தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவர்களின் சிக்கல்கள் - பாமயன்

வேதியுரங்களும் வேளாண்மைத் தற்சார்பும்

பொதுவாக வேளாண்மையில், குறிப்பாக இந்தியா போன்ற வேளாண்மையில் நீண்ட மரபுத் தொடர்ச்சியைக் கொண்ட நாடுகளின் தற்சார்பை சிதைப்பதன் மூலம் அரசியல் விடுதலை பெற்ற நாடுகளை மீண்டும் அடிமையாகக் கொள முடியும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்களில் ரசாயன அதாவது வேதி உப்புக்களை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மைத் திட்டம் ஒன்றாகும்..

இந்தியா என்ற துணைக்கண்டம் ஆங்கிலேயரின் நுழைவிற்கு முன்பு பல நாடுகளாக இருந்தது. இதன் ஒவ்வொரு பகுதியும் பல மன்னர்களால் ஆட்சி செலுத்தப்பட்டு வந்தன. ஆங்கியேலர்கள் தங்கள் துப்பாக்கி முனையாலும், அரசியல் சூழ்ச்சிகளாலும், அக்கால மன்னர்களின் மிதமிஞ்சிய ஊதாரித்தனத்தாலும் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை வளைத்துக் கொண்டு ஆட்சி செலுத்தத் தொடங்கினர். இவர்களது ஆட்சிக்காலத்தில் இந்திய வேளாண்மையில் பலவகையான மாற்றங்கள் நடந்தேறின. தொழில்புரட்சி ஏற்பட்ட பின்னர் ஆங்கிலேயர்களின் ஆலைகளுக்கு நிறைய மூலப்பொருள்கள் தேவைப்பட்டது. அவற்றை இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக ஆங்கிலேயர்கள் இறக்கிக் கொண்டனர். அதற்கான சாகுபடியிலும் தமது ஆளுகைக்கு உட்பட்ட நாட்டு உழவர்களை நெருக்கினர். இந்தியாவில் காபி, தேயிலை அவுரி, பருத்தி போன்ற பணப் பயிர்களை பயிரிடச்சொல்லி வற்புறுத்தினர்.[1]

அநியாயமான சட்டங்களை இயற்றி இந்தியத் தொழில்களை நசுக்கினர். இந்தியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு 80% வரி விதித்தனர் அதேசமயம் இங்கிலாந்துப் பொருட்களுக்கு 2% வரியை மட்டுமே விதித்தனர்.[2] இதன் விளைவாக இந்தியாவில் உணவுப் பயிர் சாகுபடி மிக மோசமாக வீழ்ச்சியடைந்தது. இது இந்திய அரசியல் விடுதலைக் காலம்வரை தொடர்ந்தது. இந்தியாவைவிட்டு ஆங்கிலேயர்கள் வெளியறும்போது முற்றிலுமாக இந்தியாவை உறிஞ்சிவிட்டுச் சென்றனர். வங்காளப் பஞ்சம் 1943ஆம் ஆண்டளவில் 40 லட்சம் மக்களைக் காவு கொண்டபோதும் அப்பகுதி மக்களிடமிருந்து பெருமளவு உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாகின. குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட போர் வீரர்களுக்கு உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இதனால் பஞ்சம் அங்கு அதிகமானது. இயல்பாக அந்த ஆண்டு மழையின் அளவு குறைவாகவே இருந்தது.[3] பிரிட்டானிய அரசின் தலைவரான சர்ச்சில் இந்தியாவில் ஏற்பட்ட பற்றாக்குறையை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக 'இந்தியாவில் பஞ்சம் இருந்தால் காந்தி ஏன் இன்னும் சாகவில்லை' என்று கேட்டார்.[4]

இந்தச் சூழலில்தான் ராக்பெல்லர் பவுண்டேசன் தனது ஆராய்ச்சிகளையும் முதலீடுகளையும் வேளாண்மையில் இறக்கி வந்தது. இந்த நிறுவனத்தின் மூலவரான ராக்பெல்லர் ஸ்டன்டர்டு ஆயில் கம்பணியின் நிறுவனர் ஆவார். அந்த கம்பணி கன்னெய (petroleum) எண்ணெய்த் துரப்பன வேலைகளில் ஈடுபட்டு பல தகிடு தத்தங்களைச் செய்து அமரிக்காவின் தலைமை வணிக நிறுவனமாக வளர்ந்திருந்தது.[5] அமெரிக்காவின் முதல் பணக்காரராக ராக்பெல்லர் விளங்கினார். கன்னெய் என்பது வேதி உரமான யூரியாவின் மூலப்பொருள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது டூபான்ட் என்ற கும்பணியுடன் தனது வணிக ஒப்பந்தங்களை செய்து தனது கிளைகளை உலகெங்கும் பரப்பி வந்தது. டூபான்ட் என்று பூச்சிக்கொல்லி விதைகள் முதலிய துறைகளில் கோலோச்சுகிறது. ராக்பெல்லர் நிறுவனத்திற்கு பணியாற்றுவதற்கு 1940ஆம் ஆண்டு வந்தவர் நார்மன் போர்லாக் என்பவர். இவர் போர்முனையில் பொருள்களை வழங்கும்போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான கண்டுபிடிப்புகளில் டூபாண்ட் கம்பணியில் பணியாற்றியவர். பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என்று பல கொல்லிகளில் ஆராய்ச்சி செய்தவர்.[6] போரில் இருந்ததாலேயே எப்பொழுதும் கொல்லுவது பற்றியே சிந்திதிருக்கிறார்போல் தெரிகிறது. இவர் தனது போர்முனையில் இருந்து ஏர்முனைக்குத் திரும்பியது மெக்சிகோவிற்கு. அங்கு கோதுமை ஆராய்ச்சியில் ஈடுபட்டு குட்டை வகை கோதுமையை உலகின் பல இடங்களுக்கும் கொண்டு போக முயன்றார். இதற்கு ராக்பெல்லர் நிறுவனம் பெருமளவில் பொருளுதவி செய்தது. இந்தியாவிற்குள் 1963ஆம் ஆண்டளவில் புதிய கோதுமை இனங்கள் இறக்கிவிடப்பட்டன. இந்த விதைகளின் வரலாற்றைப் பின்னர் பார்போம்.

வீறிய(வீரிய) விதைகள் எனப்படும் பசுமைப் புரட்சி விதைகள் அதிக அளவு உரம், நீர் போன்றவற்றை வேண்டுவனவாக உள்ளன. ஏனெனில் இந்த விதைகள் கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகங்களில் வைத்து உருவாக்கப்படுகின்றன. இவற்றைக் கொழுக்க வைப்பதற்காக அதிக அளவு வதி உரங்களைத் திணிக்க வேண்டும். அறிவியல் முறைப்படி ஒரு செடியானது சவ்வூடு பரவல்(osmosis) என்ற முறையில் தனக்கான ஊட்டங்களை நீர் வழியாக எடுத்துக் கொள்கிறது. சவ்வூடு பரவல் [7] என்பது செறிவு அதிகமான நீர்மமும் செறிவு குறைவான நீர்மமும் பாதியளவு ஊடுருவும் தன்மை ஒரு சவ்வினால் பிரிக்கப்ட்ட முறையில் இருக்குமானால் செறிவு அதிகமான நீர்மம் அச்சவ்வின் ஊடாக செறிவு குறைவான நீர்மத்தை ஈர்த்துக்கொள்ளும். செடியில் அமைந்துள்ள உடலங்கள் யாவும் சில்லிகளால் (cell) ஆனது. இவற்றின் சுவர் முன்னர் கூறிய சவ்வு போல அமைந்துள்ளது. இந்தச் சவ்வின் வழியாக செறிவு குறைந்த நீர் செறிவு மிக்க சில்லிச் சாறு மூலமாக ஈர்த்துக்கொள்ளப்படுகிறது. இந்த முறையில் நீர் பயிர்களின் வழியாக நகர்ந்து ஊட்டங்களையும் கொண்டு செல்கிறது. இப்போது நாம் பாசன நீருடன் யூரியா போன்ற வேதி உப்புகளை இடும்போது பாசன நீரானது செறிவு மிக்கதாக மாறுகிறது. இதனால் பயிர்களில் உள்ள நீர்மமானது வெளியேறிவிடுகிறது. எப்பொழுதெல்லாம் வேதி உரங்கள் போடப்படுகிறதோ அப்போதெல்லாம் செடிகள் வாடி நிற்பதை நாம் காண முடியும். இதை ஈடு செய்வதற்காக அதிக அளவு நீர் பாய்ச்ச வேண்டும்.

தமிழகம் மட்டுமல்லாது இந்திய வேளாண்மை கிணற்றுப் பாசனத்தை குறிப்பிடத்தக்க அளவு கொண்டது. கமலை, இறைப்பெட்டி போன்ற நீரிறைக்கும் கருவிகள் கொண்டு வேளாண்மை நடந்து வந்தது. கிணற்றுப் பாசனம் தன்னகத்தே ஒரு பண்பாட்டுக் கூறையும் கொண்டிருந்தது. கமலைத் தோட்டம், முன்னும் பின்னும் போய் வரும் காளைகள், கிணற்றடியில் பூவரச மரம், அதில் தூங்கும் குழந்தை, அதற்குத் தாலாட்டுப் பாடும் தாய், கமலைக் கயிற்றைப் பிடித்துத் தொங்கும் சிறார்கள் என்று ஓர் இனிய ஓவியம் நம்முன் தோன்றும். இன்று கமலைக் கிணறு என்பது காண முடியாத காட்சியாகிவிட்டது. கமலை வைத்து நீரிறைக்கும்போது குறிப்பிட்ட அளவு நீர் மட்டும் எடுக்கப்படுகிறது. பொதுவாக மேல்மட்ட நீரானது குளங்களிலும், ஆறுகளிலும் காணப்படும். நிலத்தடி நீர் என்பது 100 அடிக்கும் கீழே தண்ணீர் தாவளங்களாக (aquifiers) காணப்படும். இதற்கிடையில் உள்ள நீர் நுண்துளை நீர் என்று அழைக்கப்படும். இது ஆண்டு தோறும் பெய்யும் மழை, குளங்களில் சேமிக்கப்படும் நீரின் அளவு, காணப்படும் மரங்களின் அடர்த்தி இவற்றைக் கொண்டு அமைவது. பொதுவாக கமலைக் கிணறுகள் யாவும் இந்த நுண்துளை நீரை மட்டுமே பயன்படுத்துபவை. கமலையின் இறைப்பு அளவு கிணற்றின் நீர் ஊறும் திறனும் பெரும்பாலும் சமமாக இருக்கும். ஒரு சால் நீரை வாய்க்காலில் ஊற்றிவிட்டு அடுத்த சால் இறைக்கப் போகுமுன் நீர் ஊறிவிடும். இதைத்தான் நீடித்ததன்மை (sustainability) என்று இப்போது பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் வேதி உரங்கள் அறிமுகம் ஆனவுடன் இந்த நீரின் தேவை போதுமானதாக இல்லை. ஏனெனில் வீறிய விதைகளுக்கு உரமும் அதனால் அதிக நீரும் தேவைப்பட்டது.

ஆனால் நாட்டக விதைகளுக்கு அப்படி ஒரு நெருக்கடி இல்லை. நாட்டுரக விதைகள் எனப்படும் நாட்டக விதைகள் பற்றி வேறொரு கட்டுரையில் பார்ப்போம். இதனால் கமலைகளை மாற்ற வேண்டிய நிலைக்கு உழவர்கள் ஆளானார்கள். அப்போது வங்கிகள் மின்எக்கிகளை (electric motor) அமைத்துக்கொள்ள கடன் வழங்கியது. கடன் பெறத் 'தகுதி' பெற்றோர் கடன் வாங்கி 'மோட்டார்களை' அமைத்துக் கொண்டனர். ஒரு சிற்றூரில் 100க்கு 80 பேர் கமலை வைத்திருந்தார்களேயானால் அதில் 20 பேர்களுக்கு மட்டும் கடன் கிடைத்தது. அதாவது 80 உழவர்களில் 20 பேர் மின்எக்கிகளுக்கு மாறினர். மின்சார எக்கிகள் நீரை மிக வேகமாக உறிஞ்சின. கிணற்றின் ஊறும் வேகம் மின்சார எக்கிகளுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே கிணறுகளில் நீர் மட்டம் மிக வேகமாக கீழிறங்கியது. இதனால் மீதமுள்ளவர்களும் மின்சார எக்கிகளுக்கு மாற வேண்டும் அல்லது சாகுபடியைக் கைவிட வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாயினர். நீர் மட்டம் கீழிறங்கியதால் பலர் கிணறுகளை ஆழப்படுத்தினர். இதுவும் வசதி படைத்த ஒரு சிலருக்கே இயன்றது. விளைவு பாதிக்கு மேற்பட்டோர் சாகுபடியைவிட்டு வெளியேறினர். நகர்ப்புறங்களுக்குச் சென்று குடியேறினர். வேதியுரம் இட்ட நிலத்தில் தழை ஊட்டத்தைப் பிடித்துத் தரும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்தது. எனவே மேலும் உரம் போட வேண்டியதாயிற்று, இதனால் மேலும் கூடுதல் நீர் பாய்ச்ச வேண்டியதாயிற்று. திறந்தவெளிக் கிணறுகளால் பயனில்லாத நிலை ஏற்பட்டதால் ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டன.

இன்று கோவை பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமான ஆழ்துளைக் கிணறுகள் நூற்றுக்கும் மேலாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. வங்காளப் பஞ்சம் தந்த தாக்கம் பலருக்கும் உணவு விளைச்சலை அதிகப்படுத்த வேண்டும் என்ற உணர்வை அதிகமாக்கியது. ஆனால் அது தீர்வுக்கான இரண்டுவிதமான வழிமுறைகளை முன்வைத்தது. ஒன்று வெளியில் இருந்து வரும் தொழில்நுட்ப உதவிகளை ஏற்பது அல்லது அதைப் புறந்தள்ளி உள்ளூர் சார்ந்த வேளாண்மை வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவது என்பதாகும். இதற்கடையில் பி.எல் 480 என்ற உணவு உதவித் திட்டம் பல அறிஞர்களாலும் திறனாய்விடப்பட்டது. பல வளரும் நாடுகளின் வேளாண்மைத்துறையை முடக்கிப் போடுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பல முன்னணிக் கம்பணிகள் பசுமைப் புரட்சியைக் கொண்டு வரமுனைந்தன. இந்தியாவிற்குள் அவ்வாறுதான் பசுமைப் புரட்சி நுழைந்தது. நார்மன் போர்லாக் மூலமாக குட்டை வகை கோதுமைகள் இந்திய வேளாண்மைக்குள் கொண்டுவர முயற்சிகள் 1960களில் நடந்தன. நார்மன் போர்லாக்கை பசுமைப் புரட்சியின் தந்தை என்று கூறுகிறார்கள். 1962ஆம் ஆண்டு மே மாதம் அப்போது இந்திய வேளாண்மை ஆராய்ச்சி பயிற்றகத்தின் (IARI) இயக்குநரான பி.ப்பி. பால் அவர்களிடம் மா.சா. சுவாமிநாதன் எப்படியும் நார்மன் போர்லாக்கை இந்தியாவிற்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவர் இ.வே,ஆ.பயிற்றகத்தில் கோதுமைத் திட்டத்தின் உறுப்பினராக இருந்தார். போர்லாக்கின் வருகையால் 10 குட்டைக் கோதுமை இனங்கள் வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இதன் பிறகு 1963ஆம் ஆண்டு மார்ச் மாதம் நார்மன் போர்லாக்கும், ராபர்ட் ஆண்டர்சனும் 'விஜயம்' செய்தார்கள். இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விதை ஊன்றப்பட்டது… (தொடரும்)

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org