தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்


மாடுகளின் இனப்பெருக்க மேலாண்மைக்கு நாம் முதலில் மாடுகளின் இனப்பெருக்கத்தைப் பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

மாடுகள் ஒரு ஈற்றில் ஒரு கன்று தான் ஈனும். கிடேரிக் கன்றுகள் (பெண் கன்றுகள்) சுமார் இரண்டரை வயதில் முதலில் சினைப் பருவத்தை அடையும். சில கன்றுகளில் மூன்று வயது வரை ஆகலாம். அதற்கு மேலும் பருவத்திற்கு வரவில்லையானால் ஊட்டச் சத்து குறைவாக உள்ளது ஒரு காரணமாக இருக்கலாம்.

சினைக்கு வருவது என்றால் என்ன? பசுக்கள் பருவத்தை அடைந்ததிலிருந்து 21 நாட்களுக்கு ஒரு முறை கரு முட்டையை உற்பத்தி செய்யும். இதனை சினைப் பருவச் சுற்று என்று அழைக்கலாம். கருமுட்டை முதிர்ச்சி அடைந்தது முதல் வெளிப்படும் வரை பசுக்களிடம் சினைப் பருவ அறிகுறிகள் காணப்படும். இதனை எவ்வாறு கண்டறிவது? பசு மாடுகளை கூட்டமாக மேய்ப்பது சாத்தியமானால் அதனுடன் காளையையும் மேய விட்டால் அது சினைக்கு தயாரயிருக்கும் மாடுகளை அடையாளம் கண்டு தாண்ட முயற்சிக்கும். பசு மாடுகள் இனப்பெருக்கத்திற்கு தயராகும் போது மட்டும் தான் காளைகளை புணர அனுமதிக்கும். அப்போது அந்த பசுக்களை காளையுடன் தனியாக புணர அனுமதிக்கலாம். அல்லாமல் காளைகளை தனியாக பராமரிப்பது என்பதாலோ அல்லது உங்களிடம் காளைகளே இல்லையென்றாலோ எவ்வாறு சினைப்பருவத்தை கண்டு கொள்வது? சினைப் பருவத்தை சரியாக கண்டு கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால், புணர்ச்சி ஏற்படுகிறதோ இல்லையோ சினைப்பருவம் பசுக்களில் 18 மணி நேரம் மட்டுமே இருக்கும். அதற்குள் பருவத்திற்கு வந்துள்ள பசுக்களை அடையாளம் காண வேண்டும். இல்லையானால், மீண்டும் 21 நாட்கள் கழித்தே சினைக்கு விட முடியும். சினைப் பருவத்திற்கு வராத பசுக்களை இனப்பெருக்கம் செய்ய அனுமதித்தாலும் பலன் இல்லை. சினை நிற்காது. எனவே, ஒரு பருவத்தை கவனிக்காமல் விட்டால் நமக்கு 21 நாட்கள் வீணாகும். சினைப்பருவத்திற்கு வந்துள்ள பசுக்களிடம் கீழ்க்கண்ட அறிகுறிகள் காணப்படும்.

1. பசுக்கள் அடிக்கடி கத்தும், பெரும்பாலும் வழக்கமாக கத்துவது போல் அல்லாமல் சிறிது மேல் சுருதியில் கத்தும்.

2. புணர் புழை சிறிது உப்பலாக சிவந்திருக்கும்.

3. புணர் புழையிலிருந்து விளக்கெண்ணெய் போன்ற ஒரு பிசின் திரவம் கண்ணாடி போல் வெளிவரும்.

4. தீனி தின்பது குறையும்.

5. பால் உற்பத்தி குறையும்.

6. வாலை புணர் புழை வாயிலிருந்து சற்று அகட்டி வைத்திருக்கும்.

7. அடிக்கடி சிறுநீர் கழிக்கும்.

8. பசுக்கள் அமைதியின்றிக் காணப்படும்.

9. பசுக்களும் பிற மாடுகள் மீது தாவும். பிற மாடுகளை தாவவும் அனுமதிக்கும்.

இந்த அறிகுறிகள் தென்பட்ட பின் 12 மணி நேரம் கழித்து பசுக்களை புணர அனுமதிக்க வேண்டும். மேற்கண்ட ஒன்பது அறிகுறிகளுமே தென்பட வேண்டும் என்பதில்லை. சில பசுக்களில் சில அறிகுறிகள் மட்டுமே தென்படும். அதாவது, சில பசுக்கள் கத்தாது. சில பசுக்கள் தாவாது. சில பசுக்களில் புணர் புழைத்திரவம் கூட வெளிவராது. எனவே, மிகவும் உன்னிப்பாக கவனிப்பது அவசியம். சில பசுக்களில் எந்த அறிகுறியுமே வெளிப்படையாக தெரியாமல் இருக்கும், இதனை அமைதியான சினைப் பருவம் (silent estrum) என்று குறிப்பிடுவர். பொதுவாக பசுக்கள் இரவு நேரங்களில் பருவத்திற்கு வரும். எனவே, அதிகாலையில் மாடுகளை கவனிப்பது மிகவும் முக்கியம். பால் கறக்கும் போதும், தீவனம் அளிக்கும் போதும் மட்டும் கவனிப்பது போதாது. மாலையிலும் மாடுகள் உண்ட பிறகு அமர்ந்து அசை போடும் நேரத்தில் ஒரு முறை கவனிப்பதும் அவசியம். பெரிய பண்ணையாக இருந்தால், சினைப்பருவத்திற்கு வர வேண்டிய மாடுகளையும், அண்மையில் கன்று ஈன்ற பசுக்களையும் தனியாக கட்டுவது நாம் கவனிக்க உதவி செய்யும். கன்று ஈன்ற மாடுகள் கன்று ஈன்ற பிறகு சுமார் மூன்று மாதம் கழித்தே மீண்டும் சினை பருவத்திற்கு வரும். மேலும், ஒரு முறை சினைக்கு வந்த பசுக்களை இனப் பெருக்கத்திற்கு அனுமதித்த பிறகு மீண்டும் 21 நாட்கள் கழித்து சினை பிடித்திருக்கிறதா அல்லது மீண்டும் சினைக்கு வருகிறதா என்று கவனிக்க வேண்டும். இதற்காக, பெரிய பண்ணையாக இருந்தாலும் சரி, சிறிய பண்ணையாக இருந்தாலும் சரி, பசுக்களுக்கென்று ஒரு பதிவேடு வைத்துக் கொள்வது அவசியம். அதில், ஒவ்வொரு பசுவிற்கும் தனித்தனியாக (பெயர் வைத்து) பிறந்த தேதி முதல், சினைப்பருவத்திற்கு முதலில் வந்த நாள், அதன் நோய் மற்றும் சிகிச்சை பற்றிய தகவல்களை பராமரிப்பது உதவும்.

ஒரு பசு சினைக்கு வந்துள்ளது என்று அறிந்த பின் என்ன செய்ய வேண்டும்? பசுவை காளையுடன் புணர அனுமதிக்கவும். காலையில் பார்க்கும் போது சினைக்கு வந்திருந்தால் மாலையில் தரமான காளையுடன் சேர்க்கவும். மாலையில் பார்க்கும் போது சினைக்கு வந்திருந்தால் காலையில் காளையுடன் சேர்க்கவும். காளைக்கு எந்த விதமான நோயும், உடல் உபாதைகளும் இல்லாமல் இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். பெரிய பண்ணையாக இருந்தால் நீங்களே, ஒன்றோ அல்லது உங்கள் தேவைக்கேற்ப அதற்கும் மேலோ பொலி காளைகளை பராமரிப்பது சிறந்தது. காளையுடன் பசுக்களை சேர்க்கும் போது அவற்றை மிரட்டுவதோ, பயமுறுத்துவதோ கூடாது. அமைதியான சூழலில் சேர்ப்பது முக்கியம். உங்களிடம் இனப்பெருக்கக் காளைகள் இல்லையென்றால், காளை உள்ள இடத்திற்கு பசுக்களை நடத்தியோ அல்லது வண்டியிலோ தான் அழைத்துச் செல்ல வேண்டி வரும். அந்த நிலையில், பிரயாணத்திற்கு பிறகு உடனே சேர்ப்பது கூடாது. பிரயாணத்திற்கு பிறகு குறைந்தது ஒரு மணி நேரமாவது பசுக்களை ஓய்வாக இருக்கச் செய்து, தண்ணீர் அளித்து பின்னர் சேர்ப்பது அவசியம். இயன்ற அளவு, போக்குவரத்து அதிகம் இல்லாத சாலைகள் வழியாக அழைத்துச் செல்லவும். சினைக்கு வந்துள்ள பசுவிற்கு இளம் கன்று இருந்தால், மாடும் கன்றை பிரிந்தால் மிரளும் சுபாவம் உடையதாக இருக்குமானால் கன்றையும் உடன் அழைத்துச் செல்லவும். காளையுடன் சேர்த்த பிறகும் மாடுகளை உடனே பிரயாணத்திற்கு தயார் செய்யக் கூடாது. மீண்டும் ஒரு மணி நேரமாவது ஒய்வாக இருக்கச் செய்து தேவையானால் சிறிது புல் மற்றும் தண்ணீர் அளித்து பின்னரே பிரயாணம் செய்ய வேண்டும். காளையுடன் சேர்த்த பசுக்களை அதிக வெப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சில நாட்களுக்கு வெயிலில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம். மர நிழல் உள்ள இடங்களில் மேய்க்கவும். வெப்பம் அதிகமான நாட்களாக இருந்தால் மாட்டின் மீது குளிர்ந்த நீரைத் தெளிக்கலாம். மற்றபடி, தீவனம், பால் கறப்பது போன்ற எல்லாவற்றையும் வழக்கம் போல் செய்யவும்.

காளையுடன் சேர்க்கும் போது காளையின் உருவம், உயரம், எடை ஆகியவை பசுவிற்கு ஏற்றாற்போல் இருப்பது முக்கியம். அதிக வித்தியாசம் இருக்கக் கூடாது. காளை பசுவை விட கொஞ்சம் சிறியதாக இருந்தால் தாண்டுவது இயலாது. அந்த சூழலில் காளையை சற்றே மேடான இடத்தில் நிறுத்தி சேர்க்கலாம். காளை சற்று பெரியதாக இருந்தால், பசுவினால் அதன் எடையை தாங்க இயலாது என்று தோன்றினால் காளையின் முன்னங்கால்களை தாங்குமாறு ஒரு கவிழ்த்த ‘ப’ வடிவத்தில் கட்டை கட்டி விடலாம். அரசு கால்நடை மருத்துவமனைகளின் வெளியில் இதற்காகவே இரும்பு குழாய்களினால் ஒரு அமைப்பை செய்து வைத்திருப்பதை கவனித்திருப்பீர்கள். பசுவின் இனமும் காளையின் இனமும் ஒன்றாக இருந்தால் உருவம் மற்றும் எடைத் தொந்தரவு பெரும்பாலும் இருக்காது.

காளையுடன் சேர்த்த மாடுகளை மீண்டும் 21 நாட்கள் கழித்து கவனமாக பார்க்கவும். மீண்டும் சினைத்தருண அறிகுறிகள் தென்பட்டால் பெரும்பாலும் சினை பிடிக்கவில்லை என்று அறிந்து மீண்டும் காளையுடன் சேர்க்கலாம். ஒரு பசுவை மீண்டும் மீண்டும் ஒரே காளையுடன் சேர்ப்பது சிறந்ததல்ல. சில வருடங்களுக்கு ஒரு முறை காளையை மாற்றுவது அவசியம். அதேபோல், பசுவினுடைய தாய், தந்தையுடன் மரபு சம்பந்தம் உள்ள காளையையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது கன்றுகளில் மரபியல் கோளாறுகள் (in-breeding) உருவாக ஏதுவாகும். எனவே, காளைத் தேர்வை கவனித்து செய்யவும்.

இந்த சினைத் தருண அறிகுறிகளை கவனிப்பதை மேலும் சுவையாக்க பொய் சினைத் தருணமும் சில பசுக்களில் தென்படும். எது பொய், எது உண்மை என்று எவ்வாறு கண்டறிவது? உதாரணமாக ஒரு பசுவிடம் சினைத் தருண அறிகுறிகள் தென்பட்டு, காளையிடம் சென்று வந்த பிறகு மீண்டும் 21ம் நாள் சினைத்தருண அறிகுறிகள் தென்பட்டால் சினை பிடிக்கவில்லை என்று அறியலாமல்லவா… அது போல் 10ம் நாளே மீண்டும் சினைத்தருண அறிகுறிகள் தென்பட்டால் முன்பு ஏற்பட்டது பொய் சினையாக இருக்கலாம் அல்லது இப்போது ஏற்பட்டிருப்பது பொய் சினையாக இருக்கலாம். இரண்டு தேதிகளையும் குறித்து வைத்துக் கொண்டு மீண்டும் எப்போது சினைத் தருண அறிகுறிகள் தென்படுகின்றன என்பதை வைத்து எது பொய் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

சினைக்கு விட்டு 35ம் நாள் அல்லது 40ம் நாள் மீண்டும் சினைத் தருண அறிகுறிகள் தென்பட்டால், சினை நின்று பின் கலைந்திருக்க வாய்ப்பு இருக்கலாம். அவ்வாறு ஒரே மாட்டிற்கு அடிக்கடி நடப்பது போல் இருந்தால் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே, மாடுகளின் சினைத் தருண அறிகுறி எப்போது தென்படுகிறது என்பதை உன்னிப்பாக கவனிப்பதும் அதை முறையே குறித்து வைப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். முதலில் சினைத்தருண அறிகுறிகளை கவனிப்பது ஒரு பெரிய வேலையாக தோன்றும். பழகப் பழக அதை கவனிப்பது, வாகனம் ஓட்டுவது போல் எளிதாகி விடும்.

சரி… காளையை வைத்து பராமரிப்பது உங்களுக்கு சாத்தியமில்லை… மேலும் உங்கள் பண்ணைக்கு அருகிலும் யாரும் காளையை வைத்து பராமரிப்பதில்லை என்றாலோ என்ன செய்வது? அம் மாதிரி நிலைகளில் வேறு வழியில்லை என்றால் கால்நடை மருத்துவரை அழைத்து சினை ஊசி போடலாம். சினை ஊசி போடுவது நல்லதா இல்லையா, காளைகளை பயன்படுத்துவது சிறந்ததா என்பதைப் பற்றி பல கோணங்களில் கருத்துகள் மக்களிடையே உள்ளன. காளைகளை சுத்தமாக பராமரிக்கவிட்டால் காளைகள் மூலம் பரவும் நோய்கள் பசுவை தாக்க வழியுண்டு என்றும், சினை ஊசி போடுவதில் சினை நிற்பது கடினம் என்றும், காளைகளுக்கு மரபு வழி குறைபாடுகள் ஏதாவது இருந்தால் அதன் மூலம் நமது பசுவிற்கு பிறக்கும் கன்று சிரமப்படும் என்றும், சினை ஊசி போடுவது சரியாக செய்யாவிட்டால் சினை நிற்காமல் போவது மட்டுமல்லாமல் பசுவிற்கும் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்றும், காளைகளிடம் மாடுகளை அழைத்து செல்ல அதிக தூரம் மாடுகளை ஓட்டி செல்ல வேண்டி இருப்பதால் நேரம் வீணாகும் என்றும், சினை ஊசி போட மருத்துவர் அல்லது பயிற்சி பெற்றவர் வருவதிலும் கால தாமதம் ஆகலாம் என்றும், ஒரே காளையை உபயோகிப்பதாலோ அல்லது பசுவுடன் இரத்த சம்பந்தம் உள்ள காளைகளை உபயோகிப்பதாலோ பசுவிற்கும், கன்றிற்கும் தொந்தரவுகள் ஏற்படலாம் என்றும், சினை ஊசி போட வருபவர் எடுத்து வரும் உறை விந்தின் தரம் மாறுபடலாம், கலப்பின விந்து மட்டுமே இருக்கிறது என்றும் பல மாறுபட்ட கருத்துகள் உள்ள நிலையில் இரண்டில் எதை கைக்கொள்வது என்று முடிவு செய்வதில் குழப்பம் ஏற்படலாம். இரண்டு வழிகளையும் பயன்படுத்தி பார்த்ததில் இரண்டிலுமே நன்மை தீமைகள் உள்ளன. ஆனாலும், (உங்களுக்கு, எத்தனை ஊசி போடுகிறோமோ அவ்வளவு காசு… எனவே சீக்கிரமாக சினை ஊசி போட்டு விட்டு அடுத்த பசுவை பார்க்க வேண்டும் என்று கருதாத நல்ல கால்நடை மருத்துவர் அமைந்தாலும்…) பசுவைப் பொறுத்தவரை ஊசி ஒரு இயற்கையான உணர்வை வழங்காது. அந்த அடிப்படையில் பார்த்தால் சினை ஊசி போடுவதை விட காளைகளிடம் சேர்ப்பதே இயற்கையான வழி. ஊசி தான் போட வேண்டும் என்ற கட்டாயத்தில் உங்கள் பண்ணை இருந்தால், ஊசி போட வேண்டிய நேரம் ஆகியவற்றிலும், மற்ற எந்த விதத்திலும் மாற்றம் இல்லை. காளைகளுக்கு பதிலாக அதே நேரத்தில் ஊசியை பயன்படுத்தலாம்.

சரி… இதையெல்லாம் முடிவு செய்து, சினைக்கு விட்டு, பசுவிற்கு சினை நின்று விட்டது. இப்போது என்ன செய்ய வேண்டும்? சினை மாடுகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும்? அடுத்த இதழில் பார்ப்போமா!

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org