தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மறக்கப்பட்ட மாமனிதர் குமரப்பா - பாமயன்


(மூன்றாம் பகுதி - சென்ற இதழ்த் தொடர்ச்சி)

அயல்நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் அறப்போரில் அனைவரையும் காந்தி அழைத்தார் என்பதோடு உள்நாட்டில் எந்திர ஆலைகளில் உருவான துணிகளையும் குமரப்பாவும் காந்தியும் மறுத்தார்கள். தற்சார்பிற்கான விளக்கமாக நமது உழைப்பும் விளைவிப்பும் நமது அண்டை மக்களுக்கு முதலில் பயன்படுமாறு இருக்க வேண்டும். அதிக தொலைவில் உள்ளவர்களுக்காக இருக்கக் கூடாது. அத்துடன் உள்ளூர்ப் பொருள்களை ஒதுக்கி வெளிநாட்டுப் பொருள்களை வாங்குவது இந்தியாவின் வறுமைக்கான காரணமாக இருந்தது. உள்ளூர்ப் பொருள்களை உருவாக்கவும், அதை சந்தைப்படுத்தவும் முனையும்போது வறுமை நீங்குகிறது என்று தொலைநோக்குடன் சிந்தித்தார் குமரப்பா. இன்று அமெரிக்காவே தனது நாட்டு மக்களை உள்ளூர் தொழில்களுக்கு முதன்மை கொடுக்க முன்வந்ததைக் கவனிக்க வேண்டும். மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் அதனால் எண்ணற்ற உள்ளூர் மக்கள் வேலையிழப்பார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஊரக மேம்பாட்டின் குறியீடு என்ன என்பதை குமரப்பா விளக்குகிறார்: ‘சாலைகள் அமைப்பதோ கிணறுகள் தோண்டுவதோ வேதியுரங்களை வழங்குவதோ அல்ல, திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பு சில ஏழை உழவர்களை அழைத்து அவர்களது விலா எலும்புகளை எண்ண வேண்டும், திட்டங்களை செயல்படுத்திய பின்னர் அவர்களை மீண்டும் அழைத்து அவர்களது விலா எலும்புகளை மூடும்படியான சதை வளர்ந்து இருக்குமயானால் அதுதான் திட்டத்தின் உண்மையான வெற்றி’

இங்கிலாந்தின் அரசியல் முற்றாளுமையில் (imperialism) இருந்து விடுபட்டு அமெரிக்க பண முற்றாளுமைக்குள் இந்தியா விழுந்துவிடலாகாது என்று குமரப்பா மிகத் தெளிவாக எச்சரித்தார். ஆனால் நேருவின் விருப்பங்களும் அணுகுமுறைகளும் இந்தியாவை முழுமையாக அமெரிக்க பொருளியல் முற்றாளுமைக்குள் தள்ளிவிட்டது. அது இன்னும் தொடர்கதையாகி வருகிறது. இந்தியா மட்டுமல்லாது கொரியா, சீனா, ஈராக் போன்ற நாடுகளின் மீது பல்வேறு வகையில் அவற்றின் உள்ளார்ந்த வளர்ச்சியைத் தடுக்கும்பொருட்டு போர், உதவி, தொண்டு என்று தலையிட்டு வருவதை 1953ஆம் ஆண்டிலேயே உத்யோக் பத்திரிகாவில் எழுதினார். சோவியத் நாட்டுடன்தான் இந்தியாவிற்கு நட்புறவு உண்டு என்று கருதியபோது அமெரிக்காவுடன் நேரு அரசாங்கம் கொண்டிருந்த ‘நட்பை’ குமரப்பா போட்டு உடைத்தார் என்றே கூற வேண்டும். குறிப்பாக உணவுத் தவசங்களையும், நிதியையும் கொடுத்து தனது ஆளுமையைத் திணித்தது அமெரிக்கா. அதன் விளைவாகவே இந்திய உழவர்களை ஓட்டாண்டியாக்கிய பசுமைப் புரட்சி இந்தியாவினுள் நுழைந்தது. இந்தியாவில் ‘சிவப்புக் காய்ச்சல்’ வந்துவிடக் கூடாது என்று போலியாக அச்சுறுத்தி அன்றைய இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரான செஸ்டர் பவுலசு மூலம் பரப்புரைகள் நடந்தன. அதன் பின்னணியில் இந்தியாவிற்கு ‘உதவி’யாக ஒரு பெரும்பேராயிரம் டாலர்கள் (பில்லியன் - 100 கோடி) கொடுக்கப்பட்டன. இதை குமரப்பா இந்தியாவின் கழுத்தில் அமெரிக்கா மாட்டும் சுருக்குக் கயிறு என்றே எழுதினார்.

நேரு சோவியத்தின் நண்பர் அமெரிக்காவின் எதிர்ப்பாளர் என்று எண்ணிக்கொண்டிருக்கும் அறிவாணர்களுக்கு அது சற்று அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கக்கூடும். அதிக உணவுப்பயிர் வளர்ச்சி (Grow-More-Food) என்ற பெயரில் ஆல்பெர்ட் மேயர் என்ற அமெரிக்கரைக் கொண்ட திட்டத்தை நேரு அனுமதித்தது குமரப்பாவிற்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. இத்திட்டம் 1948-52 ஆண்டளவில் உத்திரபிரதேச எடாவா என்ற இடத்தில் செயல்படுத்தப்பட்டது. ஏற்கனவே மிகச் தெளிவாக இந்திய ஊரகப் பகுதிகளுக்கான திட்டங்கள் காந்தியப் பொருளியல் முறையில் தீட்டப்பட்டு இருந்தன. இதற்காக குமரப்பா கடுமையாக உழைத்து மக்களின் உண்மையான நிலைமைகள் என்ன என்பது பற்றிய தரவுகள் திரட்டி உருவாக்கி இருந்தார். ஆனால் அதற்கு மாற்றாக அமெரிக்க பொறியாளர் ஒருவரைக் கொண்டு சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தை முன்மொழிந்ததை குமரப்பாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்க ‘வல்லுநர்’களின் வருகையால் இந்தியா தனது தற்சார்பான வளர்ச்சியை இழந்ததோடு தனது சிக்கல்களை தானே தீர்த்துக்கொள்ளும் திறனைனையும் இழந்துவிட்டதை வேதனையுடன் குறிப்பிட்டார். (Gram Udyog Patrika, 14(9), September 1952).

அவர் அச்சப்பட்டதுபோலவே நடந்தது முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில் சமுதாய மேம்பாட்டிற்காக 15%க்கும் குறைவாகவே செலவிடப்பட்டது. குமரப்பாவினால் வளர்த்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய சிற்றூர் தொழில்கள் இணையமும் நூற்போர் இணையமும் அரசாங்கத்தினால் ‘எடுத்துக்கொள்ளப்பட்டது’. குமரப்பா கிட்டத்தட்ட ஒரு வெளியாள் போலவே ஆக்கப்பட்டுவிட்டார். ஒருமுறை புதியதாக உருவாக்கப்பட்ட அனைத்திந்திய காதி மற்றும் சிற்றூர் தொழில்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்போது அங்கே ஃபேபர் கும்பணியின் பென்சில் கொடுக்கப்பட்டது. அதைத் தூக்கி எறிந்து பெருந்தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட அப்பொருளை பயன்படுத்துவதைப் பற்றி சினத்துடன் பேசினார். அப்போதைய அமைச்சர் அரேகிருஷ்ணா மகதாப் ‘நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அரசாங்கம் இதைத்தானே விரும்புகிறது. நீங்கள் வேண்டுமென்றால் தெருக்களில் கருப்புக்கொடியுடன் ஊர்வலம் போங்கள்’ என்றார். நேரு மற்றும் அவரது உடன் ஆட்சியாளர்களின் அணுகுமுறை குமரப்பாவிற்கு பெரும் அதிர்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ‘எனது பழைய தோழர்கள் இன்று (விடுதலைக்குப் பிறகு) அரசாங்கத்தையும் தில்லி அரண்மனைகளையும் எடுத்துக் கொண்டுள்ளார்கள். அதைப் பெருமைப்படுத்துவதிலும், கொண்டாடுவதிலும் ஈடுபட்டுள்ளார்கள். விரக்தியும் வேதனையுமே மிஞ்சுகிறது’ என்று எழுதினார்.

நேரு ஒரு அரசரைப்போலவே வாழ்ந்தார். இந்திய அரசின் கொழுத்த அதிகாரத்தைச் சுவைப்பதில் மகிந்தார் என்று கூடச் சொல்லலாம். ஏனெனில் காந்தியின் கனவான அதிகாரப் பரவலை சற்றேனும் செய்யவில்லை. நடுவப்படுத்தப்பட்ட பெருந்தொழில்களுக்கே முதன்மை கொடுத்தார். ஏற்கனவே கூறியதுபோல சோசலிச விரும்பியாகக் காட்டிக் கொண்டே அமெரிக்காவின் திட்டங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்தார். அதன் தொடச்சியாக இந்திரா காந்தி, ராசீவ் காந்தி, மன்மோகன் என்று விரிவாகி வந்துள்ளது. 1950 முதல் 1966ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் நுகர்வுப் பொருள்களின் ஆக்கம் 68 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக விழுந்தது. அதுமட்டுமல்லாது அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் கடன் சுமை ரூ.3200 லட்சம் கோடியில் இருந்து ரூ.603000 லட்சம் கோடியாக உயர்ந்தது.

முதலாளியமுறைப் பொருளாக்கமும் பொதுவுடமைமுறைப் பொருளாக்கமும் ஒருவகையாகவே உள்ளதாக குமரப்பா கருதினார். தனிமுதலாளிகளின் கட்டுப்பாட்டில் பெருந்தொழில்கள் இயங்குவதைப்போலவே பொதுவுடமை அரசிலும் நடுவப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டில் பெருந்தொழில்கள் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக சோவியத் நாட்டின் பொருளியல்முறையை திறனாய்வுக்குள்ளாக்கினார். அங்கு சில கட்சித் தலைவர்களிடம் மட்டும் அதிகாரம் குவிவதை சுட்டிக் காட்டினார். அதன் விளைவாகவே சோவியத் நாடு வீழ்ந்ததை அறிய முடிகிறது. 1950களில் குமரப்பா சீனாவிற்கும் சோவியத் ருசியாவிற்கும் சென்று வந்தார். அது பற்றி தொடர்ச்சியான கட்டுரைகளை எழுதினார். அந்நாடுகளில் எழுந்து வரும் தற்சார்பு உணர்வுகளை பெருமையுடன் பதிவு செய்தார். சோவியத்தில் உள்ள பொதுவுடமையைத் தாண்டிய ‘உண்மையான பொதுவுடமை’ வர வேண்டும் என்று எழுதினார். இதனால் இவரை ‘கம்யூனிஸ்ட்’ என்றும் கூறினார்கள்.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் தனது கடைசி நாட்களில் பணியாற்றினார். தொடர்ந்து பயிற்சி வகுப்புகள், கூட்டங்கள் என்று சோர்ந்துவிடாது பணியாற்றினார். அவரது தம்பி பரதன் குமரப்பாவின் மறைவும் இந்திய அரசியலின் போக்கும் அவரது உடல்நிலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. கடுமையான இரத்த அழுத்த நோயால் துன்பமுற்றார். புதிய உலகிற்கான மாற்றுப் பொருளியலை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல் அதை நடைமுறைப்படுத்தியும் காட்டிய இந்த பேரறிஞர் தான் பிறந்த தமிழ் மண்ணில் பெரிதும் ஆரவாரமின்றி 1960ஆம் ஆண்டு சனவரி 30ஆம் நாள் தனது தலைவரான காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அதே நாளில் மறைந்தார். குப்பைக்கும் சப்பைக்கும் விழா எடுக்கின்ற அரசுகள் சான்றாண்மை மிக்க பேரறிவாளனை கண்டு கொள்ளவே இல்லை. இவரைப் போன்ற மாண்பாளர்களை மறந்துவிடுவதும் மறைத்துவிடுவதும் இந்தியாவின் துயரத்திற்கும் தமிழகத்தின் துன்பங்களுக்குமான காரணங்களாக இருக்கின்றன.

ஆனால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இன்றைய உலகினை விடுவிக்கும் சிந்தனைகளை விதைத்துச் செயல்படுத்த முனைந்த இந்த அறிஞரது சிந்தனைகளே இனி ஏதோ ஒரு வகையில் ஆட்சி செய்யப்போகிறது.

சான்று நூல்கள் 1) Public Finance and Our Poverty: The Contribution of Public Finance to the Present Economic State of India, - J C Kumarappa 2) The Gandhian Economy and Other Essays - J C Kumarappa, 3) Village Movement - J C Kumarappa, 4) Economy of Permanence: A Quest for a Social Order Based on Non-Violence - J C Kumarappa, 5) The Economics of Peace : The Cause and the Man, 6) J C Kumarappa, Mahatma Gandhi’s Economist - Mark Lindley 7) Building a Creative Freedom, J C Kumarappa and His Economic Philosophy - VENU MADHAV GOVINDU, DEEPAK MALGHAN (EPW)

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org