தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவன் விடுதலையும் சிறு தொழில்களும் -2 - உழவன் பாலா

சென்ற கட்டுரையில் , உழவன் விடுதலைக்கும், உழவு ஒரு லாபகரமான தொழிலாக மாறுவதற்கும் கிராமப்புற அண்மைத் தொழில்கள் எவ்வாறு தேவை என்று பார்த்தோம். இக்கட்டுரையில், ஒரு நல்ல சிறுதொழிலுக்குத் தேவையான அங்கங்கள் என்ன, அவற்றை எவ்வாறு செயல் படுத்துவது என்று பார்ப்போம்.

அடிப்படையில் வெற்றிகரமான சிறுதொழிலுக்குக் கீழ்க்கண்ட 5 அம்சங்கள் தேவை.

1. செயல் திட்டம்

செயல் திட்டம்தான் மிகவும் அடிப்படையான ஒன்று. என்ன செய்யப் போகிறோம், அதற்கான தொழில்நுட்பம் என்ன, முதலீடு எங்கிருந்து வரும், சந்தைப்படுத்துவது எப்படி, இதற்குத் தேவையான மனித வளம் நம்மிடம் உள்ளதா, இதில் என்ன இடையூறுகள் நேரிடக் கூடும், அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பன போன்ற கேள்விகளுக்கு ஓரளவு விடை தெளிவான விடை தெரிந்தால்தான் செயலில் துணிய‌ வேண்டும். துணிந்தபின் எண்ணினால் இழுக்காகி விடும்.

எல்லாச் செயல்திட்டத்திற்கும் முதல் நோக்கம் உழவர் சேவையும், கிராம முன்னேற்றமுமாய் இருக்க வேண்டும். லாபம் நம் தொழிலின் விளைவாக இருக்க வேண்டுமே அன்றி நோக்கமாக ஒரு போதும் இருக்கலாகாது. இரண்டாவது நோக்கம் சூழல்கேடு குறைவாக இருக்க வேண்டும். இதற்குத் தான் அண்மைத் தொழில்கள் தேவை.

அண்மைத் தொழில்கள் என்று பார்த்தால் அவற்றிற்கெனச் சில அடிப்படை இலக்கணங்கள் உண்டு. மூலப் பொருட்களை அண்மையிலேயே, உழவர்களிடமிருந்து பெற வேண்டும். எல்லா மூலப் பொருட்களை இல்லாவிடினும், பெரும்பாலானவற்றை அண்மையில் கொள்முதல் செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு ஊறுகாய் உற்பத்தித் தொழிலை எடுத்துக் கொண்டால், அதற்குத் தேவையான, பழங்கள்/காய்கள் (எலுமிச்சை, மா), மிளகாய்த் தூள், எண்ணை போன்றவற்றை அண்மையாகக் கொள்முதல் செய்ய வேண்டும். அவை அடைக்கப்படும் கண்ணாடிக் குடுவைகள், ஒட்டும் பெயர் அட்டை போன்றவை தொலைவில் இருந்து வரலாம்.

500 ஏக்கரும், 400 குடும்பங்களும் கொண்ட ஒரு மாதிரிக் கிராமத்தை எடுத்துக் கொண்டால் ஒரு 20-30 பேருக்கு வேலை கொடுப்பதும், சுமார் 100 ஏக்கரின் விளை பொருட்களைக் கொள்முதல் செய்து மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றி விற்பதுமான ஒரு தொழில் அமைத்தால், ஓரளவு அந்தக் கிராமத்தின் பொருளாதாரம் மேம்படும். இந்த 100 ஏக்கரும் இயற்கை விவசாயமாக இருக்க வேண்டும் ; அதற்கான மண்புழு உரம், மூலிகைப் பூச்சி விரட்டி போன்றவற்றை மகளிர் சுய உதவிக்குழு மூலம் உள்ளூரிலேயே தயாரித்தால் சுமார் 4 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை பெண்களுக்கு வருமானம் கிட்டும். ஒரு 20 குடும்பங்களுக்கு நிரந்தர மாத வருமானமும் கிட்டும்.

2. தொழில்நுட்பம்

சூழல்சுவட்டைக் குறைப்பது நம் இரண்டாவது நோக்கம் ஆதலால், நாம் கடைப்பிடிக்கும் தொழில்நுட்பங்களின் ஆற்றல் தேவை குறைவாக இருக்க வேண்டும். தற்காலத்தில் , கிராமங்களில் கூட, இட்லி மாவு அரைக்க இயந்திரங்களைச் சார்ந்திருக்கும் நிலையில், உலக்கை, திருகு (இழைந்திரக்கல்) போன்றவற்றப் பயன்படுத்தி உணவு பதப்ப‌டுத்த யாரும் தயாரில்லை. சிறுதொழில்கள் என்று அரசு வரையறுக்கும் தொழில்களும் மிக அதிகமான மின்சக்தியைப் பயன் படுத்துகின்றன.

சாதாரணமான அரிசி, மிளகாய்த்தூள் அரைக்கும் சிறு ஆலைகள் கூட பல ஆயிரம் வாட் மின்சக்தியைப் பயன்படுத்திகின்றன. அந்த சூட்டிலும், ராட்சத அறவையிலும் உணவுப் பொருள்களின் சத்து பெரிதும் வீணாகி விடுகிறது. எனவே கையாலோ, மிருகங்களாலோ பதப்படுத்துவது இயலாத சமூக சூழலில், ஆற்றல் பசி கொண்ட நவீன இயந்திரங்களின் வழியாக பதப்படுத்த நம் கொள்கை இடம் கொடுக்காத நிலையில், இவை இரண்டுக்கும் இடைப்பட்ட தொழில்நுட்பம் ஒன்று தேவைப்படுகிறது. இதைத்தான் சூ மேக்கர் இடைப்பட்ட தொழில்நுட்பம் (intermediate technology) அல்லது பொருத்தமான தொழில்நுட்பம் (appropriate technology) என்று குறிப்பிடுகிறார். Intermediate Technology Group என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அவ்வச்சூழலுக்கு ஏற்ற அண்மைத் தொழில்நுட்பங்களை ஆராய்வதும், செயல்படுத்துவதுமான ஒரு லாபநோக்கற்ற சேவை யில் முனைந்திருக்கிறார். நம் அறிஞர் குமரப்பாவும் கதர் மற்றும் கிராமத் தொழில் சங்கம் (Khadi and Village Industries Association) என்ற அமைப்பில் எண்ணற்ற தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து செயல்படுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தில் சதீஷ் சந்திர தாஸ்குப்தாவும் இந்த இடைப்பட்ட தொழில்நுட்பத்திற்குத் தன் வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்திருக்கிறார்.

அரசு தரப்பில் இதற்கான அமைப்புக்கள் பெயரளவிலேயே இருக்கின்றன. இந்த இடைப்பட்ட தொழில்நுட்பத்தின் தேவையோ, புரிதலோ திட்டமிடுவோருக்கோ, நிர்வகிப்போருக்கோ சிறிதும் இல்லை. வேலை ஆட்கள் குறைவாயுள்ள அமெரிக்கா , மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் பெரு இயந்திரத் தொழில்நுட்பங்கள் தேவையாய் இருக்கலாம். ஆனால், மக்கள் தொகை அதிகமாயுள்ள ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் (உலகின் 70% மக்கள் வாழும் நாடுகளில்!) - வேலை வாய்ப்புக்களை உருவாக்க இந்த இடைப்பட்ட தொழில்நுட்பம் இன்றியமையாதது.

3. முதலீடு

ஒரு கிராமம் தன்னிறைவு அடைந்து தற்சார்பாய் இருக்க சுமார் 5 கோடி ரூபாய் முதலீட்டில் அண்மைத் தொழில்கள் தொடங்கினால் போதும். மொத்தத் தமிழ்நாடும் செழிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் கிராமத் தொழில்களில் முதலீடு செய்தால் போதும். இது தமிழக அரசின் ஓராண்டு வருமானமே! (2012-13ல் தமிழ்நாட்டின் மொத்த வருமானம் - 80,248.52 கோடி ரூபாய்.

இதில் 21680 கோடி ரூபாய் அரசின் சாராயக்கடைகளில் இருந்து சுங்க மற்றும் வணிக வரியாக‌ வருவது!) ஒரு சாதாரணமான கார்த் தொழிற்சாலையின் அந்நிய முதலீடு 4000 முதல் 5000 கோடி ரூபாய். 20 நிறுவனங்களின் முதலீடு இருந்தால், 7 கோடி மக்களின் பொருளாதாரத்தை நிமிர்த்தலாம் - இதுதான் இடைப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அண்மைத் தொழில்களின் வலிமை. அந்நிய முதலீட்டிலோ ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டே போகிறார்கள். வலுத்தவர்கள் கொழுத்துக் கொண்டு போகிறார்கள்.

தனி மனிதர்கள் என்று பார்த்தால், கிராம முன்னேற்றத்திற்கென‌, கிராமத்தில் முதலீடு செய்ய, அண்மைத் தொழில்களில் தங்கள் பணத்தை இடத் துணியும் முதலீட்டாளர்கள் தேவை. தற்போது ப‌ங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் தங்கள் முதலீட்டுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாது, அதிக லாபம் பெறும் ஒரு விதப் பேராசையுடன்தான் முத‌லீடு செய்கின்றனர். முதலீட்டாளர்களுக்கு அரசோ, முதலீடுகளை நிர்வாகம் செய்யும் பெரும் நிறுவனங்க‌ளோ எந்த விதப் பாதுகாப்பும் அளிப்பதில்லை. முதலீட்டிற்கு எந்த உத்தரவாதமும் இன்றிப் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் பங்குச் சந்தை முதலீட்டை விட, ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் கிராமத் தொழில்களில் முதலீடு செய்வது எவ்வளவோ சமூகக் பொறுப்புள்ளதாகிறது.

4. சந்தைப்படுத்துதல்

எப்பொருளும் விற்பனை செய்ய முடியாவிடின் அத்தொழில் தோற்று விடும். எனவே சந்தைப்படுத்துதல் என்பது இன்றியமையாதது. முதலில் நகரங்களில் விற்க முயன்றாலும், பின்னர் அண்மையிலேயெ ஒரு சந்தையை உருவாக்குவதுதான் நிலைத்த பொருளாதாரத்திற்கு வழி வகுக்கும். அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் உணவு, உடை போன்றவை நியாய விலையாக இருந்தால் அண்மையிலேயே விற்றுவிடும்.

5. தொழில்முனைவோர்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இதையெல்லம் யார் செய்வது என்ற கேள்வி எழுகின்றது. படித்த, இளைஞர்கள், தங்கள் கம்பணி வேலைகளைத் துறந்து விட்டு கிராம வந்து சேவையில் ஈடுபடுவார்கள் என்பது மிக அரிதே. எனவே கிராமத்தில் ஓரளவு படித்த இளைஞர்களுக்கு நாம் மேலாண்மை, விற்பனை, திட்டமிடல், இடைப்பட்ட தொழில்நுட்பம், நிதி நிர்வாகம், போன்ற சிறு தொழிலுக்குத் தேவையான அனைத்து அங்கங்களிலும் எளிய தமிழில் ஏட்டுச் சுரைக்காயாய் இல்லாமல் கவைக்கு உதவும் பயிற்சி அளிக்க வேண்டும்.குமரப்பா கூறியது போல், கிராமத்தில் அறிஞர்கள், விற்பன்னர்கள், வழிநடத்துவோர் என்று விவரமானவர்கள் மிகக் குறைவு. அவர்களும் சுயநலம் இல்லாமல் இருப்பது அதை விடக் குறைவு, இந்நிலையில், திட்டங்கள் தீட்டிப் பணத்தை வாரிக் கொட்டுவதை விட, கிராம‌ மலர்ச்சி என்பது சிறு தொழில்கள் மற்றும் இயற்கை வேளாண்மை சார்ந்த ஒரு திட்டமாக இருக்க வேண்டும். கிராமத்தில் இருக்கும் இளைஞர்களை ( இளைஞர் என்றால் ஆண், பெண் இரு பாலாரும்தான்) ஊக்குவித்துப் பயிற்சி அளித்துப் பயன்படுத்த வேண்டும்.

அரசு என்ன செய்யலாம்

அரசின் ஆற்றலும் வீச்சும் மிக வலிது. நினைத்தால் ஐந்தே வருடங்களில் ஒரு நல்லரசால் ஏழைகளே இல்லாமல் செய்து விட முடியும். அண்மையில் நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் காந்தி கிராமப் பஞ்சாயத்துக்களை நிறுவச் சொன்னார். பெரு நிறுவனங்கள் கிராம வளங்களையும், அப்பாவி நுகர்வோரையும் சுரண்ட விடாமால் அரசு தடுத்தாலே பல நன்மைகள் விளையும். அண்மைத் தொழில்களை ஆதரித்து, இயற்கை வேளாண்மையை பரப்ப அரசு தன் எல்ல வலிமையையும் செலுத்த வேண்டும். ஊழலும் சுரண்டலும் இல்லாவிடில் கிராமம் தானே தன்னைச் சரி செய்து கொண்டு விடும்.

தொண்டு நிறுவனங்கள் என்ன செய்யலாம்

அரசுக்குக் காத்துக் கொண்டிராமல், தொண்டு நிறுவனங்கள் என்ன செய்யலாம்? பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் ஒரு சில தனி மனிதர்களால், பணபலம் இன்றி நடத்தப் படுகின்றன. எனவே அவற்றின் ஆற்றல் மிகக் குறைவே. எனினும் ஒவ்வொரு தொண்டு நிறுவனமும், ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டு அங்கு தீவிர வேலை செய்யலாம். நமக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் நிதி திரட்டி சிறு தொழில்கள் தொடங்கலாம். நபார்டு, அரசுடைமை வங்கிகள் போன்றவற்றில் கடன் உதவி பெற்றுத் தொழில் நடத்தலாம். அங்குள்ள இளைஞர்களுக்கு நடைமுறைப் படுத்தக் கூடிய பயிற்சி அளிக்கலாம். சுயநலமற்ற வழி நடத்துதல்தான் இப்போது கிராம மலர்ச்சிக்கு உடனடித் தேவை.

நம் முண்டாசுக் கவிஞன் சொன்னது போல

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - இங்கு
வாழும் மனிதருக்கு எல்லாம்
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்!

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org