேலும், பல மாநில அரசுகள் ஏழைக் குழந்தைகளுக்குத் தரப்படும் பகலுணவில் இருந்து முட்டையை நீக்கிவிட்டன!

2008-ஆம் ஆண்டு பாக்கிசுத்தானின் சுவாட் பகுதியில் தாலிபான்கள் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க முயன்றார்கள். அப்போது உலகெங்கும் அது கடுமையாகக் கண்டிக்கப்பட்டது. ஆனால், கல்வியைக் காட்டிலும் அடிப்படைத் தேவையான உணவில் இக்காலத்துக்கு ஒவ்வாத மதவாதச் சிந்தனைகள் ஏழைகளுக்கு மிக மோசமான விளைவுகளை உண்டாக்குவதை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?

சத்துப் பற்றாக்குறையின் அரசியல்

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 2013 நவம்பர் மாதம் இந்தியக் குழந்தைகள் தொடர்பான அதிவிரைவுக் கணக்கெடுப்பு ஒன்றைத் தொடங்கிவைத்தது. ஒன்றிய நாடுகளவையின் குழந்தைகளுக்கான நிதியத்துடன் இணைந்து அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அறிக்கை 2014 செப்டம்பரில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசிடம் கையளிக்கப்பட்டது. 29 மாநிலங்களில் இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் நேர்காணல்கள் நடத்தப்பட்டன. சுமார் 90,000 சிறார்கள் மற்றும் 28,000 பதின்மஅகவைப் பெண் குழந்தைகள் ஆகியோரின் உயரம், எடை ஆகியன அளக்கப்பெற்றன.

மோடி அரசு மேற்படி அறிக்கையை வெளியிடாமல் பத்து மாதங்கள் கமுக்கமாக வைத்திருந்தது. லண்டனில் இருந்து வெளியாகும் எக்கானமிசுட்டு இதழ் இது குறித்துச் செய்தி வெளியிட்டதால் அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது. அதன் விளைவாக இந்திய அளவிலான தரவுகளைக் கடந்த சூலை மாதம் அரசு வெளியிட்டது. ஆனால், மாநில அளவிலான தரவுகளை வெளியிடவில்லை. அந்தக் கணக்கெடுப்பு துல்லியமானதா என்பது குறித்த ஐயம் இருப்பதுதான் அதற்குக் காரணம் என்றது அரசு. ஆனால், குழந்தைகள் நிதியம் இத்தகைய ஐயம் எதையும் வெளியிடவில்லை. குழந்தைகளின் சத்துப் பற்றாக்குறையைப் பொருத்தவரை கடந்த பத்தாண்டுகளில் இந்திய அளவில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் (13 ஆண்டுகள் மோடி முதல்வராக இருந்த) குசராத் மாநிலத்தில் நிலைமை அவ்வளவு சிறப்பாக இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

தீபா சின்கா எனும் ஆர்வலர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இது குறித்துக் கேட்டதற்கு அரசு ஆறு மாதங்கள் கழித்து பதிலளித்தது. தன்னிடம் இருப்பது இடைக்கால அறிக்கை என்று அதில் அரசு குறிப்பிட்டிருந்தது. ஆனால் சூலை 16 அன்று பேராயக் கட்சி முழு அறிக்கையையும் வெளியிட்டது. இந்திய அளவில் ஐந்து அகவைக்குட்பட்ட குழந்தைகளில் குறையெடை உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் 42.5 விழுக்காட்டில் இருந்து 29 ஆகக் குறைந்துள்ளது என்றும் குசராத் மாநிலத்தில் இவ்விகிதம் 44.6-இல் இருந்து 33.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. குசராத்தில் 42 விழுக்காட்டுக் குழந்தைகள் உயரம் குன்றியவர்களாக உள்ளார்கள்; 18.5 விழுக்காட்டினர் மிகக் குள்ளமானவர்களாக உள்ளனர்; 18.7 விழுக்காட்டினர் தம் உயரத்திற்கேற்ற எடை இல்லாதவர்களாக உள்ளனர். இவை இந்தியச் சராசரியைக் காட்டிலும் அதிகம். மேலும், வருமுன் காப்பதில் (தடுப்பூசி போடுதல்) இந்திய அளவில் முன்னேற்றம் காணப்பட்டது: 2009-இல் 61 விழுக்காட்டுக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. 2014-இல் இவ்விகிதம் 65.2 ஆக உயர்ந்தது. ஆனால், இதே விகிதம் குசராத்தில் 56.6-இல் இருந்து 56.2 ஆகக் குறைந்தது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான நிதி 2013 சூலையில் வெளியிடப்பட்ட திட்ட அறிக்கையில் 18,000 கோடி ரூபாயாக இருந்தது. அடுத்த ஆண்டு இது 8,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. பகலுணவுத் திட்ட நிதி 3,000 கோடியில் இருந்து 1,200 கோடியாகக் குறைந்துவிட்டது.

பருப்பு வகைகள் - உழவர்களின் வேதனையும் நுகர்வோர் கண்ணீரும்

கடந்த சில மாதங்களாகப் பருப்பு விலைகள் வெகுவேகமாக உயர்ந்துவருவது நாம் அறிந்ததே. அண்மையில் துவரம் பருப்பின் விலை கிலோ 210 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டு விலையைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிகம். வழக்கம்போலவே, தம் புரத்தச் சத்துத் தேவைக்குப் பருப்பு வகைகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் ஏழை எளியோர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோலவே, பருப்பு வகைகளை விளைவிக்கும் உழவர்களும் மோசமான பாதிப்படைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பருப்பு வணிகர்களின் கிடங்குகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 13 மாநிலங்களில் 75,000 மெட்ரிக் டன் பதுக்கப்பட்டிருந்த பருப்பு கைப்பற்றப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகப் புதை சேற்றுக்குள் சிக்குண்டுவரும் பயறு/பருப்பு வேளாண்மை இன்று எதிர்கொண்டுள்ள சிக்கல்களுக்கு இத்தகைய அதிரடிச் செயல்பாடுகள் முழுமையான தீர்வாகமாட்டா. பெரும் எண்ணிக்கையிலான சிறு குறு உழவர்களுக்கு முதன்மையான வாழ்வாதாரமாகவும் ஏழை எளியோருடைய புரத்தச் சத்துத் தேவையை நிறைவு செய்வதில் இன்றியமையாப் பங்கு வகிப்பதாகவும் இருந்த பயறு வகைகள் இன்று அவ்விரு வகுப்பினருக்கும் எட்டாத இடத்திற்குச் சென்றுவிட்டன.

இந்தியாவில் ஐந்து வகைப் பயறுகள் விளைகின்றன. (அவற்றில் துவரம்பருப்பும் ஒன்று.) அவற்றின் மொத்த விளைச்சலில் முக்கால் பங்கு நவம்பர் - ஏப்ரல் பருவத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், துவரை வேனிற்காலப் பயிர். இந்த ஆண்டு விளைந்த துவரை இன்னும் சந்தைக்கு வராததும் பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரிப்பதுந்தான் துவரை விலை மிக வேகமாக உயர்ந்ததற்கு உடனடிக் காரணங்கள்.

ஆனால், பயறு வகைகளின் விலை உயர்வுக்கு வேறு அடிப்படைக் காரணங்கள் உள்ளன. இவை வருமாறு:

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பருவமழை குறைந்தமை,

அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலை அதிகம் உயர்த்தப்படாமை,

இந்திய உழவர்களின் உற்பத்தித் திறன் (குறிப்பிட்ட பரப்பளவு நிலத்தில் உற்பத்தி செய்யப்படும் அளவு) குறைவாக இருத்தல்,

இந்திய நுகர்வோர் தம் புரத்தத் தேவைக்கு வரவர அதிக அளவில் முட்டை, பால், கோழி ஆகியவற்றை நாடுதல்.

விளைதிறன் குறைவு

உலகளவில் பருப்பு உற்பத்தியில் கால் பங்கு - சுமார் 1.6 முதல் 2 கோடி டன் - இந்தியாவில் விளைகிறது. இந்தியாவில் பருப்பு விளைச்சல் ஒரு ஏக்கருக்கு 240 முதல் 320 கிலோ என்ற அளவில்தான் உள்ளது. வளரும் நாடுகளில் இது மிகக் குறைந்த அளவாகும். விளைதிறன் மியான்மரில் இதைவிட இரண்டு மடங்கும் எகிப்தில் ஏறக்குறைய ஐந்து மடங்கும் அதிகமாக உள்ளது. பருப்பு வகைகள் அதிகம் விளையும் பதினொரு நாடுகளில் பருப்பு விளைதிறன், விளைநிலப் பரப்பு, உற்பத்தி ஆகிய விவரங்கள் முறையே படங்கள் 2, 3, 4 ஆகியவற்றில் தரப்பட்டுள்ளன.

மழையைச் சார்ந்திருத்தல்

இந்தியாவில் பருப்பு வகைகள் பயிரிடப்படும் விளைநிலங்களின் மொத்தப் பரப்பில் பதினாறு விழுக்காடு நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெற்றவை. ஏனைய நிலங்கள் மழையை நம்பிய (வானவாரி) நிலங்களாகும். வரவர மழைப் பொழிவு தாறுமாறாக இருப்பது (படம் 5) நம் உற்பத்திக் குறைவுக்கு முதன்மையான காரணிகளில் ஒன்றாக உள்ளது. 2010-11-ஆம் ஆண்டு உயர்ந்த அளவாக ஒரு கோடியே எண்பத்திரண்டு லட்சம் டன் பருப்பு வகைகள் உற்பத்தியாகின. அதன் பின்னர் உற்பத்தி தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக உற்பத்தியைக் காட்டிலும் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்போது மொத்தத் தேவையில் ஏறக்குறைய பதினைந்து விழுக்காடு (சுமார் முப்பது லட்சம் டன்) இறக்குமதி செய்யப்படுகிறது. 2014-15-இல் நாற்பது லட்சம் டன்னுக்கும் மேல் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டது. அதன் மதிப்பு 15,990 கோடி ரூபாய்கள். அதே ஆண்டில் நடுவணரசு வேளாண் திட்ட ஒதுக்கீடு 11,530 கோடி ரூபாய்களாக இருந்தது.

ஆதார விலையின் தாக்கம்

2011-12-இல் மழையளவு சராசரியைக் காட்டிலும் குறைந்தது; குறைந்தபட்ச ஆதார விலை ஆறு முதல் பத்து விழுக்காடு அதிகரித்தது. அதன் பின்னர் 2012-13, 2013-14 ஆண்டுகளில் ஆதார விலை 15-25 விழுக்காடு அதிகரித்ததன் விளைவாக உற்பத்தியும் அதிகரித்தது (பட்டியல் 1). 2014-ஆம் ஆண்டு பருவ மழை 12 விழுக்காடு குறைந்தது; ஆதார விலை நூறு கிலோவுக்கு ரூ. ஐம்பது முதல் 100 வரை அதிகரித்தது. உழவர்கள் பணப்பயிர்களுக்கு மாறுதல்

கடந்த இருபதாண்டுகளாகச் சிறு குறு உழவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; பெரு உழவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. (பயறு-பருப்பு வகைகளை விளைவிக்கும்) சிறு குறு உழவர்கள் தமக்குக் கட்டுப் படியாகும் விலைகளைப் பெற முடிவதில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளில் பணப்பயிர் உற்பத்தியாகும் நிலப்பரப்பு உயர்ந்த அளவுக்கு அடிப்படை உணவு உற்பத்திக்கென ஒதுக்கப்படும் நிலப் பரப்பு உயரவில்லை (படம் 6).

நுகர்வோர் புரத்தச் சத்துத் தேவைக்குப் பிற உணவு வகைகளை நாடுதல்

தம் புரத்தச் சத்துத் தேவைக்குப் பெருமளவு பருப்பு வகைகளைச் சார்ந்திருந்த இந்திய மக்கள் வரவர அதிக அளவில் முட்டை, கோழி, பால் முதலிய உணவு வகைகளை உட்கொள்வதும் பருப்பு விளைவிக்கும் உழவர்களை பாதித்துள்ளது; பருப்பு விலைகளையும் பாதிக்கிறது. பருப்பு வகைகள், முட்டை, கோழி ஆகியவற்றின் மூலம் சராசரி இந்தியர் உட்கொண்ட புரத்தச் சத்து நுகர்வு கடந்த 18 ஆண்டுகளில் எப்படி மாறியுள்ளது என்பதை அடுத்த மூன்று வரைபடங்கள் (படங்கள் 7-9) காட்டுகின்றன.

1999-2000 முதல் 2011-12 வரையான 12 ஆண்டுகளில் இந்திய மக்கள் தம் மொத்தச் செலவில் உணவுக்கெனச் செய்யும் செலவு குறைந்துகொண்டேவருகிறது: இது ஊர்ப்புறங்களில் 59.4-இல் இருந்து 52.9 விழுக்காடாகவும் நகர்ப்புறங்களில் 48.1-இல் இருந்து 42.6 விழுக்காடாகவும் குறைந்துள்ளது. இதை அடுத்த இரு வரைபடங்கள் (படங்கள் 10-11) காட்டுகின்றன. [இந்தத் தரவுகளுக்கான மூலம்: தேசிய மாதிரி அளவீட்டுக் கழகம்.]

அரசு தலையிடவேண்டுமா?

நாம் ஏற்கெனவே பார்த்தவாறு, பருவமழை குறைதல், குறைந்தபட்ச ஆதார விலையை அரசு போதுமான அளவு உயர்த்தாதிருத்தல், உழவர்கள் பணப் பயிர்களுக்கு மாறுதல், மக்களுடைய புரத்தத் தேவையை ஈடு செய்வதற்கு வேறு உணவு வகைகள் கிடைத்தல் எனும் நான்கு காரணங்களால் பருப்பு வகைகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துவருகின்றன. இந்நிலையைப் போக்குவதற்கு அரசு என்ன செய்யவேண்டும்? உழவர்கள் நெல், கோதுமை, கரும்பு ஆகியவற்றில் மட்டும் கவனஞ்செலுத்துவதை மாற்றும்வண்ணம் குறைந்தபட்ச விலையை அனைத்துப் பயிர்களுக்கும் தக்கவாறு நிர்ணயிக்கவேண்டும் என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அருஞ்சொற்பொருள், கலைச்சொற்கள்

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்- integrated child development plan

ஒன்றிய அரசியம் the united kingdom

ஒன்றிய நாடுகளவையின் குழந்தைகளுக்கான நிதியம்- the united nations children's fund

சத்தூட்டப்பட்ட பால் - toned milk

தேசிய மாதிரி அளவீட்டுக் கழகம் - national sample survey organization

நைசெர் niger

பதின்ம அகவைப் பெண்கள் teenage girls

பனீர் paneer

பேராயக் கட்சி the congress party

மணப்பொருள் spice

மைசூர்ப் பருப்பு masoor dal

மேற்கோள்கள்:

1. Shoaib Daniyal, “Between banned beef and expensive dal, how are poor Indians supposed to get enough protein?”, (http://scroll.in/article/765001/between-banned-beef-and-expensive-dal-how-are-poor-indians-supposed-to-get-enough-protein)

2.Ananya Sengupta, "Malnutrition glare on Gujarat", 2015 July 16 ---------------------------------------- http://www.telegraphindia.com/1150717/jsp/nation/story_32091.jsp#.VjWT8KfPFQt

3. Abhishek Waghmare, "Why tur dal is Rs 200 per kilo (and why it will be as much in 2016)", November 02, 2015 (http://scroll.in/article/766306/why-tur-dal-is-rs-200-per-kilo-and-why-it-will-be-as-much-in-2016)

4, Prachi Salve, “Beef Consumption Rises (Marginally), Indians Seek Protein”, Oct. 23, 2015, www.indiaspend.com

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org