உழவர் விடுதலைப் பேரணி - அனந்து


ஏப்ரல் 1 - 3, 2016, ஹைதரபாத்

[இந்திய வேளாண்மையில் விதை இறையாண்மை மற்றும் விதைப்பன்மைய‌த்தை மீட்டுருவாக்கல் பற்றிய கலந்துரையாடல் குறிப்புகள் ]

முக்கிய கேள்விகள்

உழவர்களின் விதைகளுக்கு நாம் எவ்வாறு களங்களை உருவாக்குவது ? அவர்களுடைய விதைப் பாதுகாப்பு மரபுகளை எப்படி மீட்டுருவாக்குவது ? உழவர்கள் அவர்களே தங்கள் விதைகளை மேலாண்மை செய்து கொள்ளும் விதைக் கட்டுமானங்களை எவ்வாறு உருவாக்குவது? விதை வாணிபம் மற்றும் வேளாண் தொழிற்கள் உழவர்களின் நன்மைகளை பாதுகாக்கும்படி எப்படி ஒழுங்காற்றுவது? உயிரித்திருட்டு மற்றும் சந்தை ஏகாதிபத்தியங்கள், இவற்றை எவ்வாறு தடுப்பது? அறிவுக் காப்பீட்டிலிருந்து, அறிவு உரிமையிலிருந்து விதைகளை எவ்வாறு பாதுகாப்பது? இந்திய வேளாண்மையில் விதைப் பன்மைய‌த்தை எவ்வாறு மீட்டுருவாக்குவது? இவையே நம்முன் உள்ள முக்கிய கேள்விகள்

பிண்னணி

விதை என்பது வேளாண்மையின் மிக முக்கியமான இடுபொருள். பல நூற்றாண்டுக் காலங்களாக‌ விதை உற்பத்திக்கும் சாதாரண பயிர் உற்பத்திக்கும் எந்த வித வேற்றுமையும் இல்லாது இருந்தது. ஆனால் தற்போது நடந்துவரும் கொள்கை,ச‌ட்ட, தொழில்நுட்ப மற்றும் சந்தை பொம்பலாட்டங்கலால் மாறும் காலங்களில் உழவர்கள் முதலில் அரசு கொடுக்கும் விதைகளையும் அதன் பின்னர் தனியார் விதைகளையும் சார்ந்தே உழவு செய்யப் பழகிவிடார்கள். பாரம்பரிய விதை உற்பத்தி தேர்வு மற்றும் விதைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த உழவர்கள் தங்களின் திறமைகளையும், அறிவையும், விதைப் பாதுகாக்கும் பழக்கத்தையும் இழந்துவிட்டார்கள். மாநில வேளாண் அமைச்சு நிர்ணயிக்கும் விதை உற்பத்தி இலக்குகளாலும், ” விதை மாற்றும் வேகம் ” என்ற‌ குறியீட்டாலும், அவற்றில் அரசு செய்யும் முதலீடுகளாலும் உழவர்கள் தங்களின் விதைகளை மீண்டும் உபயோகிக்க இயலாத நிலைமை இருக்கிறது. வீரிய‌ ஒட்டு ரகங்கள் வேளாண்மையில் ஒரு புதிய சகாப்த‌த்தை உருவாக்கின. இதனால் உழவர்கள் வெளி விதை ஊற்றுக்களைத் தொடர்ந்து சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. இவை பாதுகாக்கவோ மீண்டும் பயன்படுத்தவோ தகுதியற்றவைகளாக உருவாக்கப்படுகின்றன.ஏனெனில் ஒட்டு ரகங்களின் விதைகள் மறுபடியும் பயன்படுத்தினால் விளைச்சல் குறைக்கும். இதனால், ஒவ்வொரு விளைச்சலுக்கும், ஒவ்வொரு போகத்திற்கும் உழவன் விதைச் சந்தையை சார்ந்திருக்கிறான். ஆனால் இவ்விதைகளோ அவை கூறும் விளைச்சலை அளிப்பதற்கு மிக விலை உயர்ந்த, அதிகமான, வெளி இடுபொருட்களைச் சார்ந்தே இருக்கின்றன. விதை நிறுவனங்கள் இவ்வொட்டு ரகங்களையே உருவாக்கியும் விற்பனை செய்யவும் விருப்புகின்றன. ஏனெனில் அவற்றிற்கு தொடர்ந்து ஒரு சந்தை இருக்குமாறு பாதுகாத்துக் கொள்கின்றன. இதில் மரபினி மாற்ற விதைகள் வந்த பிறகு இந்நிலமை இன்னும் மோசமாகிவிட்டது. இத்தொழில் நுட்பத்தின் மீது மிகச்சில பன்னாட்டு நிநுவனங்கள் ஆளுமை செய்வதால் விதை உலகில் ஒரு விதமான சந்தை ஏகாதிபத்திய‌ (monopolies) ஏற்ற இறக்கங்கள் உருவாகிவிட்டன.

இந்நிலமை பல‌ நூற்றாண்டுகளாக இயற்கையாலும், உழவர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட, பல்வேறு விளையும் சூழ்நிலைக்கும் பயன்பாட்டிற்கும் உகந்த பாரம்பரிய ரகங்களை, இந்தியாவின் மிக வளமையான உயிரிப் பன்மைய‌த்தை முற்றிலும் அழிக்கும் ஒரு நிலைமையில் கொண்டு போய் விடுகிறது. ஆயிரக்கண‌க்கான நெல் ரகங்கள், நூற்றுக்கண‌க்கான பயறு மற்றும் பருப்பு வகைகள் உடல் நலத்திற்கும், சத்திற்கும் பல‌ விதமான தேவைகளை அளிக்க கூடிய ரகங்கள், பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான வேளாண்மைக்கு உகந்த ரகங்கள் எல்லாம் அழிந்து இந்தியா எங்கும் உயர் விளைச்சலுக்கென்றே ஒரினப் ப‌யிராக விளைவிக்கப்படும் மிக சில ரகங்களில் ஒட்டு ரகங்களுக்கே வழி வகுக்கும். இதனால் இந்திய உழவர்கள் மற்றும் நுகர்வோர்கள் விதை நிறுவனங்களையே நம்பி இருக்க வேண்டிய‌ நிரந்தரமான ஒரு சார்பை உருவாக்கி, அவர்களுடைய உணவுத் தெரிவுகளையும் (choices) குறைத்துவிட்டது. இது உழவர்களின் வருவாய்ப் பாதுகாப்பு, உணவு மற்றும் சத்துப் பாதுகாப்பு, உழவர்கள் என்ன பயிர் விளைவிக்கலாம், என்னும் முடிவெடுக்கும் திறமை போன்ற அனைத்தையும் நேரடியாக பாதிக்கின்றது.

விதை இறையாண்மை

விதை என்ற கட்டத்தில் இறையாண்மை பற்றி சிந்தித்தோம் ஆனால் அதன் நேரடியான சேவை குறு விவசாயிகளும் விதை சேமிப்போரும் தம்முள் விதைகளை பரிமாற்றம் செய்துகொள்ளவும் அவர்களுடைய விளையும் சூழலுக்கு ஏற்ற விதை எது என்று அவர்களே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்களாகவும், தாங்கள் தங்கள் அண்மைச் சூழலை தெளிவாகத் தெரிந்ததனால், தங்களின் தேவைகளை உணர்ந்ததனால், தாங்களே என்ன விளைக்க வேண்டும் என்ன நட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கக் கூடியவர்களாகவும் இருத்தல் அவசியம்.

இச்சூழலுக்கு தேவையான கூறுகள் என்று பார்த்தால்


1.குறிப்பிட்ட நேரத்திற்கு விதைகள் கிடைப்பது.
2.விதைப் பன்மையம் (ஒரே பயிருக்குப் பல்வகைப் பட்ட ரகங்கள்; ஒரே பட்டத்திற்குப் பல்வகைப் பயிர்கள்)
3.நல்ல தரமான விதை
4.அண்மைச் சூழலுக்கு ஏற்றது
5.வாங்கக் கூடிய, கட்டுபடியாகும் விலையில் இருப்பது; குறு உழவர்களால் வாங்கும் விலையில் விதைகள் இருப்பது.

லாப நோக்கற்ற விதைகள்; மேலும் விதையை நட்டால் அதன் வெற்றிக்கும், தோல்விக்கும் விதை நிறுவனங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவும் ஒரு தேவை. மேலும் விதை என்பது பொதுச் சொத்தாக இருக்க வேண்டும். சிறு சமுதாயங்களும், கிராமங்களும் தேவையானவைகளை அவர்களே பார்த்துக்கொள்ளும்படி இருக்க வேண்டும். இவை தவிர விதைகளைப் பற்றிய பாரம்பரிய அறிவும், அவை உற்பத்தி மற்றும் பாதுகாக்கும் மரபுகளும், பழக்கங்களும் மதிக்கப்பட வேண்டும். கள நிதர்சனங்களை அறியாத விஞ்ஞானிகள் பரிந்துரைப்பது போல், ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரே செயல்வழி கவைக்குதவாது. விதைப் பாதுகாப்பில் உழவர்கள் விதைகளை வளர்ப்பது, தேர்ந்தெடுப்பது, பாதுகாப்பு கிடங்குகளில் இருப்பு வைப்பது, விதைகளை பாரம்பரிய முறையில் பூச்சி அண்டாது பாதுகாக்கும் முறைகள் போன்ற அனைத்தும் மதிக்கப்பட வேண்டும். மேலும் வெறும் விளைச்சல் மட்டுமல்லாமல் ஒவ்வொரு குறிப்பிட்ட விதையின் பல்வேறு தன்மையும், புரிந்தும், மதித்தும், நிர்வகித்தும் அவை நிலை நிறுத்தியும் செய்ய வேண்டும். விதைகளைப் பாதுகாக்கும் பாரம்பரியத் தொழில்நுட்பங்களை அறிந்தவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, தக்க அங்கீகாரமும், ஆதரவும் அளிக்கப் பட வேண்டும்

உழவர்கள் தாங்களே விதைகளை தேர்ந்தெடுப்பதும், பாதுகாப்பதும் செய்ய வேண்டுமானால் அதற்கு முக்கியமான தேவை விதைகளின் புதிய தொழில்நுட்பம் அல்லது புதுமையைக் கண்டறிவது என்பது கள‌த்தில் காலுன்றி நிற்க வேண்டும். கள நிதர்சனங்களோடு ஒத்துப் போக வேண்டும். இதற்காக விதை பாதுகாப்போரும், புது விதை உருவாக்கும் உழவர்களும் அங்கிகரிக்கப்பட்ட மற்றும் அங்கிகாரமற்ற அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விதை மற்றும் பயிர்ப் பொருட்களுக்குத் தடையற்ற, தேவைப்படும் அளவு, அனுமதி பெறவேண்டும். விதை இறையாண்மைக்கு முனையும் அனைவரும், “உழவர்கள் வெறும் புதுத் தொழில்நுட்பங்களைப் பெறுவோராக மட்டும் இருத்தல் கூடாது. புதிய தொழில்நுட்பங்களையும், புதிய ரகங்களையும் உருவாக்குவதற்கு இணைந்து செயல்படுபவராக இருக்க வேண்டும்” என்பதை வலியுறுத்துகின்றனர். அறிவுச் சொத்து என்பது விதைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. அறிவுச் சொத்து சட்டங்கள் விதைகளைத் தனியார் மயமாக்குகின்றன. ஏகாதிபத்தியத்தை உருவாக்கிப் புதுக் கண்டுபிடிப்புகளுக்குத் தடைகளை உருவாக்குகின்றன.

இவ் இறையாண்மையைச் செயலாக்க‌ மிக முக்கியமான தேவை என்னவென்றால் இறையாண்மையை செயல்படுத்தும் தங்கு தடையற்ற சுதந்திரம் இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அரசின் எவ்வித சட்டங்களோ, கொள்கைகளோ, திட்டங்களோ உழவன் விதை உற்பத்திக்கும், வித சேமிப்பிற்கும் எவ்விதத் தடையும் கொண்டுவருவதாக இருக்கக்கூடாது. அரசும் தனியாரும் இத்தகைய செயல்களிலிருந்து அறவே தடைசெய்ய படவேண்டும். விதை விவகாரத்தில் அவர்கள் ஒதுங்கியே இருக்க வேண்டும்.

நவீன நாடுகள் இறையாண்மை என்னும் கொள்கையினாலேயே உருவாக்கப் பட்டிருக்கின்றன. இறையாண்மை இல்லையேல், தன்னாட்சி இல்லையேல் அங்கு நாடே இல்லை. இணைந்த தங்கள் கைகளில் இறையாண்மை இல்லையேல் எவ்வித மக்களும் ஒரு நாட்டை உருவாக்கமுடியாது. அதேபோல் தங்களுடைய விதை சமுகங்கள் இறையாண்மை இல்லது இருக்க இயலாது.

சர்வதேச சட்டங்கள்

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மைக் குழுமம் (food and agricultural organization) முதன் முதலாக article 9-ல் உழவர்களின் உரிமைகளைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. அதில் பயிர் ஒப்பந்தம் என்ற ஒன்றை ஆதரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிம ஆயம் உழவர்களுக்கான உரிமைகளை குறித்து ஒரு அறிவிக்கை ஒன்றை ஆலோசித்து வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு அங்கம் விதைகளைக் காப்பதாகும். விதைகளை சேமிக்கும் உரிமை அதில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. இது இவ்வாறு இருக்க நிலைத்தன்மை கொண்ட மேம்படுத்தும் நோக்கங்கள் sustainable development goals என்ற நோக்கம் ஒவ்வொரு நாட்டையும் எல்லாத் துறைக‌ளிலும் நிலைத்த நீடித்த தன்மையை நோக்கி நகர்த்துகின்றன.

எங்கள் கோரிக்கைகள்

இந்திய அரசும் அதனுடன் பிற வளரும் நாடுகளும் இணைந்து FAO விடம் உழவர்களின் உரிமைகளைக் காக்கும் சட்டங்களையும், கொள்கைகளையும், விதை இறையாண்மையை நோக்கிய திடமான அடிகளையும் எடுத்து வைக்கும்படி கூற வேண்டும். தற்போது உள்ள மேலும் வரக்கூடிய அனைத்து விதைத் தொடர்பான கொள்கைகள் அனைத்தும் நிலைத்தன்மை கொண்ட, நீடித்த வேளாண்மையைக் கருத்தில் கொண்டே எடைபோடப்படவோ, கருதப்படவோ வேண்டும்.

தற்போது உள்ள அனைத்து விதை உருவாக்கும் கட்டுமானங்களும், ரசாயனப் பயன்பாட்ட்டுச் சூழலிலேயே உருவாகின்றன. இயற்கை வேளாண்மையில் உருவாக்கப் படுவதில்லை. மேலும் விதைகளைப் பாதுகாக்கப் பயன்படும் நியோநிக்கோடினாய்டு போன்ற ரசாயனப் பொருட்கள் உயிரிப்பன்மைய‌த்தைக் கடுமையாக அழிப்பதைத் தற்காலத்தில் காண்கிறோம். இதன் போன்ற நிலைமை முற்றிலும் மாற்றி அமையும்படி திட்டங்களையும் ப‌ணிகளையும் செயலாகா வேண்டும்.

ச‌ர்வதேச சட்டங்களுக்கோ, வாணிப ஒப்பந்தக்களுக்கோ உட்பட வேண்டிய நிர்ப்பந்தங்கள், அதன் விளைவான உள்நாட்டுச் சட்ட வரைவுகள் எல்லாமே விதை இறையாண்மையை தகர்க்காதவாறு, அதற்கு எதிராக இல்லாதவாறு இருக்க வேண்டும்.

அரசியல் சாசனத்தில் உள்ள கட்டுமானம்

இந்திய அரசியல் சாசனப் படி வேளாண்மை என்பது மாநிலங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது. 1992-ல் உருவாக்கப்பட்ட அரசியல் சாசன திருத்தமானது வேளாண்மையிலும் அண்மை சமூக வளங்களிலும் செயலாக்கம் மற்றும் அதிகாரத்தைப் பஞ்சாயத்துகளுக்கு அளிக்கிறது. இதில் நாங்கள் கேட்பவை விதைகளுக்கான முடிவெடுக்கும் அதிகாரம் மையபடுத்தப்பட கூடாது. ஏற்கனவே உள்ள அண்மைப் பாதுகாப்பு அமைப்புகள், பற்பல ஒழுங்காற்றல்களுக்கு உட்பட்ட இவ்வமைப்புகள் , விதைப் பன்மையத்தை மீட்டுருவாக்குவ‌தில் பயன்படுத்தபட வேண்டும்.

தேவையான முதலீடுகளுடன் பெண் விவசாயிகளால் மேலாண்மை செய்யப்படும் சமூக விதைக் களஞ்சியங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இருக்கும் கிராமிய விதைத் திட்டப்பணிகள் சமூக அளவில் விதைத் தற்சார்பை உருவாக்குமாறு மாற்றியமைக்க வேண்டும். அண்மைச் சூழலுக்கு ஏற்றவாறு பொருத்தமான பன்மையம் நிறைந்த விதைகள் இவற்றுள் உட்படுத்தப்பட வேண்டும்.

விதை பற்றிய தேசிய சட்டம் மற்றும் கொள்கைகள்

இந்தியாவிலே முன்னேற்றத்தை நோக்கிய சட்ட வரைவுகள் என்று கூறப்படும் 2 சட்டங்கள் உள்ளன. - பயிர் வகைகளின் பாதுகாப்பு சட்டமசோதா - உழவர்களின் உரிமை மசோதா

இவை இரண்டுமே உலக வர்த்த அமைப்பின் எனப்படும் ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட கட்டாய‌ங்களை நிறைவு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரண்டுமே IPR எனும் அறிவுச் சொத்துரிமை பற்றிய‌ கட்டுமானத்திற்குள்ளேயே இயங்குகின்றன‌. மேலும் இச்சட்டங்கள் விதை உற்பத்தியாளர்களின் வணிக‌ உரிமைகளைப் பாதுகாக்கவே ஏற்படுத்தப்பட்டுள்ளன‌. உழவர்களின் உரிமைகள் இரண்டாம் பட்சமாகவே அதிலிருந்து வெளிப்படுகின்றன. PPV மற்றும் FR எனப்படும் இவ்விரண்டு சட்டங்களுக்கும் முன்னரே உழவர்களின் விதை சுதந்திரம் நடைமுறையில் இருந்திருக்கிறது. இச்சட்டத்தை அமல்படுத்தும் அனுபவம் வருங்காலதிற்கான நிலைப்பாடுகளுக்கும், செயலுத்திகளுக்குமாய்த் தொடர்ந்து அனுமானிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இச்சட்டம் விதைப் பன்மையத்தையோ அதன் பாதுகாப்பையோ, அல்லது மீட்டுருவாக்கலையோ வளர்க்கவோ, மேலும் உழவர்களின் உரிமைகளையோ பாதுகாக்கவில்லை. மேலும் அறிவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்குள் உழவர்களின் உரிமை பாதுகாப்பு என்னும் மசோதா என்ன ஆபத்துகளை, இடையூறுகளை உருவக்குகின்றன? சில‌ முக்கிய முரண்பாடுகள் இங்கே தென்படுகின்றன. சிலர் மேற்பட்ட சட்டங்களுக்கு “உழவர்களின் ரகங்கள் ” என்பவை பதிவு செய்ய‌ப்பட வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் வேறு சிலரோ இந்த அறிவுச் சொத்து கட்டுமானங்களுக்கு வெளியே உழவர்களின் பயன்கள் இருக்க வேண்டும் என்கின்றன. இச்சட்ட மசோதாவானது ஒரு சர்ச்சைக்குரியதாகவும், பயிர் பன்மையத்தையும், விதை பாதுகாப்பையும் காக்கப் பணிசெய்வோரைப் பிரித்தும் இருக்கின்றது.

இது குறித்த எங்கள் கோரிக்கைகள்

உழவர்கள் அவர்கள் உருவாக்கியோ அல்லது சேமித்த விதைகளையோ அரசிடம் பதிவு செய்ய வேண்டிய கட்டாய‌ம் இருக்கக் கூடாது.

அவ்வாறான‌ பதிவு செய்தல் அது உழவர்களுக்குள் பூசல் மற்றும் சட்டச் சண்டைகளை ஏற்படுத்தக்கூடாது அல்லது ஒரு குறிப்பிட்ட பதிவு செய்த உழவரோ/ உழவுக் குழுமமோ அவ்விதைகளைச் சொந்தம் கொன்டாடல் கூடாது.

உழவர்களின் ரகங்கள் பாதுகாப்பதற்கு சமமான அளவு கவனிப்பும், நிதியும் அரசால் அளிக்கப்பட வேண்டும். உழவர்களின் ரகங்கள் அரசு அளிக்கும் விதைகளில் சேர்க்கப்பட வேண்டும். உழவர் உற்பத்தி செய்த விதைகள் அவர்கள் உருவாக்கிய நவீனங்கள் யாவும் அறிவுச் சொத்து திட்டத்திற்கு வெளிப்பட்டுப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். வெறுமே பயிர் ரகத்திற்கான சான்றிதழ் அளிப்பதோ அல்லது இத்தகைய புவியியல் சூழல்களுக்கு இது பொருந்தும் எனும் சான்றிதழ் அளிப்பதோ மட்டுமே கூடாது.

“விதை என்பது பொதுசொத்து” என்ற முனைவு பொது வாழ்விலும், அரசின் இயந்திரங்க்களுக்குள்ளும் கொண்டுவரப்பட்டு, எங்கெல்லாம் விதை பாதுகாப்பாளர்கள் கூட்டணி அதை விரும்புகிறார்களோ, அங்கெல்லாம் அதற்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும்.

PPVFR சட்டத்தின் , பிரிவு 8, உட்பிரிவு 2Cல் குறிப்பிட்டுள்ளபடி, உழவர்களின் பயன்கள் ஆவணப்படுத்தவும், தேவையான அனைத்து முனைப்புகளையும் செய்யவேண்டும்.

PPVFR சட்டம் துணைப்பிரிவு 29-ல் “இச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் கடந்து, மனித, மிருக மற்றும் தாவரங்களின், உயிர் மற்றும் உடல் நலத்திற்கு எந்த விதமான கேடு விளைவித்தாலும் அத்தகைய ர‌கங்களை சந்தைப் படுத்தலும், வாணிபச் சுரண்டல்களும் தடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளதைச் செயல்படுத்த வேண்டும்.

உயிரிப் பன்மையம் என்பது மாறும் சூழ்நிலைகளுக்கும், உழவர்களின் கவனமான தேர்வுக்கும் ஏற்ப தன்னைத் தானே மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியது. எனவே , உழவர்களின் ரகங்கள் விதை நிறுவனங்களுக்கு, ஏகாதிபத்திய உரிமை அளிக்கப்படும், அதே அளவைக் கொண்டு அளக்கலாகாது. தற்போது PPVFR சட்டத்திலுள்ள உட்பிரிவுகளை மாற்றியமைக்க வேண்டும், ஏனெனில் உழவர்களுக்குச் சந்தை ஏகாதிபத்தியம் தேவையில்லை. பகிர்ந்து அனுபவிக்கப்படும் ரகங்கள் பல்வேறு மாநில மற்றும் மண்டல உழவுச் சமுகங்களுக்கு நன்மை பயக்குமாறு நாட்டில் பரவலாக உள்ள ரகங்களை அறிவுச் சொத்து உரிமை பதிவு முறையிலிருந்து வெளியாகக் கொள்ளவும், அதில் ஈடுபடாமலே அனுமதியளிக்கவும், தேசிய சொத்தாக பாதுகாக்கவும் பட‌ வேண்டும்.

இந்த உழவர்களின் ரகங்கள் தான் நம்நாட்டிற்கு, ஆண்டாண்டு காலமாக உணவு மற்றும் வாழ்வாதரங்களை நல்கி வந்திருக்கின்றன‌ என்பதை நாம் மறத்தல் ஆகாது. இவை தவிர வேறு விதை சம்பந்தமான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் எல்லாம் பேசப்பட வேண்டும். உயிரிப் பன்மையச் சட்டம் 2002 போன்று பல சட்டங்கள் உள்ளன. இவை அண்மை வளங்களைப் பாதுகாத்தல், உள்ளுர் மக்களின் பாரம்பரிய அறிவு, மற்றும் விதைகளின் உயிரித் திருட்டு ஆகியவை சம்ப‌ந்தப்பட்டவை.

எங்கள் கோரிக்கைகள்

விதைப் பன்மையம் என்பது மிகவும் ஊக்குவிக்கப்படவேண்டிய ஒன்று. நோய் எதிர்ப்பு சக்திக்கும், மாறிவரும் சூழலுக்கும் தட்ப வெப்பத்திற்கும் ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளவும் தேவையானது. இயற்கை வேளாண்மையில் சூழலைப் பாதிக்காத வேளாண்மை செய்யும் உழவர்களுக்கு சூழல் சேவை மானியங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்காக ஒரு உயிரிப் பன்மையக் குறியீடு ஒன்றை உருவாக்கி அவ்வளவீட்டில் அதிகமாக இருக்கும் உழவர்களுக்கு அதிக மானியங்கள் வழங்க வேண்டும்.

முறைசாரா விதைத் திட்டங்கள் உயிரிப் பன்மையத்தினைத் தக்க வைக்க‌வும், வளர்க்கவும் உழவர்களின் தேவை ஆகும். அவை வளப்படுத்தப்பட வேண்டும். அரசால் ஆதரிக்கப்பட வேண்டும். விதை நிறுவனங்களால் சுரண்டப்படாமல் பாதுகாக்கவும் பட வேண்டும். உழவர்களின் ரகங்கள், நாட்டு ரகங்கள் முதலியவை அரசு பிரச்சாரப் படுத்தும் முறைசாரந்த விதைத் திட்டங்களுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

விதை உற்பத்தி, விதை தயாரிப்பு என்பது இயற்கையான‌ வளரும் சூழல்களில் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு அனைவரும் கலந்து ஒரு பகிர்ந்துண்ணும் அனுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். உயிரி பன்மையம் என்பது வயல் நிதர்சனங்களிலேயே பாதுகாக்கப் பட முடியும். எனவே அர‌சாங்கம் வயலிலேயே பாதுகாக்க‌ மற்றும் தயாரிக்கும் முயற்சிகளுக்கு, அம்முயற்சியில் ஈடுபட்டுள்ள உழவர்களுக்குத் தேவையான, சரியான ஆதரவு அளிக்க வேண்டும். மாநில உயிரிப் பன்மைய ஆணையங்கள் மற்றும் அண்மை உயிரிப் பன்மைய நிர்வாகக் குழுக்கள் ஆகியவை தேசிய உயிரிப் பன்மைய சட்டத்தின்படி அவ்வச்சூழலில் அவ்வவ் இரகங்கள் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வமைப்புகள் இப்பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் ஏதேனும் தென்பட்டால் அதனைத் தடுக்கும் அதிகாரங்களும் அவற்றிற்கு அளிக்க வேண்டும்.

விதை இறையாண்மை என்பது உழவுச் சமூகங்களுக்கு நடைமுறைப் படுத்த ஆஷா அமைப்பு மிகவும் விரும்பினாலும், விதை நிறுவனங்களால் செய்யப்படும் விதை வியாபாரங்களை கடுமையான ஒழுங்காற்று விதிகளால் கட்டுபடுத்தவேண்டிய முக்கியதுவத்தையும் ஆஷா உணர்கிறது. 2013-ல் பரிந்துரைக்கபட்ட விதைச்சட்டம் போன்று விதை வாணிபத்தை ஒழுங்காற்றும் முயற்சிகள் உழவர்களின் நலன்களைப் பாதுகாக்காமல் இருக்கக் கூடும். இத்தகைய சட்டம் உழவர்களின் விதைகளை நிறுவன அளவைகளுக்கு ஏற்ப தரக்கட்டுபாட்டிற்கு இல்லாத விதைகளை விற்கத் தடையாக இருக்க கூடும். 1966-ல் உள்ள விதை மசோதாவில் அட்டவணை இடப்படாத பாரம்பரிய விதைகளை பல உழவர் உற்பத்தி நிறுவனங்கள் மீட்டுருவாக்கியும் சந்தைப் படுத்தியும் வருகின்றன. அத்தகைய நிறுவனங்கள் சட்டபடி ஒரு குழப்பமான நிலைமையில் இச்சட்டங்களால் ஆட்படுத்தப் படுகின்றன. குறிப்பாக ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திருக்கு, விதை விற்கும் பொழுது இச்சூழல் ஏற்படுகின்றது.

இதைத் தெளிவாக்கிச் சரியாக்கி, சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் முறை சாரா விதை விற்பனை வழிகள் ஆகியவை பாதுகாக்கவும் தேவையான சட்டங்கள் உருவாக்கியும் அரசு செயல்பட வேண்டும். இருக்கும் பல்வேறு விதை அமைப்புகளை ஒன்றாக ஒரு குடைக்குள் கொண்டு வருவதனால் பல்வேறு தரப்பட்ட உழவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படாது.

விதை இறையாண்மைக்கு மிகப் பெரிய சவால் என்னவென்றால் விதை நிறுவனங்களின் வலுவும், ஆற்றலும் அவர்களுடைய பன்னாட்டு சந்தையில் இருக்கும் ஆதிக்கமுமே. ஆசியா மற்றும் பசுபிக் விதை சங்கம் அனைத்து நாடுகளிலுள்ள‌ விதைச் சட்டங்களை சமர்ச்சீர் ஆகி அவர்களுடைய சந்தைகளை பாதுகாக்க வேண்டிய ஆயத்தங்களை செய்து கொண்டே இருக்கின்றன. அரசு, இத்தகைய வேளாண் தொழில்துறை க‌ட்டமைப்பு இல்லாமல் இயங்க இயலாது என்ற ஒரு கருத்து வந்து விட்டது. இதனால் விதை விற்பனையில் ஈடுபட்டுள்ள மிகபெரும் நிறுவனங்கள் சாதகமான நிலையில் இருக்கின்றன.

எங்களது கோரிக்கைகள்

வேளாண் பன்மையத்திற்க்கும், விதை இறையாண்மைக்கும், உழவர்களின் வாழ்வாதார பாதுகாப்பிற்கும் தடையாய் இருக்கும், அச்சுறுத்தலாய் இருக்கும், பெறும் பன்னாட்டு விதை நிறுவனங்களைச் சார்வதை மிகவும் குறைத்துக் கொள்ள வேண்டும். திட்டமிடுவோர், வேளாண் சூழலியல் வளர வேண்டுமானால் வேளாண் வாணிபத் திட்டமாதிரி மாற வேண்டும் என்பதை உணர வேண்டும்.

விதை விலைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் பொறுப்புடன் ஒழுங்காற்றி மேலாண்மை செய்ய வேண்டும். விதை விலைகள் என்றால் அதிலுள்ள காப்புரிமை, கட்டணங்களும் உட்படும். மேலும் விதைப் பெருநிறுவனங்களின் ஆளுமையும், பலமும் மேலும் மேலும் கூடாதிருக்க மிகப் பெறும் நிறுவனங்கள் தம்முள் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்வதை தேசிய வாணிபப் போட்டி விதிகளின் கீழ் தடை செய்ய வேண்டும்.

விதைப் பிரிவில் பொது ஆய்வும், மேம்படுத்துதலும் அரசு சார்ந்த ஆராய்ச்சியும் வளர்ச்சிகளும் சிறு விவசாயிகள் மற்றும் விதை பாதுகாப்போரின் தேவைகளுக்கேற்ப்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். பல‌ மாநில அரசுகள் பல‌ விதை நிறுவனங்களுடன் அரசு தனியார் ஒப்பந்தங்களைச் செய்துள்ளன. அதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமோ, சட்டபூர்வமான கணக்கோ, பொறுப்போ இல்லாமல் இருக்கிறது. இவை யாவும் முற்றிலுமாகக் கைவிடப்பட்டு, அவற்றுக்குச் செய்யப்பட்ட முதலீடுகள் உழவர்களே மேலாண்மை செய்யும் விதைத் திட்டங்களுக்கு மாற்றியமைக்கபட வேண்டும்.

இதைப்போன்று தேசிய வேளாண் ஆறாய்ச்சித் திட்டங்கள் போன்றவற்றில் அரசு செய்துள்ள ஒப்பந்தங்கள், அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்.

விதை என்பது அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக இந்திய அரசியல் சட்டத்தால் கருதப்படுவதால் விதைகளை வீரியமாக‌ சந்தைப் படுத்துவதை ஒழுங்காற்ற வேண்டும். உழவர்களுக்கு நவீன விதைகளைக் கையாளும் ஆற்றலின்மை என்ற ஒன்றை, இல்லாத பிரச்சனைகளால் அவர்களின் வாழ்வதாரங்கள் பாதிக்கப்படுவதை இது ஒரள‌வுக்குத் தடுக்கும்.

ஒவ்வொரு வேளாண் சூழலிலும், பல்வேறு இடங்களிலும் வளரக்கூடிய, இருக்கக்கூடிய பல்வேறு ரகங்களை உழவர் ரகங்கள், நாட்டு ரகங்கள் இரண்டையும் சரியாக ஆவணப்படுத்துவது உழவர்களுக்கு அண்மை விதைகளை கிடைக்கச் செய்வதுடன் அவ்விதைகளை பெருநிறுவனங்கள் திருடித் தனிச் சொத்தாக, அறிவுச் சொத்தாக மாற்றுவதை தடுக்கும்.

பொது விதை வங்கிகள் என்றிருக்கும் அனைத்தும் அத்தகைய ஆவணப்படுத்துவதையும் தன் ஆவணங்களைப் பொதுவாக, பொது சொத்தாக உழவர் சங்கங்களுடன் தடையின்றிப் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள், உழவர் கூட்டுற‌வுகள், மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை கொண்டு முறை சார்ந்த விதை திட்டங்கள் உருவாக்கலாம். எனினும் நாம் விதை என்பது பொது சொத்து என்ற திட்டத்தையே கொள்ள வேண்டும். இதனால் விதைகள் காப்புரிமையிலிருந்து வெளிக் கொணரப்படுவதால் ஒவ்வொரு குழுவும் தன்னுடைய விதைகளை பயமின்றி, யாரும் திருடிவிடுவார்களோ என்ற அச்சம் இன்றி அனைவருக்கும் பகிர்வதற்கு வசதியாக இருக்கும்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org