தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

இயற்கை வழி நெல் சாகுபடியில் சில உத்திகள் - ஜெயக்குமார்


1. ஆடு வளர்ப்பும் இடு பொருள் செலவும்

விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாற அச்சப்படுவது, இயற்கை முறையில் பயிர் செய்யும் போது அதிக இன்னல்களை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக. ஆனால் இயற்கைக்கு மாறாமல் மிக அதிக இன்னல்களைச் சந்திக்கின்றார்கள் என்பதே நடைமுறை உண்மை. நான் இரசாயன‌ முறையில் நெல் விவசாயம் செய்யும் போது எனக்கு ஒரு ஏக்கருக்கு 16000 ரூபாய் செலவு ஆனது. அதையே இயற்கை முறையில் செய்யும்போது 8000 முதல் 11000 வரையே செலவு செய்கின்றேன். (ரசாயன‌ உரம் மற்றும் பூச்சிக்கொல்லி செலவுகள் அறவே இல்லை. இதுவே ஏக்கருக்கு 4000 முதல் 5000 வரை ஆகும்).

நான் இயற்கை விவசாயத்திற்கு மாறுவதாக‌ முடிவு எடுத்தவுடன் ஆடு வளர்க்கவும் திட்டம் போட்டு அதற்காக கொட்டகை மற்றும் தீவன‌ப்பயிர்களை வளர்த்து ஆடுகளை வாங்கினேன். இயற்கை விவசாயத்திற்கு மிகவும் முக்கியமாக ஆட்டு உரம் தேவை என்பதால் இந்த முடிவெடுத்தேன். அது ஒருபுறமிருக்க ஒரு வருடத்திற்கு ஒரு ஆண்டின் மூலம் 10,000 முதல் 12000 வரை குட்டிகள் விற்பதன் மூலம் வருவாய் வந்தது. ஒரு ஆடு வருடத்திற்கு ஒரு முறை குட்டி போட்டாலும் ஒரு குட்டி என்றால் ஒரு வருடத்தில் அதை 10,000 ரூபாய்க்கும், இரண்டு குட்டி என்றால் 12000-14000 ரூபாய்க்கும் விற்பனை செய்துவிடலாம்.

எனவே ஒரு ஏக்கருக்கான செலவிற்கு ஒரு ஆட்டின் வருமானம் போதுமானது என்பதை எனது கருத்து. ஆட்டிற்கான தீவன‌ப்பயிர் மற்றும் கொட்டகை ஒரு முறை முதலீடுதான்.

தீவன‌ப்பயிர்

30-40 ஆடுகளுக்கு ஒரு ஏக்கரில் CO 4, CO F S29, வேலிமசால், அகத்தி, சுபாபுல், கிளைரிசிடியா போன்ற பயிர்களை வளர்க்க வேண்டும் (40:20:20:10:5:5). ஒரு ஆட்டிற்கு ஒரு நாளைக்குக் காலை 9 மணிக்கு 2 கிலோ பசுந்தீவனமும், மதியம் 250 முதல் 400 கிராம் அடர்தீவனமும், மாலை 5 மணிக்கு 2 கிலோ பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும்.

கொட்டில்

கொட்டில் முறை என்பது தரை மட்டத்திலிருந்து 4 முதல் 5 அடி உயரத்தில் பரண் அமைத்து ஆடுகளை வளர்ப்பது. இதனால் ஆட்டுப்புழுக்கைகள் கொட்டிலின் அடிப்பகுதியில் சேர்ந்துவிடும். ஆடுகளும் ஆரோக்கியமாக இருக்கும். நல்ல காற்றோட்டம் இருப்பதால் அமோனியா வாயு காற்றில் போய்விடும்.

எனது பண்ணையில் ஆடுகளை உரத்திற்காக மட்டுமே வளர்க்கின்றேன். 10 ஆட்டின் ஒரு வருட உரம் மற்றும் அதன் கோமியத்தில் தொடர்ந்து நனைந்த‌ வைக்கோல்/தேங்காய் நார் இரண்டும் சேர்த்து இட்டால் 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாற்றாங்காலுக்குப் போதுமான உரமாகும்.

2. இயற்கை முறையில் எலிக்கட்டுப்பாடு

நெல் விவசாயிகளுக்கு ஒரு மிகப் பெரும் எதிரியாக இருப்பது வயல் எலிகளே. சராசரியாக 20% விளைச்சலை எலிகள் தின்பதாகப் பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஒரு எலியானது பிறந்த 30 முதல் 35 நாட்களில் சினை பிடித்து அடுத்த 30 நாட்களில் 7 முதல் 12 வரை குட்டிகளை ஈனும் திறனுடையது. 1 எலி ஒரு ஆண்டில் 200 முதல் 300 வரையில் இனப் பெருக்கம் செய்யும். எனவே எலிகளைக் கட்டுப்படுத்துவதை மிகவும் முக்கியமான சவாலாக விவசாயிகள் பார்க்க வேண்டியிருக்கும்.

பொதுவான வழிமுறைகள்

பொதுவாக எலிகளை கிட்டி முறையிலும், பொரி வைத்தும் பிடிப்பார்கள். கிட்டி முறையில் ஒரு ஆள் 100 முதல் 200 கிட்டிகளை நெல் வயலில் மாலை வேளையில் போடுவார்கள். ஒரு ஆள் அதிகபட்சமாக ஒரு ஏக்கர் தான் போட முடியும். ஆகையால் சிறு குறு விவசாயிகளுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கிட்டியில் 10 முதல் 30 வரை எலிகள் விழும். அதிக நிலம் உள்ளவர்கள் அதிக நாள் கிட்டி போடவேண்டியிருக்கும். அதனால் எலிகளின் சேதத்தை உடனடியாக எல்லா வயல்களிலும் கட்டுப்படுத்த இயலாது.

பொரி வைத்து எலிகளை கட்டுப்ப‌டுத்துவதற்கு சின்க் பாஸ்ஃபைட் என்ற நஞ்சை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. நெல்லை பொரித்து அதில் சின்க் பாஸ்ஃபைட் என்ற எலிக்கொல்லியை கைபடாமல் தேங்காய் எண்ணெயுடன் கலக்கி வரப்புகளில் மாலை வேளைகளில் போடுவார்கள். இதனைத் தின்றவுடன் தண்ணீர் குடிக்க தண்ணீர் இருக்கும் இடம் தேடி எலிகள் ஓட்டமெடுக்கும். சற்று நேரத்தில் எலி உயிரைவிடும். எலி மட்டும் அல்ல எலிகளை பிடித்து உண்ணும் பாம்புகளும், இறக்க நேரிடும். பருந்து போன்ற எலிகளை உண்ணும் பறவைகளும் நஞ்சு தின்ற எலிகளைத் தின்பதால் இறக்க நேரிடும். இந்த முறை இயற்கை முறை விவசாயத்திற்குப் பயனற்றது.

புகைமூட்டம்

எந்த வேதிப் பொருளும் நம் வயலையோ, நீரையோ மாசுபடுத்தாமல் இயற்கையாய் வயலில் உள்ள பொருட்களைக் கொண்டே எலிகளை அதன் வளைகளிலேயே பிடிப்பது புகைமூட்டம் என்ற தொழில்நுட்பமாகும். இந்த முறையில் எலிகளை ஆள் வைத்து வயல் வரப்புகளில் உள்ள எலி பொந்துகளை அறிந்து அந்தப் பொந்தில் புகை மூட்டம் இட்டு எலிகளை பிடிக்கலாம். ஒரு மண் பானையில் அடிப்பகுதியில் ஒரு சிறிய துளையிட்டு, பானையினுள் வைக்கோலை பற்ற வைத்து புகை வருமாறு உள்ளே திணிக்க வேண்டும். பிறகு பானையை எலிப்பொந்தின் வாயில் வைத்து (பானையை கவிழ்த்து) சிறுதுளையின் மூலம் அதிக காற்றை உள்ளே செலுத்த வேண்டும். (வாய் வைத்து ஊத வேண்டும்) அந்த புகை எலிபொந்தினுள் உள்ள எலிகளை மூச்சுத்திணற‌ வைக்கும். அதன் பிறகு பொந்துகளை மண் வெட்டி மூலம் வெட்டி எலிகளை பிடித்துவிடலாம்.. இந்த முறையில் 2 ஆள் கொண்டு 20 ஏக்கரில் உள்ள பொந்துகளை பார்த்து விடலாம். ஆகையால் அதிக நிலம் கொண்ட விவசாயிகள் இந்த முறையை பின்பற்றலாம்.

பப்பாளிக்காய்

மற்றொரு முறையில் பப்பாளி காய்களை துண்டுத்துண்டாக வெட்டி மாலைவேளையில் வரப்புகளில் போட்டுவிட்டால் எலிகள் பப்பாளித் துண்டுகளை தின்றுவிடும். அதன்பின் அதில் இருக்கும் பிசின் போன்ற திரவம் எலியின் வாய்களில் ஒட்டிவிடுவதால் எலிகள் பசியில் இறந்துவிடும்.

ஆந்தைப்பந்தம்

எலிகளை கிட்டிபோட்டோ, புகை மூட்டம் போட்டோ பிடித்தாலும் நெல்வயல்களில் தென்னை மட்டையின் அடிப்பகுதியை 1 மீட்டர் உயரமிருக்குமாறு நட்டுவிட்டால் (ஏக்கருக்கு 30-40 மட்டைகள்) அதில் ஆந்தைகள் உட்கார்ந்து இரவு நேரங்களில் எலிகளைப் பிடித்துத் தின்னும். சவுக்குக் கழிகளையோ மூங்கில் கழிகளையோ நட்டு அதன் மேல் கரும்புள்ளி வெண்புள்ளி குத்திய பானையைக் கவழ்த்தும் வைக்கலாம். ஒரு ஆந்தையானது ஒரு நாளில் 3 முதல் 6 எலிகளை உண்ணும். வரப்பு மரங்களில் கூடுகள் (ஆந்தை) அமைத்தும் ஆந்தைகளை வளர்க்கலாம். பெரிய மரக்கிளையில் 10 அடி நீளமுள்ள பனைமரத்துண்டை ஒரு துளையிட்டு ச‌மமாக (மேல், கீழ் சாயாமல்) வைத்துக் கட்டிவிட்டால் பனை மரத்தின் துவாரத்தில் ஆந்தைகள் அடைந்து குஞ்சு பொரிக்கும். இந்த முறை நல்ல பயனளிக்கும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org