நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம், கறுத்த பிள்ளையூர். அங்குள்ள நடு நிலைப் பள்ளியில் “என்னைக் கவர்ந்த தலைவர்” என்ற தலைப்பில் ஒரு சொற்போர். ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர் அன்னை தெரேசா அவர்களைப் பற்றி பேச முடிவெடுக்கிறார். போட்டியில் சிறப்பாகப் பேச வேண்டுமென்ற ஆர்வத்தில் அன்னை தெரேசாவைப் பற்றிய செய்திகளை விரிவாக படிக்கிறார் அப்பெண். அன்னையாரது மகத்தான சேவைகளைப் பற்றி அறிய அறிய, போட்டியில் ஆர்வம் குறைந்து, அப்பெண்ணின் சிந்தையில் பிறர்க்காக வாழும் வாழ்க்கையின் சிற்ப்பு ஆழமாக வேரூன்றுகிறது.

“மனத்தில் வாழ்வின் நோக்கமே புரிபடுவதாய் ஒரு உணர்வு. அப்போது தான் என் முதல் அற வழிப்பாதைப் பயணம் தொடங்கியது” என்கிறார், நம் இம்மாத நாயகி இராணி.

இராணி அவர்கள், நம் தாளாண்மை தற்சார்பு இயக்கத்தின் அங்கத்தினர். நம்மில் பலருக்கு கூட்டங்களில் ஏற்படும் சந்த்திப்புகள் மூலமாய் அறிமுகமானவர். அவருடன் உரையாடுகையில் மிகுந்த அடக்கத்துடனும் எளிமையாகவும் தன்னை முன் நிறுத்தாமல், மற்ற நண்பர்களின் சிறந்த செய்கைகளையும் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் பற்றியே பெரும்பாலும் பேசுவார். அவர், திருநெல்வெலி மாவட்டத்தில் பல இயற்கை விவசாய முன்னடைவு செயல்களை எந்த ஆரவாரமுமின்றி செய்து வருகிறார்.

இராணியிடம், அவரது இயற்கை விவசாயப் பணிகளைப் பற்றிக் கேட்டோம். அவர் தாம் இன்னும் முதல் படியிலேயே இருப்பதாகக் கூறினார். இப்பொழுது தான் நண்பர் பாமயன் மற்றும் தாளாண்மை உறுப்பினர்களிடமிருந்து தாம் கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

எனினும் அவருடன் உரையாடுகையில் அவருக்கு வேளாண்மையின் பல உத்திகளில் நுண்ணிய அறிவு இருப்பதை நம்மால் நன்கு உணர முடிகிறது. அவரை இயற்கை வேளாண்மை ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது என்று வினவினோம். அவர் வாழ்வின் அற வழிகளில் மிக அடிப்படையானது இதுவே என்று தாம் நாளடைவில் கண்டு கொண்டதாகக் கூறினார்.

பள்ளிப்பருவ காலத்தில் அன்னை தெரேசாவினால் சேவை வழிக்கு உந்தப் பட்ட இராணி, தாம் கல்லூரியில் பயிலும்போதே, பள்ளியில் படிக்கும் பல குழந்தைகளுக்கு, தம்மால் இயன்ற உதவிகளை செய்து வந்திருக்கிறார். மாலை நேரங்களில் அருகாமையிலுள்ள சிறார்களுக்கு பாடப் பயிற்சி, பொருளாதாரத்தில் பின் தங்கியோர்க்கு, சில நல்ல மனதுள்ள நண்பர்களிடம் புத்தகங்கள், பள்ளிக் கட்டணத்துக்கு உதவி என்று பொறுப்பெடுத்துக் கொண்டு, அவர்கள் வாழ்வில் மேம்பட தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.இது நம்மில் பலரும் இயல்பாய்ச் செய்யும் ஒரு உதவி எனினும், இராணியின் அணுகு முறை சற்றே மாறுபட்டது. அவர் இம்முறை யாரோ ஒரு மாணவர்க்கு, அடுத்த ஆண்டு வேறு யாருக்கோ என்றில்லாமல், தம் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள், கல்லூரிப் படிப்பு முடிந்து ஒரு அலுவலில் இணைந்து பொருளாதாரத் தற்சார்பு அடையும் வரை, தொடர்ந்து வழி நடத்திக் கொடுத்திருக்கிறார்.

தாம் படிக்கும் காலத்திலேயே, நலிந்தவர்க்காகக் குரலெழுப்புவது அவரது இயல்பாக இருந்துள்ளது - தலித்து மக்களுக்காக உரிமை போரில் பங்கெடுத்தல், ஒடுக்கப்பட்ட ஏழைப்பெண்களுக்காக பெரிய தொழில் நிறுவனங்களுக்கெதிராக திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணா நோன்பு அறப்போர், அரசுப்பள்ளிகளில் அடிப்படை சுத்தம் சுகாதார வசதிகள் கோரி மாவட்ட கல்வி அலுவகத்தில் கோரிக்கை என பல சிறு புரட்சிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றிருக்கிறார். அவர் தாய், “எப்பம் போலீசு நம்ம வீட்டுக்கு வருமோ புள்ள! நீ செத்த பணிவாத்தான் இரேன்னு நான் பலவாட்டி கெஞ்சியிருக்கேன்ல” என்று எம்மிடம் கூறினார்.

இராணி சமூகவியல் முதுநிலைப் படிப்பை முடித்த பின்னர், M S W என்னும் சமூக வேவைக்கான மேல்நிலை படிப்பையும் தொடர்ந்தார். அதில் ஒரு பகுதியாக களப்பணி செய்ய அவர் தேர்ந்தெடுத்தது, இராமநாதபுரம் மாவட்டத்தில் வாழும் கலவிப் பணியாளார்களின் ஆரோக்கிய மேம்பாடு மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி வாய்ப்பை ஊக்குவது. தம் படிப்பிற்கான தேவையை மீறி அப்பெண்டிரின் நிலைக்காக வருந்தி, அவர் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் அவர்களுடனேயே வாழ்ந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் இராணி தோளில் ஒரு பெரிய கட்டி வந்து மிகுந்த அவதிக்குள்ளாகியிருக்கிறார். பல மருத்துவ மனைகளில் பரிசோதித்து அதைப் புற்று நோய் என்றும் அறுவைச் சிகிச்சையே ஒரே வழி என்றும் கூறிவிட்டனர். அவரது சகோதரியின் கணவர், சாந்தப்பன் ஒரு இயற்கை மருத்துவர். அவர், ஆங்கிலமருத்துவ முறைகளை ஒதுக்கி இயற்கை மருத்துவமே சரியான வழி என்று அறிவுறுத்தியதன் பேரில், இராணி அறுவைச் சிகிச்சையை விடுத்து, இரண்டு வருடங்கள், இயற்கை முறை மருத்துவத்தாலேயே தம் நோயை வென்று விட்டார். இச்செய்தியை அவர் தாயார் கூறியதும் நமக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. இராணியிடம் அதைப்பற்றிக் கேட்டோம். அவர் இரண்டாண்டுகள் சமைத்த உணவை முற்றிலும் புறக்கணித்து, பச்சைக் காய் கறிகள், கனிகளை மட்டும் உண்டு, சிறுநீர் மருத்துவத்தை பின் பற்றியதில், கட்டி முழுவதுமாகக் கரைந்து விட்டது என்று தெரிவித்தார்.”அச்சமய‌த்தில் அளவு கடந்த வலி என்னைத் துன்புறுத்தியது. எனினும் நான் மருத்துவரிடம், முழு நம்பிக்கை கொண்டு, எல்லாவற்றையும் பொறுமையுடன் எதிர் கொண்டேன். இப்பொழுது பேசுகையில் வலி நம்மை எப்படி உறுதிப்படுத்தியிருக்கிறது என்று மனதுக்கு நிறைவாக உள்ளது” என்று இராணி நினைவு கூர்கிறார்.

அக்கொடிய நோயிலிருந்து மீண்ட பின், இராணிக்கு உடல் நலத்தில் உணவு எத்துணை முக்கியமான பங்கு வகிக்கிறது என்று புரிபடத் தொடங்கியது. இவ்வளவு அவசியமான உணவை விளைவிக்கும் விவசாயிகள், சிறிதும் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காது வேதிப்பொருட்களை பயன் படுத்துவது அவருக்கு வருத்தத்தை அளித்தது. முழுமூச்சுடன், இயற்கை வேளாண்மை பிரசாரங்களில் ஈடுபடத் தொடங்கினார். ஒரு கூட்டத்தில் ஒரு விவசாயி, அவரிடம் நீங்கள் கூறுவதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய். நீங்களே வேளாண்மை செய்தாலொழிய உங்களுக்கு நாங்கள் படும் பாடு புரிய வாய்ப்பில்லை என்று கூறி விட்டார். இராணிக்கு அவ்வுண்மை ஒரு தாக்கத்தை உருவாக்கியது. அச்சமயத்தில் நம் தற்சார்பு இயக்கமும் திருநெல்வெலியில் ஒரு விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து ஒரு மாதிரிப் பண்ணை அமைக்க முற்பட்டார்கள். அதுவே இராணிக்கும் நல்ல வாய்ப்பாகியது. அவர் அப்பண்ணையை இரண்டு மூன்று ஆண்டுகள் திறம்பட நடத்தி விட்டார். “இப்பொழுது என்னால் மிகுந்த உறுதியுடனும் நம்பிககையுடனும் விவசாயிகளிடம் பேச முடிகிறது” என்கிறார்.

கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் இயற்கை விவசாயி கிருஷ்ணன் ” நான் இயற்கை விவசாயம் செய்யத் தொட‌ங்கிய முதல் இரண்டு ஆண்டுகள், இராணியின் பங்களிப்பு விலை மதிப்பற்றது. அறிவுரை, வழிமுறைகள் கொடுப்பதுடன் நின்று விடாமல், இராணி ஒவ்வொரு செயலிலும் களமிறங்கி எங்களுடன் இணைந்து பணி புரிவார். எந்த ஒரு சிறு விடயத்திலும் அவரது நேர்த்தியும் சிறப்பான செயல்முறையும் என்னைப் பலமுறை வியப்புக்குள்ளாக்கியுள்ளாக்கியுள்ளது. நாம் சில சமயங்களில் அறியாமையினால் ஏதேனும் குறைபாடான வேலை செய்ய முனையும் போது அவர் பொறுமையுடன் ஆனால் மிக உறுதியுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார். சரியான முறையில் அதை முடித்துக் கொடுப்பதுடன், நம் அணுகுமுறையின் பிழையை அதன் நீண்ட நாள் பாதிப்பை நாமே உணரும்படி விளக்கிச் சொல்வார். அவர் முழு நேரமும் எங்கள் பண்ணையிலே இருக்க வேண்டும் என்பது எங்கள் அவா. எனினும் அது ஒரு சுய நலமான எண்ணம். அவர் எம்மைப் போல் இன்னும் பல விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதால் அவரை மிக இக்கட்டான நேரங்களில் மட்டுமே அழைக்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இதைத்தவிர, இராணி “பசுந்தளிர்” என்னும் சுற்றுச்சூழல் இயக்கமொன்றை நடத்தி வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளில், இருபதுக்கும் மேற்பட்ட இயற்கை சுற்றுச்சூழல் சார்ந்த பன்னாட்டு தினங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவது, கிராமப்பெண்டிர்களுக்கு இயற்கை சார்ந்த சுய தொழில்களைப் பயிற்றுவிப்பது, வனத்துறையுடன் இணைந்து வனப் பாதுகாப்பு பற்றி இளைஞர்களுக்கு அறிவுறுத்துவது, மரம் நடு விழாக்கள் (ந‌டுவ‌துடன் விட்டு விடாமல், மரக்கன்றுகளை பராமரித்து வளர்த்தல்) என்று பல செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் சிறப்பான விடயம் என்னவென்றால், இவ்வமைப்பு முற்றிலும் தன்னார்வத்தொண்டர்களால் நடத்தப் படுகிறது. நன்கொடை, பொருளாதார உதவி எதுவும் யாரிடமும் பெறுவதில்லை.

இராணி வணிகப் பொருளாதார எதிர்பார்ப்புகள் சிறிதுமின்றி தாம் சரியென்று எண்ணும் செயல்களை மட்டுமே செய்து வாழ்கிறார். அவரது அறம் பற்றிய சிந்தனைகள் நமக்கு வாழ்க்கையின் மீதிலுள்ள சலிப்புகளை உடனே களைவதாக உள்ளன. மற்றவருக்காக சரியாக வாழ்வதன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அவரைக் கண்டோம். மிகுந்த மன நிறைவுடன் விடை பெற்று வந்தோம்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org