தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கடுகில் நுழையும் கடலளவு நஞ்சு - அனந்து


சமீபத்தில் பஞ்சாபில் பல இடங்களிலும் கலவரம். விவசாயிகள் சாலை, ரயில் மறியல் செய்து ரகளை. எல்லா இடங்களிலும் கோப‌ம், விரக்தி, நட்டம். இது மட்டும் அல்ல, பல விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டனர். என்ன தான் ஆயிற்று? ஒரு சிறு வெள்ளைப்பூச்சிதான் காரணம்! இது ஒரு புற‌ம் இலையிலிருந்து சாற்றை எல்லாம் உறிஞ்சி, செடியை செயலிழக்கச் செய்து விடும். மறு புற‌ம் இலை சுருள் நோய்க்கிருமியைச்(Cotton Leaf Curl Virus) சுமந்து அதுவும் பயிரைச் சூறையாட‌ பாதிக்க (அந்தக் கிருமிக்கு) உதவும். இது பி டி பருத்தியில் மிகவும் அதிகமாக வந்து பாதித்ததனால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரை அப்படியே மடக்கி உழுது விட்டனர். ஒரு செடிக்கு 60-80 பூச்சிகள் வரை வந்து வேறு ஒன்றுமே செய்ய முடியாத நிலை. முதற்கண் பி டி விதைக்கு பெரும் செலவு, பின்னர் வேறு பல ரசாயனங்கள், பின்னர் இந்த வெள்ளைப் பூச்சிக்குப் பல‌ ஆயிரம் செலவிட்டு பூச்சிக்கொல்லிகள், என முழி பிதுங்கி வேறு வழி இல்லாமல், விவசாயிகள் பெரும் அவலத்தில் உள்ளனர். இதில் பல கோடி மதிப்புள்ள ஊழல் - அதிகாரி கைது என்று, கலப்படம் செய்யப்பட்ட போலி பூச்சிக்கொல்லிகள் வேறு. மொத்தத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் நசிவு.

அரசு பெரும் ஆவலுடன், மரபீனித் தொழில் நுட்பத்தைக் கொண்டுவந்த‌ பொழுது காசுக்கு விலை போகாத விஞ்ஞானிகளும், விவசாய ஆர்வலர்களும் இதைத்தான் எச்சரித்தனர் : “விதை மற்றும் இடு பொருள் செலவு, மற்றப்பூச்சிகளின் தாக்குதல் அதிமாகும், சுற்றுச்சுழல், நிலம் சீர் கேடாகும், பகாசுரக் கம்பனிக்கு மட்டுமே நலன். முக்கிய‌மாக பூச்சி மேலாண்மைக்கும், விளைச்ச‌ல் பெருக்கவும் நமது பாரம்பரிய விதைகளும், இயற்கை வேளாண் முறைகளும் இருந்தாலே போதும் ” என்று.

நாம் தாளாண்மையில் உலகின் முதன்மை உணவுப் பயிரான நெல் வேளாண்மை பற்றிப் “பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே” என்று பல கட்டுரைகளை வயலில் கண்ட விளைச்சல்களுடன் உண்மையாக எழுதி வருகிறோம். இதை எந்த விஞ்ஞானியும் மறுக்கவோ, எதிர்க்கவோ இல்லை. விளைச்சலைக் கூட்ட வேளாண் தொழில்நுட்ப மேம்படுத்துதலே (agronomy improvement) போதுமானது; விதைகளை மேம்படுத்துதலோ புது விதைகளுக்கான‌ ஆய்வோ (seed development and research) தேவையே இல்லை. அரசின் வேளாண் பல்கலைக் கழகங்கள் தங்கள் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், தமக்குக் கிடைக்கும் கொடைகளுக்கு (grants) செலவுக் கணக்குக் காட்டவுமே ஆய்வுகளில் ஈடுபடுகின்றன - விவசாயியின் நிலையை மேம்படுத்த அல்ல.

ஆனால் நமது அரசியல் வியாதிகளின் வியாபரமும், பேராசையும் விட்டதா? விவசாயியை, சுற்றுசூழலை, நமது ஆரோக்கியத்தைக் காவு கொடுத்த‌ன‌. இன்று அதே பஞ்சாபில் சமீபத்தில் நான் சென்ற போது பி.டி பருத்திக்கு அருகில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலங்களில் இந்தப் பூச்சி தாக்குதல் இல்லை என்பதைப் பார்த்தேன் - குறைவான செலவில் நிறைவான மகசூல்! அடுத்த சில நாட்களில், சற்றே தள்ளி, மஹாராட்டிரம் வந்தேன் . பஞ்சாப் போல அவ்வளவு வெள்ளைப் பூச்சி தாக்குதல் இல்லை என்றாலும், பல இடங்களில் பி டி பயிர்களில் மட்டும் தாக்கியுள்ளது அருகிலுள்ள இயற்கை விவசாய பண்ணைகளில் அறவே இல்லை! அரசும் விஞ்ஞானிகளும் பாடம் கற்பார்களா?

இப்படி இருக்க, நமது மத்திய அரசு என்ன செய்கிறது இப்பொழுது? தில்லி பல்கலைக்கழகம் மரபீனி மாற்றப்பெற்ற‌ கடுகு விதையைப் பொதுவணிகச் சாகுபடிக்கு விண்ணப்பித்திருக்கிறது. அரசும் தலை ஆட்டத் தயாராக உள்ளது. இது ஏதோ நாமே நமது நன்மைக்காகக் கண்டு பிடித்தது போல் நடிக்கிறார்கள். 2002ல் பல காரணங்களினால் பேயர் கம்பனியின் மரபீனிக் கடுகு நிராகரிக்கப்பட்டது. அதே காரணங்களுடன் அதே மரபீனிகளுடன், அதே விதை தான் இப்பொழுது மீண்டும் வருகிறது. GURT என்னும் Genetic Use Restriction Technology ஒரு ஆபத்தான தொழில்நுட்பம் கையாளப்படுகிறது. இது ஒருமுறை நட்ட பயிரின் விதை முளைப்புத் திறன் இல்லாமல் மலடாகப் போகும் தொழிநுட்பம்! ஆண் மலட்டுத்தன்மை உண்டாக்கக் கையாளப்பட்டுள்ள ஒரு மரபீனி, செடிகள், மனிதர்கள் மற்றும் மாக்களை பாதிக்கக்கூடும் என்று பல விஞ்ஞானிகளுமே ஐயம் தெரிவிக்கின்றனர். அதனாலேயே 2002ல் இது நிராகரிக்கப்பட்டது. இன்று அதே தொழில்நுட்பம் எவ்வாறு விவசாயிக்கு நன்மை பயக்குவதாக மாறிவிடும்?

தெற்கே எள்ளைப் போல், வட இந்தியாவின் முக்கிய எண்ணெய் வித்தானது கடுகு. நூதன சூழ்ச்சியுடன் யோசித்து, மரபீனி மாற்றக் கடுகு விதைகளை டெல்லி பல்கலைக் கழகத்தின் மூலம் கொண்டு வர இருக்கிறார்கள்! நாம் இதுவரை பார்த்தது- சாதாரணமாக‌ மொன்சான்டோவின் மரபீனி விதைகளாக இருக்கும். அந்த அந்நிய அமெரிக்க பகாசுரக் கம்பெனி எப்படி நம் விவசாயிகளையும், அவர்களது வாழ்வாதாரத்தையும், நமது விதை சுதந்திரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் என பரிதவிப்போம், கூவுவோம்! இந்த முறை அப்படிச் சொல்ல முடியாத படி நம் அன்னையின் கையாலேயே நஞ்சைப் பரிமாற பணிக்கின்றனர்! இது போதாதென்று உழவர்களின் கூட்டுறவு ஆன அமுல் நிறுவனம் இந்த மரபீனி மாற்றுக் கடுகின் எண்ணையை வினியோகம் செய்யப் போகிறது! சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்பது இதுதானோ?

எப்படி இருந்தாலும் எவ்வளவு நாள் ஒரு பல்கலைகழகம் விதைகளை வினியாகிக்கும்? எப்படியும் அதனை ஒரு/பல தனியார் கம்பனிக்கள் கபளீகரம் செய்து விடும். மேலும் இது ஒன்று வந்தால், பின்னாலேயே ஒரு பெரும் தொடரே விடுவதற்கு மொன்சாண்டோ தயார். மரபீனி மாற்றுப் பயிர்களை, உலகளவில் ஆறு நாடுகள் மட்டுமே பயிர் செய்துவருகின்றன. அதில் 5 நாடுகள் மட்டுமே சேர்ந்து 90% மரபீனிப் பயிர்களைப் பயிரிடுகின்றன! இஸ்ரேல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட முன்னேறிய நாடுகள் பட்டியலில் முதல் 20ல், 17 நாடுகள் , இதனை 'பாதுகாப்பற்றது, சுற்றுச்சூழலையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நுகர்வோரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்' என்று தடை விதித்திருக்கின்றன. இந்த வேளையில் நம் நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த அவசரம். உலகின் 90% நாடுகள் வேண்டாம், ஆபத்தானது என்று தள்ளிவைத்ததை ஆசை ஆசையாக இவர்கள் ஆராதிப்பது ஏன்? அமெரிக்கா போன்ற நாடுகள் பயிரிடும் பயிர்கள், நேரடியாக உணவிற்கு வருவதில்லை. எல்லாம், மிருகங்களுக்கான உணவாக கொடுக்கப்பட்டு பின்னர் அந்த மிருகங்கள் உண்ணப்படுகின்றனர். (ஆயினும் பல வியாதிகளும், உட‌ற்கேடுகளும் நிறைந்த நாடு அது).

நமது தட்டில் சிறிது சிறிதாக ந‌ஞ்சு ஏறிக்கொண்டே தான் இருக்கிறது. அதனை மேலும் பெரிய லாபத்துடன் கையாள பி டி கத்திரி கொண்டுவர துடித்தன பன்னாட்டு கம்பனிகள். அப்பொழுது பி டி எப்படி நிறுத்தப்பட்டது? விஞ்ஞானிகள், விவசாயிகள், நுகர்வோர் குழுக்கள், விவசாய தலைவர்கள், ஆர்வலர்கள், மருத்துவர்கள் என்று எல்லோரையும் அழைத்து கருத்து கேட்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் இது வேண்டாம் என்றனர்.

நம் போன்ற நாடுகளுக்கு அதன் கேடுகளே அதிகம் என்று நிரூபிக்கப்பட்டது. GEAC என்னும் மரபீனியப் பொறியியல் ஒப்புறுதிக் குழு சரியாக செயல்படாமல், உயிரி பாதுகாப்பு பற்றிய அக்கரை கொஞ்சமும் இல்லாமல், உயிரி மாசு ஏற்படவும் (கண்டுகொள்ளாமல் இருக்கவும்) வசதியாக பணியாற்றிய (ஆற்றாத?) இந்த குழுவினை அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மிகவும் கடிந்து கொண்டார். மேலும் எல்லா தரப்பு வாதத்தையும் கேட்டறிந்து, பி டி கத்திரி நமது நாட்டிற்கு தேவை இல்லை என தடை விதித்தார்! முதல் முறையாக ஒரு கலந்தாலோசிக்கும் அணுகுமுறை நமது ஜனநாயகத்தில் நடந்தது! பல்வேறு களப்பரிசோதனை களங்களிலும் பல வகையான‌ தூய்மைக்கேடு மற்றும் சுகாதார கேடுகள் நடந்தேறியுள்ளன. மேலும் இன்றளவும் அவை உயிரி-பாதுகாப்பானவை (Bio safe) என்று நிரூபிக்கப்படவில்லை. உச்ச நீதி மன்றம் அறிவித்தும் இது சம்பந்தமான தரவுகளை வலையில் போடுவதில்லை! தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டும் இன்றளவும் ஏய்க்கிறார்கள்.

பி.டி. பருத்தி பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைக்கும், அதனால் விவசாயிகளின் செலவுகள் குறையும் என கூறி விற்பனை செய்தனர். ஆனால் பூச்சிக் கொல்லிகளின் விற்பனை குறைந்ததா? இல்லை! எப்படிக் குறையும்; மரபீனி மாற்று விதைகளை விற்கும் அதே 5 நிறுவனங்கள் தாம் பூச்சிக்கொல்லிகளையும் விற்கின்றன. இன்னொன்று, பி.டி. பருத்தியில் புதிய வகையான பூச்சிக்களின் வரத்து அதிகமாகிவிட்டன, மேலே பார்த்த பஞ்சாப் பிரச்சினை போல. மேலும் இந்த பி.டி மரபீனியையும் அந்தக் காய்புழுக்கள் எதிர்த்து வளரும் அளவு பரிணாம மாற்றம் பெற்று விட்டன.

எப்படிப் பார்த்தாலும் மரபீனிப் பயிரும் உணவும் தேவை இல்லாதவை. அந்த நிறுவனங்களுக்கும் அவற்றைச் சார்ந்தவர்களுக்கும் மட்டுமே பயன் அளிக்கக்கூடிய இந்தத் தொழில்நுட்பம் புறக்கணிக்கப்பட வேண்டியதே (இதில் வியப்பு என்னவென்றால், மரபீனித் தொழில்நுட்பத்தை வேண்டும் என்று கூறுபவர்கள் நான்கு வகைப்பட்டவர் - 1. வேளாண் தொழில்நுட்ப வாணிபத்தில் இருப்பவர்கள் - விதைக் கடை, உரக்கடை தொடங்கி மன்சான்டோ, சின்சென்டா வரை! 2. வேளாண் விஞ்ஞானிகள் 3.பெருநிறுவனங்களின் விளம்பரங்க‌ளால் வயிற்றைக் கழுவும் ஊடகங்கள் 4. வியப்பிலும் வியப்பாய் உழவர் நலனில் அக்கறை உள்ளதாய் மார்தட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள்! காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்த மோடி, அவர் பதவிக்கு வந்ததும் மன்மோகன் சிங் பாடிய அதே “தொழில்நுட்பம் உழவர்களுக்குத் தேவை” என்ற பிலாக்கணத்தை ஏன் பாடுகிறார்? ) இவ்வளவு இருந்தும் ஏன் மரபணு பயிர்களை கொண்டு வரத் துடிக்கின்றன அரசுகள்? அவர்கள் வெளியில் கூறும் காரணம்? 15 முதல் 25% வரை உற்பத்தி பெருகுமாம்! அட, நமது செம்மை வேர் சாகுபடி (செம்மை நெல் சாகுபடி போல்) செய்தாலே இதே 25% கிட்டுகிறது என பல இயற்கை வேளாண் குழுக்களும் கூறுகின்றன! வேறு பல பாரம்பரிய தொழில்நுட்பங்களும் உண்டு. மேலும் விதைக்கும் இதனால் ஏற்படும் மற்ற செலவுகளையும் கூட்டும் போது, குறைந்த விளைச்சலே அதிக நிகர வருவாய் என்பது புலப்படும்.

70% கடுகினை பயன்படுத்தும் (நுகரும்) மாநிலங்களான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மூன்றுமே களப்பரிசோதனை கூடாது என்று கூறியுள்ள‌ன. இவ்வளவுக்கும் பி.ஜே.பி கட்சியின் அரசுகள்தான் இம்மூன்று மாநிலங்களிலும் ஆளும் அரசுகளாக இருந்து வருகின்றன. மரபணு மாற்று விதைகள் வந்தால் களைகள் கட்டுப்படும் என்று சொன்னார்கள். இதையும் மீறி அமெரிக்காவில் 'அசுரக் களைகள்' வந்து கொண்டுதான் இருக்கின்றன.(இதைப்பற்றி பாமயன் அவர்கள் நமது தாளாண்மையில் விரிவாக எழுதியது நினைவில் இருக்கும்). இதைக் கட்டுப்படுத்தவே முடியாமல் பரிதவித்து வருகிறோம். இவ்வளவு இருந்தும் இந்த விதைகளை மீண்டும் மீண்டும் கொண்டுவர துடிப்பது ஏன்?

உச்ச நீதி மன்ற வல்லுனர் குழுவின் (TEC-Technical Expert Committee) அறிக்கை மற்றும் பாரளுமன்ற உயர்மட்டக்குழுவின் அறிக்கையிலும் திட்ட வட்டமாக இந்த மரபீனிப் பயிர்களும் உணவும் நமது நாட்டிற்கு தேவை இல்லை, களப்பரிசோதனை கூட அறவே தேவை இல்லை என்றே குறிப்பிட்டுள்ளன. தென்னகத்தில் கடுகினை பெரிதும் விளைவிப்பது இல்லையே என்று சும்மா இருக்க முடியுமா? கடுகு இல்லாமல் ஒரு சமையல், ஒரு கறி உண்டா? மேலும் பாரம்பரிய மருத்துவ மருந்துகளிலும் கடுகு (கத்திரியைப் போலவே) பயன்படுத்தப் படுகிறது. மற்றபடி இத்துடன் நிற்காது. அரிசி, சோளம், கம்பு, என்று துளசி வரை 50க்கும் மேற்பட்ட பயிர்கள் நம் தட்டில் வந்து கொட்டும் ஆபத்து உள்ளது.

விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், சூழலியலாளர்கள், வேளாண் நிபுணர்கள் என பல தரப்பினரும் சொல்கிறார்கள், இது நம் நாட்டுக்கு தேவையில்லை என்று. ஆனால் மத்திய அரசு (அரசியல்வாதிகள் என்று பொதுவாகவே சொல்லலாம்) கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கிறது. அது என்ன காரணத்துக்கு என்று நாம் அனைவரும் அறிவோம். வலிமையான எதிர்ப்புக் குரல்கள் மூலமாகத்தான் இதை தடுத்து நிறுத்த முடியும். அதற்கு விவசாயிகள், நுகர்வோர் என அனைவரும் எல்லா வழிகளிலும் இந்த அரசாங்கத்துக்கு இந்த மரபீனி பயிரையும் உணவையும் நாம் எதிர்க்கிறோம் என்றும், அதனைக் கொண்டு வரத்தேவை இல்லை என்றும் தெரிவிக்க வேண்டும். பொது மனு, வலை மனு, கடிதம், முகநூல், ஃபேக்ஸ் என்று எல்லா வழிகளிலும் நம் எதிர்ப்பை தெரிவித்தே ஆக வேண்டும். கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயலறவே என்று நாம் அனைவரும் சிறுமை கண்டு பொங்க வேண்டும் தருணம் இது!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org