தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாட்டுவண்டியும் மகிழுந்தும்


மாட்டுவண்டி செய்தவரால் மகிழ்ந்திருந்த ஊர்களிலே
மணியான தொழில்நுட்பம் மண்டிநின்ற காலமதாம்
வீடொன்றைக் கட்டியங்கு விரித்த ஒரு குடிசையிலே
வெகுஅழகாய் வினைபுரிந்தே விற்றபல மாட்டுவண்டி
மாடுகளோ சீராக வழிகண்டு நடைபயிலும்
மணிகுலுங்க நடக்கையிலே மனமெல்லாம் பூத்திருக்கும்
ஓடுகின்ற வண்டியிலே உட்கார இடம்பிடிக்க
ஒருநொடியில் சிறுவரிடை உருவாகும் சிறுசண்டை

காடுகரை வழியாக வேடிக்கை பார்க்கவெனக்
கடைசியிடம் பிடித்தென்றும் கால்தொங்க விடுவதற்கே
சாடுகின்ற பெரியவரை ஏய்த்துவிடும் சிறுவர்களும்
தாழ்ப்பாளாம் கம்பிபற்றிச் சாய்ந்தாடும் வண்டியது
ஓடுவதில் வேகமில்லை ஒருகுறையாய்ப் பட்டதில்லை
ஒருநாளில் பலகாதம் ஓயாமல் சென்றதில்லை
ஊடுகின்ற புகையில்லை கரியில்லை கன்னெய்போல்
உலகினிலே வளிப்படலம் துளைக்கின்ற கேடுமில்லை

மாடுதந்த சாணமெல்லாம் மண்முழுக்கப் பரவிநின்று
வீடுநிறை விளைபொருளை விருந்தாகக் கொடுத்ததன்று
மாடுபழக்கும் சாகசத்தில் மண்ணுக்கேற்ற மைந்தரென
மணியாக நின்றவரால் மகிழ்ந்திருந்த வாழ்க்கையது
நாடெல்லாம் சுற்றிவரும் நாமறிந்த மகிழுந்தை
நன்றாகச் செய்வதற்கே நாசமான ஊர்பலவாம்
காடில்லை மேடில்லை கனிந்தநிலம் தமக்கெனவே
கைப்பற்றிக் கொண்டங்கே ஆலைகளை அமைத்திடுவார்

ஓடுகின்ற ஆறுபல மகிழுந்தைச் செய்கையிலே
ஊருகின்ற கழிவுகளால் உயிர்ப்பெல்லாம் இழந்துவிடும்
தேடுகின்ற செல்வமெலாம் தேர்ந்தவொரு மகிழுந்தால்
செலவாகிச் சோர்ந்தாலும் செருக்குதனை விட்டொழியார்
ஓடுகின்ற பேருந்தில் ஒருபோதும் செல்வதில்லை
ஓட்டாண்டி மக்களுடன் உட்கார விருப்பமில்லை
வீடெங்கும் தனிஊர்தி விரும்புவதோ நுகர்வொன்றே
வெகுவான நுகர்வூக்கி வேரூன்றும் முதலாண்மை

கூடுகின்ற ஊர்திகளால் கேடுமிகும் பருவங்கள்
ஊடுறுவும் கரிவளியால் வாடுகின்ற எளியவர்கள்
மாடுபழக்கி ஓட்டவென்று மக்களைத்தான் சார்ந்திருந்தார்
மட்டில்லா மகிழுந்தால் உலகமெலாம் அடிமைசெய்தார்
நாடெங்கும் நேனோவாம் ஊனோவாம் பல்பெயரில்
நன்றாகப் பாய்ந்திடவே கன்னெய்க்குப் போட்டியிட்டு
ஓடுகின்ற மகிழுந்தால் கூடுமினிப் போர்களென்றால்
உண்மையெனக் குரைத்திடுவீர் மகிழுந்தால் மகிழ்ச்சியுண்டா?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org