தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவும் உரிமையும் - சரா


பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் ...

நமது ஊடகங்கள் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கெதிரான பல கொடுமைகளை எழுதி வருவது தெரிந்ததே. பாலியல் கொடுமைகள், வீட்டிற்க்குள் ஏற்ப்படும் வன்முறை என்று செய்திகள் தனிந‌பர்களின் வாழ்க்கையை வீதியில் வைத்து அலசும் வேளையில், ஒரு ஒட்டுமொத்த தொழில்துறையே பெண்களை அடிமைகளாக நடத்தும் வேடிக்கை, தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றது.

இந்தியாவில் பருத்தி உற்பத்தி முதல் நாம் உடுத்தும் துணிகள் உற்பத்தி வரை, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தொழில் ஆதிக்கம் நிலவி வருவது நாம் அறிந்ததே. தமிழ்நாட்டில் தான் இந்தியாவின்:

 • 61.6% - பஞ்சாலைகள்
 • 19.2% - இயந்திரமயமாக்கபட்ட பஞ்சாலைகள்
 • 11.8% - கைத்தறி நெசவாலைகள்
 • 25.1% - நெசவுத்துறையை சேர்ந்த கைவிஞைனர் ஆலைகள்
 • 50% - நிட்டிங் தொழிற்சாலைகள்

செயல் பட்டு வருகின்றன என ஒரு வர்த்தக சங்க அறிக்கை தெரிவிக்கின்றது.

2011 ஆண்டின் புள்ளி விவரப்படி, தமிழகம், இந்தியாவின் நெசவு மற்றும் உடைகள் உற்பத்தித் துறையில் 45% பங்கு வகித்து வருகின்றது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்க்கான ஒரு துறையாக இந்தத் துறை அரசாங்கத்தாலும் பெரிய அளவில் திட்டங்களுடன் ஆதரிக்கப்படுகின்றது, அங்கீகரிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தத் துறையினால் மாசுபடும் நீர்நிலைகளை சுத்தப் படுத்த மட்டும், அரசாங்கம் ஏரத்தாழ 200 கோடி செலவு செய்துள்ளதாக ஒரு செய்தி. உலகத்தில் உள்ள பிரபலமான அனைத்து துணிகள் விற்கும் கம்பணிகளும், நமது மாநிலத்திலிருந்து தங்கள் துணிகளை தயாரிக்கின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள் இந்தத் துறையின் முன்னோடிகளாக திகழ்கின்றன. நிலத்தையும், நீரையும் மாசுபடுத்தும் பேராலைகள் ஒரு புறம் இருக்க, இத்தகைய ஆலைகள் வேலைக்கு அமர்த்தும் இளம் பெண்களின் அவலம், சமீபகாலமாக பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சுமங்கலி என்றால், மணமான நல்ல வாழ்க்கையை அமைக்க பெற்ற பெண் என்று பொருள். தமிழகத்தில், இந்த தலைப்பில் ஒரு கொடுமையான, அடிமைகளாக பெண்களை வேலைவாங்கும் திட்டம் தமிழகத்தின், “முன்னேற்ற” துறையான பருத்தி, நெசவு மற்றும் இவை சார்ந்த உற்பத்தி மற்றும், ஏற்றுமதி துறையில் இயங்கி வருவது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில், இந்த துறையில், 70% தமிழக பெண்களும், 30% வேற்று மாநில இளம் பெண்களும் பணி செய்வதாக தெரிய வருகின்றது. 13 வயது முதல், 18 வயது வரை உள்ள இளம் பெண்கள், பெரும்பாலும், 3 வருட ஒப்பந்ததின் கீழ் இங்கு பணிக்கு அமர்த்தப்படுகின்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. தமிழகத்தில் உள்ள 593 பஞ்சு, நெசவு, துறைகளில் இயங்கும் ஆலைகளில், ஏறத்தாழ 291 ஆலைகளில் இந்த ‘திட்டம்’ தனியார் நிறுவனங்களால் ஒரு லட்சம் பெண்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இத்தகைய ஒரு ஆலயில் பணிபுரியும் பெண்ணுடன் நடந்த நேர்காணலை, மற்றொரு ஆய்வு பிரசுரித்துள்ளது. அதன் தமிழாக்கம் கீழே கொடுக்கபட்டுள்ளது.

 • பெயர்: ரஞ்சிதா
 • வயது: 19
 • வேலை: உலர் துணி தேய்த்தல் (ironing)
 • நிறுவனத்தின் பெயர்: ***
 • அமைந்துள்ள இடம்: நெதாஜி அப்பரல் பார்க், எட்டிவீரம்பாளயம், புதிய திருப்பூர்
 • வேலைக்கு சேர்ந்தது: இரண்டரை வருடங்களுக்கு முன்னர்
 • இன்னமும் எவ்வளவு காலம் ஒப்பந்தப்படி வேலை செய்யவேண்டும்: ஒன்றரை வருடம்
 • ஒப்பந்ததில் சம்பளம்: ரூ. 3000/-
 • கொடுக்கபடும் சம்பளம்: 1200/- முதல் 1500/- வரை
 • வாரத்தில் வேலை நாட்கள்: 6
 • ஒரு நாளில் எத்தனை மணி நேரம் வேலை: 13
 • ஒரு மாததில் விடுப்பு: 1 அல்லது 2 நாட்கள்
 • ஒரு வருடத்தில் சொந்த ஊருக்கு செல்ல விடுப்பு: 2 அல்லது 3 நாட்கள்
 • ஒப்பந்த காலத்தின் முடிவில் மொத்தமாக தொகை அளிக்கபடும் என்று தெரிவிக்கபட்டதா: ஆம்
 • எவ்வளவு தொகை: ரூ. 35,000/-
 • வேலை மத்தியில் எவ்வளவு நேரம் அவகாசம் அளிக்கபடும்: 2 மணி நேரம்
 • ஒப்பந்த காலத்தில் மாலயில், ஓய்வு நாட்களில் தொழிற்சாலையை விட்டு வெளியே செல்ல அனுமதி உண்டா: இல்லை
 • ஒப்பந்த காலத்தில் குடும்பத்தை சார்ந்தவர் தவிர வேறு எவரேனும் (சமூக ஆர்வலர், பெண்கள் குழு) சந்திக்க அனுமதி உண்டா: இல்லை
 • குடும்பத்தார் உங்களை சந்திக்க அனுமதி உண்டா: உண்டு
 • எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை: மாதம் ஒரு முறை
 • அவ்வாறு குடும்பத்தார் வரும்போது, தனியாக பேச அனுமதி உண்டா: இல்லை, காவலர் கண்காணிப்புடன் தான் சந்திக்கவேண்டும்
 • குடும்பதுடன் தொலைபேசியில் பேச அனுமதி உண்டா: மாதம் இருமுறை, 10 நிமிடங்களுக்கு பேச அனுமதி உண்டு
 • தொலைபேசியில் தனியாக பேச முடியுமா: இல்லை, பேசும்போதும் காவலர் அருகில் இருப்பார், என்ன பேசுகின்றோம் என்று கண்காணிப்பார்
 • உங்களுடன் எத்தனை பேர் தங்கியிருக்கின்றார்கள்: ஒரு அறையில் 15-20 பேர்
 • உங்களுக்கு தனியாக படுக்க வசதி உண்டா: 2 பேர் ஒரு படுக்கையில் படுக்க வேண்டும்
 • உணவு எப்படி: நல்ல உணவு இல்லை, போதிய உணவும் இல்லை, நிச்சியமாக திடகாத்திர‌மான உணவு இல்லை
 • உங்கள் உடல் நலன்: நோய்வாய்பட்டால், எங்கள் சம்பளத்திலிருந்து கழித்துகொண்டு மருந்து அளிக்கபடும், மாதத்திற்கு, 100 – 300 ரூபாய் வரை கழித்து கொள்ளபடும்
 • பணியாளர்கள் உங்களை எவ்வாறு நடத்துகின்றனர்: மிகவும் மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தபடுகின்றோம்
 • அரசாங்க (அல்லது தனியார் நிறுவன) அதிகாரி யாரேனும் பார்வையிட வந்தது உண்டா: உண்டு, அத்தகைய நேரங்களில் எங்களை பாவாடை தாவணி அணிய சொல்லுவார்கள் (வயதை கூட்டி காண்பிப்பதற்க்கு)
 • நீங்கள் இங்கு சந்தோஷமாக இருக்கின்றீர்களா: நிச்சயமாக இல்லை.

மேலே உள்ளதைப்போல் பல உதாரணங்களை, இங்கிருந்து துணிகளையும் இதர பொருட்களையும் இறக்குமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும், தனியார் நிறுவனங்களையும், ஆய்வாளர்களையும் அனுப்பி துப்பறிந்து வருகின்றன. தமிழகத்தின் தொழில்துறை முன்னேற்றத்தை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால், தமிழகத்தின் பல பகுதிகளில், விவசாயம் அழிந்துவரும் வேளையில், பல விவசாயக் கூலியாட்களின் குடும்பங்கள் வேறு திக்கறியாத இளம் பெண்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள், கல்யாண காலத்தில் கடன்படாமல் இருக்க சுமங்கலி திட்டதில் தஞ்சம் புகுந்துள்ளனர். வெள்ளையன் நம்மை அடிமையாக்கி, பெறும் ஆலைகள் நிருவி, தொழில்களை ஏற்படுத்திய காலத்தில் நமது அண்மைத் தொழில்கள் பலவும் மடிந்தன‌. இப்பொதும், நமது தொழில்கள் நமக்கு அல்லாது, பெருமளவு பொருளீட்டும் நோக்கில் மற்ற நாடுகளுக்கு உற்பத்தி செய்து , நமது மக்களையே அடிமைகளாக்கிவரும் இந்தக் கொடுமை இன்னும் எத்தனை காலம்தான் நீடிக்குமோ என்று கேட்கத் தோன்றுகிறது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org