தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மீட்டுருவாக்கும் உயிர்ம வேளாண்மை - பரிதி


[ஆசிரியர் குறிப்பு: தொழில்நுட்பம் ஏற்படுத்தும் அழிவுகளுக்குத் தீர்வு மீண்டும் ஒரு புதிய தொழில்நுட்பம் என்று தொடர்பின்னலாய்த் தொழில்நுட்பமும் ,அறிவியலும் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், சூழல்கேட்டிற்கு எளிமையாகச் செயல் படுத்தக் கூடிய தீர்வு உயிர்ம வேளாண்மையே, அது நம் காலடியிலேயே இருக்கிறது என்ற ரோடேல் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.நாம் இழந்த வாழ்முறைகளை மீட்பதே மிகப்பெரும் மீட்டுருவாக்கமாகும். புதிதாய்த் தேடிச் செயல்படுத்த எதுவும் இல்லை‍ என்பதே உண்மை!]

வசதியுள்ள மனிதர்களின் செயல்பாடுகளால் நம் பூவுலகின் சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வெளிப்படையாகத் தெரியவந்துள்ளன. உலகெங்கிலும் உள்ள மேல்தட்டு மக்கள் இப்போதே தம் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டாலும் இந்தத் தீய விளைவுகளை அனைத்து மக்களும் பிற உயிரினங்களும்பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து எதிர்கொள்ளவேண்டிவரும். ஆனால் வசதி படைத்தவர்கள் இப்போதும் தம் தவறுகளை உணர்ந்து திருந்தியபாடில்லை. மாறாக, அவர்கள் மேன்மேலும் நுகர்வை அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். ஏனெனில், சூழல் மாசுபடுவதால் நேரும் தீமைகளில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்குத் தம் பண வசதி, சொத்து, படிப்பு, பதவி ஆகியவை உதவும் என்பது அவர்களுடைய கணக்கு. உலக மக்களில் மிகச் சிலர் மிதமிஞ்சிய வசதியுடன் வாழ்வதால் ஆகப்பெரும்பாலான மக்கள் சொல்லவியலாத் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இதற்குச் சாதகமான அரசியல் பொருளாதார முறைமையை மாற்றுவது தான் அடிப்படையான தீர்வாகும். அனைத்து உயிர்களையும் போற்றிக் காக்க வல்ல ஒப்புரவியப் பொருளாதார முறைமையை உலகெங்கும் நிறுவுவதற்காகப் போராடவேண்டியது அனைத்து மக்களின் - குறிப்பாக, வசதியும் வாய்ப்பும் மிக்கவர்களுடைய – கடமையும் பொறுப்புமாகும்.

அதே சமயம் உழவர்கள் தம் வேளாண் முறைகளைச் சீரமைப்பதன் மூலம் புவியின் சூழல் கேட்டைப் பெருமளவு குறைக்கலாம். மேலும், அப்படிச் செய்வதன் மூலம் நமக்கும் பிற மனிதருக்கும் மற்ற உயிரினங்களுக்கும் நலந்தரும் உணவை உற்பத்தி செய்யவும் முடியும்.

இன்றியமையாத இந்தச் சூழல் சேவைக்கென அரசுகள் உழவர்களுக்கும் அத்துடன் தொடர்புடைய தொழிலாளர் குடும்பங்களுக்கும் தக்க பொருளாதார உதவி (நேரடியாகப் பணம் அல்லது கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை இலவச‌மாகத் தருதல் போன்ற வடிவங்களில்) செய்வது நேர்மை. இதன் மூலம் வேளாண்மைக்கு அடுத்த தலைமுறையினரைத் தொடர்ந்து கவர முடியும். சூழல் காப்புக்கேற்ப வேளாண் முறைகளைச் சீரமைப்பது குறித்துப் பற்பல ஆராய்ச்சிகள் உலகெங்கிலும் பல ஆண்டுகளாகச் செய்யப்பட்டுவருகின்றன. அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ரொடேல் நிறுவனம் இத்தகைய முயற்சிகளில் சுமார் அறுபதாண்டுகளுக்கும் மேலாக முன்னணியில் ஈடுபட்டுவருகிறது. அவர்கள் அண்மையில் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள சில பயனுள்ள கருத்துகளை தாளாண்மையின் இந்த இதழிலும் அடுத்த இதழிலும் காண்போம்.

கட்டுரையில் உள்ளவற்றில் அதிகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள், அருங்கலைச் சொற்கள், மற்றும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் போன்றவற்றின் ஆங்கில வடிவம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன.

- பரிதி (thiru.ramakrishnan@gmail.com), மொழிபெயர்ப்பாளர்

கட்டுரைச் சுருக்கம்

மனிதச் செயல்பாடுகளால் நேர்ந்துள்ள சூழல் மாற்றங்கள் மாந்த இனத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. எனவே மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையான காலகட்டத்தில் இப்போது நாம் இருக்கிறோம். 2012-ஆம் ஆண்டில் மொத்தம் சுமார் 5,200 கோடி டன் கரியமில வளிக்குச் சமமான பசுங்குடில் வளிகள் மனிதச் செயல்பாட்டின் விளைவாக வளிமண்டலத்தில் கலந்துள்ளன. சூழல் மாசு காரணமாகப் புவி தொடர்ந்து வெப்பமடைந்து வருகிறது.. இது மனிதர் உள்ளிட்ட பெருவாரியான உயிரினங்களுடைய இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது. புவியின் சராசரி வெப்ப நிலை 1.5 பாகை செல்சியசுக்கும் மேல் உயர்ந்தால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். அந்த எல்லைக் கோட்டைத் தாண்டாமல் இருக்கவேண்டுமானால் ஆண்டுதோறும் நாம் வெளியிடும் பசுங்குடில் வளிகளின் நிகர அளவு 4,100 கோடி டன்னுக்குள் இருக்கவேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது நிகர அளவென்பது முதன்மையானது. ஏனெனில்,

 • பல இயற்கைச் செயல்கள் இயல்பாகப் பசுங்குடில் வளிகளை வெளியிடுகின்றன.
 • மாந்தச் செயல்பாடுகள் இயற்கைக்கு முரணான வகையில் பெருமளவில் பசுங்குடில் வளிகளை வெளியிடுகின்றன.
 • மாந்தச் செயல்பாடுகளால் புவியின் சூழல் மண்டலங்கள் ஏற்கெனவே சீர்குலைந்துள்ளதால் பசுங்குடில் வளிகளை வெளியிடுகின்ற பல புதிய வகையான இயற்கைச் செயல்களும் உள்ளன;

தாமாக நிகழும் இயற்கைச் செயல்களும் தம் இயல்பைக் காட்டிலும் அதிக அளவில் அவ்வளிகளை வெளியிடுகின்றன. ஆகவே, இனிமேலும் நாம் மாந்தச் செயல்பாடுகள் வெளியிடும் பசுங்குடில் வளிகளை மட்டும் கணக்கில் கொண்டால் போதாது. ஆலைகள், வேளாண்மை, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உலகெங்கிலும் உள்ள கரிய ஊற்றுகளைக் குறித்தும் இனி நாம் கவனமாக இருக்கவேண்டும். எந்தெந்த நாடுகள் இதற்கு எந்த அளவுக்குப் பொறுப்பேற்கவேண்டும், எந்தத் தொழில் துறைகள் எவ்வழிகளில் கவனமாக இருக்கவேண்டும், நாம் கற்பனை செய்வதற்குக்கூட அஞ்சுகின்ற அளவில் இனி வருங்காலத்தில் நாம் வசதிகளை விட்டுக்கொடுக்கவேண்டியிருக்குமே அதற்கு யார் யார் என்ன விலை தரவேண்டும் போன்ற வினாக்களைத் தொடுக்கும் நேரம் வந்துவிட்டது.

கரிய ஊற்றுகளைக் குறித்து மட்டும் எண்ணுவதன் மூலம் இந்தப் பேரிடரைத் தீர்த்துவிட முடியாது. அப்படிச் செய்ய முற்படுதல் நாடுகளிடையில் சச்சரவுகள், சீரற்ற செயல்பாடுகள், செயலிழத்தல் போன்றவற்றுக்கே வழிகோலியுள்ளன. உலகளவிலான அரசியல் தீர்வுகள் எவையும் செயல்படாத நிலையில் இனிக் கண்டுபிடிக்கக்கூடிய தொழில் நுட்பத் தீர்வுகள் நம் இன்னல்களைப் போக்கும் என்று நம்பும் கையறு நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இதற்கு மாறாக, நம் கண் முன்னால் இருக்கின்ற ஒரு எளிமையான தீர்வைக் குறித்து இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போகின்றோம். மண்ணில் உள்ள பல உயிரினங்கள் கரிய உறிஞ்சிகளாக (வடிகால்களாக)ச் செயல்படக்கூடியவை. வளி மண்டலத்தில் கரியம் அளவுக்கு அதிகமாக இருந்தால் அது தீமைபயக்கும். ஆனால் மனிதர் உள்ளிட்ட உயிரினங்கள் கரியத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆகவே கரியத்தை மண்ணில் தேக்குவதன் மூலம் சூழல் மண்டலத்துக்கு வளம் சேர்க்கவியலும்.

உலகில் பரவலாக அறியப்பட்டனவும் எளிமையானவையுமான உயிர்ம வேளாண் மேலாண்மை முறைகளைக் கொண்டு பெருமளவில் கரியத்தை நச்சற்ற வகைகளில் சேமிக்க முடியும். இதை உலக அளவிலான ஆய்வுகள் ஐயத்திற்கு இடமற்ற வகையில் நிறுவியுள்ளன. இவற்றை ஒட்டுமொத்தமாக நாம் “மீட்டுருவாக்கும் உயிர்ம வேளாண்மை” என்று அழைக்கிறோம். இதைச் செயல்படுத்துவதன் மூலம் பசுங்குடில் விளைவுகளில் இருந்து புவிச் சூழலை நாம் காக்கலாம்.

உழவர்கள் தொன்றுதொட்டு இத்தகைய வேளாண் முறைகளைத்தாம் பின்பற்றிவந்துள்ளனர். ஆகவே இதில் புதிதாகப் பரிசோதனை செய்வதற்கு ஏதுமில்லை. இவற்றை அறிவியல் முறையில் ஆய்வு செய்திருப்பதுதான் அண்மையில் நாம் நடத்தி முடித்துள்ள செயல். வெவ்வேறு வகைப்பட்ட பாரம்பரிய மீட்டுருவாக்க வேளாண் முறைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றையும் இப்போது புழக்கத்தில் உள்ள வேளாண் முறைகளையும் தொடர்ந்து செயல்படுத்தி, விளைச்சலில் அவற்றின் செயல்திறன், வறட்சி தாங்குதிறன், கரியத்தைக் கைப்பற்றி அடக்குந் தன்மை ஆகியவற்றைக் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளில் சில முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கின்றன. ரொடேல் நிறுவன ஆய்வுகளும் இவற்றில் அடங்கும். கோச்ட்டா ரிக்கா நாட்டில் நடத்தப்பட்ட ஓர் அண்மைக் கால ஆய்வும் குறிப்பிடத்தக்கது.

உயிர்ம வேளாண் முறைகளைப் பயன்படுத்தி உலக மக்கள் அனைவருக்கும் போதுமான உணவை உற்பத்தி செய்து தர முடியும் என்பதையும் பெருமளவில் கரியத்தை மண்ணில் தக்கவைக்க முடியும் என்பதை இந்த ஆய்வுகள் நிறுவியுள்ளன.

இயற்கைச் சூழல் மண்டலங்களின் உள்ளுறை அறிவு, உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களின் பாரம்பரிய மேலாண்மை அறிவு ஆகியவற்றுடன் முன்னணித் தொழில்நுட்பப் புரிதல்கள் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தி சூழல் கேட்டைப் பெருமளவு குறைப்பதற்கு இதுவே தக்க தருணம்.

மீட்டுருவாக்க உயிர்ம வேளாண்மையே அதற்கு மிகவும் ஏற்ற கருவி. அதனைக் குறித்து இனிச் சற்று விரிவாகப் பார்ப்போம்!

மீட்டுருவாக்கும் உயிர்ம வேளாண்மையும் சூழல் மாறுபடுதலும்

கன்னெயம் உள்ளிட்ட கனிம எரிபொருள்களைப் பயன்படுத்தாத, கரியமற்ற பொருளாதார முறைதான் சூழல் சிக்கலை ஒரேயடியாகத் தீர்க்கும். ஆனால், அத்தகைய பொருளாதார முறை குறுகிய காலத்தில் உலகெங்கும் நடைமுறைக்கு வராதென்பது பரவலாக உணரப்பட்ட உண்மை. அதற்குத் தேவையான தொழிநுட்பங்கள், சந்தைகள், அரசியல் மற்றும் குமுகவியக் கட்டமைப்புகள் போதுமான வேகத்தில் உருவாகவில்லை. அத்தகைய பொருளாதார முறை நடைமுறைக்கு வருவதற்குத் தேவையான காலக்கெடுவுக்குள் புவி அளவுக்கதிகமாக வெப்பமடைந்துவிடும். அதற்காகக் காத்திருக்கும் ஒவ்வோராண்டும் நம் உலகின் எதிர்காலம் நம்பிக்கை இழக்குமளவு மோசமாகிவருகிறது. புவி சூடாவதைத் தடுக்கும்வண்ணம் அடுத்து நாம் செய்யக்கூடிய எந்தவொரு செயலுமே மிகத் தாமதமாகச் செய்யப்படும் அரைகுறை நடவடிக்கையாக இருக்கின்ற அபாயம் மிக்க கட்டத்தில் நாம் அடியெடுத்துவைத்துவிட்டோம். இனியும் காலந்தாழ்த்தினால், வருங்காலத்தில் கண்டுபிடிக்கக்கூடிய தொழிநுட்பங்கள் நம்மைக் காக்கும் என்ற [ஆதாரமற்ற] நம்பிக்கை ஒன்றே எஞ்சும். அத்தகைய தீர்வுகள் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களையும் மனிதக் குமுகங்களின் பண்பாடுகளையும் அழிக்கக்கூடியன, ஆனால், அத்தகைய தீய தீர்வுகளையும் பயன்படுத்தவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவோம்!

இருப்பினும், நம் பாதங்களுக்கு அடியிலேயே நம்பிக்கை தரும் தீர்வு ஒன்று உள்ளது. அது பன்னெடுங்காலமாகப் பயன்பாட்டில் இருப்பது; மீண்டும் பரவலாகப் பயன்படுத்தக்கூடியது. அதற்கு அதிகம் செலவும் பிடிக்காது. உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு அதை மாற்றி வடிவமைத்துக்கொள்ளவும் முடியும். சூழலை நிலைப்படுத்துவதைத் தவிர பிற நன்மைகளும் உள்ள அந்தத் தீர்வை உடனடியாக உலகெங்கும் செயல்படுத்தவியலும்.

வேளாண்மை என்பது தான் அந்தத் தீர்வு! இப்போது பரவலாக நடைமுறையில் இருக்கின்ற தொழில்மயமான வேளாண்மை அன்று. இவ்வுலகும் இதில் வாழும் கோடிக் கணக்கான உயிரினங்களும் நல்வாழ்வு வாழும் உரிமை உள்ளவை என்ற புரிதலை உள்ளடக்கிய வேளாண்மையே நம் குறிக்கோள். மண், நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தையும் காக்கும் வேளாண்மை அது. மனிதர் நலம், விலங்குகளுடைய நலம், சூழல் மண்டலங்களின் நலம் ஆகிய அனைத்துக்கும் முதன்மை தருவது அது. கரியத்தை உள்வாங்கிக்கொள்ளும் மண்ணின் திறனை மேலும் அதிகரிக்க உதவும் வேளாண் முறை அது. அது தான் மீட்டுருவாக்க உயிர்ம வேளாண்மை. சூழல் மாறுபடுவதைத் தடுப்பதற்கு இன்றே நாம் செயல்படுத்தவேண்டிய உடனடித் தீர்வு அது. புதிய தொழிநுட்பங்கள் நமக்குத் தேவையில்லை. இந்த வேளாண் முறையே சூழல் மாறுபாடுகளைப் பெருமளவு கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.

தோட்ட மண்ணில் கரியத்தை ஒதுக்கிவைப்பதன் மூலம் இப்போது ஆண்டுதோறும் உலகெங்கும் வெளியாகும் ஏறக்குறைய 3,600 கோடி டன் கரியமில வளி முழுவதையும் சூழல் மண்டலத்தைப் பாதிக்காதவண்ணம் ஒதுக்கமுடியும். 2020-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வோர் ஆண்டும் வெளியாகக் கூடிய சுமார் 4,100 - 4,700 கோடி டன் கரியமில வளிக்குச் சமமான பசுங்குடில் வளிகளையும் இவ்வாறு பாதுகாப்பாக மண்ணில் சேமிப்பதன் மூலம் வளிமண்டலத்தில் இருந்து ஒதுக்கி வைக்க இயலும். அதன் வழியாக, புவி கூடுதல் வெப்பமடைவதை 1.5 பாகை செல்சியச் அளவுக்குள் வைத்திருக்க முடியும்.

ஆனால், இப்போது உலகெங்கும் பரவலாக நடைமுறையில் உள்ள வேளாண் முறை மேற்படித் தீர்வின் ஒரு பாகம் அன்று. மாறாக, இந்த வேளாண் முறையும் இப்போது உள்ள சூழல் சிக்கல்களுக்கு ஒரு முதன்மைக் காரணியாக உள்ளது. அது பசுங்குடில் வளிகளை இரண்டு வகைகளில் வெளியிடுகிறது: (1) மண்ணில் உள்ள கரியத்தை அரிக்க விடும் நவீன வேளாண் செயல்பாடுகள் நேரடியாக நைட்ரச் ஆக்சைட் வளியை வெளிப்படுத்துகின்றன; (2) நிலப் பயன்பாட்டில் சூழலுக்கொவ்வாத மாற்றங்களைச் செய்வதன் மூலம் மறைமுகமாகவும் பசுங்குடில் வளிகளை வெளியிடுகின்றது. மேலும், வளமையான நெல் பயிரிடு முறையும் தீவிர கால்நடை வளர்ப்பு முறையும் மீத்தேன் எனும் பசுங்குடில் வளியை அதிக அளவில் வெளியிடுகின்றன.

உலக வரலாற்றில் வேளாண்மை தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை பெரும்பாலான நிலங்கள் தம் மண்களின் உயிர்மக் கரியத்தில் முப்பது முதல் எழுபத்தைந்து விழுக்காட்டுக் கரியத்தை இழந்துவிட்டன. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி தொடங்கி வேளாண்மை நவீனப்படுத்தப்பட்டபோது செயற்கை (நைட்ரசன்) உரங்களை இடுதல், நிலத்தை உழுதல், ஓரினப் பயிர் சாகுபடி, விளைச்சலை முதன்மையாகக் கொண்ட மேலாண்மை முறைகள் போன்றவை மண்ணின் கரிய இழப்பை மேன்மேலும் துரிதப்படுத்தியுள்ளன. அதன் காரணமாக நாம் நைட்ரச் ஆக்சைட், கரியமில வளி போன்றவற்றை மிகப் பெரிய அளவில் வளி மண்டலத்தில் நிரப்பியுள்ளோம்.

கடந்த பத்தாண்டுகளில் இத்தகைய நேரடி வேளாண் வெளியீடுகள் ஆண்டுக்கு ஒரு விழுக்காடு வீதம் அதிகரித்துவந்துள்ளன. 2010-இல் மட்டும் 460 கோடி டன் கரியமில வளி இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. இது உலகெங்கும் மொத்தமாக மாந்தச் செயல்பாட்டின் மூலம் வெளியான அளவில் பத்தில் ஒரு பங்காகும். இது நேரடி வெளியீடு மட்டுமே.

உணவு மண்டலத்தின் பிற செயல்பாடுகள் - கால்நடைத் தீவன உற்பத்தி, செயற்கை உரங்கள் மற்றும் உயிர்க் கொல்லிகளின் உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், உணவுப் பொருள் போக்குவரத்து, குளிரூட்டுதல், கழிவுகளை அப்புறப்படுத்துதல் போன்ற பிற செயல்கள் - உலகின் மொத்தப் பசுங்குடில் வெளியீட்டில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்குக் காரணிகளாக உள்ளன.

நமக்கு ஏற்கெனவே தெரிந்த, அதிகச் செலவு பிடிக்காத வேளாண் தொழிநுட்பச் செயல்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பசுங்குடி வளி வெளியீட்டைக் குறைப்பதும் கரியமில வளியை உறிஞ்சிக்கொள்வதும் சாத்தியமாகின்றன. கரியத்தை உறிஞ்சும் அத்தகைய வேளாண் முறையானது, உலகத் தண்ணீர்ச் சிக்கல், வறுமை, பசி பட்டினி போன்ற நம்மை அச்சுறுத்தும் பிற இன்னல்களையும் ஒழிக்கும். அது மட்டுமன்றி நம் சந்ததியினருக்கும் பிற உயிரினங்களுக்கும் நலந்தரும் சூழல் மண்டலத்தையும் விட்டுச் செல்ல வழிவகுக்கும்.

மீட்டுருவாக்க உயிர்ம வேளாண்மை என்றால் என்ன?

மீட்டுருவாக்க உயிர்ம வேளாண்மை என்பது தான் பயன்படுத்தும் வளங்களை அழிப்பதற்கு மாறாக அவற்றை மேம்படுத்துகிற ஒருமுகப்படுத்தப்பட்ட வேளாண் முறைமையைக் குறிக்கிறது. அது சூழலியல், குமுகவியல், பொருளாதாரம், ஆன்மிக நலம் ஆகிய அனைத்துக்காகவும் வேண்டிப் பண்ணையில் புத்தாக்கங்களை ஊக்குவிக்கிறது.

தற்சார்பு வேளாண்மை என்பதையும் தாண்டிச் செல்லும் இந்த வேளாண் முறையைக் குறிப்பதற்கு அமெரிக்க உயிர்ம வேளாண் முன்னோடி சே.ஐ. ரொடோலின் மகன் ராபர்ட் ரொடேல் இந்தச் சொற்றொடரை உருவாக்கினார். இயற்கைச் சூழல் மண்டலங்கள் தம் சமநிலை குலைந்தால் தாமாகவே அதைச் சீர்படுத்திக்கொள்ளும் தன்மையும் வல்லமையும் உடையவை. பிற வேளாண் முறைகள் சூழல் மண்டலங்களின் இந்தத் தன்மையைக் கண்டுகொள்ளாது விடுகின்றன அல்லது எதிர்வினையாற்றுகின்றன. இவற்றுக்கு மாறாக, மீட்டுருவாக்க உயிர்ம வேளாண்மை இந்தத் தன்மையைப் பயன்படுத்திக்கொள்கிறது. (அ) முற்றுப்பெற்ற ஊட்டச்சத்து வளையங்கள் (ஆ) உயிரிப் பொதுவாயத்தில் பன்மயம் (இ) ஆண்டுக்கொருமுறை பயிரிடவேண்டிய செடி கொடிகளுக்கு மாறாகப் பல்லாண்டுக் காலம் நிலைத்திருக்கக் கூடிய பயிர்களை விளைவித்தல் (ஈ) வெளியிடு பொருள்களைக் காட்டிலும் தோட்டத்திலேயே கிடைப்பனவற்றை அதிகம் பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கிய போக்கு இந்த வேளாண் முறையின் இயல்பு.

உயிர்மம், மீட்டுருவாக்கம், வேளாண்சூழலிய முறைமைகள் போன்றவற்றுக்கு நம் வேளாண் செயல்பாடுகளை மாற்றுவதன் மூலம் மண்ணின் கரியத் தன்மையை அதிகரித்தல், பசுங்குடில் வளி வெளியீட்டைக் குறைத்தல், விளைச்சலைக் குறையாமல் தக்கவைத்துக் கொள்ளல், மண்ணின் நீர்ப் பிடிப்புத் தன்மையையும் பயிர்கள் நீர் எடுத்துக் கொள்வதையும் மேம்படுத்துதல், வேளாண் உபரியை அதிகரித்தல், உழவுக் குமுகங்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுதல்ஆகிய அனைத்தையும் சாதிக்க இயலும். அதே சமயம் உயிரிப் பன்மயத்தையும் சூழல் மண்டலங்களின் தாங்குதிறனையும் உறுதிப்படுத்தவும் முடியும். ஆக, இந்த வேளாண் முறை, சூழலியல் தீர்வுகளின் இன்றியமையாத ஓர் உறுப்பு ஆகிறது. மீட்டுருவாக்க உயிர்ம வேளாண் செயல்பாடுகள் குறித்துச் சற்று விளக்கமாக அடுத்த மாதம் பார்க்கலாம்.

மூலக் கட்டுரை:

“Regenerative Organic Agriculture and Climate Change – A Down-to-Earth Solution to Global Warming”, Rodale Institute, www.rodaleinstitute.org, Oct. 2014.

 • உயிர்மம் organic
 • கரிமப் பொருள்கள் organic matter
 • கரிய உறிஞ்சி (வடிகால்) carbon sink
 • கரிய ஊற்று carbon pump
 • கரியமில வளி carbon di oxide
 • கரியம் carbon
 • குமுகம் 'சமூகம்' என்பதன் தமிழ் வடிவம்
 • கோச்ட்டா ரிக்கா costa rica (tropical farming systems trial)
 • செல்சியச் celcius
 • சே.ஐ.ரொடேல் j I rodale
 • டன் (ஆயிரம் கிலோ எடை) tonne
 • திணைக் களம் (சூழல் மண்டலம்) ecosystem
 • நைட்ரச் ஆக்சைட் nitrous oxide (N2O)
 • பசுங்குடில் வளிகள் greenhouse gases
 • பசுங்குடில் விளைவு (அதிக வெப்பமடைதல்) greenhouse effect
 • பொதுவாயம் community
 • மீட்டுருவாக்கம் regenerative
 • மீத்தேன் methane
 • முற்றுப்பெற்ற ஊட்டச்சத்து வளையங்கள் closed nutrient loops
 • ராபர்ட் ரொடேல் robert rodale
 • ரொடேல் நிறுவனம் rodale institute
 • வளி வாயு என்பதன் தமிழ் வடிவம்
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org