தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய புலவர்கள் - பாபுஜி


ரங்கீலா கோலா கோலா…

இந்த மாதம் புதிய புலவர்கள் வரிசையில் நம் எல்லோருக்கும் அறிமுகமான, நம் நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம் தன் குளிர் பானத்தை கடை பரப்பி இருக்கும் கோகா கோலா என்கிற பன்னாட்டு நிறுவனத்தை பற்றியும் அது எவ்வாறு தம் பானங்களை கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடை பரப்ப முடிகிறது என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.(Youtube இல் இவர்களின் கோலாவை கொண்டு கழிப்பறைகளை கழுவுவது எப்படி என்கிற காணொளிக்காட்சியை கண்டு முகம் சுழித்த பல லட்ச மக்களில் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும்!. 'Coke cleans Toilet' என்று இணைய தளத்தில் தேடவும்!)

சர்க்கரை மற்றும் வேதிப்பொருட்களின் கரைசலை குளிர் பானம் என்கிற பெயரில் இந்த நிறுவனம் சந்தைப்படுத்தி பெரும் பொருள் ஈட்டி வருவது 80 ஆண்டுகளுக்கு மேலாகவே நடந்து வந்தாலும் சென்ற பத்தாண்டுகளில் அது சந்திக்க நேர்ந்த எதிர்ப்புகள் ஏராளம். குறிப்பாக பற்களுக்கு இது எப்படி ஊறு விளைவிக்கின்றது என்பது மிக தீவிரமாக ஆராயப்பட்ட ஒன்று. 2003 இல் இந்நிறுவனம் அமெரிக்க குழந்தைகள் பல்மருத்துவ சங்கத்துக்கு (American Association of Paediatric Dentists - AAPD) 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்ததும் ஒரு மிகப்பெரிய எதிர்ப்பு அலை எழுந்தது. ஏனெனில் கடந்த 50 ஆண்டுகளில் எவ்வாறு குழந்தைகளின் குளிர் பான பயன்பாடு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என்பதையும் இதன் விளைவுகளாக குழந்தைகளிடத்தில் எவ்வாறு உடல் பருமன், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி போன்றவை கடந்த 20 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதையும் குழந்தை மருத்துவர்களும் அறிவியல் ஆய்வாளர்களும் ஆதாரபூர்வமாக நிரூபித்திருந்த காலகட்டத்தில், அவர்களை ஒருங்கிணைக்கும் சங்கமான AAPD இந்த நிதியை பெற்றது தன் காலில் தானே சுட்டுக்கொள்வது போன்றது… உடல் பருமன் மற்றும் சர்க்கரை வியாதிதானே வருகிறது, பல் மருத்துவ சங்கம் நிதி பெறுவதில் என்ன தவறு என்று பார்த்தால்…இந்நிறுவனத்தின் குளிர் பானங்கள் பற்களை அரிப்பது மட்டுமல்லாது குழியாக்கும் வேலையையும் செய்வதனால் பல் மருத்துவர்கள் இதை கடுமையாக எதிர்த்து வந்த வேளையில் அவர்கள் சார்ந்திருக்கும் சங்கமே அந்நிறுவனத்திடம் இருந்து நிதி பெறுவதை அவர்களால் ஏற்க முடியவில்லை.

ஆனாலும் பெரும்பான்மையோர்களால் (அதாவது சங்க உறுப்பினர்களாக இருக்கும் மருத்துவர்கள்) வெளிப்படையாக எதிர்ப்பு குரல் எழுப்ப முடியவில்லை. அவர்கள் சங்கம் மற்றும் நிறுவனத்தின் பதில் நடவடிக்கைகளை எண்ணி பயந்தனர் (வேலை வாய்ப்பு போகலாம், ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்படலாம் அல்லது ஆராய்ச்சி முற்றிலுமாகவே நிறுத்தப்படலாம், தம்மிடம் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென்று குறைந்து விடலாம் போன்ற பல காரணங்களால்). குளிர் பானங்கள் பற்சிதைவை உருவாக்குகின்றது என்று அறிக்கை வெளியிட்ட அதே AAPD குளிர் பான நிறுவனத்திடம் இருந்தே நிதி பெற்றால் அது குளிர் பானங்கள் தீங்கு எதுவும் விளைவிக்காதவை என்றல்லவா மக்களிடம் ஒரு மாயையை ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் கருத்து வெளியிட்டாலும் எதிர்த்துப் போராடத் துணியவில்லை. AAPD தாம் கோகா கோலாவின் குளிர் பானங்களை எந்த விதத்திலும் ஆமோதிக்கவில்லை என்று சொன்னாலும், கோகா கோலா தன் குளிர் பானங்கள் பற்களுக்கு எந்த ஊறும் விளைக்காததால்தான் AAPD தன் நிதி வழங்கலை ஏற்றுக்கொண்டது என்று வாதிட AAPD வழி வகுத்துக்கொடுத்து விட்டது என்பதென்னமோ உண்மைதான்.

மாகாண அளவிலான சங்கங்கள் தம் எதிர்ப்பு குரலை தெரிவிக்க தவறவில்லை. வாஷிங்டன் மாகாண பல் மருத்துவர் சங்கத்தலைவர் மருத்துவர் ராபர்ட் ஷா மார்ச் 13, 2003 இல் தாம் AAPD இன் தலைவர் மருத்துவர் டேவிட் குர்டிஸ் க்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் : ' வாழ்த்துக்கள்!. தங்களின் மோசமான தீர்வினாலும் பேராசையினாலும் எங்கள் மாகாணத்தின் கடும் முயற்சியான 'குளிர் பானங்களுக்கு பள்ளிகளில் அனுமதி தரக்கூடாது' என்ற நியாயமான கோரிக்கையை குழி தோண்டி புதைத்து விட்டீர்கள். தாங்கள் தங்களின் நிலைப்பாட்டிலிருந்து விலகி அந்த நிதியை மறுத்தாலும் இனி பயனில்லை. ஏனெனில் தங்களின் நிலைப்பாடு நம் பல்மருத்துவ துறையின் நம்பகத்தன்மையின் மீது ஏற்படுத்தி விட்ட பாதிப்பு ஈடு செய்யஇயலாதது'.

மின்னேசொடா மாகாணமும் குளிர் பானங்கள் பள்ளி வளாகங்களில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வாதிட்டு சட்ட திருத்தத்தையும் கொண்டு வந்து அது கடைசி நிமிடத்தில் கோக் மற்றும் பெப்சி போன்ற நிறுவனங்களின் அரசியல் ஆதரவாளர்களால் (Political Lobbyists) கை விடச்செய்யப்பட்டது. அதாவது மின்னேசொடா பல் மருத்துவ சங்கம் கோக்கை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த அதே நேரத்தில் AAPD கோக் இடம் இருந்தே நிதி பெற்றிருக்கிறது!

AAPD முரணான நிலைப்பாடு கண்டிருத்த போதிலும் அமெரிக்க பல் மருத்துவர் சங்கம் (American Dental Association - ADA) தம் கொள்கையில் தெளிவாக இருந்தது. அது 'பல் மருத்துவர்கள் பள்ளிகளில் சர்க்கரை குளிர் பானங்கள் விற்பனை செய்யப்படுவதை அறவே ஒழிக்க முயற்சி செய்ய வேண்டும்' என்பதே.

இந்நிலையில் அக்டோபர் 2003 இல் மருத்துவர் ஜொயெல் பெர்க், AAPD நிறுவனத்தின் தலைவர், கோக் இன் நிதியை ஏற்றுக்கொண்டு வழங்கிய ஒரு வானொலி உரையில் 'நிறைய உணவுகள் பற்சிதைவை உண்டாக்குகின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் கட்டம் கட்டி தாக்குவது என்பது முறையாகாது' என்றும் 'ஒரு உணவுப்பொருளை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அதன் பாதிப்புகள் இருக்கும்' என்றும் முழங்கினார். அதாவது, ஒரு நாட்டின் குழந்தைகள் பல் மருத்துவ துறையின் தலைவர் ஒரு பன்னாட்டு வணிக நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியை போன்று பேசினார். அவரை அவ்வாறு பேச வைத்தது கோக் வழங்கிய 1 மில்லியன் டாலர் நிதி!

கோக்கின் நிதி AAPD யை எப்படி எல்லாம் ஆட வைக்கிறது என்பது சில மாதங்களிலேயே வெட்ட வெளிச்சமாகி விட்டது. எதிர்க்கும் மருத்துவர்களை மிரட்டிப் பணிய வைப்பது அல்லது அவர்கள் மீதான மக்களின் நம்பகத்தன்மையை குலைப்பது, அறிவியல் முடிவுகளைத் திரித்துக் குளிர் பாணங்களால் பற்களில் குழி வராது என்றும் பற்கள் அரிக்கப்படாது என்றும் 'நிரூபிப்பது' போன்ற சித்து வேலைகள்தாம் அவை! இத்தனை காரியங்களையும் AAPD ஆய்வாளர்களுக்கு ஆய்வு நிதியை ஒதுக்குவதற்கு முன்னராகவே செய்து முடித்திருந்தது. மேலும் கோக்கிடம் இருந்து வரும் வருடங்களில் பல மில்லியன்கள் நிதி கிட்டும் என்றும் AAPD செய்திகளை கசிய விட்டிருந்ததால், அந்த நிதியை எதிர்பார்த்துத் தம் ஆய்வுகளை செய்துகொண்டிருந்தவர்கள் எவரும் வாய் திறக்கவில்லை! (அவர்களும் குளிர் பானங்களால் பற்சிதைவு ஏற்படுவதை ஆய்வு செய்யாமல் கோக் இடம் இருந்து வரும் நிதி அதை மகிழ்விக்க என்ன செய்தால் தமக்கு கிட்டும் என்ற கண்ணோட்டத்துடன் தம் ஆய்வு இலக்குகளை மாற்றிக்கொள்வதற்கு இந்த செய்தி கசிவுகள் காரணமாயின). கோக் என்ன செய்தது? நிதிப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களை (AAPD, நிதிப் பற்றாக்குறையினால் தவிக்கும் பல சிறார் பள்ளிகள்) கண்டு பிடித்து அவர்களை பணத்தினால் அடித்து, தம் பொருட்களை அவர்கள் மூலம் சந்தைப்படுத்த வாய்ப்பு உண்டாக்கி கொண்டது! இதை கோக் இன்றளவும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறது.

ஒரு சிறிய உதாரணம்: கோக் இன் ஆக்கிரமிப்பு/ ஆதிக்கம் அமெரிக்க பள்ளிகளின் எவ்வாறு உள்ளது என்றால், அதன் பெயர் மற்றும் சின்னம் ( brand and logo) பள்ளிகளின் நாட்காட்டிகள், விளையாட்டு முடிவுகளை அறிவிக்கும் பலகைகள், உணவு அட்டைகள், கல்வி கற்க உதவும் பொருட்கள், அதாவது புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், எழுது பொருட்களை வைக்க உதவும் டப்பிகள் போன்றவற்றில் பொறிக்கப்பட்டால் அப்பள்ளிகளுக்கு நிதி அளிப்பதாக ஒப்பந்தமே செய்திருக்கின்றது!

நம் ஊரில் டாஸ்மாக் குடிமகன்கள் போல் அமெரிக்காவில் கோக் குடிமகன்கள்; ஒரு சிறிய வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் பள்ளிகளில் இருந்தே தயார் செய்யப்படுகிறார்கள்! கோக் இன் முக்கியமான குறிக்கோள் என்ன தெரியுமா? 'அமெரிக்காவில் வீடு தோறும் குழாயை திறந்தால் கோக் கொட்ட வேண்டு'மாம்!. அமெரிக்கர்கள் ஏன் கோக் குடிப்பதை விட அதிகமாக இன்னமும் தண்ணீர் குடிக்கிறார்கள் என்ற கவலையில் அது தன் சந்தையை பரப்பி வருகிறது, உலகம் முழுவதும்.

இளநீரையும் கம்ப‌ங்கூழையும் கோக்குக்குப் பறிகொடுத்த நம் இந்தியர்களை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org