நீரின்றி அமையாது உலகு! பகுதி 1 - சிக்கல்கள்

“மக்கள் ஓலிப் பண்டிகையைக் குதூகலமாகக் கொண்டாடவேண்டும். தண்ணீரைப் பயன்படுத்துவது குறித்துக் கவலைப்படவேண்டியதில்லை!” - கபில் மிசுரா, தண்ணீர் அமைச்சர், டெல்லி மாநில அரசு மிகக் கடுமையான வறட்சியின் பிடியில் நாம் சிக்கியுள்ளோம். உலக அளவில் சுமார் 110 கோடி மக்களுக்குத் தூய குடிநீர் கிடைப்பதில்லை. குறைந்த வருமானத்தில் உயிர்வாழ்கிற பல கோடிக் குடும்பங்கள் தம் சொற்ப வருமானத்தில் கணிசமான பங்கினை மிகக் குறைந்த அளவு (எ.கா. ஐம்பது லிட்டர்) தண்ணீரை வாங்குவதற்குச் செலவிடுகின்றன; லிட்டருக்கு ஒரு ரூபாய் கொடுத்துத் தண்ணீர் வாங்கவேண்டிய நிலையில் கோடிக் கணக்கான இந்தியக் குடும்பங்கள் உள்ளன! உலகில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2000 குழந்தைகள் (ஓராண்டில் ஏழு லட்சத்து அறுபதாயிரம் குழந்தைகள்) மாசடைந்த தண்ணீரை அருந்துவதன் விளைவாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுச் சாகின்றனர். குழாயடிச் சண்டைகள் வன்முறைக் கலவரங்களாக வெடிக்கின்றன. மகாராட்டிர மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் உள்ள லாட்டூர் மாவட்டத்தில் ஆட்சியர் “144 தடை ஆணை” பிறப்பித்துள்ளார்: குறிப்பிட்ட இருபது தண்ணீர்த் தொட்டிகளுக்கு அருகில் ஒரு சமயத்தில் ஐந்து பேருக்கு மேல் கூட்டமாக நிற்பது சட்டப்படி குற்றம் என்கிறது அந்த ஆணை! கடந்த ஆண்டு லாட்டூர் நகர மக்களுக்கு முதலில் பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டது; பின்னர் அது மாதமொரு முறையாகக் குறைக்கப்பட்டது! வறட்சியிலும் மிக அதிகமான கரும்பு விளைச்சல்! 2012-13-க்குப் பின்னர் இரண்டாவது முறையாக மராத்வாடா பகுதியில் வறட்சி தாக்கியுள்ளது. ஆனால், மராத்வாடா உள்ளிட்ட பகுதிகளில் 2014-15-இல் மிக அதிக அளவு கரும்பு விளைவிக்கப்பட்டது. மகாராட்டிர மாநிலத்தின் விளைநிலப் பரப்பில் வெறும் நான்கு விழுக்காடு நிலங்களில் மட்டும் கரும்பு பயிரிடப்படுகிறது. ஆனால், மொத்தப் பாசன நீரில் எழுபது விழுக்காடு கரும்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. அடுத்தடுத்து அம்மாநிலத்தை ஆண்ட, ஆளுகின்ற அரசுகள் இது குறித்து அதிகம் கவலைப்படவில்லை. கரும்பாலை உரிமையாளர்களும் பெரிய அரசியல்வாணர்களும் மிக நெருங்கிய உறவு கொண்டிருப்பதுதான் இந்த முரணான, சோகமான நிலைமைக்குக் காரணம். அரசு கரும்பாலைகளுக்கு மிகப் பெரிய அளவில் நல்கைகளையும் கடன் தள்ளுபடிகளையும் தருகிறது. அதுபோலவே, உழவர்களும் கரும்பு பயிரிடுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். உலக அளவிலும் இந்தியாவிலும் தண்ணீர்ப் பயன்பாடு நாம் பயன்படுத்தும் தண்ணீர் புறப்பரப்பு நீர், நிலத்தடி நீர் என இரண்டு வழிகளில் கிடைக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் தண்ணீரின் ஆண்டுச் சராசரி அளவு (ஆளொருவருக்கு) முப்பது லட்சம் லிட்டர்களில் இருந்து பத்து லட்சம் லிட்டர்களாக வீழ்ந்துவிட்டது. உலகச் சராசரி அறுபது லட்சம் லிட்டர்கள். (குளியல், சமையல், குடிப்பது ஆகியவற்றுக்கு நாம் நேரடியாகப் பயன்படுத்தும் தண்ணீர் மட்டுமின்றி நம் உணவை விளைவிப்பதற்கும் நாம் பயன்படுத்தும் மின்னாற்றலை உருவாக்குவதற்கும் இன்னபிற தேவைகளுக்கும் வேண்டிய தண்ணீரும் மேற்படிக் கணக்கில் சேர்ந்துள்ளது.) இந்திய விளைநிலங்களில் கால்பங்கு தான் பாசன வசதி பெற்றவை. அவை பயன்படுத்தும் பாசன நீரில் 60% நிலத்தடி நீர். இந்தியாவின் மொத்தத் தண்ணீர்ப் பயன்பாட்டில் 80% பாசனத்திற்குப் பயன்படுகிறது. ஆலைகள், மின் உற்பத்தி, சுரங்கங்கள், வணிகக் கூடங்கள், அலுவலகங்கள், வீடுகள் ஆகியவை மீதமுள்ள நீரைப் பயன்படுத்துகின்றன. இந்தத் தேவைகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. வீட்டுப் பயன்பாட்டைப் பொறுத்தவரை ஊர்ப்புறக் குடும்பத்தின் தண்ணீர்ப் பயன்பாட்டைக் காட்டிலும் நகர்ப்புறக் குடும்பத்தின் தண்ணீர்த் தேவை மும்மடங்கு அதிகம். ஆகவே, நகர்மயமாதல் அதிகரிக்கும் விகிதத்தைவிட நகர்ப்புறத் தண்ணீர்த் தேவை வேகமாக உயர்கிறது. மழைநீர் சேமிப்பு ஒரு ஏக்கர் பரப்பில் இரண்டரை சென்ட்டிமீட்டர் மழை பெய்தால் அதில் ஒரு லட்சம் லிட்டர் நீர் இருக்கிறது. இதை நம் பகுதியில் பெய்யும் மழையளவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம் பகுதியில் அதிகப்படி எவ்வளவு மழைநீரைச் சேமித்து நிலத்தினுட் செலுத்த இயலும் என்று அறியலாம். (பல்வேறு காரணங்களால் நடைமுறையில் மழைநீர் முழுவதையும் நிலத்தினுட் செலுத்த இயலாது.) மழைநீரில் பெரும்பகுதி முறையாகச் சேமிக்கப்படுவதில்லை. இந்தியாவில் ஆளொருவருக்குச் சராசரியாக 1,90,000 லிட்டர் மழைநீர் மட்டுமே ஓராண்டில் சேமிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஆசுத்திரேலியா, ப்ரெசீல், சீனா ஆகிய நாடுகளில் இது முறையே 59,61,000, 47,17,000, 33,88,000, மற்றும் 24,86,000 லிட்டர்கள் என்ற அளவில் உள்ளது. நிலத்தடி நீரின் அளவும் தரமும் வேகமாகக் குன்றுதல் இந்தியாவில் ஓராண்டில் நிலத்தினுட் செல்லும் மொத்த நீரின் அளவு 4,40,00,000 கோடி லிட்டர்; இதில் நமக்குக் கிடைக்கக்கூடியது 4,00,00,000 கோடி லிட்டர்; அதில் 62% நீரை மூன்று கோடிக் கிணறுகள் மூலம் பல்வேறு பயன்பாடுகளுக்காக உறிஞ்சிவிடுகிறோம். வேளாண்மை, ஆலைகள், வீடுகள் ஆகியவற்றுக்கென நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் இந்தியா (ஆண்டொன்றுக்கு 7,61,00,000 கோடி லிட்டர்), சீனா (5,54,10,000), அமெரிக்கா (4,78,40,000), பாக்கிசுத்தான் (1,83,50,000), இந்தோனேசியா (1,13,30,000) ஆகிய ஐந்து நாடுகள் முன்னிலையில் உள்ளன. மக்கள் தொகை அதிகமுள்ள சீனா இந்தியாவைவிட 28% குறைவான அளவு நிலத்தடி நீரைப் பயன்படுத்துகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் தான் நிலத்தடி நீர்மட்டம் மிக வேகமாகக் குறைந்துவருகிறது. தமிழ்நாட்டில் 374 வட்டாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டிவிட்டது; பல நூறு ஆண்டுகளாகச் சேமிக்கப்பட்ட நிலத்தடி நீரில் 90% வெளியே எடுக்கப்பட்டுவிட்டது; நீர் வரத்தைக் காட்டிலும் அதிக அளவு உறிஞ்சப்படுகிறது. நிலத்தடி நீரின் அளவு மட்டுமின்றித் தரமும் கெட்டுவருகிறது. ஆலைகள் மற்றும் நகராட்சிகள் கழிவு நீரைத் தூய்மைப்படுத்தாமல் நீர்நிலைகளில் கலப்பதால் நிலமும் நீரும் பெருமளவு கெடுகின்றன. வேதியுரம், தண்ணீர், ஆற்றல் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்துமாறு அரசு வேளாண் திட்டக் கொள்கைகள் உழவர்களை ஊக்குவிக்கின்றன. இதன் விளைவாக மண் வளம், நிலத்தடி நீரின் தன்மை, நம் உடல் நலம், சூழல் ஆகியன கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. நடுவணரசு அண்மையில் வெளியிட்ட 2015-16 பொருளாதாரக் கணக்கெடுப்பு இதை ஒப்புக்கொள்கிறது. இந்தியாவின் நிலத்தடி நீரில் பாதிக்கும் அதிகமான நீர் இவ்வாறு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர்ப் பற்றாக்குறை ஏன் நேர்கிறது? இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக ஆண்டொன்றுக்கு முப்பது சென்ட்டிமீட்டர் (சுமார் ஒரு அடி) வீதம் குறைந்துவருகிறது. இதற்கு என்ன காரணம்? வசதி படைத்த இந்தியர்களின் நுகர்வு, ஏற்றுமதிக்கென விளைவித்தல், ஏற்றுமதிக்காக ஆலைகளில் பொருள்களை உருவாக்குதல், நம் வேளாண் முறைகளிலும் ஆலைகளிலும் செயல்திறன் (குறிப்பாகத் தண்ணீர்ப் பயன்பாடு மற்றும் மறுசுழற்சி) குறைவாக இருத்தல் ஆகிய காரணங்களால் தண்ணீர்ப் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகின்றது. புவியின் இயற்கைச் சூழல் மாந்தச் செயல்பாடுகளால் மிக மோசமாகக் கெட்டுவருவதால் பருவமழை பொய்த்தல், பருவந் தவறிப் பெய்தல், குறுகிய காலத்தில் கடும் மழை கொட்டுதல் போன்ற சீற்றங்கள் மோசமாகிவருகின்றன. மழை நீரை ஆங்காங்கு சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு ஏற்ப நம் நீர்வளங்களை நாம் முறையாகப் பராமரிப்பதில்லை. பாசனத் திட்டங்கள் பதினொரு கோடி எக்ட்டேர் நிலப் பரப்புக்குப் பாசன வசதி ஏற்படுத்துவதற்கென முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கி 2001 வரை நடுவணரசு இரண்டு லட்சங் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஆனால், ஆந்திரா, கர்நாடகா, மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்படாமலே உள்ளன. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் மொத்தச் செலவில் 22.5% பாசன வசதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டது. 2002-07-இல் இது 6.2% ஆகக் குறைந்துவிட்டது. பல்வேறு காரணங்களால் பாசனத் திட்டங்கள் தாமதமாகின்றன. அதன் விளைவாக அவற்றைச் செயல்படுத்துவதற்கான செலவு வேகமாக உயர்கிறது. 1985-க்குப் பின் தொடங்கப்பட்டவற்றில் பெரிய திட்டங்களைப் பொறுத்தவரை, செலவினங்கள் சராசரியாக இரண்டு மடங்கு உயர்ந்துவிட்டன! 24 நடுத்தரத் திட்டங்களின் செலவுகள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளன. உருவாக்கப்பட்ட பாசன வசதி, பயன்படுத்தப்படுகிற பாசன வசதி ஆகியன முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் முறையே 129.8 லட்சம் எக்ட்டேர், 122 லட்சம் எக்ட்டேர் என இருந்தன. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது இவை 310.5, 310.3 லட்சம் எக்ட்டேர் என மாறின. பாசன வசதிகளை முறையாகப் பயன்படுத்தாமலும் பராமரிக்காமலும் இருத்தல், நீரைக் கொண்டுசெல்லும் கால்வாய்கள் முழுமையடையாமை, நீர்ப்பிடிப்புப் பகுதிகளை முறையாகக் கட்டமைக்காதிருத்தல், உழவர்கள் தாம் பயிரிடப்போகும் பயிர்களைக் குறித்துத் தொடக்கத்தில் சொன்னவாறு நடக்காமல் நீர்த் தேவை அதிகமுள்ள பயிர்களுக்கு மாறுதல், பாசன நீரை (ஆலைகள், நகராட்சிகள் போன்ற) வேறு பயன்பாடுகளுக்கு மடைமாற்றி விடுதல் ஆகியன மேற்கண்ட இடைவெளிகளுக்குக் காரணங்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீர்த் தேக்கத் திட்டங்களில் தொடக்கத்தில் இருந்தே உழவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பயனாளிகளுடைய முழுப் பங்களிப்பும் இருக்கவேண்டும். அப்போதுதான் அத்திட்டங்கள் வெற்றியடையும். சூழலுக்கு ஒவ்வாத வேளாண் செயல்பாடுகள் மற்றும் நுகர்வு தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் பகுதிகளிலும் நீர்த் தேவை அதிகமுள்ள பயிர்களை விளைவிப்பதற்கு உழவர்கள் மறைமுகமாக ஊக்குவிக்கப்படுகின்றனர். ஒரு எக்ட்டேர் நிலப் பரப்பில் கரும்பு விளைவிப்பதற்குச் சுமார் மூன்று கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு எக்ட்டேர் நிலப் பரப்பில் 1000 மி.மீ. மழை பெய்தால் அங்கு கிடைக்கும் நீர் ஒரு கோடி லிட்டர் மட்டுமே! இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இப்போது ஆண்டுச் சராசரி மழை இதைக்காட்டிலும் குறைவு. அந்த மழை நீரின் பெரும்பகுதி அவ்வப் பகுதிகளில் சேமிக்கப்படுவதுமில்லை. ஆகவே, அவை கரும்பு பயிரிடுவதற்கு உகந்த பகுதிகள் அன்று என்பது தெளிவு. ஒரு கிலோ விளைபொருளை உருவாக்குவதற்குச் சில பயிர்களின் தண்ணீர்த் தேவை குறித்த தரவுகள் வருமாறு: பருத்தி 7,000 – 29,000 லிட்டர் இறைச்சி 5,000 – 20,000 அரிசி 3,000 – 5,000 கரும்பு 1,500 – 3,000 சோயா மொச்சை 2,000 கோதுமை 900 – 4,000 உருளை 500

வேறொரு ஆய்வறிக்கையில் பின்வரும் தரவுகள் தரப்பட்டுள்ளன. பல்வேறு ஆய்வாளர்கள் பலப்பல சூழ்நிலைகளில் தொகுக்கும் இத்தகைய தரவுகள் ஒன்றோடொன்று ஒத்திசைவுடன் இருக்கமுடியாது. இருப்பினும் உழவர், நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரும் சிந்தித்துச் செயல்படுவதற்கு இந்தத் தரவுகள் காட்டும் போக்கு (திசை) பயன்படும். சாக்லேட் 1 கிலோ 17196 மாட்டிறைச்சி 1 கிலோ 15415 ஆட்டிறைச்சி 1 கிலோ 10412 பன்றி இறைச்சி 1 கிலோ 5988 வெண்ணெய் 1 கிலோ 5553 கோழிக் கறி 1 கிலோ 4325 பாலாடைக் கட்டி (cheese) 1 கிலோ 3178 ஆலிவ் 1 கிலோ 3025 அரிசி 1 கிலோ 2497 பருத்தி 1 கிலோ 9980 ரொட்டி 1 கிலோ 1608 ஆப்பில் 1 கிலோ 822 வாழை 1 கிலோ 790 உருளை 1 கிலோ 287 பால் 1 லிட்டர் 1020 முட்டைக்கோசு 1 கிலோ 237 தக்காளி 1 கிலோ 214 முட்டை 1 196 வைன் ('ஒயின்') 250 மி.லி. 109 பியர் ('பீர்') 250 மி.லி. 74 தேநீர் 250 மி.லி. 27

1980-களின் பிற்பகுதியில் இதுபோன்ற கடும் வறட்சி வாட்டிற்று. அப்போது அரசுத் துறைகள், ஊடகங்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் இது குறித்து அக்கறை செலுத்தினர். ஆனால் இப்போது அரசுகளும் ஊடகங்களும் மக்களும் தண்ணீர்ச் சிக்கலைக் குறித்துக் கவலைப்படுவதில்லை என்று வருந்துகிறார் மாந்த நேயமிக்க முன்னாள் அதிகாரி அர்சு மேந்தர். அவர் சொல்வதை மெய்ப்பிக்கிறது இக்கட்டுரையின் தலைப்பில் உள்ள டெல்லி தண்ணீர் அமைச்சரின் கூற்று! பகுதி 2 – தீர்வுக்கான சில வழிகாட்டுதல்கள் தண்ணீரின் அளவு, தரம் ஆகிய இரண்டையும் போற்றிக் காத்து அதிகரிப்பது குறித்து நாம் உடனடியாகக் கவனஞ் செலுத்தவேண்டும். இல்லையேல் அடுத்த முப்பதாண்டுகளுக்குள் நம்மில் பெரும்பாலானோர் மிகக் கடுமையான தண்ணீர் மற்றும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்வோம்! இது ஏதோ 'அடுத்தவர் பிரச்னை' என்றும் நமக்கு இந்நிலை வராது என்றும் இறுமாப்புடன் இருந்தால் ஏமாற்றமும் அதிர்ச்சியுந்தான் மிஞ்சும். நம் நீராதரத்தை எப்படிக் காப்பது? சுருக்கமாகச் சொன்னால் “நுகர்வைப் பெருமளவு குறைத்துத் தண்ணீர்ச் சேமிப்பைப் பெருமளவு அதிகரிக்கவேண்டும்!” தண்ணீர்த் தட்டுப்பாடு, சூழல் மாசுபாடு, மனித உரிமை மீறல் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும் கூட்டாகவும் காரணிகளாக இருக்கிறோம். (உண்மையில், பெரும்பாலான சிக்கல்களில் தனி மனிதர் பங்கு, குமுகளாவிய பங்கு எனப் பிரித்து அடையாளம் காண்பதே கடினமானது!) எனவே தீர்வுகளும் இவ்விரு தரப்புகளில் இருந்தும் வரவேண்டும் என்பதையும் மனத்தில் கொள்ளவேண்டும். இனி இது குறித்துச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம். அ. அனைத்துவகை நுகர்வையும் பெருமளவு குறைக்கவேண்டும்! இருபதாம் நூற்றாண்டில் உலக மக்கள் தொகை மூன்று மடங்கு அதிகரித்தது; ஆனால், உலகத் தண்ணீர்ப் பயன்பாடு ஏழு மடங்கு உயர்ந்தது. எனவே, மக்கள் தொகைப் பெருக்கமே நம் இன்னல்களுக்கெல்லாம் தலையாய காரணம் என்று வறியோர் மீது பழி போடுவது மாபெரும் பாவச் செயலாகும்! அதுபோலவே, இந்தியர்களின் சராசரி நுகர்வும் சூழல் தாக்கமும் குறைவு என்று “வறியோர் பின்னால் ஒளிந்துகொள்வதும்” மன்னிக்கமுடியாத குற்றமே! (ஏனெனில், இந்தியர்களில் பெரும்பாலானோருடைய நுகர்வு மிகக் குறைவு!) நாம் பயன்படுத்தும் உணவு, உடை, உறைவிடம் (வீடு), ஊர்தி, நகை, தாள், மின்சாதனங்கள், இலத்திரனியல் கருவிகள் (கணினி, கைப்பேசி ஆகியன) உள்ளிட்ட பொருள்கள், வைப்பகம், தொலைபேசி, மருத்துவம், பொழுதுபோக்கு, சுற்றுலா, கடைகள் உள்ளிட்ட சேவைத் துறைகள், மின்சாரம், சமையல் எரிவளி, கன்னெயம், 'டீசல்' போன்ற ஆற்றல்கள் ஆகிய அனைத்தும் தண்ணீரையும் சூழலையும் மனித உழைப்பையும் பெருமளவு பயன்படுத்தியும் சுரண்டியும் உருவாக்கப்படுகின்றன; தண்ணீரையும் சூழலையும் மிகுதியாக மாசுபடுத்துகின்றன. இவற்றில் சிலவற்றைக் குறித்துச் சற்று விரிவாக இனிக் காண்போம். உணவு உணவுத் துறையில் வேளாண்மை முதன்மைப் பங்கு வகிக்கிறது. (பதப்படுத்துதல், போக்குவரத்து, வழங்கல் ஆகியன உணவுத் துறையின் பிற அலகுகள்.) இந்தியா உள்ளிட்ட 'வளரும்' நாடுகளில் ஏறக்குறைய 80% தண்ணீரை வேளாண்மை பயன்படுத்துகிறது. ஆகவே, தண்ணீரின் அளவையும் தரத்தையும் காப்பதில் வேளாண் துறைக்கு அதிகப் பொறுப்பு உள்ளது. நாம் ஏற்கெனவே பார்த்தபடி, உழவர்கள் க) தம் பகுதியின் மழையளவு, மண்ணின் தன்மை, சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ற பயிர்களை மட்டுமே பயிரிடவேண்டும். (ஆனால், அரசுகள் மிகச் சில பயிர்களுக்கு மட்டுமே ஓரளவு கட்டுப்படியாகக் கூடிய கொள்முதல் விலையை அறிவிக்கின்றன. அதன் விளைவாக உழவர்கள் எப்பாடுபட்டேனும் அந்தப் பயிர்களையும் மலர்கள் உள்ளிட்ட பணப் பயிர்களையும் விளைவிக்கத் தலைப்படுகின்றனர்.) கா) வேதியுரங்களையும் உயிர்க் கொல்லிகளையும் தவிர்த்து இயற்கைவேளாண் முறைகளைப் பயன்படுத்தவேண்டும். நுகர்வோர் செய்யவேண்டியன: க) முடிந்தவரை உள்ளூரில் விளையும் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துதல். கா) உயிர்ம வேளாண்மையில் விளைவிக்கப்படும் பொருள்களை அதிகம் பயன்படுத்துதல்; அதில் ஈடுபடும் உழவர்களுடைய (குறிப்பாகச் சிறு குறு உழவர்கள், உழவுத் தொழிலாளர்கள் ஆகியோருடைய) வாழ்வாதாரம் மேம்படுவதற்குப் பாடுபடுதல். கி) நீர்த் தேவை அதிகமுள்ள விளைபொருள்களைக் குறைவாக நுகர்தல். எ.கா. இறைச்சி, கரும்புச் சர்க்கரை (குறிப்பாக வெள்ளைச் சர்க்கரை). கீ) சிறு தானியங்கள் உள்ளிட்ட நீர்த் தேவை குறைவான உணவுப் பண்டங்களை அதிகம் வாங்குதல். கு) உணவு வீணாவதைப் பெருமளவு குறைத்தல். வீணாகும் உணவை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்பட்ட மனித உழைப்பு, நன்னீர், உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள், மின்னாற்றல், சூழலியல் சேவைகள் ஆகிய அனைத்தும் வீணாவதை எண்ணிப்பார்க்கவேண்டும். நுகர்வோர்-உழவர் ஆகிய இரு தரப்பினரும் கூட்டாகச் செய்யவேண்டியது: மேற்கண்டவை தொடர்பாக அரசுத் திட்டக் கொள்கை வகுப்பாளர்களை நெறிப்படுத்தவேண்டும். தாளாண்மை உழவர் இயக்கம், தற்சார்பு இயக்கம் போன்ற அமைப்புகளில் சேர்ந்து பணியாற்றுவது இதற்கு முதற்படியாக அமையும்! உடை (பருத்தி விளைவித்தபிறகு) ஆயிரம் கிலோ பருத்தித் துணியை உருவாக்குவதற்கு இந்தியப் பஞ்சாலைகள் இரண்டு முதல் இரண்டரை லட்சம் லிட்டர் நன்னீரைப் பயன்படுத்துகின்றன. ஆனால், உலகளவில் செயல்திறன் அதிகமுள்ள ஆலைகள் ஒரு லட்சம் லிட்டர் நன்னீரை மட்டுமே பயன்படுத்துகின்றன. உலக அளவில் ஆலைகளின் தண்ணீர்ப் பயன்பாட்டில் ஐந்தில் ஒரு பங்கு (20%) உடை உற்பத்திக்குப் பயன்படுவதாக உலக வைப்பகம் கணிக்கிறது. இந்தத் துறையில் 8,000 செயற்கை வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன; துணிகளுக்குச் சாயமிடும் ஆலைகளின் கழிவு நீரில் சுமார் 72 கொடிய நச்சுகள் வெளியாகின்றன. கெட்டித் துணியாலான கால்சட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 10,850 லி, பருத்தித் துணி டி-சர்ட்-க்கு 2,720 லி, காதுகளைக் குடைந்து தூய்மைப்படுத்தப் பயன்படுத்தும் பருத்திக் குமிழ் ஒன்றுக்கு 3.6 லி. நீரும் தேவைப்படுகிறது. 1997-2001 காலத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பருத்தித் துணிகளை உற்பத்தி செய்வதற்கு 25,66,000 கோடி லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. உலக அளவில் இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்ட தண்ணீரில் இது 13 விழுக்காடு ஆகும். சீனாவும் இதே அளவு தண்ணீரை (துணியாக) ஏற்றுமதி செய்தது. இவ்விரு நாடுகளும் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன! நுகர்வோர் கடமைகள்: (க) நுகர்வைக் குறைத்தல், (கா) உயிர்ம வேளாண் விளைபொருள்களையும் இயற்கைச் சாயங்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் துணிகள், பாதணிகள் முதலியவற்றை (மட்டும்) வாங்குதல். ஆற்றல் (குறிப்பாக, மின்சாரம்) மனிதர் மற்றும் விலங்குகளின் ஆற்றலைத் தவிர வேறு வகையான ஆற்றல்களைப் பயன்படுத்தும்போது இயற்கைச் சூழலை மாசுபடுத்துகிறோம். குறிப்பாக, புனல் மின் நிலையங்கள், நிலக்கரி, எரிவளி, 'டீசல்', அணுக் கதிர்வீச்சு ஆகியவற்றைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்கள், கதிரொளி மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் “புதுப்பிக்கத்தக்க” மின் உற்பத்தி முறைகள், மின் பகிர்மானக் கட்டமைப்புகள் ஆகிய அனைத்துமே தண்ணீர் உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பெருமளவு மாசுபடுத்துகின்றன என்பதை நாம் ஒவ்வொரு கணமும் உணரவேண்டும். ஆலைகளுக்குப் பயன்படும் நீரில் பெரும்பகுதி அனல்மின் நிலையங்களில் குளிர்விக்கும் ஊடகமாகப் பயன்படுகிறது. எனவே, மின்னாற்றல் தேவையைக் குறைப்பது மிக மிக முதன்மையானது! எடுத்துக்காட்டாக, உலகில் உள்ள 8,359 நிலக்கரி மின் நிலையங்கள் ஆண்டுதோறும் 19,00,000 கோடி லிட்டர் நன்னீரைப் பயன்படுத்துகின்றன. குடித்தல், குளித்தல், சமையல், தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட இன்றியமையாத் தேவைகளுக்கென நாளொன்றுக்கு மனிதர் ஒருவருக்குக் குறைந்தது ஐம்பது லிட்டர் நன்னீர் தேவை என்பது (ஒன்றிய நாடுகளவையின் உறுப்பான) உலக நலக் கழகத்தின் வழிகாட்டுதல்களில் ஒன்று. இதன்படி, சராசரி மனிதரின் குறைந்தளவு ஆண்டுத் தேவை 18,275 லிட்டர். அப்படியானால், நூறு கோடி மக்களுடைய குறைந்தளவுத் தேவை 18,27,500 கோடி லிட்டர். ஆக, நூறு கோடி மக்களுடைய அடிப்படைத் தேவைக்குப் பயன்படக்கூடிய நன்னீரை உலகிலுள்ள 8,359 நிலக்கரி அனல் மின் நிலையங்கள் பயன்படுத்துகின்றன. இந்நிலையில் உலகளவில் மேலும் 2,668 நிலக்கரி மின் நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன! நாம் (நம் வீடுகளில்) தனிப்பட்ட முறையிலும் அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் ஆற்றல் பயன்பாட்டைப் பெருமளவு குறைத்து வாழப் பழகவேண்டும். உறைவிடம் (வீடு) ஒவ்வொரு முறை மின்சாரத்தைப் பயன்படுத்தும்போதும் அதன் சூழலியல் விளைவுகளைக் குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும்! குறிப்பாக, அறையைக் குளிர்விக்கப் பயன்படும் மின்பதனி, துணிகளில் சுருக்கங்களைப் போக்க உதவும் மின்தேய்ப்புப் பெட்டி போன்றவற்றுக்கு மிக அதிக அளவு ஆற்றல் தேவை. இந்தியாவில் 2004 முதல் அறை மின்பதனி விற்பனை ஆண்டுக்குச் சராசரியாக 17% அதிகரித்துவந்துள்ளது! இந்திய மின்பதனிகளின் செயல்திறன் வளர்ந்த நாடுகளில் இருப்பவற்றின் செயல்திறனைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இதே போக்கு நீடித்தால் 2030 வாக்கில் அறை மின்பதனிகளுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மட்டும் தலா 500 MW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 120 கூடுதல் நிலக்கரி மின் நிலையங்கள் இந்தியாவுக்குத் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது! அந்நிலையில் நம் சூழலும் தண்ணீர்ச் சிக்கலும் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு மோசமாகிவிடும் என்பது உறுதி! நாம், வீடுகளைப் பெரிதாகக் கட்டாமல் “அளவாகக்” கட்டவேண்டும்! வீடுகளைச் சூழலுக்கு உகந்தவாறு கட்டவேண்டும். சொகுசு வாழ்க்கையை உதறி எளிமையாக வாழப் பழகவேண்டும்; ஆடம்பரப் பொருள்களால் வீட்டை நிரப்பக்கூடாது. போக்குவரத்து ஒரு மகிழுந்தை உருவாக்குவதற்குச் சுமார் ஒன்றரை முதல் இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. (இது மகிழுந்து உற்பத்தி செய்யும் ஆலைகளில் பயன்படுத்தப்படும் நீரின் அளவு மட்டுமே; மகிழுந்துக்குத் தேவையான அனைத்து மூலப் பொருள்களையும் உற்பத்தி செய்வதற்கு வேண்டிய தண்ணீர் இந்தக் கணக்கில் வரவில்லை.) இந்தியாவில் 2015-இல் இருபது லட்சம் புது மகிழுந்துகள் விற்பனையாகின. (அவற்றைத் தவிரப் பிற நாடுகளுக்கும் மகிழுந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.) அவற்றை உற்பத்தி செய்வதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்பட்டிருக்கும் என்பதைக் கணக்கிட்டுப்பாருங்கள்! அந்தத் தண்ணீர் ஆலையில் இருந்து வெளியேறுகையில் எந்நிலையில் இருந்திருக்கும், அவ்வாறு இயற்கையை மாசுபடுத்துவதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது, அந்தத் தகுதியை நமக்குத் தந்தது யார் அல்லது எது என்பது குறித்தும் சிந்திக்கவேண்டும். மேலும், ஊர்தியைப் பயன்படுத்தும்போது மட்டுந்தானா சூழல் கெடுகிறது? அதன் மூலப் பொருள்களில் இருந்து அதை உற்பத்தி செய்யும்போதும் அதற்கான சாலை வசதிகளை ஏற்படுத்தும்போதும் அதைப் பழுதுபார்க்கையிலும் சூழல் மாசு நேர்கிறது. ஆகவே, “மாசுபடுத்தாத கார்”, “பசுமைக் கார்” போன்ற விளம்பரங்கள் பெரும்பொய்களைப் பரப்புகின்றன. இது தொடர்பாக நாம் கேட்கவேண்டிய வேறு சில வினாக்கள்: நாம் மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு பயணமும் தேவையா? குறிப்பாக, மகிழுந்திலும் வானூர்தியிலும் சுற்றுலாச் சென்று சூழலைக் கெடுப்பது குறித்துச் சிந்திக்கவேண்டும். வாழ்க்கையில் ஓரிரு முறை சென்றால் போதாதா, அதற்குங்கூடப் பொதுப் போக்குவரத்துச் சாதனங்களைப் பயன்படுத்தமுடியாதா எனவும் சிந்திக்கவேண்டும்! பொதுப் போக்குவரத்துத் துறைகளை முறையாக நிர்வகித்து அந்த வசதிகளைப் பெருக்கினால் இவ்வளவு மகிழுந்துகளும் ஈருருளிகளும் தேவைப்படுமா? சடங்குகள், பண்டிகைகள் இந்த (2016-ஆம்) ஆண்டு ஏப்ரல் 22 அன்று தொடங்கி ஒரு மாத காலம் நடக்கும் கும்ப மேளாப் பண்டிகையின்போது ஐந்து கோடி பக்தர்கள் மத்தியப்பிரதேச மாநிலத்தின் உச்சயினி நகரில் சிப்ரா ஆற்றில் குளிப்பார்கள், ஒரு கோடிக்கும் அதிகமானோர் வழிபாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதற்கென அரசு 7500 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ளது. மூவாயிரங் கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. சிப்ரா ஆற்று நீர் மாசடைந்திருப்பதால் குளிப்பதற்கு ஒவ்வாதது. பண்டிகைக்கென அரசு நர்மதை ஆற்றுடன் சிப்ரா ஆற்றை 'இணைத்துள்ளது': ஒரு மணி நேரத்துக்கு 5,10,000 லிட்டர் நீர் நர்மதையில் இருந்து சிப்ராவுக்கு மின்மோட்டர்கள் மூலம் இறைக்கப்படும்! 46,000 கழிப்பறைகள் கட்டப்படும். 2,500 உழவர் குடும்பங்கள் உட்படச் சுமார் 3,500 குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துள்ளன. உழவர்கள் ஏக்கருக்கு 2,40,000 ரூபாய் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் (2016 மார்ச்) யமுனை ஆற்றங்கரையில் சிறீ சிறீ ரவிசங்கருடைய நிறுவனம் நடத்திய மூன்று நாள் கூ(ட்ட)த்துக்கு ஆயிரம் ஏக்கர் பரப்பில் சூழல் கெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இதுபோலவே பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் காசி, ராமேசுவரம், சபரிமலை, திருப்பதி, பழனி உள்ளிட்ட இடங்களுக்கும், முசுலீம்கள் மெக்கா, மெதீனாவுக்கும், கிறித்தவர்கள் வேளாங்கண்ணி, ரோம் போன்ற இடங்களுக்கும் ஆண்டுதோறும் செல்வதையும் தவிர்க்கவேண்டும். ஒரு குடும்பத்தின் பண வசதி அதிகரிக்கையில் திருமணம், புது மனை புகுதல் உள்ளிட்ட விழாக்களுக்கென அக்குடும்பம் செய்யும் செலவும் அதற்கேற்பச் சூழல் மாசுபடுதலும் வேகமாக உயர்கின்றன. இத்தகைய 'நுகர்வு'களைத் தவிர்ப்பது நம் கையில்தான் உள்ளது; இருப்பினும் குமுக அளவிலான பண்பாட்டுத் தாக்கத்திற்கும் இதில் பெரும்பங்கு இருப்பதை மறுக்கமுடியாது. ஆ) தண்ணீரைச் சேமிக்கவேண்டும்! 1. ஆலைகளில் தண்ணீர்ப் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும்; கழிவு நீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தவேண்டும். 2. வேளாண்மையில் வாய்க்கால்ப் பாசனத்தைக் குறைத்துச் சொட்டுநீர்ப் பாசனத்தை அதிகப்படுத்தவேண்டும். (ஆனால், இது மிகுந்த செலவு பிடிப்பது, நெகிழிப் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கும், சொட்டுநீர்க் குழாய்களை எலி கடித்தல் உள்ளிட்ட சிக்கல்கள் உள்ளன.) சூழலுக்கேற்ற பயிர்களை மட்டும் பயிரிடவேண்டும். மூடாக்கிடவேண்டும். இதன் மூலம் நிலம் வெயிலில் காய்ந்து நீர் ஆவியாவதைப் பெருமளவு தடுக்கலாம். இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தவேண்டும்; அளவாக உரமிடவேண்டும். வேறு சில செயலுத்திகள்: சால்களின் இடைவெளியைப் பயிரின் வளர்ச்சிப் பருவத்தைப் பொறுத்து மாற்றியமைத்தல், சீரிய நெல் சாகுபடி. 3. அரசுகள் உள்ளூரளவில் மக்கள் பங்களிப்புடன் மழைநீர்ச் சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும். பெரிய அணைகளைக் கட்டுவதைக் காட்டிலும் சிறு சிறு மழைநீர்ச் சேமிப்புத் திட்டங்கள் சூழலுக்கும் மக்களுடைய வாழ்வாதாரத்திற்கும் மிகவும் உகந்தவை. அவற்றைச் செயல்படுத்துவதற்கு ஆகும் செலவும் குறைவு. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஊழலின்றி முறையாகப் பயன்படுத்தினால் நமக்குத் தேவையான அளவு மழைநீரைச் சேமிக்க இயலும். ராசசுத்தான் மாநிலப் பாலைவனப் பகுதியில் ராசேந்திர சிங் அவர்களுடைய வழிகாட்டுதலில் நூற்றுக்கணக்கான ஊர்களில் தண்ணீர்ப் பற்றாக்குறையை வெற்றிகரமாகப் போக்கியுள்ளார்கள். இ) ஏற்கெனவே இருக்கின்ற நீர்நிலைகளைக் காக்கவேண்டும் அளவு: பல்லாயிரக் கணக்கான ஏரி, குளம், குட்டைகளை மூடியும் எஞ்சியவற்றை முறையாகப் பராமரிக்காமலும் மணல் அள்ளியும் உருக்குலைத்துவிட்டோம். இந்தக் கொடுமைகளைத் தடுப்பதற்கான சட்டங்களை முறையாகச் செயல்படுத்துவதற்கு அரசுகளுக்கு அழுத்தந்தரவேண்டும். மணல், சிமென்ட் ஆகியவற்றைக் குறைவாகப் பயன்படுத்தும் கட்டடக் கலைகளையும் பொறியியலையும் மேம்படுத்திப் பரப்பவேண்டும். தரம்: நகராட்சிகளும் ஆலைகளும் மாசுபட்ட நீரை நீர்நிலைகளில் கலந்து விடுவதால் இந்தியாவின் புறப்பரப்பு நீரில் எண்பது விழுக்காடு மாசடைந்துள்ளது! இந்திய அரசின் நடுவண் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2009-இல் வெளியிட்ட கணக்கின்படி, இந்திய நகரங்கள் 3,800 கோடி லிட்டர் கழிவு நீரை வெளியிட்டன; அதில் முப்பது விழுக்காடு தான் சேகரிக்கப்பட்டது; அந்த 1,140 கோடி லிட்டர் நீரில் இருபது விழுக்காட்டுக்கும் குறைவான நீர்தான் தூய்மைப்படுத்தப்பட்டது. எஞ்சிய கழிவுநீர் ஆறு, குளம், ஏரி, குட்டை ஆகியவற்றில் விடப்பட்டது. இத்தகைய கொடுஞ்செயல்களைத் தடுக்கவேண்டிய அரசுத் துறைகளே அவற்றில் ஈடுபடுகின்றன! இப்போது உள்ள ஏட்டளவிலான மக்களாட்சி முறையின் போதாமையையே இது சுட்டிக்காட்டுகிறது. முடிவாக … நாம் அனைத்துவகை நுகர்வையும் தொடர்ந்து குறைக்கவேண்டும். சூழல் நலனில் அக்கறை கொண்டு, பணியாளர்களைக் கண்ணியத்துடன் நடத்தும் உழவர்கள், வணிகர்கள், ஆலை நிர்வாகங்கள் ஆகியோரை ஆதரிக்கும்வண்ணம் அவர்களுடைய பொருள்களைத் தேடி வாங்கிப் பயன்படுத்தவேண்டும். மாற்றங்கள் நம்மிடம் (தனி மனிதரிடம்) இருந்து தொடங்கவேண்டும். ஆனால், இப்போது உலகை ஆட்கொண்டிருக்கும் முதலாண்மை ('முதலாளித்துவம்') எனும் அரசியற்பொருளாதார முறையில் நுகர்வைத் தவிர்ப்பதென்பது வெறும் தனி மனிதச் சிக்கல் மட்டும் அன்று! இதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு இதோ: இந்த ஆண்டு விளம்பரங்களுக்கென உலக அளவில் நிறுவனங்கள் 56,100 கோடி டாலர் செலவு செய்யவுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகை தோராயமாக 800 கோடி; அதில் சுமார் 200 கோடிப்பேர் மிகவும் வறியவர்கள். அப்படியானால் மீதமுள்ள 600 கோடிப்பேரைக் கவர்வதற்கென ஓராண்டுக்கான விளம்பரச் செலவு 56,100 கோடி டாலர். அதாவது, தலா சுமார் 90 டாலர் (ஏறக்குறைய 6,030 ரூபாய்). இந்த உளவியல் தாக்குதலை நம்மில் எத்துணைப் பேர் வெற்றிகரமாக எதிர்கொள்ளமுடியும்?! இந்நிலையில், பணப் பயிர்களை நாடுதல், வேதிப்பொருள்களை அளவுக்குமீறிப் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் உழவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்று முதலாளிகள், அரசியல்வாணர்கள், அதிகாரிகள், உள்ளிட்டோர் தூற்றுவது முறைகேடான செயலன்றோ! உழவர்களும் இந்தக் குமுகத்தில் தானே வாழ்கின்றனர்? இந்தக் குமுகத்தின் அரசியற் பொருளாதாரப் பண்பாட்டுச் சூழலில் உணவு, உடை, வாழிடம், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு, சடங்குகள் போன்றவற்றுக்கென உழவர்களுக்கும் பணம் தேவைப்படுவது நியாயந்தானே? 'மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், சூழல் காப்புக் குறித்து அக்கறைப்படாமல் நுகர்ந்து மகிழலாம், ஆனால் உழவர்கள் மட்டும் நம் இயற்கைச் சூழலைக் கண்ணுங் கருத்துமாகக் காக்கவேண்டும்' என்பது எவ்வகையில் நியாயம்? அரசியல் சட்டத்தில் உள்ளபடி அனைவருக்கும் அருகமை அரசுப் பள்ளிகளில் செலவில்லாத, தரமான கல்வி, தரமான பொது மருத்துவம் ஆகியவற்றையும் அடிப்படை வேலை வாய்ப்பையும் தருமாறு நம் அரசுகளை மாற்றவேண்டும். இதுவரை நாம் எழுப்பிய வினாக்களுக்கான விடைகளையும் எந்தச் செயல்கள் நல்லவை எவை தீயவை, எவை பாவச் செயல்கள் போன்றவற்றையும் யார், எப்படி முடிவு செய்வது? அனைத்து மக்களின் நேரடிப் பங்களிப்புள்ள உண்மையான மக்களாட்சி முறையும் அதற்கு ஏற்ற பொருளாதார முறையும் இதற்கு இன்றியமையாத் தேவை. இந்தத் திசையை நோக்கி நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும்!

[கட்டுரையாளர் குறிப்பு: 'சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லியவண்ணம் செயல்!” என்ற திருக்குறள் எனக்கும் பொருந்தும். நான் நுகர்வைப் பெருமளவு குறைத்துள்ளேன். ஆனால் இன்னும் நான் இத்திசையில் நெடுந்தொலைவு செல்லவேண்டும் என்பதை உணர்கிறேன்!]

அமெரிக்கா the united states of america ஆசுத்திரேலியா australia ஆலிவ் olives இந்தோனேசியா indonesia இலத்திரனியல் ('மின்னணுவியல்') electronics ஈருருளி two-wheeler உயிர்ம வேளாண்மை organic farming உலக நலக் கழகம் world health organization எக்ட்டேர் (இரண்டரை ஏக்கர்) hectare ஒன்றிய நாடுகளவை the united nations ஓலிப் பண்டிகை holi கபில் மிசுரா kapil misra கன்னெயம் ('பெட்ரோல்') petroleum காதுகளைக் குடைந்து தூய்மைப்படுத்தப் பயன்படுத்தும் பருத்திக் குமிழ் cotton ear buds குமுகம் ('சமூகம்') society கெட்டித் துணியாலான கால்சட்டை jeans pants சமையல் எரிவளி cooking gas சிப்ரா kshipra சீனா china சோயா மொச்சை soyabeans நடுவண் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் central pollution control board நெகிழி plastic ப்ரெசீல் brazil பாக்கிசுத்தான் pakistan பாதணிகள், slippers, shoes புறப்பரப்பு நீர் surface water பொருளாதாரக் கணக்கெடுப்பு economic survey மகாராட்டிரா maharashtra மராத்வாடா marathvada மின்தேய்ப்புப் பெட்டி electric iron மின்பதனி airconditioner ராசசுத்தான் rajasthan ராசேந்திர சிங் rajendra singh லாட்டூர் latur வட்டாரம் block வைப்பகம் ('வங்கி') bank

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org