தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்


கட்டுரை வடிவாக்கம் - பாபுஜி

'சிறியதே அழகு' (Small is Beautiful') என்ற புத்தகம் இன்று உலகம் முழுவதும் அதிகம் விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. இதைத் தொகுத்தவர் ஜெர்மனியில் பிறந்த E. F. ஷூமாகர் என்பவர். இவர் பொருளாதாரம் பயின்று நியுயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். செயல் அனுபவம் இல்லாத கொள்கை வகுத்தலில் திருப்தி அடையாத அவர் அதில் இருந்து விலகி நேரிடையாக வர்த்தகம், வேளாண் பண்ணைத்தொழில், பத்திரிகை துறையில் அனுபவம் பெற்றார். பின் தான் பெற்ற அனுபவங்களை ஆராய்ந்து இந்த உலகில் உள்ள மக்கள் நிரந்தரமாக இன்பமாக வாழ எந்த முறையான தொழில் முறைகளையும், விவசாய முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று மிக விரிவாக விவரிக்கிறார். இந்தக் கொள்கை இன்றைய சூழலில் மிகவும் ஏற்புடையதாகும். கிராமப்புற முன்னேற்றம் குறித்து பல பிரச்சினைகளுக்கு பல வெளிநாடுகளுக்கு ஆலோசனை வழங்கியவர். பிரிட்டனில் மிகப்பெரிய இயற்கை வேளாண்மை அமைப்பான மண் குழுமம் (Soil Association) எனும் அமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார். 1977 இல் மரணமடைந்தார்.

இந்தப் புத்தகத்தில் இவர் பூமியின் இயற்கை வளம் மனித வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் எல்லா உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்று என்கிறார். எந்த ஒரு இயற்கை வளத்தையும் கணக்கு வழக்கின்றிச் சூறையாடுவது, அதிலும் குறிப்பாக அவை அற்றுப்போய்விடும்படி சுரண்டுவது பெரிய குற்றம். மனிதன் தனது பேராசை, பொறாமை முதலிய குணங்களால் வழிநடத்தப்படும்போது அவனுக்கே,அவன் சந்ததிக்கே தீங்கிழைத்து அழிவைத்தேடுகிறான். அவனது வேட்கையின் வேகத்தில் அது அவனுக்குத் தெரிவதில்லை என்கிறார் ( உதாரணம்,பெட்ரோல், நிலக்கரி). தொழில் மற்றும் விவசாயத் துறைகளில் தானியங்கி இயந்திரங்களை நுழைத்து மனிதப்பயன்பாட்டை குறைத்து வருவதன் மூலம் மனித இனத்திற்கே துரோகம் இழைப்பதோடு மனிதர்களின் படைப்புத்திறனை மனிதனே இல்லாது ஒழித்து சுற்றுச்சூழலைக்கெடுத்து நாசமாக்குகிறான் என்று சுட்டிக் காட்டுகிறார்.

மூலாதாரங்களில் எல்லாம் மிக மதிப்புள்ளது கல்வி. கல்வி கற்றவன் என்ன செய்ய வேண்டும்? அவன் கற்ற கல்வி அவனது சொகுசு வாழ்க்கைக்குக் கடவுச்சீட்டா அல்லது சமூகப் பயன்பாட்டிற்கான வழிகாட்டியா என கேள்வி எழுப்புகிறார்.

ஆக மனிதனுக்கு என்ன வேண்டும்? அதற்கு அவன் என்ன செய்ய வேண்டும்? அவனது குறைபாடுகள் என்ன? அவற்றைச் சரி செய்ய வேண்டிய தேவை என்ன? அவற்றை எப்படி செய்வது? முழு உலகிற்கான நற்பயன் கிடைக்க எந்த வகையான வேளாண் முறை மற்றும் தொழில்நுட்பம் தேவை? 'அளவில் சிறிய மனிதனுக்கு சிறியவைகளே அழகானவை', 'உள்ளதே போதும்' என்ற மன நிலை எவ்வளவு நன்மையானது? என்ற பல வகையான அவரது கருத்துக்கள் இன்றைய சூழலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளன‌.

20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பான் அறிஞர் மாசானபு புகுவோகா, மகாராஷ்ட்ராவில் வாழ்ந்த சிரிபாத தபோல்கர், ஆஸ்திரேலியாவின் பில் மொலிசன், ஜெர்மானியர் ஷூமாகர், இந்த நால்வரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதில்லை. ஒரு அமைப்பாகவும் செயல்படவில்லை. ஆனால் அவர்கள் எடுத்துக்கொண்ட செயல்பாடுகள் வேறு போல இருந்தாலும் அவர்கள் சென்றடைந்தது ஒரே மையக்கருத்தில். அதாவது ஒவ்வொரு மனிதனும் சிரமம் இன்றி மகிழ்ச்சியாகவும், நோயின்றியும், கடன்படாமலும், சுதந்திரமாகவும் வாழ இந்த உலகத்தை அதன் போக்கில் அதன் சூழலை புரிந்து கொண்டு எப்படிச் செயல்படுவது என்பதே ஆகும்.

ஆக மக்களாகிய நாம் இயற்கைச் சூழலைப் புரிந்து கொண்டு, அந்த இயற்கைச் சக்திகளைப் பயன்படுத்தி நமது தேவைகளைப் பூர்த்தி செய்வோமானால் இந்த உலகத்தில் நாமும் நமது சந்ததியினரும் பல ஆயிரம், ஆயிரம் ஆண்டுகள் வளமுடன் வாழ இயலும். இதை அவர்கள் கருத்தாகக்கூறாமல் அந்தக் கருத்தில், கொள்கையில் வாழ்ந்து நிரூபித்தும் உள்ளனர். ஆக நாம் நமக்குச் சொந்தமான இடத்திலிருந்து இயற்கைச் சக்திகளான வற்றாத வளம் கொண்ட சூரிய ஒளி, காற்று, மழைநீர், மண் மற்றும் ஆகாயத்தை எப்படித் திறம்படப் பயன்படுத்தி நமக்குத் தேவையான உணவு, உடை, கட்டுமானப் பொருட்கள், எரி பொருட்கள், மருந்துப் பொருட்கள், தீவனம் போன்றவற்றை உற்பத்தி செய்ய முடியும், அதுவும் நிரந்தரமாக உற்பத்தி செய்ய நாம் எந்தவிதமான உத்திகளைப் பயன்படுத்த போகிறோம் என்பதனை பார்ப்போம்.

நமது இந்திய நாடு உலக அமைப்பில் பருவ மழை பெய்யும் நில அமைப்பில் உள்ளது. இன்று பல மாசுபாட்டால் பருவ மழையும் தவறி காற்றழுத்த மாறுபாட்டால் மட்டுமே மழை பொழிகிறது என்ற நிலை உருவாகி வருகிறது. ஆகையால் பருவ மழை என்பது இன்று காணாமல் போய்விட்டது. எந்த மாதத்தில் மழை வரும் என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது. ஒன்று அதிகமான மழை அல்லது கடும் வறட்சி என்ற சூழலில் இன்று நமது விவசாயம் தள்ளப்பட்டு விட்டது. இத்தகைய சூழலில் வளம் குன்றா வேளாண்மை செய்ய சரியான அணுகு முறை என்னவென்றால் நமது பண்ணையைச்சுற்றி நீடித்து வளரக்கூடிய வறட்சியைத்தாங்கி வளரக்கூடிய மரங்களை முதலில் நட வேண்டும். இது சிறந்த காற்றுத்தடுப்பானாகவும் அமையும். உதாரணம், வாகை, தேக்கு, கொடுக்காப்புளி, ஆயன், ஈட்டி, செஞ்சந்தனம், மகாகனி, மலை வேம்பு, மூங்கில், பனை மரம், ஈச்ச மரம், ஆச்சான், கருங்காலி போன்ற நமது காட்டுப்பகுதியில் வளரக்கூடிய பாரம்பரிய மரங்களாக தேர்ந்தெடுத்து பயிர் செய்வது மிக நல்லது. அதுவும் சிறிய செடியாக இருப்பது நலம். அப்பொழுதுதான் அதன் ஆணிவேர் அதிக ஆழத்திற்கு சென்று வறட்சியை தாங்கி நிற்கும். காற்றுக்கும் சாயாமல் இருக்கும். முடிந்தால் விதைகளை அங்கேயே விதைத்து வளர விடலாம். செலவும் மிகவும் குறையும்.

நமது பண்ணையில் 50 அடிக்கு ஒரு மர வரிசையை உருவாக்க வேண்டும். 50 அடிக்கு ஒரு மர வரிசை உள்ள போது இடையில் அதிக வெய்யிலை ஏற்று விளையக்கூடிய தானியப்பயிகளுக்கும் தேவையான சூரிய ஒளி கிடைக்கும். மகசூலும் குறைவதில்லை என்பது ஆராய்ச்சி முடிவாகும். இது நமது பீகார் மாநிலத்தில் ஒரு பெண் கண்டுபிடித்ததாகும். அதிக மழை மற்றும் வறட்சி இரண்டும் மரப்பயிர்களுக்கு பெரும் சேதம் எதுவும் ஏற்படுத்தாது. அதனால் நமக்கு இதன் மூலம் நிரந்தரமான ஒரு வருவாய் தொடர்ந்து கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் கிளைகளிலிருந்து கிடைக்கும் இலை, தழைகள் நமது கால்நடைகளுக்கு வறட்சிக்காலத்திலும் கிடைக்கும். வறட்சிக்காலங்களில் அதிக இலை, தழைகளை கொடுக்கக்கூடிய மரங்கள் அரசு, ஆல், நொச்சி போன்றவை ஆகும். இந்த மரங்கள் வெட்ட வெட்ட துளிர்க்கக்கூடிய குணம் கொண்டவையாகும். இதில் இருந்து கிடைக்கும் குச்சிகள் நமக்கு விறகாக பயன்படும். எக்காரணத்தைக்கொண்டும் நமது பண்ணை எல்லை ஓரத்தில் பழ மரங்களை நடக்கூடாது. ஏனென்றால் அது திருடு போவதற்கு மிகவும் ஏற்ற சூழலை உருவாக்கும். இதை தவிர்ப்பது நல்லது.

இன்று தொழிற்சாலைகளுக்கு மிகவும் எளிதாக எடுத்துச்செல்வதற்காகவும், வியாபாரத்திற்காகவும் ஒரே பொருளை உற்பத்தி செய்வதற்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. அதனால் பெரும்பான்மையான பண்ணைகளில் ஒரே இனப்பயிரே விளைவிக்கப்படுகின்றது. ஒரே இனப்பயிர் விளைவிக்கப்படுவதால் விளைச்சல் கூடும்போதும் விலை வீழ்ச்சியும்,பருவச்சூழலினால் பூச்சி நோய் தாக்குதலும், அதிக மழை மற்றும் வறட்சியினாலும் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனர். ஒரே சமயத்தில் பயிர் செய்வதும், அறுவடை செய்வதும் நடைபெறுவதால் ஆட்கள் பற்றாக்குறையும் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க ஓரின பயிர் செய்துள்ள பண்ணைகளை பல பயிர் பண்ணைகளாக மாற்றலாம். உதாரணத்திற்கு தென்னை தோப்புகளில் இடையில் எலுமிச்சை,கறிவேப்பிலை, நாரத்தை, சப்போட்டா, கொய்யா, நெல்லி போன்ற பழ மரங்களையும் கலந்து பயிரிடலாம். தென்னை மரங்களில் மிளகு, வெற்றிலை போன்ற பயிர்களை படர விடலாம். இதனால் வேலையும் ஆண்டு முழுதும் ஒரே சீராக இருக்கும், வருவாயும் பல பொருட்களின் உற்பத்தி மூலம் கிடைக்கும்.

[குறிப்பு: மரம் நடுவதற்கான மிக நல்ல‌ திட்டம் ஒன்றைத் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் 2013 புரட்டாசி இதழ்த் தாளாண்மையில் விவரித்திருந்தார். ( October 2013 பக் 21)]

தபோல்கர் சொன்னது போல வேண்டிய பயிர்களை எடுத்துக்கொண்டு வேண்டாத பொருட்களை அங்கேயே திருப்பி கொடுக்க வேண்டும். அதனால் மண் வளம் கூடும். வெளியில் இருந்து எரு உள்ளே கொண்டுவரும் செலவு குறையும். இந்த மரங்களின் கீழ்பகுதியில் இஞ்சி, சேம்பு, கருணை, சேனை, மஞ்சள், மரவள்ளி போன்றவற்றை பயிர் செய்யலாம். இதனால் களை கட்டுப்பாடு மிகவும் சிறப்பாக இருக்கும். மண்ணின் மீது வெய்யிலும் காற்றும் படாமல் இருப்பதால் ஈரப்பதமும் காக்கப்படுகின்றது. இதனால் நீரின் தேவை மிகவும் குறைந்துவிடும். ஆக இவ்விதம் ஓரினப்பயிர் தோப்பில் பல பயிர்களை விளைவிக்கும்போது பல விதமான வழிகளில் வருவாயும் கூடி, களை, நீர் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, மண்ணும் வளம் பெற்று குறைந்த ஆட்களை கொண்டே வருடம் முழுவதும் ஒரே சீராக வேலை செய்ய ஏதுவாக அமையும். இதனுடன் நமக்கு வேண்டிய கால்நடைகளான கோழி, புறா, ஆடு, மாடு, வாத்துகளையும் இணைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் அதற்கு உண்டான தீவனங்கள் சுலபமாக நமது பண்ணையிலேயே கிடைப்பதால்.

(மேலும் வரும்…)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org