தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஒருங்கிணைந்த பண்ணையம்


முனைவர் து. செந்திவேல், பேராசிரியர் (உழவியல்)

[ஆசிரியர் குறிப்பு: உணவு என்பதும், தொழில் என்பதும் ஆழ்ந்த வன்முறையை உள்ளடக்கியவை. தற்சார்பு வாழ்வியல் என்பது வன்முறையைக் குறைத்து (அதற்காக நுகர்ச்சியைக் குறைத்து) வாழ முற்படும் ஒரு அகிம்சை நெறி. மாறாக உழவன் விடுதலை என்பதற்கு உழவன் பொருளாதார விடுதலை பெறுதல் முதற்கட்டம். இக்கட்டுரை ஆசிரியர் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் உழவியல் துறை முனைவர். இவர் எழுதியுள்ள ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய தொழில்நுட்பக் கட்டுரை உழவர்களின் வருமானத்தைப் பெருக்கும் வழிகளை விளக்குகிறது. இதை உழவர்கள் அவரவர் சூழலுக்கும், தேவைக்கும் ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளவும்]

வளமான வாழ்விற்கு, நிலையான வருமானத்திற்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள்

இன்றைய சூழலில் பயிர் சாகுபடி மட்டும் நம்பி இருப்பதனால் நீடித்த நிலையான பயிர் விளைச்சல் மற்றும் வருமானத்தினை பெற இயலாது. பயிர் சாகுபடியுடன் அதனைச் சார்ந்த வேளாண் உப தொழில்களை இணைத்து செயலாற்ற வேண்டியது அவசியமான ஒன்று. இதனால் அதிகமான வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்துடன் மண்வளத்தனையும் பாதுகாத்து பயன் பெற முடிகிறது. தெய்வப்புலவர் அய்யன் திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பண்ணைய முறையினை பற்றி ஒரு குறளில் அழகான விள‌க்கம் தந்துள்ளார்,

பயிரொடு கால்நடை பல்மரம் இம்மூன்றும்
பாங்குடன் கொண்டது உழவு

“சீரான விவசாயம் என்பது பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பு மற்றும் பல்வேறு வகையான மரப் பயிர்களையும் இணைத்து சீராக செய்வதுதான்” என்பது இதன் விளக்கமாகும். ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது பயிர்சாகுபடியுடன் இரண்டு அல்லது மூன்று வேளாண் உப தொழில்களை இணைத்து அவற்றை ஒன்றோடு ஒன்று சார்ந்து செயல்படச் செய்து பண்ணையில் உள்ள இரு பொருட்களை முறைப்படுத்தி பயன்படுத்தி நம் நோக்கத்தினை நிறைவேற்றுவதாகும். (உ-ம்) பயிர்+பால்மாடு வளர்ப்பு, பயிர்+கோழி வளர்ப்பு, பயிர்+ஆடுவளர்ப்பு

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் நன்மைகள்

ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளைக் கையாளுவதனால் கீழ்க்கண்ட பயன்களைப் பெறமுடிகிறது.

 • அ) அதிக உற்பத்தி திறன், அதிக நீடித்த நிலையான வருமானம்
 • ஆ) சரிவிகிதமான உணவினை பெறமுடிகிறது. (பயிரோடு கால்நடைகள், கோழி இனங்களை பராமரிப்பதனால் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு மற்றும் தாது உப்புக்களை நாம் பெற முடிகிறது.)
 • இ) அங்ககப் பொருட்கள், கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுவதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
 • ஈ) ஒருங்கிணைந்த பண்ணைய முறையினால் எரிசக்தி விறகு, மரப்பலகைகள் மற்றும் தீவனப் பயிர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடிகிறது.
 • உ) அதிக வேலை வாய்ப்பு பெறலாம்
 • ஊ) வேளாண் இடுபொருட்கள் பண்ணையிலேயே உற்பத்தி செய்யப்படுவதால் அவை முறையாக வீணாகாமல் பயனாகிறது.

ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள்

ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்

1) பயிர் சார்ந்த பண்ணையம்

இவ்வகை பண்ணையத்தில் பயிர்களை முன்னிறுத்தி மற்ற சார்பு தொழில்கள் அதற்கு உதவும் வகையில் அமைகிறது. (உ‡ம்) பயிர்கள் + பால்மாடுகள் பராமரிப்பு, பயிர்கள் + பட்டுப்புழு வளர்ப்பு.

2) கால்நடை சார்ந்த பண்ணையம்

இவ்வகை பண்ணையத்தில் கால்நடைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இவற்றிலிருந்து அதிக வருமானம் கிடைக்கும் வகையில் பண்ணையம் செய்யப்படுகிறது. கால்நடைகளான பால்மாடுகள், ஆடுகள் போன்றவற்றிற்கு தேவையான தீவனப்பயிர்கள், தீவனங்கள் பண்ணையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. (உ‡ம்) கால்நடைப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, மீன் வளர்ப்பு + பன்றி வளர்ப்பு + பயிர்கள், மீன் வளர்ப்பு+வாத்து வளர்ப்பு

3) மரங்கள் சார்ந்த பண்ணையம்

இப்பண்ணைய முறையில் பல்வகை பலன் தரக்கூடிய மரங்கள் (விறகு, மரப்பலகை, தீவனம்) பயிரிடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மரங்களுக்கு இடையில் ஆண்டுப் பயிர்களான சிறுதானியங்கள், பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டு மேலாண்மை செய்யப்படுகிறது.

4) தோட்டக்கலைப் பயிர்கள் சார்ந்த பண்ணையம்

இவ்வகை பண்ணைய முறையில் பழ மரங்கள், காய்கறிகள் பயிரிடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இவற்றுடன் தேவையான கால்நடைப் பராமரிப்பு, பழங்களை பதப்படுத்துதல் போன்ற சார்பு தொழில்கள் இணைத்து செயல்படுத்தப்படுகின்றன.

சார்பு தொழில்களை நிர்ணயிக்கும் காரணிகள்

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நாம் தேர்வு செய்ய வேண்டிய காரணிகள் நன்செய், தோட்டக்கால் மற்றும் புன்செய் சாகுபடி நிலங்களைப் பொருத்து மாறுபடுகிறது. கீழ்க்கண்ட காரணிகளையும் மனதில்கொள்ள வேண்டும்.

 1. சுற்றுச்சூழல் காரணிகள் : இயற்கை, சமுக மற்றும் பொருளாதார நிலைகள்
 2. இடு பொருட்களின் இருப்பு : நில அளவு, வேலையாட்கள் மற்றும் இடுபொருட்களின் அளவு.
 3. விவசாயிகளின் தொழில் அறிவு, அனுபவம் மற்றும் ஈடுபாடு.
 4. தொழில் திட்டங்கள் : புதிய தொழிலுக்கான ஏற்ற தொழில் நுட்பங்கள்

நன்செய் நிலங்களுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்

நன்செய் நிலங்களில் கீழ்க்கண்ட பயிர் மற்றும் சார்பு தொழில்களை இணைத்து பராமரிக்க வேண்டும்.

 • அ) பயிர்கள் : நெல், கரும்பு, மஞ்சள்
 • ஆ) மீன் வளர்ப்பு
 • இ) முட்டை கோழி வளர்ப்பு / வாத்து வளர்ப்பு
 • ஈ) காளான் வளர்ப்பு

பண்ணைய மாதிரி

 • நிலப்பரப்பு : 0.40 எக்டர்
 • பயிர்கள் : 0.36 எக்டர்
 • மீன் குட்டை : 0.04 எக்டர் முட்டை கோழி குடில் மீன் குட்டைக்கு மேலே இருக்குமாறு அமைத்தல் வே

அ) பயிர்கள்

(i) நெல் - நெல் - மக்காச்சோளம் : 0.16 எக்டர் (ii) நெல் - நெல் - நிலக்கடலை : 0.10 எக்டர்

ஆ) மீன் வளர்ப்பு

மீன் குட்டையை 0.10 எக்டர் பரப்பில் 5 அடி ஆழத்தில் மண்ணை தோண்டி எடுத்து, குட்டையை அமைத்து அதில் 15 நாட்கள் வயதுடைய கீழ்க்கண்ட மீன் குஞ்சுகளை விட்டு வளர்க்க வேண்டும்.

 • கட்லா / வெள்ளிக்கெண்டை : 120 எண்கள் (மேற்பரப்பில் வசிக்கும்)
 • ரோகு மீன்கள் : 30 எண்கள் (நடுப்பகுதியில் வசிக்கும்)
 • மிர்கால் மீன்வகை : 45 எண்கள் (அடிப்பகுதியில் வசிக்கும்)
 • புல்கெண்டை வகை: 30 எண்கள்
 • சாதாக்கெண்டை : 45 எண்கள்

மொத்தம் 270 எண்கள்

இ) கோழி வளர்ப்பு

இதில் “பேப்காக்” என்ற முட்டைகோழி வகை 20 எண்கள் மீன் குட்டையின் மேல் அமைக்கப்பட்ட கோழிக்குடிலில் விட்டு வளர்க்கப்படுகிறது. கோழித் தீவனம் 100 கிராம் / ஒரு கோழிக்கு / ஒரு நாளைக்கு என்ற அளவில் தர வேண்டும். கோழியின் எச்சம் கீழே உள்ள மீன் குட்டையில் விழுமாறு கம்பி வலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு பயிரோடு மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு தொழில்களை இணைத்து செய்வதனால் சாதாரணமாக நெல் பயிர் மட்டும் சாகுபடி செய்வதைவிட அதிக வருமானம் மற்றும் வேலைவாய்ப்பினை பெறலாம். மேலும், பண்ணையில் உள்ள இடுபொருட்கள் முறையாக சீரிய முறையில் பயன்படுத்தப்படுகிறது.

தோட்டக்கால் பகுதிகளுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்

நம் நாட்டில் இந்திய விவசாயிகளின் சராசரி நிலப்பரப்பானது மிகவும் குறைவாக உள்ளது. பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளே அதிகம் உள்ளனர். பயிர்களை மட்டும் சாகுபடி செய்வதனால் நீடித்த, நிலையான வருமானம் பெற இயலாது. எனவே, சரியான வேளாண் சார்ந்த உப தொழில்களை ஒருங்கிணைப்பதினால் வருமானம் மற்றும் வேலை வாய்ப்பினை அதிகரிக்க முடியும்.

1. பயிர்களின் விபரம் பரப்பு எக்டரில்

(அ)

 • பருத்தி + பாசிப் பயறு (ஆகஸ்ட் - பிப்ரவரி)
 • மக்காச்சோளம் + தீவன தட்டைப்பயறு (பிப்ரவரி ‡ மே)
 • பல்லாரி வெங்காயம் (மே - ஆகஸ்ட்) 0.56

(ஆ)

 • கோதுமை - சூரிய காந்தி + மக்காச்சோளம்
 • தீவன தட்டைப்பயறு - கோடைப் பருத்தி + பாசிப்பயறு 0.19

(இ) கம்பு - நேப்பியர் வீரிய ஒட்டுப்புல்(கோ 4) 0.15

(ஈ) குதிரை மசால் 0.05

(உ) 150 சுபாபுல் தீவன மரச் செடிகள் (வரப்பு ஓரங்களில் நட) 0.05

2. கால்நடைப் பண்ணை குடில்

பால்மாடுகள் : 3 கலப்பின ஜெர்சிப் பசு + 2 கன்றுக்குட்டிகள்

3. காளான் வித்து மற்றும ;காளான் உற்பத்தி 1.5 முதல் 2.0 கிலோ / ஒரு நாளைக்கு

4. சாணஎரிவாயுக் கலன் : 2 கன மீட்டர் அளவு

மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணத்தைப் பயன்படுத்தி ஐந்து நபர்கள் உள்ள குடும்பத்திற்கு வேண்டிய எரிசக்தியினைத் தயாரிக்க முடியும்.

மானாவாரிக்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணையம்

மானாவாரிப் பகுதிகளில் பயிர் மகசூலானது பருவ மழையினைச் சார்ந்தே உள்ளது. நல்ல மழை கிடைத்தால் பயிர் மகசூல் நன்றாக இருக்கும். பருவ மழை சரிவரக் கிடைக்காவிட்டால் பயிர் விளைச்சல் வெகுவாகப் பாதிக்கப்படும். மேலும், மானாவாரி நிலங்கள் மண் அரிமானம், இதர இயற்கை சீற்றங்களால் வளம் குன்றி காணப்படுகின்றன. எனவே, மானாவாரி நிலங்களில் பயிரோடு, பழ மரங்கள், ஆடு வளர்ப்பு மற்ற உப தொழில்களை ஒருங்கிணைத்துச் செய்வதினால் நல்ல பயன் பெறலாம்.

மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணையம்:

 • கோயமுத்தூர் மேற்கு மண்டலம் பகுதிகள்
 • ஆண்டு மழையளவு : 640 மி.மீ
 • பரப்பு : 2.00 எக்டர்

  1. பயிர் விபரங்கள்

  (i) சோளம் + தட்டைப்பயறு (உணவிற்காக) : 0.20 எக்டர் (ii) சோளம் + தட்டைப் பயறு ( தீவனத்திற்காக) : 0.20 எக்டர் (iii) சுபா புல் (தீவன மரம்) + கொழுக்கட்டைப்புல் : 0.20 எக்டர்

  மரங்களுக்கிடையே

  (iv) மான்காது வேலமரம் + தீவனப்புல் : 0.20 எக்டர் (v) தீவன கருவேல மரம் + தீவனப்புல் : 0.20 எக்டர்

  2. கால்நடை விபரங்கள்

  (பரிசோதனைப் பண்ணையில் செய்தவை)

  தலைச்சேரி வெள்ளாடு (5 பெட்டை + 1 கிடா) ஒரு ஆட்டிற்கு 2 கிலோ பசுந்தீவனம், 2 கிலோ உலர் தீவனம் மற்றும் 100 கிராம் அடர் தீவனம் ஒரு நாளைக்குக் கொடுக்கப்பட்டது. இரண்டாம் ஆண்டின் இறுதியில் ஒரு கிடா தவிர மற்ற கிடாக்கள் விற்பனை செய்யப்பட்டன‌. மூன்றாம் வருட இறுதியில் இருந்து 20 பெட்டை ஆடுகள் + 1 கிடா பராமரிக்கப்பட்டு மற்ற ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

  சாதாரண பயிர் சாகுபடி முறை : சோளம் + தட்டைப்பயறு 0.20 எக்டர்

  ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் ஆடுகள், தீவனப்பிர்களை பராமரித்ததால் சாதாரண பயிர் சாகுபடி முறையினை விட அதிக பயிர் விளைச்சல், அதிக வருமானம் மற்றும் நீடித்த நிலையான வேலைவாய்ப்பும் கிடைத்ததால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

  அருப்புக்கோட்டை மாதிரி ஒருங்கிணைந்த பண்ணையம்

  ஆண்டு மழையளவு : 800 மி.மீ. பரப்பு : 1.6 எக்டர்

  1. பயிர் விபரம் : 1.60 எக்டர்

  • i. பருத்தி + உளுந்து : 0.5 எக்டர்
  • ii. சோளம் + தட்டைப்பயறு : 0.5 எக்டர்
  • iii. தீவனப் பயிர்கள் (கொழுக்கட்டைப் புல் + வேலிமசால்) : 0.20 எக்டர் ; புரத தீவனப் பயறு 3 வரிசைக்கு 1 வரிசை விதைப்பு)

  குறிப்பு : வயல் வரப்பு ஓரங்களில் அகத்தி, வேம்பு, சுபா புல், கருவேல மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டது.

  2. பழ மரங்கள் 0.40 எக்டர்

  • i. சீமை இலந்தை : 0.20 எக்டர்
  • ii. சீத்தாப்பழம் : 0.10 எக்டர்
  • iii. பெரு நெல்லி : 0.10 எக்டர்

  குறிப்பு : மரங்களின் இடையே உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப்யறு விதைக்கப்பட்டது.

  3. கால்நடை : தலைச்சேரி வெள்ளாடு : 6 (5 பெட்டை + 1 கிடா)

  இவ்வாறு ஒருங்கிணைந்த பண்ணைய நிர்வாக முறைகளை கையாண்டு விவசாயிகள் நல்ல பலனைப் பெறலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org