தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வான மழை இல்லையென்றால் வாழ்வுண்டோ - கிருஷ்ணன் சுப்பிரமணியன்


'ரெயின் ரெயின் கோ அவே' என்று சொல்லித்தான் மழையை நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த மேற்கத்திய மோகத்தால் உருவான‌, ஏட்டுக் கல்வி வெறி கொண்ட சமுதாயம். அதிலே பிறந்து வளர்ந்தவன் நான். மழையைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகே வந்துள்ளதை நினைத்து வருத்தத்துடன் இந்தக் கட்டுரையை எழுத முற்படுகின்றேன்.

தீபாவளி என்றாலே வியாபாரம். அதற்கு மிகப்பெரிய தடை மழை. மதுரை போன்ற நகருக்குள் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு கடைத்தெருக்களை சுற்றி வருபவர்களுக்கு இது நன்றாகவே புரியும். நூறு ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கும் பொருள், மழை வந்துவிடில் ஐம்பது ரூபாயாகக் குறைந்துவிடும். நட்டம் என்னமோ விற்பவனுக்கே. லாபம் என்னமோ நமக்கே. இதைத் தாண்டிப் பெரிதாக நான் என்னுடைய கல்லூரி நாட்களில் சிந்தித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

விளைபொருட்களின் இறுதி நிறத்தையும் மணத்தையும் மட்டுமே கண்டு நுகரும் நமக்கு, அதனை விளைவிக்க மழை என்று ஒன்று வேண்டும் என்ற அரிய தத்துவத்தை அவ்வப்போது நினைவூட்டவேண்டியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இந்த தீபாவளி வாரத்தில் சொந்த ஊரான மதுரையில் நிகழ்ந்தது. அரவிந்த் கண் மருத்துவமனை சிக்னல் அருகே சென்று கொண்டிருக்கும்போது ஒரு அழகிய அம்மா அழகான கொய்யாக் கனிகளை விற்றுக் கொண்டிருந்தாள். சற்றே நின்று “எவ்வளவு” என்றேன். “ஒரு கிலோ கொய்யா எழுபது ருபாய்” என்றாள். “எழுபது ரூபாயா!” என்று சும்மா ஒரு அதிர்வு கொடுத்தேன். “நேத்து வரை எம்பது ரூபாய் தம்பி. இன்னைக்கி மழை பெய்யறதால எழுபது ருபாய்” என்று சற்று சந்தோசமாகவே சொன்னாள். “அப்போ, மழையினால உங்களுக்கு நஷ்டமா” என்றேன். “இல்ல தம்பி, இன்னும் நல்லா பெய்யணும். இது என்ன மழை, இன்னும் வெள்ளமா வரணும். அப்பதானே கம்மா நிறையும். கம்மா நிறைஞ்சாதானே அம்மா உங்களுக்கு இன்னும் நிறைய கொய்யாப்பழத்தை கம்மியான விலையில கொண்டு வர முடியும்” என்றாள். அவளிடம் அப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.

பெரிய பெரிய ஜவுளிக் கடைகள் எல்லாம் மழை பெய்தால் நுகர்வோர் வரவு குறையுமே என்று மழையைச் சபிக்க, இந்த ரோட்டு ஓரத்து அம்மா, மழையைப் புரிந்து பாராட்டுகின்றாள். நல்லதை விற்பவர்களுக்கு நல்லதே தோணும் போல.

சிறிது உரையாடலுக்கு பிறகு தெரிந்தது - அவள் பாலமேடு-அலங்காநல்லூர் அருகே உள்ள ஒரு கம்மாயைக் குறித்துள்ளார் என்றும், நான்கு ஐந்து வருடங்களாக அது வறண்டே உள்ளது என்றும். எனக்குத் தெரிந்த வேறு சில கம்மாய்களை நினைத்துப் பார்த்தேன், அவள் சொன்னபடி வெள்ளமாகத் தண்ணீர் வந்தால் நல்லாதான் இருக்கும் என்று தோன்றியது. அடுத்த வருடம் இதே அம்மாவிடம் கொய்யாக் கனிகளை ஐம்பது ரூபாய்க்கு வாங்கி சாப்பிட கசக்குமா என்ன?

அவள் சொன்ன வாய் முகூர்த்தமோ என்னவோ அடுத்த நாள் என் தந்தையுடன் ஆல்பர்ட் விக்டர் பாலம் மீது செல்லும் பொழுது மற்றொரு அனுபவம் காத்திருந்தது. அதிசயம் என்னவென்றால் வைகையில் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. இந்த அளவு தண்ணீரை நான் ஆறாவது படிக்கும் பொழுது பார்த்துள்ளேன். ஐம்பது வருடத்திற்கு முன்பு எப்பொழுதுமே இப்படி தான் இருக்கும் என்று ஒரு பெரியவர் சொன்னது ஞாபகம் வந்தது. அவ்வழியே சென்ற பல இரு சக்கர வாகனங்களும் அதில் வந்தவர்களும் ஓரமாக நின்று காண்பத‌ற்கரிய அந்தக் காட்சியைக் கண்டு கொண்டிருந்தனர். அவர்களையும் வைகையையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த என் தந்தை “பாரேன், தண்ணியைப் பார்த்தவுடன் இங்க இருக்கும் பெண்களின் முகத்தில் சிரிப்பு தானாகவே வருது” என்றார். அவர் அப்படி சொல்லும் பொழுது அவர் முகத்திலும் ஒரு புன்சிரிப்பு இருந்தது. ஒரு சில நாட்கள் நன்றாகப் பெய்த மழையினால் இத்தனை முகங்களில் சிரிப்பைக் கொண்டுவர முடிகிறது. இந்த இயல்பான புன்சிரிப்பு மழைக்கும் மனிதனுக்கும் உள்ள இயற்கையான உறவை உறுதி செய்வதாகவே தோன்றியது.

அதே சமயம், ஆற்றோடு ஓடி ஒதுங்கிக்கொண்டிருக்கும் நெகிழிக் குப்பையை கண்டால் சங்கடமாக இருந்தது. மதுரை நகர்வாசிகளுக்கு தெரிந்த வைகை மிகச் சிறியது. மூன்று மேம்பாலத்திற்கும், நான்கு கீழ்ப்பாலத்திற்கும் கீழே சில மைல்கள் மட்டுமே ஓடுவதுதான் நமக்கு தெரிந்த வைகை. இத்தனை லட்சம் மக்களும் சேர்ந்து இந்தப் பகுதியை சுத்தமாக வைக்காவிடிலும் குப்பை மேடாக மாற்றாமல் இருந்திருக்கலாம்.

நெகிழிக் குப்பைகளால் மூச்சுத் திணறும் ஆற்றங்கரை

இதுவரை கிடைத்த அனுபவங்களின் உந்துதலால் அடுத்த நாள், மனைவி மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் அக்காள் பையனையும் கூட்டிக்கொண்டு வைகை நதி உலா சென்றேன். எங்களைப் போன்றே பலரும் அங்கங்கு நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். மற்ற தென் மாவட்டங்களில் இது பெரிய விசயமாக இருக்காமல் போகலாம், ஆனால் மதுரைக்கு இது அரிய வாய்ப்பு. வருடம் தவறாமல் நிறைந்துகொண்டிருந்த மாரியம்மன் தெப்பக்குளம் கூட கடந்த பல வருடங்களாக ஆழ் குழாய் நீர் கொண்டே தை மாதத்தில் சம்பிரதாயமாக நிறைந்து கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளாக அதற்குக் கூட வழி இல்லாமல் தெப்பக்குளம் வெறும் மைதானமாகவே உள்ளது. தெப்பத்தேர் இழுக்கும் வைபவம் நீரின்றி அரங்கேறி வருகின்றது. பெரும் வைகை நதியில் இறங்கி ஆற்றை கடக்க வேண்டிய கள்ளழகரோ, திருவிழாவின் பொழுது குட்டை அளவு தண்ணீரிலே இறங்குகின்றார்.

இந்தச் சூழ்நிலையில், மதுரை நகர் மக்கள் நீரின் அவசியத்தை உணர்ந்து அதை அதிசயமாகப் பார்ப்பது எதார்த்தமான நிகழ்வே. ஸ்மார்ட் போன்களின் வருகையால் வைகையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் இளைஞர் கூட்டமும் இதில் அடங்கும். ஆனால் இவர்கள் அனைவருக்கும் தன் வீட்டின் அருகே ஓடும் வைகையைப் பற்றி என்ன தெரிந்திருக்கும்? இங்குள்ள பள்ளிகள் வைகை நதியை, நதிகள் வரைபடத்தில் இன்னொரு கோடாகவே சொல்லிக்கொடுத்திருக்கும். உதாரணத்திற்கு, என்னுடன் வந்த இரண்டாம் வகுப்பு மாணவனிடம், இந்த தண்ணீர் எங்கிருந்து வருகின்றது என்று கேட்டேன். அவனோ வைகை அணையில் இருந்து என்று சொன்னான். வைகை அணைக்கு தண்ணீர் எங்கிருந்து வருகின்றது என்று கேட்டேன். அவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. எனக்கு கூட சரியாக பதில் தெரியாது, விகிபீடியாவில் தேடித் தெரிந்துகொண்டேன்.

முனிச்சாலை அருகே உள்ள கீழ்ப்பாலத்தில் நின்று எட்டும் தூரத்தில் உள்ள நீரை உற்று நோக்கிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு பெரியவர் வாய் நிறைய சிரிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தார். நதி ஓரம் வாழும் மக்களில் ஒருவர் அவர். “என்ன அய்யா, இப்படித் தண்ணீர் போகுது” என்று சும்மா ஒரு வார்த்தையை விட்டேன். பதிலுக்கு அவர் இருகரம் கூப்பி வானத்தைப் பார்த்து வணங்கினார். அந்த கொய்யாக்கார அம்மாவும் இந்தப் பெரியவரும் பள்ளி பள்ளியாக சென்று மழையைப் பற்றி பேச வேண்டும் என்று தோன்றியது. 'ரெயின் ரெயின் கோ அவே'க்குப் பதிலாக இந்தப் பாடலை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

ஆட்டுக்கும் மாட்டுக்கும் தண்ணி இல்ல
பச்சைக் குழந்தைக்குப் பாலும் இல்ல
ஜோ மழை! ஜோ,ஜோ மழை!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org