தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


தூய்மையான இந்தியா

திரு.நரேந்திர மோடி பிரதமரானதும், இந்தியாவைத் தூய்மைப் படுத்த வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணத்துடன் “தூய்மையான இந்தியா” என்ற ஒரு அரசாங்க இயக்கத்தைத் துவங்கி அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டிருக்கிறார். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு முனைவே; வரவேற்கிறோம். எனினும், தூய்மை என்பது என்ன என்று பார்த்தால், நீர், நிலம், காற்று, ஆகாயம் அகிய அனைத்தும் மாசின்றி இருந்தால் தூய்மை தானாக உருவாகிவிடும் என்று தெளிவாகிறது. நம் அரசும் அதன் பிரச்சாரங்களும் கண்ணுக்குத் தெரியும் தூய்மைக் கேடுகளை மட்டுமே விரட்ட முற்படுகின்றன. தனிமனிதர்களைத் தூய்மையாக இருக்கும்படிக் கேட்டுக் கொள்கின்றன. திறந்த வெளியில் சிறுநீர்,மலம் கழிப்பதைத் தவிர்ப்பது, குப்பைகளைக் கண்ட இடத்தில் கொட்டுவதைத் த‌விர்ப்பது போன்றவையே தூய்மையை உருவாக்கிவிடும் என்று நம்புகிறோம். இவை அனைத்தும் தேவைதான், நல்லவைதான் - ஆனால் உடனடித் தேவை அல்ல. நமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எல்லோரும் குப்பையைத் தெருவில் கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்; ஆனால் கடந்த 25 வருடங்களில்தான் குப்பை என்பது மாசாக (pollution) மாறியிருக்கிறது. ஏனெனில் அதற்கு முன் பெரும்பாலும் எல்லாக் குப்பைகளுமே மக்கும் குப்பைகள்தான்!

அரசு தூய்மையில் தீவிரமாக இருப்பதானால் நெகிழிப் பைகளை அல்லவா தடை செய்ய வேண்டும்? பதப்படுத்தப்பட்ட எல்லா உணவுகளும் நெகிழிகளில் அடைக்கப்பட்டு தினம் 40 முதல் 50 கோடி இந்தியர்களின் உணவு நெகிழிப்பைகளில் பயணிக்கும்போது மக்காத அந்தக் குப்பைகளை எங்கு தடை செய்ய வேண்டும்? உற்பத்தி இடத்திலா , நுகர்வின் முடிவிலா?

இது ஒருபுறம் இருக்க, ஆறுகளின் நிலை என்ன? உயிருள்ள தமிழக ஆறு இருக்கிறதா என்ற ஆய்வுக் கட்டுரையைத் தாளாண்மையில் வெளியிட்டிருந்தோம். ஜார்கண்ட் மாவட்டத்தின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கங்கையயும் அதன் துணைநதிகளையும் மாசாக்கும் நிறுவனங்கள் என்று 200 பெரும் நிறுவனங்களை வெளிப்படையாகத் தன் வலைப்பூவில் பட்டியல் இட்டுள்ளது. டாட்டா, ஜிண்டால் போன்ற பெரும் நிறுவனங்களும் இதில் உள்ளன. மரபீனிப் பயிர்களால் அயல் மகரந்தச் சேர்க்கை கொண்ட பயிர்களின் உயிரிப் பன்மையம் அழிந்து விடும் என்று அனைவருக்கும் தெரிந்தும் களப் பரிசோதனை அனுமதிக்கிறது அரசு. தூத்துக்குடி மாவட்டமே ஸ்டெர்லைட் ஆலையின் மாசால் பாதிக்கப்படுகிறது. சாயப் பட்டறைகளால் அழியும் வளமான பவானி ஆற்றுப்படுகை, தோல் பதனிடுவதால் குடிநீர் இழக்கும் ஆம்பூர் என்று எத்தனை ராட்சத ஆலைகளின் விளைவுகளைக் காண்கிறோம்?

தேசிய பசுமை ஆயத்தையும், சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தையும் பல்பிடுங்கிய‌ பாம்புகள் ஆக்கி விட்டு, முதலீட்டுக்கும் இயந்திரத் தொழிலுக்கும் சாதகமாக மாசுக் கட்டுப்பாடு விதிமுறைகளைத் தளர்த்துவது போன்ற அரசின் திட்டங்களும், கொள்கைகளும் அழியாத, மீளாத மாசுக்கு வழிவகுப்பவை. இந்தியாவை உயிரற்று அழிக்கக் கூடியவை. வளர்ச்சி என்ற பெயரில் ராட்சத ஆலைகளும் அந்நிய முதலீடும் நம்மை மாசுபடுத்துவதை நிறுத்த வேண்டும். உண்மையில் தூய்மையான இந்தியா வேண்டுமென்றால் மோடி முதலில் இந்த மேம்படுத்துகிறேன் என்று இயந்திரமயமாக்கும் கொள்கையைக் கைவிட வேண்டும். எல்லாப் பழியும் இளைத்தவன் தலையில் என்று ஏழைகளைக் காவு கொடுப்பதை நிறுத்த வேண்டும். நேர்மையாய் இருந்தால் தான் செய்யும் தவறு எல்லா அரசர்களுக்கும் புலப்படும்.

புறந்தூய்மை நீரான் அமையும் - அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்

என்று வள்ளுவர் சொன்னது போல், ஆட்சியில் உள்ளோர் சற்று சிந்தித்தால் தூய்மையான இந்தியா தானாய் மலரும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org