தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


மக்களாட்சியின் வெற்றி


நான்கு மாநிலங்களில் இம்மாதம் நடந்த தேர்தல் முடிவுகள் மக்களாட்சியின் வெற்றி என்றே கூற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் பாமர மக்களுக்கு எதிரான கொள்கைகளும், செயல்களும், அனைத்து தரப்பு மக்களையும் பெரும் அளவில் கொதிப்படயச் செய்து விட்டன என்பது தெளிவாகிறது. பன்னாட்டுக் கம்பணிகளுக்கு நம்நாட்டைக் கூவிக் கூவி விற்று வருகிறது இந்த மத்திய அரசு. உழவர்களின் பிரச்சினைகள் எதையுமே கண்டு கொள்ளாமல் மன்சான்டோவிற்குக் குடை பிடித்து வரும் வேளாண் அமைச்சர் சரத் பவார் ஒரு புற‌ம். 6 விழுக்காட்டிற்கு மேல் மக்கள் வேளாண்மையில் ஈடு படக் கூடாது என்று தன் பொருளியல் மேதாவித்தனத்தைப் பறைசாற்றிக் கொள்ளும் நிதியமைச்சர் சிதம்பரம் ஒரு புறம். மரபீனி மாற்று விதைகள் போன்ற மிக முக்கிய தொழில்நுட்பத்தை வெளிநாட்டிலிருந்து காசு வாங்கிக் கொண்டு தொண்டு நிறுவனங்கள் உள்நோக்கத்துடன் தடுக்கின்றன என்று பேட்டி அளிக்கும் பிரதமர். (இவருடைய அரசு மட்டும் வெளிநாட்டுக் காசை நம்பித் தானே ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை வசதியாய் மறந்து விடுகிறார்!).

வறுமைக் கோடு என்றால் என்னவென்றே தெரியாத திட்டக் கமிஷன் தலைவர் அலுவாலியா. லாபத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அரசு நிறுவனங்களை தனியாரிடம் எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்று துடிக்கும் கொள்கைகள். கடுமையான‌ விலவாசி ஏற்றம்; உணவுப் பொருட்களில் ஊக வணிகம் என்னும் சூதாட்டத்தை அனுமதித்து விஷம் போன்ற விலையுயர்வு.குருடர்கள் யானையைப் பார்த்தது போன்ற கொள்கைகளும், திட்டங்களும். எல்லாத் துறையிலும் அளவற்ற ஊழல். இவற்றிற்கெல்லாம் இவர்கள் பெற்ற பரிசுதான் இந்தத் தேர்தல் முடிவுகள். ஆனால், பி.ஜே.பி அரசும் இதே குட்டையில் ஊறிய மட்டைதான் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சுதேசி, சுதேசி என்று முழக்கமிடுபவர்களும் தற்சார்பான பொருளாதாரத்தைக் கடைப் பிடிக்காமல், அந்நிய முதலீடு என்று நாட்டை விற்பவர்கள்தான்.

இதில் நடந்த ஒரே நன்மை அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றிதான். நல்லவர்களே நுழைய முடியாத துறை அரசியல் என்று இருந்த நிலையில், முழுவதும் பொது மக்களிடம் பெற்ற நிதியிலிருந்தே தெருமுனை பிரச்சாரங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்து, வாய்மை வெல்லும் என்று நிரூபித்துள்ளார் கேஜரிவால். 1970களில் ஜெயப்பிரகாஷ் நாராயணும், ஆசாரிய கிருபளானியும் சேவை செய்யப் பதவியைக் கைப்பற்றுவோம் என்ற தூய எண்ணத்துடன் தொடங்கிய ஜனதா கட்சிக்குப் பின் நம் நாட்டில் சேவை மனப்பான்மையுடன் அரசியலில் இறங்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சிதான்.

சாதாரண மனிதர்களால் பெரும் மாற்றத்தைச் செய்ய இயலும் என்று நிரூபித்துள்ள கேஜரிவாலுக்கு வந்தனம். இவர்களின் தாக்கமும், வீச்சும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் - எனினும், இந்த வெற்றியை எழுந்து நின்று இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்.

சாதாரண மனிதர்களான நாமெல்லாம், நமெக்கன்ன‌ என்று ஒதுங்காமல், பொதுப் பிரச்சினைகளில் நம்மாலானவரை தலையிட வேண்டும். தட்டிக் கேட்க வேண்டும். அநீதியை எதிர்க்க வேண்டும். ஊர்கூடித் தேர் இழுத்தால்தான் ஊழலற்ற பாரதம் தோன்றும். ஒரு நறுமலர்ச்சிக்கு பாரதம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்றே நாம் நம்புகிறோம்.

தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தர்மம் மறுபடி வெல்லும்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org