தூய்மையான இந்தியா
திரு.நரேந்திர மோடி பிரதமரானதும், இந்தியாவைத் தூய்மைப் படுத்த வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்துடன் “தூய்மையான இந்தியா” என்ற ஒரு அரசாங்க இயக்கத்தைத் துவங்கி அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டிருக்கிறார். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு முனைவே; வரவேற்கிறோம். எனினும், தூய்மை என்பது என்ன என்று பார்த்தால், நீர், நிலம், காற்று, ஆகாயம் அகிய அனைத்தும் மாசின்றி இருந்தால் தூய்மை தானாக உருவாகிவிடும் என்று தெளிவாகிறது. நம் அரசும் அதன் பிரச்சாரங்களும் கண்ணுக்குத் தெரியும் தூய்மைக் கேடுகளை மட்டுமே விரட்ட முற்படுகின்றன. தனிமனிதர்களைத் தூய்மையாக இருக்கும்படிக் கேட்டுக் கொள்கின்றன. திறந்த வெளியில் சிறுநீர்,மலம் கழிப்பதைத் தவிர்ப்பது, குப்பைகளைக் கண்ட இடத்தில் கொட்டுவதைத் தவிர்ப்பது போன்றவையே தூய்மையை உருவாக்கிவிடும் என்று நம்புகிறோம். இவை அனைத்தும் தேவைதான், நல்லவைதான் - ஆனால் உடனடித் தேவை அல்ல. நமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எல்லோரும் குப்பையைத் தெருவில் கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்; ஆனால் கடந்த 25 வருடங்களில்தான் குப்பை என்பது மாசாக (pollution) மாறியிருக்கிறது. ஏனெனில் அதற்கு முன் பெரும்பாலும் எல்லாக் குப்பைகளுமே மக்கும் குப்பைகள்தான்!
பொருத்தமான தொழில்நுட்பம் - உழவன் பாலா
[சென்ற இதழில் டாக்டர்.ஷூமாகர் அவர்களின் இடைப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தியிருந்தோம். இடைப்பட்ட தொழில்நுட்பம் என்றால் என்ன என்பது பற்றி அவரே Center Magazine என்ற பத்திரிகைக்கு ஒரு விளக்கக் கட்டுரை 1975ம் ஆண்டு எழுதியிருந்தார். அதிலிருந்து தொகுத்தவற்றை இங்குக் காணலாம். கட்டுரை ஆசிரியர் குறிப்புகள் பகர அடைப்புக்குள் கொடுக்கப் பட்டுள்ளன. இப்போதுள்ள இந்தியாவிற்கு 40 ஆண்டுகள் சென்றும் இக்கட்டுரை எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது என்று வாசகர்களே கணித்துக் கொள்ளவும்! நான் என்பது இக்கட்டுரையில் ஷூமாகரைக் குறிக்கிறது - உழவன் பாலா]
(மூன்றாம் பகுதி - சென்ற இதழ்த் தொடர்ச்சி)
அயல்நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் அறப்போரில் அனைவரையும் காந்தி அழைத்தார் என்பதோடு உள்நாட்டில் எந்திர ஆலைகளில் உருவான துணிகளையும் குமரப்பாவும் காந்தியும் மறுத்தார்கள். தற்சார்பிற்கான விளக்கமாக நமது உழைப்பும் விளைவிப்பும் நமது அண்டை மக்களுக்கு முதலில் பயன்படுமாறு இருக்க வேண்டும். அதிக தொலைவில் உள்ளவர்களுக்காக இருக்கக் கூடாது. அத்துடன் உள்ளூர்ப் பொருள்களை ஒதுக்கி வெளிநாட்டுப் பொருள்களை வாங்குவது இந்தியாவின் வறுமைக்கான காரணமாக இருந்தது. உள்ளூர்ப் பொருள்களை உருவாக்கவும், அதை சந்தைப்படுத்தவும் முனையும்போது வறுமை நீங்குகிறது என்று தொலைநோக்குடன் சிந்தித்தார் குமரப்பா. இன்று அமெரிக்காவே தனது நாட்டு மக்களை உள்ளூர் தொழில்களுக்கு முதன்மை கொடுக்க முன்வந்ததைக் கவனிக்க வேண்டும். மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் அதனால் எண்ணற்ற உள்ளூர் மக்கள் வேலையிழப்பார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.