பருத்திச் செடியும் பாரதக் கொடியும் - பாமயன்


சென்ற இதழ்த் தொடர்ச்சி

மிகப் பெரும் அளவில் பருத்தியில் பூச்சிக்கொல்லிகள் பயன்பட்டதால் மண்வளம் இழந்ததோடு, இடுபொருள் செலவும் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதனைக் காரணமாக வைத்து மிக புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை அறிமுகம் செய்தனர். விதைகளைச் சேமித்து மறுவிதைப்புச் செய்து கொள்ளும் உழவனின் உரிமையை மறுப்பதும், இந்திய விதைச் சந்தையை முழுக்கக் கைப்பற்றுவதும் மரபீனி மாற்ற விதைத் தொழில்நுட்ப அறிமுகத்தின் நோக்கமாகும். உலகிலுள்ள பெரும் விதைச் சந்தைகளில் ஒன்று இந்திய விதைச் சந்தை. 2000-ம் ஆண்டில் நம் நாட்டின் விதைச் சந்தை மதிப்பு ரூபாய் 2000 கோடிகளாகும். கி.பி. 2007ல் அது மூன்று மடங்காக மாறியுள்ளது.

ஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தது. உணவுப் பாதுகாப்பு அங்கு நடைபெறும் வேளாண்மையைப் பொறுத்தது. வேளாண்மைக்கான இறையாண்மையோ விதைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே விதைகள் மிகவும் இன்றியமையாதவை. இந்த விதைத் துறையில் நுழைந்துள்ள பெரும் நிறுவனம் மான்சாண்டோ. அது அறிமுகப்படுத்தியுள்ள பருத்திவிதை-பாசில்லஸ் துரிஞ்சியஸ் (Bt)

இந்த பாசில்லஸ் விதை 1996- ஆம் ஆண்டு சந்தைக்கு வந்தது. பாசில்லஸ் துருஞ்சியஸ் என்ற நுண்ணுயிரி இயற்கை வழி வேளாண்மையில் உழவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பூச்சிக்கொல்லி, தீமை செய்யும் புழுக்களின் உணவுப் பாதையில் இந்த நுண்ணுயிர் சென்று நச்சுத் தன்மையை உருவாக்கும். படிகம் போன்ற நஞ்சு தோன்றி புழுவினைக்கொன்றுவிடும். இந்த முறையைக் கண்டறிந்த பன்னாட்டு நிறுவனங்களும், அதன் ஆராய்ச்சியாளர்களும், பாசில்லஸ் நுண்ணுயிரின் மரபீனியில் இருந்து படிக ஏசி (நீக்ஷீ.கிசி) என்ற நஞ்சு உருவாக்கும் தன்மையை எடுத்து, பருத்திவிதையில் பொருத்தியுள்ளனர். இதற்கு பால்கார்டு விதை என்ற பெயரும் கொடுத்துள்ளனர்.

பருத்தியில்தான் அதிகம் பூச்சிகொல்லி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 1.7 கோடி உழவர்கள் பருத்திச் சாகுபடி செய்கின்றனர். இவர்கள் ஆளுக்கு இரண்டரை ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ளவர்கள். இந்தியாவில் மரபீனி மாற்ற விதைகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டு விட்டது. ஆனால் அதற்கு முன்பே திருட்டுத்தனமாக இந்த விதை சந்தைக்குள் புகுந்துவிட்டது என்பது வேறு கதை. இந்த விதையை அறிமுகம் செய்யும் போது, 'பூச்சி கொல்லி, களைக்கொல்லி எதுவும் தேவையில்லை. விளைச்சல் பெருமளவு கிடைக்கும்' என்று கூறினார்கள். ஆனால் அது உண்மையன்று. எல்லாப் பூச்சிகளையும் இந்த விதையில் உள்ள நஞ்சால் கொல்ல முடியாது. புகையிலைப்புழுக்களை மட்டும் படிக ஏசி கட்டுப்படுத்தும். இந்தியாவில் பெரிதும் காணப்படுபவை அமெரிக்கன் காய்ப்புழு வகையினம். இதற்கு படிக 1 ஏசி (நீக்ஷீஹ் 1 கிசி) என்ற நஞ்சு தேவைப்படும். அத்துடன் பூச்சிகள் இந்த நஞ்சினை எதிர்த்து வாழும் எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொள்கின்றன. சீனாவில் 1999ம் ஆண்டு பாசில்லஸ் நஞ்சுக்கு 7 முதல் 10 மடங்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பூச்சிகளைக் கண்டறிந்து கூறினர். தென்கிழக்கு அமெரிக்காவில் உருளைப்புழுக்கள் எதிர்ப்பாற்றல் கொண்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. இதை அமெரிக்க மேம்பாட்டு முகவாண்மை (ஹிஷிஞிகி) என்ற நிறுவனமே கூறியது.

விளைச்சலை எடுத்துக்கொண்டால் 1980க்குப் பிறகு அமெரிக்காவிலேயே (மரபீனிப் பருத்திக்குப் பின்பும்) பருத்தி விளைச்சல் குறைந்துவிட்டது. பன்மயப்பட்ட பருத்தியினங்கள் மறைந்து ஒரே வகைப் பருத்தியின் பரவலால் ஏற்பட்ட சீர்கேடு என்று இதைக் கூறுகின்றனர்.

இந்தியாவில், மத்தியப்பிரதேசத்தில், கார்கோன் மாவட்டத்தில் பாசில்லஸ் பருத்திச்செடி விளைச்சலில் 100% தோல்வி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சேலம் பகுதியிலும் இதே கதைதான். இழப்பீடு கேட்டு உழவர்கள் போராடினர். ஆந்திராவில் அரசே இழப்பீடு கேட்டு போராடியது. சீனாவில் கடுமையாகத் தோல்வி கண்டுள்ளது. ஆனால் இயற்கையின் சாதகமான வாய்ப்புகளால் சின்ன சின்ன வெற்றிகளைக் காட்டி மிகப்பெரிய விளம்பரங்கள் மூலம் விற்பனையைப் பெருக்கி வருகின்றனர். இதற்கு பல்கலைகழகங்கும் உடந்தை என்பதுதான் வேதனையானது. இந்திய,

நாட்டுப்பருத்தியினங்கள் வறட்சியின்போது 20% இழப்பை ஏற்படுத்தினால் பாசில்லஸ் பருத்தி 100% இழப்பை ஏற்படுத்துகிறது என்கின்றனர். மரபீனி மாற்ற விதைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள மரபீனிப் பொறியியல் ஒப்புறுதிக் குழுவின் (நிமீஸீமீtவீநீ மீஸீரீவீஸீமீமீக்ஷீவீஸீரீ ணீஜீஜீக்ஷீஷீஸ்ணீறீ நீஷீனீனீவீttமீமீ) செயல்பாடுகள் குறித்து பல்வேறு மாற்றுக் கருத்துகள் தோன்றியுள்ளன. பாசில்லஸ் பருததியை உள்நுழைய விட்டதற்காக இவ்வமைப்பின் மீது கடும் குற்றச் சாட்டுகள் வைக்கப்படுகின்றன. ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே மரபீனி மாற்ற விதைகளை 'நவபாரத்' என்ற வணிக நிறுவனம் விற்று வந்தது. இது குறித்து மெத்தனமாக இருந்த அரசு, மிகக் காலதாமதமாக மே மாதம் நடவடிக்கை எடுத்தது. இதற்காகச் சூழலியலாளர்கள் பெரும் 'போர்' நடத்தவேண்டியதாயிற்று. ஆயினும் வேளாண்மையில் பெருத்த சேதாரம் ஏற்பட்டுவிட்டது.

இதேபோல் பிற பருத்திகளுடன் பாசில்லஸ் பருத்தி 'கலந்து'விட்டது. இரண்டாம், மூன்றாம் தலைமுறைச் செடிகளை, சட்டத்திற்குப் புறம்பாகவே உருவாக்கிவிட்டனர். இந்த 'கள்ளவிதைகள்' குஜராத், ஹரியானா, பஞ்சாப் போன்ற (தமிழ்நாட்டிற்கும் கூட வந்திருக்கலாம்) இடங்களில் விற்பனைக்கு வந்து விட்டன. குஜராதிலுள்ள ஒரு காதி நிறுவனம் உருவாக்கிய பருத்தியாடை, பாசில்லஸ் மரபீனி மாற்றப் பஞ்சில் நெய்யப்பட்டது. இதை அணிந்த பலருக்கு உடல் அரிப்பும், தடிப்பும் ஏற்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

பாசில்லஸ் பருத்தி சாகுபடி செய்த இடத்தில் 20% பரப்பில் வழக்கமான பருத்தியைச் சாகுபடி செய்யவேண்டும்! இது நிறுவனத்தின் பரிந்துரை. ஏனெனில் பாசில்லஸ் பருத்தியில் இருந்து வரும் நஞ்சுக்குத் தப்பி வாழும் பூச்சிகள் வயலில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் பூச்சிகள் எதிர்ப்புத் திறனற்ற மற்ற பூச்சிகளோடு இணைந்து எதிர்ப்புத்திறன் இல்லாத பூச்சிகள் தோன்றும். அவ்வாறு சாதாரணப் பருத்தி இல்லை என்றால் எல்லாப் பூச்சிகளுமே எதிர்ப்புத்திறன் பெற்றுவிடும். எனவே இந்த 20% ஒதுக்கீடு வேண்டும். இதற்கு 'புகலிடப்பகுதி' என்றும் பெயர் வைத்துள்ளனர்! இது ஒரு வேளை அமெரிக்கா போன்ற ஆயிரம் ஏக்கர் பண்ணைகளுக்குப் பொருந்தலாம். இந்தியாவில் 2 ஏக்கர் வைத்துள்ள உழவர் எவ்வாறு ஒதுக்கீடு செய்ய முடியும்?

பொதுவாக இந்திய வேளாண்மையில் விதையின் பங்கு மிக இன்றியமையாதது. மரபு வழியாக விதையை அடிப்படையாகக் கொண்ட பல பழமொழிகள் நம் நாட்டில் புழங்கி வருகின்றன. பண்டை நாளில் இருந்தே விதையின் பரிமாற்றம் பண்ட மாற்றாகவே இருந்து வந்தது. பசுமைப் புரட்சிக்குப் பின்பே விதைப் பொருளியல் பண மதிப்பைப் பெற்று வணிகத் துறையில் குறிப்பான இடத்தைப் பிடிக்கத் தொடங்கியது. வெளிநாட்டுக் கடன்களாலும், பிற ஒதுக்கீடுகளாலும் பசுமைப் புரட்சியின் பெருமையும் வீரிய விதைகளின் பரப்புதலும் நடைபெற்றன. அதனால் வந்த துயரோ மிகப் பெரியதாகிவிட்டது. இது ஒரு புறம் இருக்க, கடந்த 1991ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவின் அடிப்படையான வேளாண் துறையைக் குறிவைத்துக் கைப்பற்றும் நோக்கோடு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் முனைப்பாகப் படையெடுத்துள்ளன.இனிமேல் வருங்காலங்களில் உழவர்கள் விதைகளை தமக்கென வைத்துக்கொள்ள முடியாதவாறும், அரசுகளே தமது கட்டுப்பாட்டில் விதை இருப்பைக் கொண்டுவர இயலாதவாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு உலக வணிக நிறுவனம் அதன் துணையான வணிகம் சார் நுண்மதிச் சொத்துரிமை ஒப்பந்தம் ஆகியவை உதவி புரிகின்றன. வீரிய விதைகள் உட்புகுந்தபோது நமது உழவர்களின் விதை சேமிக்கும் பழக்கம் மறைந்தது. இப்போது வந்துள்ள மரபீனி நுட்பவியல் விதைகள் வழியாக உழவர்களிடமிருந்து விதை சேமிக்கும் உரிமையும் பறிபோகவுள்ளது.

இந்திய விதைச் சந்தை மட்டுமின்றி மூன்றாம் உலக நாடுகளின் விதைச் சந்தை முழுவதையும் கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஆனால் இந்தியச் சந்தைதான் மிகப் பெரியது. எனவே இதில் அவர்களுக்கு முகாமையான குறி உள்ளது. சீனாவின் சந்தையைவிட இந்தியச் சந்தைதான் அவர்களுக்கு ஏதுவாக உள்ளது. ஏனெனில் சீனச் சந்தையில் தடுப்பும் சமன்பாடும் (check and Balance) உள்ளது.

இத்துடன் பன்னாட்டு நிறுவனங்கள் தமது பெரும் ஆராய்ச்சித் திட்டங்கள் வழியாக பெறப்பட்டுள்ள நுட்பவியல் அறிவையும், காப்புரிமையும் (patent right) வைத்துக்கொண்டு, உலகை ஆட்டிப் படைக்கின்றன. உயிரி நுட்பவியல் துறையில் விதைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் வியப்புக்குரியன. மரபீனிகளை (ரீமீஸீமீs) மாற்றி விதைகளின் அடிப்படைக் குணநலன்களையே மாற்றிவிடமுடியும். மான்சாண்டோ நிறுவனம் பருத்தி, சோயா மொச்சை போன்ற பல பயிர்களுக்கு காப்பு உரிமை பெற்றுவிட்டது. இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய விதை நிறுவனமாகும். இதன் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் நில நாடுகளின் வரவு-செலவுத் திட்டத்தைவிடக் கூடுதலாகும்.

மேலும், மான்சாண்டோ நிறுவனம் தனது மரபீனி மாற்ற உயிரியின் (Generally Modified Organism) பயனாக உருவாகும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும்போது, அதில் மரபீனி மாற்றப் பொருள் என்று பொருள்படும் குறிப்பை அச்சிட மறுத்து வருகிறது. எனவே இதனாலும், பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனால் மூன்றாம் உலக நாடுகளை நோக்கி இந்நிறுவனங்கள் ஓடி வருகின்றன. இத்தகைய விதைகளின் படையெடுப்பினால் இந்தியா போன்ற உயிரிப்பன்மயம் (Biodiversity) மிக்க நாட்டில் உள்ள ஏராளமான மரபு விதையினங்கள் மறைந்து போக வாய்ப்புள்ளது.

அடுத்தாக, நச்சுத்தன்மை கொண்ட களைக் கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நிலமும் பாழாகின்றது. புதிய களைச் செடிகள் எதிர்ப்புத் திறனுடன் தோன்றுகின்றன. கூடவே மகரந்தச் சேர்க்கையின்போது, மரபீனி மாற்றச் செடியின் மகரந்தத்தூள் பிற செடியுடன் சேரும் நிலையில் வேறு புதிய சிக்கலான ‘களைகள்’ தோன்றலாம். இதற்கும் மேலாக, உழவர்களின் தீர்மானிக்கும் உரிமையும், சாகுபடி உரிமையும் பறிபோய், பன்னாட்டு நிறுவனங்களின் பண்ணையடிமைகள் போல் உழவர்கள் மாறும் சூழல் உள்ளது. ஒரு நாட்டின் இறையாண்மையும், அதன் நிலைப்பாடும் அந்நாட்டின் உணவு உறுதிப்பாட்டில்தான் உள்ளது. உணவுப் பாதுகாப்பிற்குப் பங்கம் வருமேயானால், எந்த நாடும் தனது தன்னுரிமையைத் தொடர்ந்து காப்பாற்ற முடியாது. இப்போது படையெடுத்துள்ள, பி.டி பருத்தியும் பிற மரபீனி மாற்ற விதைகளும் நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கலாம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org