வெள்ளை நாரை
மழைக்காலம் என்றாலே நம் கவின்மிகு தமிழ்நாட்டில் இடம்பெயரும் பறவைகளைக் (migratory birds) காணலாம். அவ்வரிசையில், இம்மாதம் நாம் காணும் பறவை European White Stork என்று ஆங்கிலத்திலும், என்று Ciconia ciconia asiatica அறிவியலிலும் சொல்லப்படும் வெள்ளை நாரை. இது துருக்கிஸ்தானில் இனப் பெருக்கம் செய்து, பனிக்காலத்தில் ஈரான், இந்தியா போன்ற இடங்களுக்குப் பெயரும் ஒரு அழகிய பெரிய பறவை.
தோற்றம்:
சுமார் 4 அடி உயரம் (100 - 115 ) கொண்ட இப்பறவையின் பாதி உயரம் கால்களால் ஆனது. ஆண், பெண் இரண்டும் ஒன்றே போல் இருக்கும். கால்களும், நீண்ட அலகும் சிகப்பு நிறத்திலும், சிறகுகளின் நுனிப்பகுதி கருப்பு நிறத்திலும், உடல் பால் வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
காணுமிடம்:
வயல் வெளிகள்,தண்ணீர் தேங்கிய குளம் போன்ற பகுதிகளில் இவற்றைக் காணலாம். தாமிரபரணி ஆற்றோரப் பகுதிகளில் நெல்லை மாவட்டத்திலும், காவிரிப் பாசனக் கடலோர மாவட்டங்களிலும் இவற்றைக் காணலாம். ஒரு கூட்டத்தில் சுமார் 50 முதல் 100 பறவைகள் இருக்கும்.
உணவு
மீன், தவளை, சிலந்தி, நண்டு, நத்தை, ஆமை, எலி மற்ற சிறு பறவைகளையும் உண்ணும்.
இனப்பெருக்கம்
தமிழ்நாட்டில் இல்லை. துருக்கிஸ்தானிலேயே இவை இனப் பெருக்கம் செய்கின்றன. வசந்தம் மற்றும் கோடை காலத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும். மரங்களில், கட்டடங்களில், வீட்டுச் சிம்னிகளிலும் கூடக் கூட்டைக் கட்டும். 3 முதல் 5 முட்டைகள் இடும்.
சிறப்புச் செய்தி
நாம் இவை வந்துள்ளது என்று அறிந்து கொள்ள வானத்தைப் பார்த்தால் போதும். மேகங்களுக்கு இடையே கழுகு, வல்லூறு இவற்றிடையே சுற்றிப் பறக்கும்.
இதற்குக் குரல் கிடையாது. அலகுகளை தாளம் தட்டுவதுபோல் தட்டிப் பேசும். தொண்டைக் குழியில் எதிரொலித்து இத்தாளம் பலவகை ஒலிகளை எழுப்பும்
இவ்வினத்தில் இரண்டு உட்பிரிவுகள் உண்டு ; Ciconia ciconia ciconia என்பது மேற்கு ஐரோப்பாவிலும், Ciconia ciconia asiatica என்பது துருக்கிஸ்தானிலும் உருவாகின்றவை. நம் தமிழ்நாட்டில் தென்படுவது துருக்கிஸ்தானைச் சேர்ந்த நாரையே.இது தவிர நம் இந்தியாவிலேயே உருவாகி வசிக்கும் இன்னொரு நாரை மஞ்சள் மூக்கு நாரையாகும் (Painted Stork) . அது பறக்கும்பொழுது சிறகு முழுவதும் கருப்பாகவும் அதில் வெள்ளைக் கோடுகள் வண்ணம் தீட்டியது போலவும் இருக்கும். வெள்ளை நாரையில் சிறகு முனைகள் மட்டுமே கருப்பாக இருக்கும், வால் பகுதி வெண்ணிறமாக இருக்கும். வெள்ளை நாரை வல்லூறு மற்றும் கழுகுகளுடன் வானத்தில் வட்டமிடும்; மஞ்சள் மூக்கு நாரை தனியாகவே பறக்கும்.