தரம்பால் என்னும் வரலாற்று ஆசிரியர் - சமன்வயா ராம்


[சென்ற மாதம் திரு. தரம்பால் அவர்கள் அயோத்திய பாப்ரி மசூதி இடிப்பு குறித்து ஆற்றிய உரையின் தமிழாக்கத்தின் ஒரு பகுதியை பார்த்தோம், இந்த மாதம் அந்த உரையின் இதர பாகத்தை பார்கலாம்.]

“நான் உங்களுக்கு மற்றொரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியர்களின் உள்ளுணர்வு மற்றும் அவர்கள் எதனை முக்கியமாக கருதுகின்றனர் என்பதை எனக்கு சுட்டிக்காட்டிய முக்கிய அனுபவம் இது. 1960 ஆம் ஆண்டு நான் ஒருமுறை குவாலியரிலிருந்து டில்லிக்கு தொடர்வண்டி மூலம் பயணிக்க நேர்ந்தது. காலை 10 மணியளவில் நான் அந்த வண்டியில் குவாலியரில் பயணிக்க துவங்கினேன், ஏறத்தாழ 7 மணி நேரம் பயணமது. மிகவும் மக்கள் நெரிசல் இருந்தது, சிலர் தங்கள் இருக்கையில் எனக்கு உட்கார இடமளித்தார்கள். என்னுடன் பயணித்தவர்களை பார்வையிடலானேன். அப்போது 12 பேர் கொண்ட ஒரு குழுவை காண நேர்ந்தது. அவர்களில் 3-4 பெண்களும் 7-8 ஆண்களும் அடக்கம். அவர்கள் ஏறத்தாழ 3 மாதங்கள் புந்தயாத்திரையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவர்களை நான் சந்தித்தபோது, ராமேஸ்வரத்திலிருந்து திரும்புவதாக் தெரிவித்தனர்.

அவர்களுடன் பலவிதமான மூட்டைகளை நான் பார்க்க நேர்ந்தது. அதனுடன் சில மண்பானைகளும் இருந்தது. அந்த மண் பானைகளில் என்ன இருந்தது என்று கேட்டபோது அவர்கள் அதில் தாங்கள் உணவு எடுத்துச்சென்றதாக தெரிவித்தனர். அவர்கள் லக்னோவின் அருகில் அமைந்துள்ள இரு கிராமவாசிகள், தங்களுக்கு தேவையான கோதுமை, சர்க்கரை, நெய் போன்ற பொருட்களை தங்களுடன் எடுத்துச்சென்று கொண்டிருந்தனர்.

அந்த குழுவை சேர்ந்த பெண்கள் தொடர்வண்டீயில் தரையில் அமர்ந்திருந்தனர், கூட்ட நெரிசலில் பலரும் அவர்கள் மேலும் அவர்களது உடைமைகள் மீதும் மிதித்துக்கொள்ள நெர்ந்தது. அந்த பெண்கள் அவர்கள் உணவு பானைகள் மாத்திரம் யாருடைய காலும் படாதவாறு பார்த்துக் கொண்டனர்.

நாங்கள் பேசத்துவங்கினோம். அவர்கள் பல ஜாதிகளை சேர்ந்தவர்கள் என்பதை ஆச்சிரியத்துடன் நான் “எப்படி சாத்தியம்?” என்று வினவியபோது அவர்கள், “புனித யாத்திரையில் ஜாதி பாகுபாடுகள் கிடையாது” என்று கூறினர். இது எனக்கு ஆச்சிரியத்தை அளித்தது. அப்போது, எனக்கு 38 வயது இருக்கும், இந்தியாவில் பெரும்பாலான மக்களைபோலவே நானும் நமது சாதாரண மக்களின் வாழ்வைகுறித்து அறியாமையிலேயே இருந்தேன்.

அவர்களிடம் நான், “நீங்கள் மதராஸ் சென்றீர்களா? பம்பாய் சென்றீர்களா?” என்று வினவியபோது அவர்கள், “ஆம் எங்கெல்லாம் சென்றோம், ஆனால், நாங்கள் அந்த நகரங்களில் வழியாக மற்ற புனித இடங்களுக்கு பயணித்தோம்” என்றனர். இதே போல தலைநகர் டில்லி செல்வீர்களா என்ற கேள்விக்கும், “ஆம், ஆனால் அங்கு தங்கவில்லை, தில்லிவழியாக நாங்கள் ஹரித்துவார் செல்கின்றோம்” என்று தெரிவித்தார்கள்.

அவர்ளுடன் அந்த 5-6 மணி நேரம் உரையாடலிற்கு பிறகு, “நாம் எந்த இந்தியாவை ஆட்சி செய்யமுயல்கிறோம்? நேரு நிற்மாணிக்க நினைத்த நவீன நகரங்கள் நிறைந்த இந்தியாவையா, அல்லது நமது மக்கள் இயல்பாக நாடும் இந்தியாவையா? நமது சாதாரண மக்களுக்கு பெரிதும் ஈர்ப்பு இல்லாத, நகரங்களையும், நவீன பல்கலைகழகங்களையும் யாருக்காக நாம் நிறுவி வருகிறோம்?” என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. என்னுடன் பயணித்த இந்த மக்கள் இந்தியாவின் உண்மை பிரதிபலிப்பு என்பதை நான் உணர்ந்தேன். என்னையும், நேருவையும் விட அவர்கள் இந்தியாவின் உண்மை நிலையை பிரதிபலித்ததாகவே நான் உணர்ந்தேன்.

அதே சமயத்தில், ஏறத்தாழ நான் இந்த ரயில் பயணித்த ஒரு மாதத்திற்கு பிறகு, இங்கிலாந்து ராணி எலிசபெத் இந்தியாவை சுற்றுப்பயணம் செய்வதாக செய்திகள் வெளியாயின. ராணி இந்தியாவிற்கு விஜயம் செய்யும் நாட்களில் அவர்களுக்கு சமைக்க மளிகை சாமாங்களும், பாத்திரங்களும், சமயல்கார்ர்களும்கூட ராணியுடன் பயணித்ததாக செய்திகள் தெரிவித்தன. நமது சாதாரண கிராமத்து மக்களைபோலவே இராணியும் பயணித்தது எனக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. நமது சாதாரண மக்கள் இங்கிலாந்து ராணியை காட்டிலும் எந்த விதத்திலும் தங்களை தாழ்மையாக கருதவில்லை1. அவர்களும் இந்த நாட்டில் அரசர்களாகவே பயணிக்கின்றனர். ராணியார் நவீன இந்திய நகரங்களில் பயணித்தார், நமது மக்கள் இந்தியாவின் பழமையான புனிதமான ஊர்களுக்கு பயணிக்கின்றனர், இவர்களில் வித்தியாசம் இவ்வளவுதான். மற்றபடி, நமது மக்கள் உண்மையிலேயே தங்களை ஒரு அரசர்க்குலத்தை போன்றே வாழ்ந்துவருகின்றனர். இதில் இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிரஸ்துவர்களும் ஒன்று போலவே இருந்து வந்ததாகவே நான் உணர்ந்தேன்.

நம்மைப்போன்ற நகரத்தில் வாழும் உயர்மட்ட மக்களின் வாழ்வும், வாழ்கை விழுமியங்களும் இந்தியாவில் வாழும் பெரும்பாலான மக்களின் வாழ்விற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இன்று பேசப்படும் ஹிந்துத்துவமும் நமது பெரும்பாலன மக்கள் வாழ்வில் உள்ள ஹிந்துமதத்தை குறிக்கவில்லை என்றே நான் நம்புகிறேன். இதுபோலவே, நமது மெரும்பாலானா இஸ்லாமியர்களும் ஷாஹி இமாம் போன்ற அவர்களில் தலைவர்கள் பிரதிபலிக்கும் இஸ்லாமியத்தை சாராதவர்கள் என்றே எனக்கு தோன்றுகின்றது.

ஏன் நாம் இவரை ஷாஹி (அதாவது அரசனுடைய) இமாம் என்று அழைக்கின்றோம் என்று எனக்கு விளங்கவில்லை. இவர் கொஞ்சம் காலம் மாத்திரம் முகலாய ஆட்சி காலத்தில் மன்னர்களின் இமாமாக இருந்திருக்கலாம், ஆனால் அதற்காக இன்னமும் இவரை அவ்வாறு அழைக்கவேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லை. அறிஞர்கள் மத்தியில் இத்தகைய பல போலி ‘மன்னர்’ காலத்து பட்டங்கள், நமது உண்மை அரசர்கள் (சாதாரண மக்கள்) உடன் இவர்கள் உறவாடுவதை குறைக்கின்றது.

உண்மை சொல்லப்போனால் நமது நாட்டில் முகலாய ஆட்சிகாலமே மிக அதிக அளவு அமையவில்லை. அவர்களது என்றுமே இந்தியாவை முழுவதுமாக ஆளவுமில்லை. அவர்களது ஆட்சியின் கீழ் நிகழ்ந்த கொடுமைகளை மிகைபடுத்தியதற்கு பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.ஸ்.ஸ். நிறுவனமுமே காரணம் என்று நான் கருதுகிறேன். இத்தகைய மிகைபடுத்திய திரித்தலை முதலில் செய்தவர்கள் வரலாற்று வல்லுனர்கள், ஆனால் அவர்களை நாம் புறந்தள்ளிவிடலாம், இவர்களை அவ்வாறு ஒதுக்கமுடியாது.

நமது நாட்டில் முகலாய சாம்ராஜியம் 1200 களிலிருந்து 1690 வரைதான் இருந்தது. ஆங்கிலேயர்கள் முகலாய மன்னர்கள் பெயரில் ஆட்சி செய்வதாக 1857 வரை காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர்களை முன்னிருத்தி ஆங்கிலேயர்கள் தாங்களே ஆட்சி செய்து வந்தனர். வெறும் பட்ட்த்தின் அளவில் மாத்திரம் நமது மன்னர்களை ஆட்சி செய்வதாக கணக்கு காண்பித்து, உண்மையில் அவர்கள் ஆட்சிசெய்வது ஆங்கிலேயர்களின் யுக்தி, அவர்கள் தந்த பட்டங்களில் மயங்கி நாமும் அவ்வாறே அவர்களை ஆட்சிசெய்ய அனுமதித்தோம், அத்தகயை பட்டங்களை கொண்டாடினோம். ராம் மனோகர் லோஹியா கூறுவார், “நேரு மாத்திரம் தான் ஒரு உயர்ந்த ஆட்சியர் பரம்பரையை சேர்ந்தவர் என்று ஜம்பம் கூறாமல், தான் ஒரு சாதாரண தானேதார் மகன் என்று ஒப்புக்கொண்டிருந்தால், அவருக்கும், நாட்டிற்கும் அது மேலும் நல்லதாக இருந்திருக்கும்” என்று. இவ்வாறு சில ஆயிரம் இஸ்லாமிய குடும்பங்களும் தங்களை ஏதோ ஒரு சாம்ராஜிய சக்கிரவர்த்தயின் சந்த்தியினர் என்று கூறிக்கொண்டு அதில் வீண் ஜம்பம் அடித்துக் கொண்டு உள்ளதில் என்ன பயன்?

நாம் ஏன் நம்மை சாதாரண மனிதர்களின் வாரிசுகள் என்று கூறுவதில் பெருமை கொள்ளுவதில்லை? அல்லது, நாம் ராமர்வழியிலேயோ அல்லது கிருஷ்ணர் வழியிலேயோ வந்தவர்கள் என்று நமது புராண கதாபாத்திரங்களுடன் உறவு கொண்டாடுவதில் என்ன தவறு? அப்படி செய்வோமேயானால் நம் நாட்டின் பெரும்பாலான மக்கள் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் சொந்தமாவார்கள். இவ்வாறு மொத்த நாடும் ஒன்றுபடும், அதனை தவிர்த்து, நம்மை தனிமைப்படுத்தி உயர்த்திக் காட்டும் பகட்டுவாதிகளின் வாழ்கையில் நமது பெரும்பாலான மக்கள் அக்கறை கொள்ளுவதில்லை, அதனாலேயே நமது நாட்டில் எதுவும் பெரிதாக மாற்றம் நிகழ்வதில்லை.

இத்தகைய கருத்துக்களை நான் நண்பர்களிடனும், அறிஞர்களிடனும் பகிர்ந்துகொண்டால் அவர்கள், “மையத்தன்மை நமக்கு முக்கியமானது, நாம் ஒரு மையத்தன்மையினாலான ஆட்சியினால்தான் முன்னேற முடியும். அவ்வாறே இதர உலக நாடுகள் முன்னேறியுள்ளன என்று தெரிவிக்கின்றனர். ஆனால் எனக்கு புரியாத்து என்னவென்றால், நாம் ஏன் உலகத்தை அப்படியே பின்பற்றவேண்டும்? நமக்கு மையத்தன்மை கொண்ட அரசாங்கமானது (மற்றும் அதனுடன் கூடிய பகட்டு பட்டங்களும்) ஒத்துவரவில்லையென்றால் நாம் அதை ஒதுக்குவதை யாரால் தடுக்க முடியும்? அத்தகைய ஒரு மைய அரசைச் (மற்றும் அதன் நகரமயமாக்கல் ஒத்த ‘வளர்சியை) சார்ந்த அரசியல் நமது மக்களுக்கு ஒத்துவரவில்லையென்றால் அதனைகொண்டு நாம் என்ன சாதித்துவிட முடியும்? வெறும் பாகிஸ்தானிடகிருந்தும், வங்க தேசத்திடமிருந்தும் நம்மை காக்கவே நமக்கு மைய அரசு சார்ந்த அரசிய முறை தேவையென்றால், அத்தகைய நாடு இருந்து என்ன பயன்?

நமது நாட்டின் அரசு ஆளும் முறை சாதாரண மக்கள் எதை விருக்புகிறார்களோ அதனை சாதிக்க வல்லமை வாய்ந்த்தாக இருக்க வேண்டும். அதற்கு முதல் கட்டமாக நாம் எதை நாடுகின்றோம் என்பதை தெளிவாக உணரவேண்டும்.

அல்லது, நாம் ஒரு வல்லரசுக்கு பாத்தியப்பட்ட நாடு என்பதை தெளிவாக பறைசாற்ற வேண்டும். ஒரு 20 வருடங்களுக்கு நாம் ரஷ்ய நாட்டிற்கு பாத்தியப்பட்டிருந்தோம், பிறகு நாம் அமேரிக்காவிற்கும் இதர ஐரோப்ப நாடுகளுக்கும் பாத்தியப்பட வாய்ப்புள்ளது. இதனை பகிரங்கமாக பறைசாற்றிவிட்டால் எல்லோருக்கும் ஒரு நிம்மதி, என்றாவது ஒருநாள் அத்தகைய பாத்தியப்பட்ட நிலையிலிருந்து வெளியேறுவோம் என்ற ஒரு நம்பிக்கையும் பிறக்க வாய்ப்புள்ளது. நாம் அதுவும் செய்யமாட்டோம்.

இத்தகைய ஆட்சிமுறையிங்கீழ் நமது சமூகங்களும், மக்களும், நாடும் சிதறுவதற்கான வாய்புகள் அதிகம். இத்தகைய தருணங்களில் (இவ்வாறு திரு. தரம்பால் சில சமயங்கள் கணிக்கக்கூடிய சமூக போக்கு அவருடைய ஆராய்ச்சியின் மூலமாக சமூகங்களையும், நாகரீகங்களையும் அவற்றின் போக்கையும் நூற்றாண்டுகள் அளவில் அவர் புரிந்துவைத்துள்ள நிலையிலிருந்து வெளிப்பட்டவை என்பதை நாம் நினைவுகூரவேண்டும் – கட்டுரை ஆசிரியர்) சாதாரண மக்கள் பலதரப்பட்ட சவால்களை சந்திக்கவேண்டியுள்ளது. அவர்களின் குறைகள் என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது ஆச்சிரியமளிக்கவில்லை. இவற்றில் சில மிக பழையவை, சில புதிய குறைகள். சில சமயங்களில் அவர்கள் ஒன்று கூடி தங்கள் சவால்களை ஒன்றாக எதிர்கொள்ளவும், குறைகளை களையவும் முற்படுவது சகஜமே.

கடந்த சில மாதங்களாக ஆந்திர மாநிலத்தில் குடிபழக்கத்தை எதிர்த்து பெண்கள் ஒன்று திரண்டு கிளர்ச்சி செய்து வருவதை நாம் ஊடகங்களில் வாயிலாக அறிகிறோம். பல்லாயிரம் பெண்கள் இந்த இயக்கத்தில் பங்குகொள்வதாக தெரிகின்றது. இது ஒரு கவனிக்கப்படவேண்டிய நிகழ்வு. இத்தகைய பெண்கள் இன்று குடிப்பழக்கத்தை எதிர்த்து செயல்பட்டால், நாளை இவர்கள் இதர குறைகளையும் தாங்களே ஒன்று சேர்ந்து, களைவதற்கு வாய்பு அதிகம். இந்த கண்ணோட்டத்தில்தான் நான் அயோத்தி நிகழ்வையும் நோக்குகின்றேன்.

நாம் அயோத்தி விஷயத்தை முற்றிலும் ஒதுக்கிவிடலாம், இங்கு ஒரு மசூதி இருந்தால் என்ன என்று ஒதுக்கிவிடலாம். இதனை பெருதுபடுத்த காரணமே இல்லை என்று இதனை தள்ளிவிடலாம். இந்தியாவில் ஏறத்தாழ 50 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் வாரணாசிக்கு செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அங்குள்ள விஸ்வநாதர் கோயிலுக்கும் செல்லக்கூடும். அப்படிப்பட்டவர்கள் யாரும் அங்கு ஒரு மசூதி இருப்பதை பொருட்படுத்துவதில்லை. அவர்களுக்கு வேறு யாரேனும் அப்படியொரு மசூதி இருப்பதை சுட்டிக்காட்டும் வரை அவர்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வாய்பும் இல்லை. இப்படித்தான் அவர்கள் கவனம் அயோத்தி பாப்ரி மசூதி விஷயத்திலும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இது வெறும் ஒரு ஆர்.ஸ்.ஸ். அல்லது விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பா.ஜா.க. மாத்திரமே செய்யவில்லை. இந்த நாட்டில் பல சந்நியாசிகள் தொடர்ந்து பயணித்து வருகிறார்கள், அவர்கள் இத்தகைய விஷயங்களின்பால் மக்களின் கவனத்தை ஈர்க முயற்சிக்கின்றனர். ஆரம்பத்தில் மக்கள் இதனை பொருட்படுத்தாமல் இருந்தாலும், இத்தகைய தொடர் உந்துதலினால் அவர்களும் இது நிச்சியியமாக ஒரு குறையாகவே நினைக்கின்றனர். ஒரு காலகட்ட்த்தில் இது மக்கள் தாங்களே முன்வந்து களைய வேண்டிய ஒரு மானப்பிரச்சினையாக நோக்குகின்றனர்.

நமது மக்கள் பல்வேறு அவமானங்களால் அவதிப்படுகின்றனர், இதனால் பல சமயங்களில் அவர்களின் சுயமரியாதை குரைந்து, அவர்களது வாழ்வும் குறுகி, ஒரு மாண்பு இல்லா தனிப்பட்ட, சமூக உணர்வில்லாத வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இத்தகைய வாழ்விற்கும் ஒரு எல்லை உள்ளது. இத்தகைய வாழ்கை வட இந்தியாவில் 300 – 400 வருடங்களாகவே மக்கள் வாழ்ந்து வருகின்றனர், தென் இந்தியாவில் இந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், இதன் தாக்கம் தென் இந்தியாவிலும் உள்ளது. இத்தகைய அவமானப்பட்ட மக்கள் தாங்கள் ஒரு சுதந்திர நாட்டில் வசிக்கின்றனர் என்று எவ்வாறு உணர்கின்றனர்? சில சமயங்களில் அவர்களுக்கு சில சுதந்திரத்தை தேர்வுசெய்ய வேண்டியுள்ளது. நான் ஒரு

கூலித்தொழிலாளியாகவோ அல்லது ஒரு கிராமப்புற கைவிஞைஞனாகவோ என்னை எவ்வாறு சுதந்திரமான் உணர்கிறேன்? இன்று என் வாழ்கை குறித்து யாரேனும் சிந்திக்கின்றார்களா? நான் பேசச்சென்றால் மாவட்ட ஆட்சியர் எழுந்து நின்று என் கையை குலுக்குகிறாரா? திட்ட்த்துறையின் அதிகாரி என்னை சரிசமமாக நடத்துகின்றாரா? என் வாழ்கைகு அதியாவசியமான உணவு, உடை, உறைவிடம் குறித்து பெரிய அளவில் இவர்களால் ஏதும் செய்துவிட இயலவில்லை. ஆனால் சில சமயங்களில் இவர்களும் தங்கள் கோபத்தையும், அவமரியதையை சகிக்க இயலாத தன்மையையும் வெளிப்படுத்த நேரத்தையும், சந்தர்பத்தையும் நிச்சயமாக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

1770களில் ஆங்கில நீதிபதி லா மெய்ஸ்ட்ரே என்பவனால் எழுதப்பட்ட ஒரு ஆவணத்தில் இந்திய விவசாயிகள் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. இந்த ஒரு பக்க ஆவ்ணத்தில், இரு வங்காள விவசாயி தனக்கு பல நூற்றாண்டு காலம் நடந்த இன்னல்களை விவரிக்கின்றார். கடைசியில், இந்த இன்னல்கள் எல்லாம் ஒரு நாள் களையப்படும் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றார். இப்படி ஒரு நாள் வரும், ஒரு நாள் வரும் என்று பல நூறு வருடங்களாக நமது விவசாயிகளும், சாதாரண இந்தியர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்…

(தொடரும்).

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org