தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உலகெனும் சந்தை - அனந்து


நெப்போலிய மன்னன் இங்கிலாந்தைக் “கடைக்காரர்களின் நாடு” என்று கேலி செய்ததாகக் கூறுவர். தன் நாட்டு வாணிபம் செழிக்கவும், உலகம் முழுவதும் தன் சந்தையின் ஆதிக்கம் பரவவும் வேண்டி அன்று ஆங்கிலேய அரசு தன் ராணுவம், கடற்படை போன்றவற்றைக் கொண்டு தன் வாணிபத்தைப் பாதுகாத்துப் பெருக்கியது. இந்தியத் துணைக் கண்டத்தையே ஆண்ட அரசு “கிழக்கிந்தியக் கம்பெனி” என்ற வியாபார நிறுவனமாகத்தான் தொடங்கப் பட்டது. இன்று வளர்ந்த மேலை நாடுகள் அனைத்துமே கடைக்காரர்களின் நாடாக மாறி விட்டன. அவற்றின் விற்பனைக்குப் புதுப்புது சந்தைகள் உருவாக்கவும், தங்கள் விற்பனைக்குப் பங்கம் வராமல் பாதுகாக்கவும், உலக வர்த்தக மையம் (WTO) என்ற அமைப்பு [முன்னர் காட்ட் - GATT -என்ற பெயரில் இருந்தது] ஒன்றை உருவாக்கி அதில் வளரும் நாடுகளை உறுப்பினர்களாக்கி வலுத்தோர் எளியோரின் சந்தையை ஆளுமை கொள்வதுதான் உலக வர்த்தகம்!

சர்வதேச ஒப்பந்தங்கள் (ஏன் உறவுகள் கூட) இந்தியாவில் அதிகம் பொது இடங்களில் விவாதிக்கப்படுவதுமில்லை, அவை பற்றிய விழிப்புணர்வும் இல்லை. பெரும்பாலான ஊடகங்களும் அதற்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் அரசாங்கத்திலிருந்து கடைசி குடிமகன் வரை பல முக்கியமான விஷயங்களில் உள்ளது போல் இதிலும், அறிதலும் புரிதலும் அற்றே இருக்கின்றனர்,. அதனால் இந்த உலக வர்த்தக அமைப்பின் தலையீடுகளும், கட்டளைகளும், அதிகார ஆணைகளும், பின் கதவு ஊடுருவல்களும் இப்படியே இருக்கின்றன.

தற்போது இந்தோனேசியாவின் பாலி நகரில் நடை பெற்ற மாநாட்டில் இரு பெரும் விசயங்கள் பெரிதாக இருக்கின்றன:

- நம் நாடு, நம் போன்ற வள‌ரும் மற்றும் பின்தங்கிய நாடுகளின் உணவுப் பாதுகாப்பிற்கான திட்டங்களும், விவசாயிகளுக்கான உதவி/ நல திட்டங்களுக்கு மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பு

- (இதற்கு கைமாறாக) வளர்ந்த மேற்கத்திய நாடுகள் அவற்றின் விளை பொருட்களை எளிதாக, வரிசுமைகளில்லாமல் நம் போன்ற வளரும் நாடுகளுக்குள் கொண்டு வந்து இறக்கி பணம் சம்பாதிப்பது.

இது நன்கு படித்த முதல் வரிசை மாணவன் படிக்காத கடைசி மாணவனை தேர்வுக்கு முன்தினம் விளையாட அழைப்ப‌து போன்றது. இவன் தான் உஷாராக இருக்க வேண்டும்.

உலக வர்த்தக அமைப்பின் வேளாண் ஒப்பந்தத்தால், இந்திய விவசாயிகளுக்கு விளையக்கூடிய கேடுகள் குறித்து பக்கம் பக்கமாக கருத்துக்கள் வெளியாகியும், நமது மத்திய அரசு, மேற்கத்திய நாடுகளிடம் இந்த விஷயத்தில் சரணடைந்துவிட்டது. இந்திய அரசின் சார்பில், பாலியில் நடந்த உலக வர்த்தக அமைப்பு கூட்டத்திற்கு சென்றிருந்த மத்திய அமைச்சர் ஆனந்த் ஷர்மா, முதலில், பல வீர வசனங்களை விடுத்தார். ஆனால், அங்கு சென்று, மேற்கத்திய நாட்டு பிரதிநிதிகளை பார்த்து, கன்னத்தில் போட்டுக்கொண்டு, எந்த விதமான கூச்ச‌மும் இல்லாமல் இந்திய விவசாயிகளை விலை பேசிவிட்டார். கொடுமை என்னவென்றால், அதை ஒரு பெரும் வெற்றியாக, பெரிய சாதனையாக சித்தரித்து, அதனை எல்லோரையும் நம்பவும் வைத்துள்ளது மத்திய அரசு. துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான ஊடகங்களும் அப்படியே சித்தரித்து உள்ளன. உண்மை என்ன? அமெரிக்காவிற்கும் மற்ற மேற்கத்திய நாடுகளுக்கும், விளைபொருட்களை, இரும்பு, எண்ணெய் போல வர்த்தக பொருளாக மாற்ற வேண்டும் என்ற ஆசை. குறிப்பாக இந்தியா போன்ற பெரிய நாடுகளை, தங்களது நிறுவனங்களுக்கு, திறந்தவெளி சந்தைகளாக மாற்ற வேண்டும் என்பது நோக்கம்.

வளர்ந்த மேற்கத்திய‌ நாடுகளுக்கு பல பயன்களை அடைவதுடன், நம் நாட்டின் விவசாயிகள் மற்றும் ஏழைகளின் வயிற்றில் பல விதங்களிலும் அடித்து இன்று நம் சமுதாயத்தில் இருக்கும் பல கேடுகளுக்கும் அதுவே ஆரம்பம். அவர்களது பெரும் லாபத்திற்காக நமது விவசாயிகள் மற்றும் ஏழை/நடுத்தர வர்க்கத்தின் வாழ்வாதாரத்தையே குலைத்தார்கள். ஏழ்மையும், சமனற்ற ஏற்றத்தாழ்வுகளும், பட்டினி சாவுகளும், விவசாயி தற்கொலைகளும் இந்த உலக வர்த்தக அமைப்பு வழியாக வந்த அர்த்தமற்ற கொள்கைகளினால் தான். அவர்களது இரட்டை வேடமும், பின் கதவு தந்திரங்களும் அவர்களது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை தக்கவைத்துக்கொள்ளவே! ஆனால் இப்பொழுது அவற்றை பற்றி இங்கு நாம் பார்க்கப்போவதில்லை.

முதல் பிரச்சினை எல்லாவற்றிலும் இழைக்கும் அதே தவறு: மேற்கத்திய நாடுகளை பார்த்து அப்படியே காப்பி அடிப்பது. அவர்களது சராசரி நில உரிமை/கையிருப்பு 400 ஹெக்டேர்கள்! நமது சராசரி நில கையிருப்பு 1 ஹெக்டேர் மட்டுமே! அதனால் அவர்களை பார்த்து நாம் சூடு போட்டுக்கொள்ளலாமா? அவர்களிடம் 2-4% மட்டுமே விவசாயிகள். நமது நாட்டில் 60%க்கும் மேல் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள். நமது விவசாயிகளின் நிலமை மிகவும் பின்தங்கி இருப்பது நமது பல திட்டங்களாலேயே. அதுவும் உலக வர்த்தக அமைப்பின் பல கட்டளைகளுக்கு பிறகே. விவசாயியின் விளை பொருட்களுக்கு நியாய விலை என்பது எப்பொழுதுமே கிடையாது. இப்பொழுது அரசு கொள்முதல் விலை மற்றும் குறைந்த பட்ச கொள்முதல் விலை அதிகமாக உள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் குரலெழுப்புகின்றன மேற்கத்திய நாடுகள். இவை எல்லாம் அவர்களது பொருட்களை ஏற்றுமதி என்னும் பெயரில் எளிதாக நம் மேல் “கொட்டுவதற்கே”. வர்த்தகத்தை வெறும் வரவு செலவாகவும், ஏற்றுமதி இறக்குமதியாகவும் பார்க்கக்கூடாது. மேற்கத்திய நாடுகளுக்கு அவர்களது பண பலத்தினால் அன்னிய செலாவணி அதிகமாக இருக்கும். அவர்களுக்கு எளிதானவற்றை ஏற்றுமதி செய்து விட்டு மற்றவற்றை இறக்குமதி செய்துக்கொள்வது லாபகரமாக இருக்கும்.

இன்று நமது விலை நிர்ணயம் முதல் பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அரசு மானியங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறது வளர்ந்த நாடுகளின் கூட்டு.

உடனடி பாதிப்பு நமது உணவு பாதுகாப்பு சட்டம்! நமது நாட்டின் 80 கோடி மக்களுக்கு உதவக்கூடிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் எதிர்பார்க்கபடும் செலவு- 2000 கோடி (20 பில்லியன்) டாலர் ஆகும். ஆனால் இன்றைய தினம் (2012 கணக்குப்படி) அமெரிக்கா அவர்களது ஏழைக்கு உணவு (Food Stamp program) மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கு (malnourished-கு) செய்த செலவு 10000 கோடி (100பில்லியன்) டாலர் ஆகும்! எவ்வளவு மக்களுக்கு? 6.7 கோடி மக்களுக்கு மட்டுமே! யானைக்கு ஒரு நியாயம் ஆட்டுக் குட்டிக்கு ஒரு நியாயமா?

இப்படி தங்களுக்கு பல்வேறு மானியங்கள், பயிர் காப்பீடு, ஏழைகளுக்கு இலவச உணவு, என்று பல இலவச‌ திட்டங்கள் கொண்ட‌ இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது நமது இறையாண்மையில் தலையிடுவதற்கு? நமது மத்திய அரசுக்கு முதுகெலும்பு இருந்தால் அல்லவா எழுந்து நின்று இப்படிக் கேட்க முடியும்? அவர்களது வர்த்தகப்பசி நம் விவசாயிகளின் வயிற்றில் அடிக்க அனுமதிக்கக்கூடாது!

இதற்காகத்தான் உலக வர்த்தக அமைப்பு மூலமாக வேளாண் ஒப்பந்தம். இதன் மூலம் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் மானியங்கள், ஆதரவு விலை எல்லாம் கட்டுப்படுத்தப்படும். ஏழைகளுக்கு கொடுக்கப்படும் மானிய விலை உணவின் அளவும் கட்டுப்படுத்தப்படும். ஏன்? அப்போது தான் உள்ளூர் விவசாயிகளை முடமாக்கி, வெநாட்டு விளைபொருட்களை இந்திய சந்தையில் குவிக்க முடியும். இதற்கெல்லாம் ஒப்புக்கொள்ள முடியாது என, கூறிக்கொண்டு இருந்த இந்திய அரசு, பாலிக்கு சென்றவுடன், நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்த ஒப்பந்தத்தில் கண்டிப்பாக கையெழுத்து இடுகிறோம் என, ஒப்புக்கொண்டு உள்ளது. கிடைத்த நான்கு ஆண்டு அவகாசத்தை பெரிய வெற்றியாக பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது. எது வெற்றி? இந்த சரணாகதியின் நேரடி விளைவுகளில் சில; * ஒரு மாநிலம் இன்னும் அதிகமாக தானியங்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய முடியாது * தமிழக அரசு எளியோரின் ஊட்டச்சத்தை முன்னேற்ற ரேஷனில் அல்லது மதிய உணவு திட்டத்தில் தினை அல்லது வரகு போன்ற சிறு தானியங்களை வழங்க முடிவெடுத்தால், அது முடியாது * விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்திக்கொடுக்கும் அதிகாரம் அரசிடம் இருந்து பறிக்கப்படும். அதனால், இனி, ‘விலை உயர்த்து’ போராட்டங்கள் கூட சாத்தியமில்லாமல் போகும் * விவசாய குழுக்களுக்கும் அரசுக்கும் இதுவரை நடந்த மற்றும் நடக்கின்ற, கொள்முதல் விலை, வருவாய் உயர்வு/உத்திரவாதம், மானியங்கள் குறித்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் வீண். ஏனெனில் அரசால் இவற்றில் எதையும் செயல்படுத்த முடியாது * நமது மொத்த தானிய கொள்முதல், தானிய இருப்பு நிலை, வினியோக அளவு உள்ளிட்ட விவரங்களை உலக வர்த்தக அமைப்பிற்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் நமக்கு, உலக வர்த்தக அமைப்பு, அனுமதித்த அளவை நாம் மிஞ்சிவிடக்கூடாதாம். எவ்வளவு அழகாக நம் இறையாண்மை விற்பனையாகி உள்ளது என்பது ஆச்சரியமளிக்கிறது

இவற்றை எல்லாம் மறைத்து விட்டு வெற்றி முரசு கொட்டப்படுகிறது!

ஆனால், இந்த கேவல நிலையிலும், நாம் தப்பிக்க ஒரு வழி உள்ளது.

இவ்வொப்பந்தத்தின் இறுதி வடிவம் 2014ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி ஜெனிவாவில் மேடையேற்றப்படும். அதற்குள் நம் மத்திய அரசு மாறியோ, அல்லது மனம் மாறியோ தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். இதற்கென மாநில அரசுகள் அனைத்தும் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். நாமும் நம் மாநில அரசைப் பல விதங்களிலும் விழித்தெழச் செய்ய வேண்டும்.

நமது தொழிற்சங்கங்கள், விவசாயிகள், விவசாய குழுக்கள் மற்றும் பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எல்லோரும் விழித்தெழுந்து இந்த உலக வர்த்தக அமைப்பு, “அமைதி வாசகம்”(peace clause), “கட்டற்ற/தாராள வர்த்தக ஒப்பந்தம்” (free trade agreement)- எல்லாவற்றையும் எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். மேலும் நமது, அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, வேளாண்மை, மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில் பெரும் வீச்சுள்ள இத்தகைய முடிவுகளை மத்திய அரசு தன்னிச்சையாக எடுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

இத்தனை காலம், மத்திய அரசின், தவறான கொள்கைகளால் தான் வேளாண்மை அழிந்தது. ‘நடந்த வரை போதும். மத்திய அரசு உலக வர்த்தக அமைப்புடன் வேளாண் ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது’ என, மாநில அரசுகள் போர்க்கொடி பிடிக்க வேண்டும்.

ஏன், இந்த உலக வர்தக அமைப்பே தேவை தானா?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org