தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அழியும் காடுகளும் எண்ணைப் பனையும்


சில்வியா சின்னேல்லி, 'Djakarta Globe' நாளிதழ், 16 நவம்பர் 2013 தமிழில் பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

[மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள்:

(அ)இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசகர் ஒருவர் களைக்கொல்லி பயன்படுத்துவதை ஆதரிக்கிறார். மேலும், நுகர்வை - குறிப்பாக மகிழுந்து உள்ளிட்ட தனிப்பட்ட ஊர்திகளைப் பயன்படுத்துவதை - குறைப்பதை வலியுறுத்துவதற்கு மாறாக ஆற்றுப் பாசனம் உள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீரைக்கொண்டும் எண்ணெய்ப் பனை வளர்ப்பதை ஒரு மாற்றாக இக்கட்டுரை முன்வைக்கிறது. இதில் நமக்கு (தாளாண்மைக்கு) உடன்பாடில்லை. மேலும், சமையல் எண்ணெய் பயன்பாட்டில் பெரும்பங்கினை ஒரே வகை எண்ணெய் - அதுவும் உடல் நலத்துக்குச் சிறந்ததன்று என்று பரவலாகக் கருதப்படும் எண்ணெய் - எடுத்துக்கொள்வது சரியன்று; உணவுப் பன்மயம், பொருளாதாரம், சூழல் பன்மயம் ஆகியவற்றுக்கு இது எதிரானது.

(ஆ)கட்டுரையில் உள்ள அதிகம் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள் குறித்த விளக்கமும் பிறமொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவமும் இறுதியில் தரப்பட்டுள்ளது. அவை முதலில் வரும் இடங்களில் சாய்வெழுத்துகளில் தரப்பட்டுள்ளன.

(இ)மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் [பகர அடைப்புக்குறிகளுக்குள்] தரப்பட்டுள்ளன.]

இந்தோனேசிய நாட்டிலுள்ள அடர்ந்த மழைக்காடுகள் சட்டப்படியான நில அபகரிப்பு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தொண்டு நிறுவனங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. அந்தக் காடுகளில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவந்த மக்களும் பிற உயிரினங்களும் தம் வாழ்வாதரங்களில் இருந்து பிடுங்கி எறியப்படுகின்றனர். ஐரோப்பா, இந்தியா, சீனா போன்ற பகுதிகளில் பாமாயில் எனப்படும் பனை எண்ணெயின் தேவை பெருகிவருவதால் வெளிநாட்டு எண்ணெய்க் கும்பணிகள் இந்தோனேசியாவில் நுழைந்துள்ளன. “இந்தோனேசியக் .காட்டுப் பகுதிகளில் 33,000 ஊர்களும் வேளாண்மைக்கெனக் குறிக்கப்பட்ட பகுதிகளில் அதைவிடப் பல்லாயிரக்கணக்கில் அதிக எண்ணிக்கையிலான ஊர்களும்” இருப்பதாகக் கூறுகிறார் கானக மக்கள் செயல்நிரல் எனும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்தின் மூத்த கோட்பாட்டு ஆலோசகர் மார்க்கசு கோல்செசுட்டர்.

“அரசு அப்பகுதிகளில் வாழும் மக்களைக் கலந்தாலோசிப்பதுகூட இல்லை.; தன் விருப்பத்துக்கு நிலங்களைப் பெரு நிறுவனங்களுக்கு வாரி வழங்கிவிடுகிறது. அதனால் மக்கள் பல நூற்றாண்டுகளாக, ஏன் சில பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, வாழ்ந்துவந்த பகுதிகள் மீதான உரிமைகள் இப்போது நிறுவனங்களின் கையில் உள்ளன.” என்கிறார் அவர். எண்ணெய்ப் பனைச் சாகுபடி உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் எவ்வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து அவருடைய நிறுவனமும் இரண்டு உள்ளூர் அமைப்புகளும் இணைந்து ஆராய்ந்தன. அதன் முடிவுகளை நவம்பர் 15 அன்று மேடான் நகரில் வெளியிட்டார் மார்க்கசு.

“பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காடுகளின் மீதுள்ள உரிமைகளை ஒப்புக்கொள்ளுதல் மற்றும் அவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குதல் ஆகியன தொடர்பாக முடிவெடுத்தல் அந்தக் கும்பணிகளின் மனச்சான்றுக்கே விடப்பட்டுள்ளன.”

“இந்த மக்களின் உரிமைகள் [அரசாலும் நிறுவனங்களாலும்] போதுமான அளவுக்கு ஒப்புக்கொள்ளப்படவில்லை என்பதை எங்கள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கானக விளைபொருள் சேகரிப்பு, வேட்டையாடுதல், மீன் பிடித்தல், மூலிகை மருந்து உற்பத்தி, வேளாண்மை உள்ளிட்ட பல நோக்கங்களுக்காக அம்மக்கள் இந்தக் காடுகளைப் பயன்படுத்திவந்துள்ளனர். இனி அவர்களுக்கு அதற்கான இடம் அங்கு இல்லை.”

'சாயிட் வாட்ச்' என்பது எண்ணெய்ப் பனைப் பெருந்தோட்டங்களுக்கு எதிரானவர்களின் வலைப்பின்னல் அமைப்பு. இந்தோனேசியாவில் ஏற்கெனவே 32 லட்சம் எக்ட்டேர் [சுமார் 80 லட்சம் ஏக்கர்] பரப்பில் எண்ணெய்ப் பனைப் பெருந்தோட்டங்கள் இருப்பதாகவும் அவற்றில் பெரும்பாலானவை சுமத்ரா மாநிலத்தில் இருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கிறது. சாயிட் என்பது இந்தோனேசிய மொழியில் எண்ணெய்ப் பனையைக் குறிக்கிறது. ஒவ்வோராண்டும் 3,30,000 எக்ட்டேர் [சுமார் 8,25,000 ஏக்கர்] புதிய நிலப்பரப்பில் காடுகளை அழித்து எண்ணெய்ப் பனைப் பெருந்தோட்டங்களை அமைக்கவேண்டும் என்பது அரசின் குறிக்கோளாக உள்ளது. 650 முதலீட்டாளர்கள் - அவர்களில் முக்கால்பங்கினர் வெளிநாட்டுக் கம்பணிகள் - இதற்காக அரசிடம் விண்ணப்பிக்கின்றனர் என்கிறது மேற்கண்ட அமைப்பு.

எண்ணெய்ப் பனைக் கம்பணிகளும் அரசும் இதில் ஈடுபட்டுள்ளன என்கிறர் சாயிட் வாட்ச் அமைப்பின் ஆகசுட்டின் கார்லோ லம்பன். கம்பணிகள் நிலத்தைத் தமக்கு வாடகைக்கு விடுமாறு மக்களிடம் கேட்டு முதலில் நிலத்தைப் பெறுகின்றனர். ஆனால், அந்த மக்கள் தம் நிலங்களைப் பின்னர் திரும்பக் கேட்கையில், அந்நிலம் அரசுக்குச் சொந்தமானது என்று அவர்களிடம் தெரிவிக்கப்படுகிறது. தன் பங்குக்கு அரசும் அந்நிலங்கள் மீது வணிக உரிமைச் சான்று வழங்கி அவற்றைக் கம்பணிகளுக்குத் தாரைவார்த்துவிடுகிறது. “இப்படியாகச் சட்டப்படி நிலம் திருடப்படுகிறது” என்கிறார் லம்பன்.

இந்தோனேசியாவில் இயங்கும் எண்ணெய்ப் பனைத் தொழில் நிறுவனங்கள் சில காலமாகவே மனித உரிமை அமைப்புகளாலும் சூழல் காப்பு அமைப்புகளாலும் சாடப்பட்டுவந்துள்ளன. இப்போது அறிவியல் மற்றும் அரசியல் வட்டாரங்களிலும் அவற்றைக் குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன.

[ஆண்டுக்கு 25-50 செ.மீ. மழை பெறும்] மிகுவெப்பப்பகுதி வன்பாலை நிலங்களில் பயிரிடுதல் குறித்த பன்னாட்டு ஆராய்ச்சிக் கழகம் சூழலுடன் ஒத்திசைந்த நிலைபேற்று வேளாண்மை குறித்த ஆய்வுகளை மேற்கொள்கிறது. அதன் மக்கள்தொடர்பு ஆலோசகரான மார்க் வின்சுலோ, பனை எண்ணெய் உற்பத்திக்குப் பல வழிகள் இருப்பதாகக் கூறுகிறார்.

“பனை எண்ணெய்தான் உயிரெரிபொருள்களிலேயே மிக அதிகமான ஆற்றல்-தகைதிறன் ('ஆற்றல்செறிவு') கொண்டது. மேலும், குறிப்பிட்ட பரப்பளவில் மிக அதிக விளைச்சலையும் தருகிறது. இந்தோனேசியா, மலேசியா நாடுகளில் சூழலியல் முதன்மை வாய்ந்த பகுதியில் அது வளர்க்கப்படுவதில்தான் சிக்கல் உள்ளது.” என்கிறார் வின்சுலோ.நிலத்தைத் திருடுவதைக் காட்டிலும் வேறு வழிகள் உள்ளன என்கிறார் அவர். இந்தோனேசியாவில் குறைந்தது அறுபது லட்சம் எக்ட்டேர் [150 லட்சம் ஏக்கர்] தரங்குறைந்த நிலம் இருப்பதாக உலக வளக் கழகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

“அந்த நிலங்களில் 'ஆலங் ஆலங்' எனும் அடர்த்தியான புல் நிரம்பியிருப்பதால் அந்நிலங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால், களைக்கொல்லிகளைக் கொண்டு அந்தப் புல்லை அழித்துவிட்டால் பின்னர் அந்நிலங்களில் எண்ணெய்ப் பனை வளர்க்கலாம்; காடுகளை அழிக்கவேண்டியதில்லை” என்கிறார் வின்சுலோ.

மேலும், அடர்ந்த மழைக் காடுகளில் தான் எண்ணெய்ப் பனைப் பெருந்தோட்டங்களை அமைக்கவேண்டும் என்பதில்லை. “எண்ணெய்ப் பனை இயற்கையில் காடுகளில் தான் வளரும். ஆனால், ஆறுகள் பாயும் பகுதிகளிலும் நிலத்தடி நீரைக் கொண்டும் அதை வளர்க்க இயலும். குறிப்பாக, ஆப்ரிக்காவில் வளர்க்கமுடியும்.” என்கிறார் அவர்.

பனை எண்ணெய் உணவாகப் பயன்படும். கடந்த பத்தாண்டுகளில் அது பயிரிடப்படும் பரப்பளவு மிக அதிக அளவில் வளர்ந்துள்ளது. 2012-ஆம் ஆண்டில் ஐந்து கோடி டன் பனை எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. சமையல் எண்ணெய் உற்பத்தியிலும் வணிகத்திலும் பனை எண்ணெய் முதலிடத்தில் உள்ளது. ஒன்றிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண்மைக் கழகத்தின் புள்ளிவிவரங்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

2011-இல் பனை எண்ணெயின்மொத்த உலக உற்பத்தியில் எண்பத்தைந்து விழுக்காடு இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் உற்பத்தி செய்யப்பட்டது.

உற்பத்தியாகும் பனை எண்ணெயில் எண்பது விழுக்காடு உணவாகவும் [சமையலுக்கும்] மீதமுள்ளது வாசனைப் பொருள் உற்பத்திக்கும் வர வர அதிக அளவில் உயிரெரிபொருளாகவும் பயன்படுத்தப்படுவதாக ஒன்றிய நாடுகளின் வணிகம் மற்றும் மேம்பாட்டுக் குழு தெரிவிக்கிறது.

பனை எண்ணெய் இறக்குமதியில் இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடி மூன்றாம் இடத்தில் ஐரோப்பா இருப்பதாக 2011-ஆம் ஆண்டுக்கான உணவு மற்றும் வேளாண்மைக் கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

புதுப்பிக்கக்கூடிய வளங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருள் பயன்பாட்டை 2020-ஆம் ஆண்டிற்குள் இருபது விழுக்காடு அளவுக்கு உயர்த்துவது ஐரோப்பிய ஒன்றியத்தின் சூழல் மற்றும் ஆற்றல் குறியிலக்குகள் தொடர்பான “20-20-20” திட்டத்தின் குறிக்கோள்; அதில் பத்து விழுக்காடு போக்குவரத்துத் துறைக்குப் பயன்படுத்தவேண்டும். இவ்வாறு ஐரோப்பிய ஆணையத்தின் தரவு தெரிவிக்கிறது.

இதன் விளைவாக வருங்காலத்தில் பனை எண்ணெய் இறக்குமதி அதிகமாகும் என்று கருதப்படுகிறது. ஆனால், நடைமுறை இதற்கு நேர் மாறான திசையில் இருப்பதற்கான அறிகுறிகள் ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இருந்து வருகின்றன.

“முதல் தலைமுறை உயிரெரிபொருள் பயன்பாட்டு அதிகப்படி எவ்வளவு இருக்கலாம் என்பதற்கு எல்லை வகுக்க ஐரோப்பிய பாராளுமன்றம் செப்டம்பரில் முடிவு செய்தது. மேற்கண்ட பத்து விழுக்காட்டில் ஆறு விழுக்காடு மட்டுமே முதல் தலைமுறை உயிரெரிபொருளாக இருக்கவேண்டும்” என்கிறார் பசுமைக் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் பாசு எய்க்அவுட். ஆனால், பனை எண்ணெய் உள்ளிட்ட உயிரெரிபொருள்களின் குமுகவியல் (சமூகவியல்) பாதிப்புகள் குறித்த எவ்வகை நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

“நிலைபேற்றுத்தன்மை அளவைக்கட்டளைகளில் குமுகவியச் செந்தரங்களைச் சேர்ப்பதைப் பொருத்தவரை, தீயவாய்ப்பாக இதுகாறும் ஐரோப்பிய ஒன்றியம் எதுவுமே செய்யவில்லை” என்கிறார் எய்க்அவுட்.

பனை எண்ணெய் நிலைப்பதற்கான வட்டமேசை என்பது இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் பெயராளிப்படுத்தும் அமைப்பு. “சூழலியல் தாக்கத்தைப் பொருத்தவரை பனை எண்ணெய் நிலைபேறுடையதென நிறுவுவதற்கு இதுவரை அந்த அமைப்பு அணியமாக இல்லை” என்கிறார் கோல்செசுட்டர். குமுகவியக் கோணத்தில் பார்த்தால், மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு வட்டமேசை தரும் சான்றிதழ் போதுமானதாக இருக்கும் - அனைவரும் அதன்படி நடந்தால்” என்கிறார் அவர். [ஆனால்] “அந்த அமைப்பில் உறுப்பு வகித்து, சான்றிதழும் பெற்ற நிறுவனங்கள் கூட மக்களை நடத்தும் விதத்தில் குறைகள் இருக்கின்றன. இது அதிர்ச்சியளிக்கிறது” என்கிறார் கோல்செசுட்டர்.

நன்றி: farmlandgrab.org, jakarta globe

கலைச்சொற்கள்

 • அணியமாக 'தயாராக' என்பதற்கு இணையான தமிழ்ச் சொல்
 • ஆகசுட்டின் கார்லோ லம்பன் augustin karlo lumban
 • ஆப்ரிக்கா africa
 • ஆலங் ஆலங் alang alang
 • ஆற்றல்-தகைதிறன் ('ஆற்றல்செறிவு') (அ) ஒரு பொருள் அல்லது இயந்திரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஆற்றலை (ஆ) அதைப் பயன்படுத்துகையில் கிடைக்கும்
 • ஆற்றலின் அளவால் வகுத்தால் கிடைக்கும் மதிப்பு (energy-efficiency).
 • இந்தோனேசியா indonesia
 • உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் food and agriculture organization
 • உயிரெரிபொருள் biofuel
 • உலக வளக் கழகம் world resources institute
 • ஒன்றிய நாடுகள் united nations
 • ஒன்றிய நாடுகளின் வணிகம் மற்றும் மேம்பாட்டுக் குழு UN conference on trade and development
 • ஐரோப்பிய ஆணையம் european commission
 • ஐரோப்பிய ஒன்றியம் european union
 • ஐரோப்பியப் பாராளுமன்றம் european parliament
 • கானக மக்கள் செயல்நிரல் forest peoples program
 • கும்பணி நிறுவனம் ('கம்பெனி' எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்)
 • குமுகம் 'சமூகம்' என்பதன் தமிழ் வடிவம்
 • சாக்கர்த்தா க்லோப் jakarta globe
 • சாயிட் வாட்ச் sawit watch
 • சில்வியா சின்னேல்லி silvia giannelli
 • சுமத்ரா sumatra
 • டன் ton (அமெரிக்காவில் சுமார் 907 கிலோ, பிரிட்டனில் சுமார் 1016 கிலோ)
 • தீயவாய்ப்பாக 'துரதிர்ட்டவசமாக' என்பதன் தமிழ் வடிவம்
 • நிலைபேற்று வேளாண்மை நிலைத்த வேளாண்மை; sustainable farming
 • நிலைபேற்றுத்தன்மை அளவைக்கட்டளை sustainability criterion
 • குமுகவியச் செந்தரம் social standard
 • பசுமைக் கட்சி green party
 • பனை எண்ணெய் நிலைப்பதற்கான வட்டமேசை roundtable on sustainable palm oil
 • பாசு எய்க்அவுட் bas eickhout
 • பெயராளி 'பிரதிநிதி' என்பதன் தமிழ்ச் சொல்
 • மார்க் வின்சுலோ mark winslow
 • மார்க்கசு கோல்செசுட்டர் marcus colchester மிகுவெப்பப்பகுதி வன்பாலை நிலங்களில் பயிரிடுதல் குறித்த பன்னாட்டு ஆராய்ச்சிக் கழகம் international crops research institute for the semi-arid tropics
 • மேடான் medan
 • வன்பாலை semi-arid
 • விழுக்காடு percent ('சதவீதம்' என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்)
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org