தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஊனுடம்பு ஆலயம் - நாச்சாள்


விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமாகும் கண்

பிரபஞ்சத்தின் படைப்பில் மனிதனுக்கு அழகு சேர்ப்பது, குறிப்பாக முகத்திலேயே அழகான பகுதி, எதுவென்றால் கண்கள் என்றுதான் அனைவரும் கூறுவோம். அதுவும் அடர்த்தியான‌ கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேலும் அதிகரிக்கும். உணர்வு உறுப்பைச் சார்ந்த கண்கள் நமது உடலின் கண்ணாடி.

ஆம், விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைத்து .002 நொடியில் படம் பிடித்து காட்டிடும் ஓர் அற்புத உறுப்பு தான் கண். இனிமையான காட்சிகளை நமக்களித்து நம்மை இளமையாக வைத்திருக்கும் இனிய உறுப்பு தான் கண். சுமார் 14 கோடி அணுக்கள் விழித் திரையில் வேலை செய்கின்றன. 13.7 கோடி ஒளி உணர் கம்பு சில்லுகள் (ROD CELLS) கருப்பு வெள்ளை பார்வையை ஈர்க்கின்றன‌. 70 லட்சம் கோன் சில்லுகள் (CONE CELLS) பல நிற‌ங்களின் பார்வையை ஈர்க்கின்றன‌. 'எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா' என்று பாரதி புகழ்ந்த இந்த வியத்தகு உலகை ரசிக்க கோடான கோடி கண்கள் வேண்டும்.

உடலின் ஒளியாய் இருப்பது கண் தான். எனவே நமது கண் தூய்மையாக இருந்தால் உடம்பு முழுவதும் ஒளி உள்ளதாய் இருக்கும். மனிதர்களின் ஞான நிலையை கண்கள் (தேஜஸ்) மூலம் அறியலாம்.

கண்ணும் இயற்கை ஆற்றலும்

நம் முன்னோர்கள் பல பழக்கங்களை நல்ல பழக்கங்கள் என்று அறிவியல் கரணங்கள் கூறாது நமக்குச் சொல்லிக்கொடுத்தனர். அவற்றில் மிக முக்கியமான பழக்கம் காலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் கண் விழிப்பது. பிரபஞ்சம் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் தருணம் பின் இரவு பொழுது அதாவது பிரம்மமுகூர்த்த நேரமான காலை 3 மணிக்கு முன். தன்னை புதுப்பித்துக் கொண்டு அதிக ஆற்றலை இந்த பூமிக்கு கொடுக்கும் நேரமே பிரம்மமுகூர்த்த நேரம். பிரபஞ்ச சக்தி பூமிக்கு அருகில் சுழன்று கொண்டிருக்கும் நேரம். அதனை ஒவ்வொரு உயிரினமும் கண்விழித்த நிலையில் இருந்தாலே உட்கிரகிக்க முடியும். இந்த ஆற்றலே உயிரினங்களின் சக்தியையும் இளமையையும் பெற பேருதவியாக இருக்கிறது.

மனிதனைத் தவிர அனைத்து உயிரினமும் சாகும் வரை இளமையுடன் தனக்கான உணவை தானே தேடி உட்கொள்கிறது. இதற்குக் காரணம் அவை காலை 4 மணிக்கு எழுவதே. காலை விழிப்புணர்வு அற்ற நிலையில் நமது உடலின் சக்க‌ரங்களால் இந்த பிராண ஆற்றலை உட்கிரகிக்க இயலாது. இந்த ஆற்றலானது ஒவ்வொரு உயிரினத்திற்கும் மனோபலம் மற்றும் உடல் பலத்தை கொடுக்கும். மேலும் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனாலேயே காலை எழுந்து கோலம் போடும் பெண்கள் அதிக ஆற்றலோடு மனோபலம் படைத்தவராக இருகின்றனர்.

அடுத்ததாக காலை விழித்ததும் உள்ளங்கையைப் பார்ப்பது. இதனால் பல நன்மைகள் நமக்கு கிடைகிறது. சீன மருத்துவ முறையான ரீய்கி , மற்றும் பிராண சிகிச்சை (praanic healing) செய்பவர்கள் சூட்சம சக்திகள் என்று கூறுவர்.

கண்கள் அதிக நேரம் மூடி இருக்கும் பொழுது ஆற்றலானது (ஜீவகாந்த ஆற்றல் - Vision powers) கண்களை சுற்றயுள்ள சக்தி கேந்திரங்களில் சேமிக்கப்படுகிறது. கண்களை திறக்கும் பொழுது அவை விரயமாகிறது. அதனாலேயே காலையில் கண் விழித்தவுடன் உள்ளங்கையை உரசி (உடலின் சக்க‌ரங்களைத் தூண்டுவது) கண்களால் பார்க்க வேண்டும். இதனால் கண்களில் சேமித்த ஆற்றல் உள்ளங்கை வழியாக உடலுக்கு சென்று உடலிலேயே சுற்றி விடப் படுகிறது. நாம் யோகா மற்றும் தியானம் செய்த பிறகும் கையை உரசி கண்களால் பார்ப்பதற்கும் இதுவே காரணம்.

கண்களின் ஆற்றலைப் பற்றி இந்த மகாபாரதக் கதையின் மூலம் மேலும் தெரிந்து கொள்ளலாம். காந்தாரி - கண்ணைக் கட்டி வாழ்ந்தவர். யுத்ததில் துரியோதனன் பீமன் அடித்த அடியை வாங்கவில்லை, காரணம் காந்தாரியின் கண்களில் இருந்து வந்த சக்தி உடல் முழுதும் பறந்து கவசமாக இருந்தது.

கண்ணும் காதும்

ஆண்களை விட, பெண்கள் அதிகம் கண்ணாடி அணிவதில்லை. இதற்கு காரணம் பெண்கள் காது குத்தி இருப்பதே என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அக்குபஞ்சர் தத்துவத்தில் கண்களைப் பாதுகாக்கவே காது குத்துவதாகக் கூறப்படுகிறது. உடலின் ஒட்டு மொத்த நலனுக்கும் காதுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் காதைக் கூர்ந்து பார்த்தால், கருப்பையில் குழந்தை இருக்கும் வடிவத்தில் இருக்கும்.

கண்ணும் உள்ளுறுப்புகளும்

உடலில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தப்பையின் வெளி உணர்வு உறுப்பே கண்கள். இதற்கான சுவை புளிப்பு; உணர்வு கோபம்; நிறம் பச்சை. நாம் அதிகம் கோபப்பட்டால் அல்லது இரவு தூக்கம் சரியாக இல்லது போனால் நமது உடலின் வளர்சதை மாற்றம் பாதிக்கப் படப்போவதுடன் கண்கள் சிவந்தும் காணப்படும்.

கண்களும் நோயும்

கண்களில் உண்டாகும் அனைத்து நோய்களுக்கும் காரணம் கண்கள் அல்ல. கண் நோய்கள் அனைத்தும் நோயின் பிரதிபலிப்பே. நோயின் மூலம் கண்கள் கிடையாது.

வர்மம், அக்குபஞ்சர் போன்ற நாட்டு வைத்திய முறைகளில் கண்களைச் சுற்றிப் பல சக்தி மையங்கள் உள்ளது. கண்ணின் ஓரமும் மூக்கின் ஆரம்பமும் சேரும் இடத்தில் ஐம்பூதங்களில் உள்ள நீரின் சக்தி ஓட்ட பாதை ஆரம்பமாகின்றது. கண்ணின் கரு விழிக்கும் நேர் கீழ் பகுதியில் எலும்பின் சிறு பள்ளம் போன்ற பகுதியில் ஐம்பூதங்களில் ஒன்றான மண் சக்தி ஓட்ட பாதை ஆரம்பமாகின்றது. கண்ணின் மறு பக்க (காது பக்கம்) ஓரத்தில் ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாய சக்தி ஓட்ட பாதை ஆரம்பமாகின்றது. கண்ணின் புருவத்தின் வெளி பக்க ஓரத்தில் நெருப்பு சக்தி பாதை கடந்து செல்கின்றது. இவை உள்ளுறுப்புகளான சிறுநீர்ப்பை, வயிறு, பித்தப்பை ஆகியவற்றைக் கொண்டு இயங்குகிறது.

இவைகளை எதையும் கருத்தில் கொள்ளாமல் கண்ணுக்கு நாம் சிகிச்சையளிப்போமானால் அது தற்காலிகத் தீர்வைத் தந்து நோயை உள் பக்கமாக வளரவே செய்யும். நவீன கால மருந்துகளும் மாத்திரைகளும் தற்காலிகத் தீர்வையே தருகின்றன. அதனால்தான் ஆரம்பத்தில் குறைந்த அளவு ஆற்றல் குறியீடு (power) உள்ள கண்ணாடி போட்டவர்களுக்கு, நாட்பட, நாட்பட‌ ஆற்றல் குறியீடு அதிகமான கண்ணாடி தேவைப்படுகின்றது. நல்ல மருத்துவம் ஆற்றல் குறியீட்டைக் குறைத்துக் கொண்டு அல்லவா வந்திருக்க வேண்டும்?

எடுத்துக்காட்டாக‌ வயிற்றுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம். வயிற்றில் ஏற்படும் பாதிப்புக்களால் கண்ணழற்சி நோய், விழி வெண்படலத்தில் சிவப்பேறிய இரத்த நாளங்கள் தெரிதல், கண்ணிலிருந்து வெண்ணிற கழிவுகள் அதிகம் வெளியேறுதல், கண்ணில் நீர் வடிதல், கிட்டப் பார்வை, நரம்பு இளைத்து சுருங்குதல், கீழ் இமை துடித்தல் போன்ற நோய்கள் உருவாகின்றன. இரண்டு கண்களையும் மூடி லேசாக சிறிது நேரம் கசக்குங்கள், பிறகு கண்களை திறந்து பாருங்கள். உங்களுக்கு இப்போது நட்சத்திரங்கள் பறப்பது போன்றும் மின் மினிக்கள் பறப்பது போன்றும் தெரிந்தால் உங்கள் கண்கள் பெருங்குடலால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று பொருள். இதற்குப் பெருங்குடலைச் சரி செய்ய வேண்டுமே ஒழிய கண்களை அல்ல. சிறிது வெளிச்சத்தைப் பார்த்தாலும் கண் கூசுகின்றதா? வெயிலில் வெளியில் பார்க்க மிகவும் சிரமப்படுகின்றீர்களா? கண்ணில் எரிச்சலுடன் நீர் வடிகின்றதா? அப்படியானால் சரி செய்யப்பட வேண்டியது பித்தப்பையை. கிட்டப் பார்வை, தூரப் பார்வை, கண்ணில் அரிப்பு, நீர் வடிதல், சிவந்து போதல் இவைகளை சரி செய்ய நாம் சரி செய்ய வேண்டியது நீர் சக்தியை ; கண்களை அல்ல. இவ்வாறு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் கண்ணோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த உறுப்புக்களில் ஏற்படும் இயக்க நிலை மாறுபாடுகள் தான் கண்களில் நோயாக பிரதிபலிக்கின்றது.

கண்களின் பாதுகாப்பு

அளவுக்கு அதிகமான வேலையை கொடுத்து முறையான ஓய்வு, பயிற்சி இல்லாது போனால் பார்வை கோளாறு, வீக்கம் மற்றும் கண்ணை சுற்றி கருவளையம் ஏற்ப்பட வாய்ப்புகள் அதிகம். இதனை சில பயிற்சிகள் மூலம் சரி செய்ய முடியும். மேலும் இந்த பயிற்சிகளால் நாமே கண்களை சுற்றியுள்ள சக்தி மையங்களை தூண்டிவிடவும் முடியும்.

விடியற்காலை சூரிய உதயத்தின் போது கண் விழிகளை மட்டும் பக்க வாட்டில் இடது புறத்தில் இருந்து வலது புறம் நகர்த்தவும் பின்பு வலது புறத்தில் இருந்து இடது புறம் நகர்த்தவும்.இவ்வாறு ஆறு முறை மாறி மாறி மெதுவாகச் செய்யவும். பின்னர் ஆறு முறை கண்களை நன்றாக இமைக்கவும்.

பின்பு இது போல் கண் விழிகளை மெதுவாக மேலும் கீழும் 5 முறை நகர்த்தி பின் ஐந்து முறை இமைக்க வேண்டும்.பின்பு கண் விழிகளைக் குறுக்கு வாட்டில் மேலும் கீழும் 5 முறை மெதுவாக நகர்த்திய பின்பு ஐந்து முறை இமைக்கவும்.

பின்பு கண் விழிகளை மட்டும் இடது புறத்திலிருந்து மேல் நோக்கி வலப்புறமாக செல்ல விட்டு கீழ்புறம் நகர்த்தி முழு வட்ட வடிவில் ஐந்து முறை நகர்த்தி பின்பு ஐந்து முறை இமைக்க வேண்டும். அதே போல் வலப்புறத்தில் இருந்து ஆரம்பித்து கண் விழிகளை முழு வட்டத்தில் நகர்த்தி 5 முறை கண்களை இமைக்க வேண்டும். இவ்வாறு 10 நிமிடம் தினம் செய்வதினால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் புத்துணர்வு பெறுவதுடன் கண்கள் பிரகாசிக்கும்.

கண் நோய்கள் குறைய

பாகல் இலைகளை சிறிதளவு எடுத்து அதனுடன் ஆறு மிளகைச் சேர்த்து மை போல அரைத்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக கண்களை சுற்றிக் கனமாகப் பூசவேண்டும். பின்பு காலையில் எழுந்தவுடன் கழுவி விடவேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு குறைந்து கண்களை நோய் தாக்காது (Madras eye போன்ற) கண் நோய்கள் குறையும்.

அன்னாசிப்பழத்தை எடுத்து தோல்களை சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.

கண்கள் நலத்திற்கு

கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும் உணவுகளான வெள்ளை சீனி, அயோடின் கலந்த‌ உப்பு, பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் அளவுக்கு மீறிய மாவுப் பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

இயற்கையில் விளைந்த பொன்னாங்கண்ணி, எலுமிச்சை, பலா, மா, கொத்தமல்லி, பப்பாளி, தக்காளி, முருங்கை, கருவேப்பிலை, சாத்துக்குடி, திராட்சை, நெல்லி, வெள்ளரிக்காய், பேரீச்சம்பழம், இளநீர் போன்ற உணவுகள் உணவில் அளவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சீரான இரவுத் தூக்கம் இன்றியமையாதது (இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை).

படிக்கும் போதோ அல்லது கணிப்பொறியில் வேலை பார்க்கும் போதோ சிறிது இடைவேளை எடுத்துக் கொள்வது தேவை. 5 நிமிடம் கண்களை மூடி அதன் பின் மீண்டும் வேலையை தொடரலாம்.

குளிர்ந்த வெள்ளரித் துண்டுகளைக் கண்களின் மீது வைப்பதால், கண்களுக்கு அதிகமான ஈரப்பதம் கிடைக்கும். மேலும் கருவளையங்களைப் போக்கவும், சிகப்பு நிறக் கண்களை இயல்பு நிலைக்கு மாற்றவும், கண்களை அழகாகவும் நலமாகவும் வைத்திருக்கவும் உதவும்.

நார்சத்து நிறைந்த இயற்கை தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் கழிவுகள் (Toxins) வெளியேறும், கண்கள் பிரகாசிக்கும்.

[ஆசிரியர் குறிப்பு: இயற்கைசார் வாழ்வான தற்சார்பு வாழ்விற்கு உடல் நலம் பேணுதல் என்பது மிக இன்றியமையாதது. ஆங்கில மருத்துவத்திற்கு மாற்றான மருத்துவ முறைகளை ஆய்ந்து தக்க களச்சான்றுகளுடன் குறிப்பெடுப்பது தாளாண்மையின் கடமைகளில் ஒன்று. அவ்வரிசையில் ஊனுடம்பு ஆலயம் என்ற இத்தொடரில் நாச்சாள் அவர்கள் உடல் நலம் பற்றி அவர் கருத்தை எழுதி வருகிறார்.நாச்சாள் அவர்களின் அனைத்துக் கருத்துக்களும் தாளாண்மையின் கருத்துக்கள் அல்ல.பிராண சிகிச்சை, ரீய்கி போன்றவற்றைத் தீர ஆராய்ந்த பிற‌கே நாம் பரிந்துரைக்க இயலும்.எனினும் கட்டுரைத் தொடரில் உள்ள பயனுள்ள பல தகவல்களை வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோருகிறோம்.]

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org