பீகாரில் பாரதிய ஜனதா கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஊழலின் உப்பக்கம் கண்ட லல்லு பிரசாத் யாதவின் கட்சி அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உருவெடுத்துள்ளது. நாட்டிலேயே மிகவும் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாக இருந்த பீகாரில் ஓரளவு மாற்றங்களும், முன்னேற்றமும், பாதுகாப்பு மேம்பாடும் கொண்டு வந்த நிதீஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆனது மக்களுக்கு ஒரு நற்செய்தியே. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சி ஆகிய மூன்றையும் விட நிதீஷ் பன்மடங்கு மேன்மையானவரே.
ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் போது பி.ஜே.பி வேட்பாளர், கிராமங்களில் சென்று 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்குச் சாலை, மின்சாரம் போன்ற வசதிகளைச் செய்து தருவோம்' என்ற போது மக்கள் 'அதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே நிதீஷ் செய்து கொடுத்து விட்டார். எங்கள் வேலை வாய்ப்புக்கு என்ன செய்வீர்கள்?' என்று ஏளனமாகக் கேட்டனராம். முற்றிலும் மக்களுடன் தொடர்பின்றி மேல்தட்டில் இருந்தே பி.ஜே.பியின் தேர்தல் வியூகம் அமைந்ததும் ஒரு காரணம். இதை விட மிக முக்கிய காரணம் பி.ஜே.பி, ஆங்கிலேயர்களைப் போல் ஒரு பிரித்தாளும் தேர்தல் உத்தியைக் கையாண்டதுதான். பிற மதத்தவர்களை இழிச்சொற்களாலும், அவச்செயல்களாலும் தாக்கினால் இந்துக்கள் தம் பக்கம் சாய்வார்கள் என்ற மிகத் தவறான கணிப்பே பி.ஜே.பியின் தோல்விக்கு முக்கிய காரணம். இரண்டாவது காரணம் நிதீஷ் குமார் ஏற்கனவே செய்து வந்த வளர்ச்சிப் பணிகளை மக்கள் உணர்ந்ததுதான்.
'பீகாரில் பி.ஜே.பி தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கும்', என்ற அமித் ஷாவின் உளறல், மாட்டிறைச்சிக்கு எதிரான துளியும் சகிப்புத் தன்மையற்ற நடவடிக்கைகள், ஆர்.எஸ்.எஸ் தலைவரின் "இட ஒதுக்கீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்ற பேட்டி எல்லாம் பி.ஜே.பிக்கு எதிராகவே அமைந்தன. மோடி உலகம் சுற்றும் 'வாலிபனாக' விலை உயர்ந்த உடைகளில் வலம் வருவதும் ஏழை மக்களுக்கு ஒரு கசப்பை உருவாக்கியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஏழைகளின், கிராம மக்களின் பிரச்சினைகளைச் சிறுதும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு மாயக் கனவில் வலம் வருகிறார்கள். அறுதிப் பெரும் பான்மையுடன் 10,000 கோடி செலவு செய்து செயற்கையாய் உருவாக்கிய "மோடி அலை"யில் வென்ற ஒன்றரை வருடங்களுக்கு உள்ளாகவே மக்களுக்கு நரேந்திர மோடியின் மேல் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.
டில்லியில் படு தோல்வி அடைந்ததும் நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவை அரசு கைவிட்டது. இப்போது பீகாரில் தோற்றதன் பின் அவர்களது மேம்படுத்துதல், பெருநிறுவனப் புரவு, உலகம் சுற்றுதல், எல்லாவற்றையும் விடச் சகியாமை ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால் மிக நன்றாக இருக்கும். நாமும் பீகாரில் ஊழலுக்கு உருவகம் கொடுத்த லல்லு பிரசாத் ஜெயித்ததற்கெல்லாம் மகிழும் நிலைமை வராது!
பிரெஞ்சு எழுத்தாளார் வோல்டேர், தன்னுடைய சகிப்புத்தன்மையின் கிரந்தம் (Treatise on Tolerance) என்ற நூலில் "சகியாமையின் உரிமை என்பது மூடத்தனமானது, காட்டுமிராண்டித் தனமானது. அது காட்டிற் புலியின் உரிமை போன்றது- அல்ல அதைவிடக் கீழானது- ஏனெனில் புலி தன் உணவுக்காகப் பிற உயிர்களைக் கிழிக்கிறது, ஆனால் நாமோ எழுதப்பட்ட சில பத்திகளுக்காக ஒருவரை ஒருவர் கிழித்துக் கொல்கிறோம்" என்றார். இதை நம்நாட்டில் ஆள்வோர் அனைவரும் படிக்க வேண்டிய இழிநிலை உருவாகி உள்ளது.
நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இயக்கம்
மேலே அறிய »எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்
Phone: +91 4364 271190
Email: info@kaani.org