தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம் - தமிழில் அமரந்தா

உண்மை நிலவரம்

[ கிராம உத்யோக் பத்ரிக்கா - 1948 - “நமது உணவுப் பிரச்சினைகள்” ]

சென்னை மாகாண முதலமைச்சர் ரெட்டியார் உணவு மாநாட்டில் பேசும்போது “ஒரு மாகாணத்தில் மட்டுமே இரண்டரை முதல் மூன்று கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்கச் செய்யும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டியிருக்கிறது” என்று கூறினார். போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப்பின் ஏன் இந்த இக்கட்டான நிலை? இதற்கு யார் பொறுப்பு? அதே மாநாட்டில் பண்டித ஜவஹர்லால் நேருவும் பேசினார் :” அதிகப்படியான உணவஒ உற்பத்தி செய்வதுதான் நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு. ஆனால் கடந்த காலத்தில் அந்த இலக்கை எட்டுவதற்காக போதிய கவனமோ உழைப்போ செலுத்தப் படவில்லை என்பது உண்மைதான்” என்று அவர் கூறினார்.

விவசாயத்தை ஆதாரமாகக் கொண்ட நம் நாட்டில் மக்கள் பட்டினி கிடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது விவசாயத் துறையின் பொறுப்பு. இந்தத் துறைக்காகச் செலவிடப் படும் தொகை உணவுப் பற்றாக்குறை இல்லாததை உறுதி செய்யும் காப்பீட்டுத் தொகை போன்றது. வரி செலுத்துவோரின் பணத்தை எக்கச்சக்கமாக செலவழித்தும் மக்கள் அவ்வப்போது பட்டினி கிடக்க நேர்ந்தால், எங்கோ ஏதோ தவறு நடக்கிறது என்று பொருள். தவறு செய்பவர் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதிக உணவை இறக்குமதி செய்வதற்காகப் பிற பொருட்களை ஏற்றுமதி செய்யுங்கள் என்று கூறுவதன் பொருள் என்ன? பிரச்சினைக்குப் பொருத்தமான நிரந்தரத் தீர்வைக் காணாமல், நெருக்கடியைச் சமாளிக்கவே முயற்சிக்கிறோம் என்று பொருள்.

இந்தியா போன்ற பழமையான நாட்டில் ஏற்கனவே விளைநிலம் பற்றாக்குறையாக இருக்கிறது. உணவு உற்பத்திக்கே எப்போதும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.ஆனால் சர்வதேசப் பருத்திக் அறிவுரைக் கமிட்டியின் ஏழாம் அமர்வில் இந்தியக் குழு ஒரு பரிந்துரை அளித்துள்ளது.நெட்டை ரகப் பருத்தியின் (பஞ்சாலைகான கச்சாப் பொருள்) உற்பத்தி குறைவாய் இருப்பதால், அதனை அதிகமான நிலப்பரப்பில் பயிரிட வேண்டும் என்பதே அந்தப் பரிந்துரை. வேறு (உணவுப்) பயிருக்குப் பதிலாக நெட்டை ரகப் பருத்தியைப் பயிரிட வேண்டும் என்பதையே இவ்வாறு வேறு சொற்களில் கூறியிருக்கிறார்கள். வர்ஜீனியாப் புகையிலை (சாகுபடியிலும்) இதே நிலைமைதான். அப்படியானால் அதிகப்படி உணவை எங்கிருந்து உற்பத்தி செய்ய முடியும்?

விவசாயத் துறை இதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது? இது குறித்து விசாரணையேனும் நடக்கிறதா? நமக்குத் தெரிந்தவரை, விவசாயத் துறை, ஆலைகளுக்குத் தேவையான மூலப்பொருளை உற்பத்தி செய்வதிலேயே கவனம் செலுத்துவதால், உணவு உற்பத்தி செய்வோரின் பிரச்சினைகள் குறித்துக் கவலைப் படுவதில்லை. நியூ சவுத் வேல்ஸில் (ஆஸ்திரேலிய மாநிலம்) , முரம்பிரிட்ஜ் பகுதியில் ஏக்கருக்கு 1.75 டன் நெல் உற்பத்தியாகி இருக்கிறது. நல்ல வாய்ப்பான சூழலில் 4 டன் நெல் விளைந்ததாகக் கூட செய்திகள் தெரிவிக்கின்றன. விக்டோரியாவில் (இன்னொரு மாநிலம்) ஏக்கருக்கு 430 பெட்டி தக்காளி விளைந்துள்ளது. இந்தச் சாதனைகளுக்கெல்லாம் இணையாக நம் விவசாயத்துறை எதைக் காட்டப் போகிறது?

விவசாயத் துறையை மறுசீரமைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆலைகளுக்கான இடுபொருட்களையும், பணப்பயிர்களையும் குறித்து முடிவு செய்வதை “விளைநிலப் பயன்பாட்டுத் துறை” வசம் விட்டு விட வேண்டும். இத்துறை பயனாளிகள் செலுத்தும் வரிகளாலும், நன்கொடைகளாலும் மட்டுமே நிர்வகிக்கப் பட வேண்டும். பொது வரிகளை இதற்குப் பயன்படுத்தக் கூடாது. மக்களுக்கான உணவை விளைவிக்கும் பொறுப்பு விவசாயத் துறையிடம் விடப்பட வேண்டும். வேறு எதிலும் இத்துறை தலையிட அனுமதிக்க‌க் கூடாது.இந்தத்துறைக்கு உணவை விளைவிக்கிற ஒருவர் தலைவராக வேண்டும்; ஐ.சி.எஸ் அதிகாரி அல்ல. அவருக்குச் சம்பளம் வழங்கப் படக் கூடாது. அதற்குப் பதில் ஒரு விளைநிலத்தை அவருக்குப் பொருள் ஈட்ட அளிக்க வேண்டும். அப்போதுதான் இந்த முக்கிய துறையில் நாம் எங்கே நிற்கிறோம் என்று தெளிவாகும்; விவசாயத் துறை, விவசாயிகள் மீதும், பொது மக்கள் மீதும் உண்மையான கவனம் செலுத்த இயலும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org