கற்பதும் கசடும் - வழிப்போக்கன்


[இறுதிப் பகுதி]

மழலைச் செல்வம் என்பது செல்வத்துள் எல்லாம் தலை.


படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப் பெரும் செல்வராயினும், இடைப்படக்
குறு,குறு நடந்து, சிறு கைநீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே

என்று மழலையின் பெருமையைப் புறநானூற்றில் பாண்டியன் அறிவுடை நம்பி போற்றுகிறார். அவ்வுயர்ந்த செல்வத்தைப் பாதுகாக்காமல், நாம், எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு கற்பனை அச்சத்தால், மனப்பாடக் கல்வி, மதிப்பெண் துரத்தல் என்ற சித்திரவதைகளுக்கு உட்படுத்துகிறோம். இதனால் நம் பிஞ்சு உள்ளங்கள் படும் பாடு சொல்லில் அடங்காது.

இப்போட்டி முறைமை நல்லதா, கெட்டதா என்ற கேள்விகளைத் தாண்டி, நல்லது என்றே நாம் கொண்டாலும், உண்மை நிலை என்னவெனில், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே போட்டியில் வெல்ல உதவுகிறது. இதற்கு இரண்டு வருடங்கள் போராடினால் போதுமானது. மேலும், பத்தாம் வகுப்பு முடிக்கையில் குழந்தைக்கு 15 முதல் 16 வயது ஆகி விடுவதால், மதிப்பெண் பந்தயத்தில் போட்டியிட அச்சிறுவனோ, சிறுமியோ உடல், மன ரீதியாக ஓரளவு அணியமாகவே இருப்பர். எனவே பத்தாம் வகுப்பு வரை எளிதான, இறுக்கமற்ற, மன‌திற்கு இசைந்த கல்வியைக் கற்று விட்டுப் பின்னர் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இரு வருடங்கள் படிக்கலாம். இது கடவுக் கல்வியையும், கடைகாற் கல்வியையும் ஒருங்கே பெற ஒரு நல்ல, எளிய வழி.

இதற்குத் த‌டையாய் இருப்பது எவையெல்லாம்? மிகப் பெரிய தடை பிள்ளைகள் தனிமைப் பட்டுப் போவதுதான். பூப்பிளக்கப் பிளந்துவரும் புற்றீசல் போலப் புலபுலெனக் கலகலென‌ப் பிள்ளைகள் பெற்ற காலம் போய் இப்போது எல்லா வீட்டிலும் ஒன்றோ அல்லது அதிகபட்சமாக இரண்டோ குழந்தைகள்தான் உள்ளனர். இனி வரும் தலை முறைகளுக்கு அத்தை, மாமன், சித்தப்பா, பெரியம்மா போன்ற உறவுகள் அரிதாகி விடும். இதனால் குழந்தைகள் வளரும் பொழுது பெரியவர்களுடனே அதிகமாகப் பழகி இயல்பான அறிவு வளர்ச்சியை இழக்க நேரிடுகிறது. பல நேரங்களில் வளர்ச்சி வேகமாக, வயதிற்கு ஒவ்வாததாக‌ இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, ஒரே குழந்தையை இரு பெற்றோரும் கவனிப்பதால் over-parenting என்று கூறப்படும் தேவைக்கு மீறிய கவனிப்பும் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கிறது.

இன்னோரு பக்கத்தில் வெட்ட வெளியே காணாத நவீன நாகரிக வாழ்முறையும் குழந்தைகளைப் பாதிக்கிறது. அடுக்கு மாடி வீட்டில் இருந்து கொண்டு, வாகனங்களில் பள்ளிக்குச் சென்று அங்கும் அடைப்பான‌ அறைகளில் நெருக்கமாக அமர்ந்து, அதன் பின் புகைச்சலான தெருக்களில் வாகனங்களில் வீட்டிற்கு வந்து, பின் தொலைக்காட்சி, கணினி, அலைபேசி போன்ற அபின்களில் பொழுதைப் போக்கித் தரை, மண் போன்றவற்றையே அறியாத தாமரைப் பாதங்களுடன் குழந்தைகள் வளர்கிறார்கள். வெய்யிலே மேலே படாத நிழற்கோழிகள் போல் வளரும் இவர்களுக்குப் பிற குழந்தைகளுடன் திறந்த வெளியில் விளையாட்டு என்பது மிக மிக அரிதாகி விட்டது. அதற்கான நேரத்தையும் இப்பள்ளிக் கல்விமுறை அளிப்பதில்லை.

இவ்வாறு அறைக்குள் வாழும் ஒரு அடைப்பு வாழ்விற்கு வீட்டுக் கல்வி என்பது ஏற்றதல்ல. அதில் குழந்தைகள் மிகவும் தனிமைப் பட்டுப் போய்விடுவார்கள். பிற குழந்தைகளுடன் பழகவே தயங்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். ஒரு நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இணைந்து வீட்டுக் கல்வியைக் கற்றால் அவர்களுக்குத் தோழமை, விளையாட்டு, ஒத்த வயதினருடன் பேச்சு ஆகியவை எல்லாம் கிடைத்து விடும். நேரம் போவதே தெரியாது. ஆனால் இதற்கு எல்லாப் பெற்றோரும் துணிந்து களம் இறங்க வேண்டும்.

மாற்று வாழ்வியல் தேடும் பலரும் வேளாண்மையைத் தொழிலாக, வாழ்முறையாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வாறு வயலிலேயே வீடு கட்டி வாழ்வதாயிருந்தால், அல்லது பகல் வேளை முழுவதும் திறந்த வெளியில் ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட முடிவதாய் இருந்தால் ஒரு குழந்தையாயினும் வீட்டுக் கல்வி கற்பது சாத்தியமே. கிராமங்களில் இருப்போருக்கு வீட்டுக் கல்வி என்பது சற்று எளிதானது.

இரண்டாவது த‌டை என்பது பிறர் நம்மை ஏளனம் செய்வார்களே என்பது. இது தற்சார்பு வாழ்முறையின் எல்லாக் கூறுகளுக்கும் பொருந்தும். வளர்ந்த நாமே பல இடங்களில் ஏளனத்திற்கு அஞ்சும் பொழுது, குழந்தைகளை அதற்கு ஆட்படுத்துவது வன்முறையே.

வீட்டுக் கவ்லி அளிக்கப் பெற்றோர் அறிஞர்களாய் இருத்தல் அவசியமா என்பது அடுத்த கேள்வி. இதற்குச் சரியான விடை எனக்குத் தெரியவில்லை. மிகச் சிறந்த பள்ளிகள் என்று கருதப்படும் நகரத்துப் பள்ளிகளிலேயே பாடங்கள் பெற்றோர்தான் கற்றுத் தருகிறார்கள். ஆசிரியர்கள் பாடங்களை அறிமுகம் மட்டுமே செய்கிறார்கள். அவற்றில் பயிற்சியும், நெட்டுருவும் பெற்றோர்களால்தான் நிர்வகிக்கப் படுகின்றன என்பதே உண்மை. அவையத்து முந்தியிருப்பது இப்போது பெரும்பாலும் தாய் மகற்காற்றும் உதவியல்ல, கடமையாகவே இருக்கிறது. அடிப்படைக் கல்வி கற்கப் பெரும் அறிஞனாய் இருக்கத் தேவையில்லை என்பதே என் கருத்து. பெற்றோர் நூற்கல்வியில் அதிகம் கற்கவில்லையெனில் ஒன்பதாம் வகுப்பில் இருந்து பள்ளிக்குச் செல்லலாம். அல்லது தனிப்பாடம் நடத்த ஒரு ஆசிரியரிடம் குழந்தை செல்லலாம்.

ஏன் இவ்வளவு போராட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பே. எல்லோரும் பயணிக்கும் பேருந்து கூட்ட நெரிசலாலும், முண்டியடித்தலாலும் மூச்சு விடக் கூடக் கடினமாகும் போதுதான் நாம் வேறு வழியிருக்கிறதா என்று சிந்திக்கிறோம். அது போலவே இப்போது பள்ளிக் கல்வி என்பது பெரும் வன்முறையுடன் நம் குழந்தைகளைச் சிதைப்பதால்தான் இவ்வாராய்ச்சிகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது. நல்ல பள்ளிகள், அழுத்தமற்ற கல்வி அளிப்பவை என்பவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம். அவை பெரு நகரங்களிலோ அல்லது தங்கிப் படிக்க வேண்டியவையாகவோ இருக்கின்றன. சாதாரண ஊர்களில் சாதாரண விலையில் நல்ல கல்வி என்பது கிட்டாத ஒன்றாகி விட்டது.

இதற்கு அரசுப் பள்ளிகள் மூலம் ஓரளவு ஒரு நடுப்பாதையில் பயணிக்க இயலும். அருகில் உள்ள அரசுப் பள்ளிக்கு அரைநாள் அனுப்பினால் குழந்தையின் தேவைகள் பெருமளவு நிறைவாகி விடும். எஞ்சிய நேரம் நாம் நம் இச்சைப்படிக் கல்வி அளிக்கலாம். தற்போது அரசு எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஐந்து நாள் மட்டுமே பள்ளி, மிகப்பல விடுமுறை நாட்கள், மன அழுத்தம் அற்ற பாடம் போன்றவை கிட்டும்.

நாம் முன்னரே சொன்னது போல, விடை தெரியாத கேள்விகளில் குழந்தை வளர்ப்பும் ஒன்று. கல்விக்குக் கசடற்ற பல தீர்வுகள் உள்ளன; அத்தீர்வுகள் நமக்கு விருப்பமானவையா, நம்மால் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த இயலுமா என்று அவரவர்தான் முடிவு செய்ய இயலும். யாருக்கும் யாரும் பரிந்துரைக்க இயலாது. நாம் கண்ட தீர்வுகளை ஆவணப்படுத்தி வைக்கிறோம் - அவ்வளவே,

கடும் வெய்யில் வாடி தாகத்துடன் இருக்கும் ஒருவனுக்குக் கிணற்றைக் காட்டலாம். அவன் கிணற்றில் நீரைச் சேந்தி அருந்தினால்தான் தாகம் அடங்கும்; கயிறு அறுந்தால் என்ன செய்வது, இக்கிணற்று நீரில் வேதிப் பொருட்கள் உள்ளதா, இதனால் ஏதும் உடல்நலக் குறைவாகுமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வதால் தாகமும், தலைவலியும் அதிகமாகுமே அன்றி விடை ஏதும் கிட்டாது. தனியத் துணிந்தால்தான் சுதந்திர தாகம் தீரும்.

முற்றும்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org