தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய பொருளாதாரக் கொள்கை


பொருத்தமான‌ தொழில்நுட்பம் - உழவன் பாலா

[சென்ற இதழில் டாக்டர்.ஷூமாகர் அவர்களின் இடைப்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தியிருந்தோம். இடைப்பட்ட தொழில்நுட்பம் என்றால் என்ன என்பது பற்றி அவரே Center Magazine என்ற பத்திரிகைக்கு ஒரு விளக்கக் கட்டுரை 1975ம் ஆண்டு எழுதியிருந்தார். அதிலிருந்து தொகுத்தவற்றை இங்குக் காணலாம். கட்டுரை ஆசிரியர் குறிப்புகள் பகர அடைப்புக்குள் கொடுக்கப் பட்டுள்ளன. இப்போதுள்ள இந்தியாவிற்கு 40 ஆண்டுகள் சென்றும் இக்கட்டுரை எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது என்று வாசகர்களே கணித்துக் கொள்ளவும்! நான் என்பது இக்கட்டுரையில் ஷூமாகரைக் குறிக்கிறது - உழவன் பாலா]

சுமார் 20 வருடங்களுக்கு முன் பர்மா நாட்டின் பிரதம மந்திரிக்குப் பொருளியல் ஆலோசகனாகவும், அவர்கள் நாட்டை மேம்படுத்துதலுக்குப் பரிந்துரைகள் செய்யவும் நான் அழைக்கப் பட்டேன். அப்போது பர்மாவில் நான் கண்டது எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. பெரும்பாலான பர்மியர்கள் நன்றாய் உணவு உண்டு ஆரோக்கியமாய், அழகிய உடையணிந்து, தங்கள் தட்ப வெட்பத்திற்குப் பொருத்தமான அழகிய வீடுகளில் வசித்து வந்தனர். உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதர்களாகவும் திகழ்ந்தனர், ஆனால் பர்மா அரசோ, பணக்கார நாடுகளின் தொழில்நுட்பத்தைக் கொண்டு வேகமாகத் தங்கள் நாட்டை நவீனப் படுத்தப் பெரும் அவசரம் காட்டிக் கொண்டிருந்தது. எனக்கு அதன் தவறு அப்போது முழுமையாய்ப் புரியாவிடினும், பர்மா பர்மாவாக இல்லாவிடில் வேகமாய் அழிந்து விடும் என்பது புரிந்தது. ஏதோ சரியில்லை என்று மட்டும் தோன்றியது.

அதற்குச் சில ஆண்டுகள் கழித்து இந்தியாவின் பிரதம மந்திரி என்னை கிராமப்புற மேம்படுத்துதலுக்கு ஆலோசகனாய் அழைத்து, அதன் விளைவாய் இந்தியாவின் கிராமங்கள் முழுவதும் பயணித்த போதுதான் என் மனதில் ஒரு பொறி தட்டியது; அதாவது வளரும் நாடுகளில் ஒரு புறம் மிகப் பழமையான, மற்றும் ஏழ்மையான தொழில்நுட்பங்கள் இருக்கின்றன, மறுபுறம் அவர்களுக்கு எட்டாத அளவில் பணக்காரர்களின் நவீனத் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. மேல்மட்டத் தொழில்நுட்பம் வளரும் நாடுகளில் செயல்படுத்தப் பட்டால் அது நகரங்களில் மட்டுமே சாத்தியமாகிறது. இச்செல்வந்தர்களின் தொழில்நுட்பம் வளரும் நாடுகளைப் பீடித்துள்ள‌ மூன்று நோய்களைத் தீர்ப்பதே இல்லை; அவையாவன: நகரங்களை நோக்கி மக்கள் பெயர்தல், பரவலான வேலையின்மை மற்றும் பெருமளவு மக்கள் பட்டினியுறுவதும் உணவுப் பற்றாக்குறையும் (ஏனெனில் உணவு மாடி வீடுகளின் பால்கனிகளில் உற்பத்தி செய்யப்படுவதில்லை - கிராமத்து மண்ணிலேயே உற்பத்தியாகிறது) . இந்தியாவில் மேம்படுத்தும் முனைவுகள் 85 விழுக்காடு மக்கள் வாழும் ஊர்ப்புரங்களைச் சென்றடைவதே இல்லை.இதனால் இம்மூன்று பிணிகளும் மிகவும் தீவிரம் அடைந்திருக்கின்றன.

கீழ்மட்டத் தொழில்நுட்பத்திற்கும், விலையுயர்ந்த‌ மேல்மட்டத் தொழில்நுட்பத்திற்கும் இடையில் ஒரு பெரும் வெற்றிடம் இருக்கிறது, அதை இடைப்பட்ட தொழில்நுட்பம் என்ற ஒன்றால் சரி செய்ய வேண்டும் என்று எனக்குப் புரிந்தது. ஆனால் நான் தில்லிக்கு வந்து இதைப்பற்றிப் பேசியபோது எல்லோரும் என்னை பாசிசத் தீவிரவாதி, வெள்ளையன், நிறவெறியன்,இந்தியாவின் வளர்ச்சியைக் கெடுக்க வந்துள்ள அரக்கன் என்றெல்லாம் ஏசினார்கள். நான் சினத்துடன் வெளியேறி விட்டேன். எனினும் 15 மாதங்கள் கழித்து இடைப்பட்ட தொழில்நுட்பத்திற்கான் அகில இந்திய மாநாடு ஒன்று நடைபெற்றது - இந்தியாவின் மிகப் பெரிய பொருளியல் அறிஞர் “நாம் இதைத்தான் முக்கியமாகக் கொள்ள வேண்டும் ” என்றார்!

இப்படியே பல மாதங்கள் பேசிக்கொண்டே இருந்தேன்; சரி பேச்சைச் செயலாக்க வேண்டும் என்ற உந்துதலுடன், அப்ஸர்வர் என்ற பத்திரிகைக்கு நான் எழுதிய கட்டுரைக்கு அவர்கள் கொடுத்த நூறு பவுண்ட் பணத்தைக் கொண்டு “இடைப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக் கழகம்” என்ற ஒரு குழுமத்தை நிறுவினோம். பல மனிதர்கள், குறிப்பாக இளைஞர்கள், எந்த இயக்கம் தொடங்கும் முன்னரும் நிறைய நிதி தேவை என்று எண்ணுகின்றனர். நாங்கள் இக்குழுமத்தைத் தொடங்கும் பொழுது எங்களிடம் வெறும் 100 பவுண்டுதான் இருந்தது. இன்று இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இதில் 30 பேரே சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள்; மற்றெல்லோரும் தன்னார்வலர்களே. இதில் நாங்கள் திட்டமிட்டு ஒரு மையப்படுத்தப் படாத அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறோம். நம்மால் தொழில்நுட்பப் பட்டறைகளை நிறுவ இயலாது; அதற்கான நிதி நம்மிடம் இல்லை. எனவே இருக்கும் தொழில்நுட்பப் பட்டறைகளை நாம் நம் வசதிக்குப் பயன்படுத்துவோம் என்று முடிவெடுத்தோம்.

[ஒரு தொழில்நுட்பத்திற்கான சோதனைச் சாலைகளும், விஞ்ஞானிகளும், மாதிரி உருவாக்க வேண்டிய நிதியும் மிகப்பெரிது என்று இதைப் படிக்கும் நாம் உணர வேண்டும். எடுத்துக் காட்டாக, புஞ்சைத் தவசங்களான தினை, வரகு போன்றவற்றைத் தற்போது பழைய தொழில்நுட்பமான‌ உரல், திருகு போன்றவற்றில் பதப்படுத்த இயலாது. அவ்வாறு செய்தால் ஒரு கிலோ வரகரிசியின் விலை 150 முதல் 200 ரூபாய் ஆகிவிடும்! இவற்றை ராட்சத ஆலைகளில் பதப்படுத்தினால் யாருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்காது; அதற்கான ஆற்றல் தேவையும் மிகப் பெரிது. இவை இரண்டிற்கும் இடைப்பட்ட 1 அல்லது 2 HP மின் ஆற்றலில் இயங்கக் கூடிய சிறு இயந்திரங்கள் தயாரிக்க நிறைய ஆராய்ச்சி தேவை. இது போன்ற பொருளாதார நெருக்கடியில், ஷூமாகர் கைக்கொண்ட உத்தி மிக வியப்பளிப்பது. அவர் பல்கலைக் கழகங்கள், சிறு தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பற்பல தரப்பினரையும் ஊக்குவித்து அணைத்துக் கொண்டு சென்று பலப்பல தொழில்நுட்பங்களை நிறுவினார். இதனால் பயனடைந்தவர்களோ வளரும் நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான ஏழைகள்.]

இத்திட்டம் மிகச் சிறப்பாக வேலை செய்தது. திட்டத்தின் வடிவும், திசையும் மட்டுமே எங்களால் செய்யப் பட்டது. செயல்படுத்துதல் முழுவதும் அவரவர், தன்னார்வலர்களாகத் தாங்களே செய்தார்கள்; பலன் மட்டும் நாங்கள் அனுபவித்தோம் [இங்கே ஷூமாகர் நாங்கள் என்பது பயனாளிகளான வளரும் நாட்டு ஏழைகளை].

எப்படித் தொடங்குவது என்று சிந்திக்கையில், முதலில் தற்போது இருக்கும் தொழில்நுட்பங்களின் தொகுப்பு ஒன்றை உருவாக்குவோம் என்று முடிவு செய்து பிரிட்டனில் உள்ள, ஊர்ப்புறங்களுக்குப் பொருத்தமான சிறு தொழில்நுட்பங்களைப் படங்களுடன் பட்டியலிடத் தொடங்கினோம். நாங்கள் பிரிட்டனை மட்டும் தேர்ந்தெடுத்ததற்கு, எங்களுக்கு வேறு நாடுகளுக்குப் பய‌ணம் செய்யப் பணம் இல்லை என்பதே காரணம்! வேளாண் பொறியியலாளார்களின் சங்கத்தை, சிறு வேளாண் தொழில்நுட்பங்களைப் பட்டியல் இடச் செய்தோம். இதேபோல் வெவ்வேறு தரப்பினரையும் அவரவர்களிடம் இருந்த பொருத்தமான தொழில்நுட்பங்களின் பட்டியலைத் தயார் செய்ய வைத்தோம். இவ்வட்டவணை எந்த விதப் பணச்செலவும் இன்றி உருவாக்கப் பட்டது.

இவ்வட்டவணை, “முன்னேற்றத்திற்கான கருவிகள்: ஊரக வளர்ச்சிக்கான சிறு தொழில்நுட்பங்களின் கையேடு” (Tools for Progress: A Guide to Small-scale Rural Development) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இது பெரும் வரவேற்பைப் பெற்று இப்போது முழுவதும் விற்றுத் தீர்ந்து விட்டது. இவ்வட்டவணையே ஒரு கருவியாகியது. இதைப் பார்த்த ஏழை மக்கள் அவரவர்களுக்குத் தேவையான கருவிகளை அவரவர்களே தேடிக் கண்டு பிடித்தனர். உலகம் முழுவதும் இக்கையேடு பயணித்தது. ஆனால் அதை நாங்கள் சில ஆண்டுகள் சென்று மீண்டும் பார்த்தபோது இது மேலோட்டமாகத் தெரிந்தது. எனவே நாங்கள் பிரச்சினைகளைப் பிரிவு வாரியாக ஒவ்வொன்றாக அணுகுவது என்று முடிவு செய்தோம்.

அடுத்த கட்டமாக எங்களுக்குத் தொழில்நுட்ப வழிநடத்துதல் செய்ய, ஒவ்வொரு பிரிவுக்கும் தன்னார்வலர்களால் ஆன சிறப்பு ஆயங்களை உருவாக்கினோம். முதலில் நாங்கள் எடுத்துக் கொண்ட பிரிவு கட்டிடம். கட்டிடங்கள் இல்லாமல் எந்த முன்னேற்றமும் செய்ய இயலாது. எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்காவை எடுத்துக் கொண்டால், மக்கள் ஏன் அவர்கள் கட்டிடங்களை அவர்களே கட்டுவதில்லை? முதலில் நைஜீரியாவில் தொடங்கினோம். அங்கே கொத்தனார்கள், மின்பழுது பார்ப்பவர், குழாய் நிபுணர்கள் ஆகிய அனைவரும் இருந்தாலும் அவர்கள் வேலையின்றி இருந்தனர். இதை ஆராய்ந்த பொழுது, அங்கே வீடு கட்டும் ஒப்பந்தக்காரர்கள் (contractors ) பற்றாக்குறையாக இருந்தது. கட்டிடத் தொழிலாளிகள் நகரங்களுக்குச் சென்று வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.

நாங்கள் உள்நாட்டு மேஸ்திரிகளை கட்டிட ஒப்பந்தக்காரர்களாகப் பயிற்சி அளிப்பது என்று முடிவு செய்து இதற்கான பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கினோம். நைஜீரிய மேஸ்திரிகள் மிகுந்த ஆர்வமுடன் இதைக் கற்றுக் கொண்டு பற்பல கட்டிடங்களைக் கட்டினார்கள். இப்பாடத் திட்டம் நைஜீரியாவில் தொடங்கி எந்த வித அரசு உதவியும் இன்றிக் கென்யா, டான்சானியா, சாம்பியா போன்ற நாடுகளுக்குத் தானாகவே சென்றது. ஒரு இடத்தில் அறிவுக்கான வெற்றிடம் நிரப்பட்டு விட்டால் பின் நாங்கள் அதை அனைவரின் பயன்பாட்டிற்கும் விட்டு விடுவோம்.[அதை வியாபாரம் ஆக்குவதில்லை]. பாடங்கள் தங்கு தடையின்றிக் கிடைத்தாலும், (அவை உருவாக்கத் தேவைப் படும்) காசுக்கே விற்கப் படுகின்றன - இலவசமாக அல்ல. நாங்கள் ஒரு அறிவுக் குழுமம் - இலவச‌ உதவிக் குழுமம் அல்ல.

இப்போது எங்கள் கட்டிடக் கலை ஆயம் எங்களை உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அறிவியல் பூர்வமாகக் கட்டிடம் கட்டுவதை ஆராயப் பரிந்துரைத்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துடன் நாங்கள் இவ்வாராய்ச்சியில் ஈடு பட்டுள்ளோம்.

[நம்மில் களப்பணி செய்ய வரும் பலரும், நல்ல எண்ணங்கள் இருந்தாலும் செயல்பாட்டில் ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிப்பதில்லை. காந்தி சொன்ன நேரம் தவறாமை, வாக்குத் தவறாமை போன்றவை மிகச் சிலரிடமே இருக்கிறது. இதனாலேயே பெரும்பாலான நல்லெண்ணங்கள் எண்ணங்களாகவே இருந்து விடுகின்றன. மேலும், நவீனத்தின் தீமையை உணர்ந்தவர்கள் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் நையாடுவதோ அல்லது ஒரேயடியாகப் பழமைக்குப் போவதோ செய்ய முயல்கிறோம்.இதனால் நற்செயல்கள் வலுவிழந்து, தீமைகள் பெருக மிக எளிதான சூழல் உருவாகிறது. பேராசையில்லாத, சூது இல்லாத, சேவை மனப்பான்மை கொண்ட அறிவியலும்,தொழில்நுட்பமும் (வாணிபமும் கூட‌) மிக நல்லது மட்டுமல்ல - இன்றைய சூழலில் மிகவும் தேவை. இதுதான் பொருத்தமான தொழில்நுட்பம். இக்கட்டுரையின் தொடர்ச்சியை அடுத்த இதழில் காண்போம் - உழவன் பாலா]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org