வளர்ப்பதோ அழிப்பதோ - கவிஞர் சாரல்


புதரென விரிந்த புல்முடி வருடின
முதிர்ந்து பழுத்தே உதிர்ந்த இலைகள்
இலையுதிர் காலம் எங்கு நோக்கினும்
இலைகள் பரப்பிய இயற்கை விரிப்பாம்
காய்ந்தவை தானெனக் கவனம் குறைந்தால்
சாய்வோம் நன்றாய்ச் சர்ரெனச் சறுக்கியே
மொட்டையாய் மரங்கள் மொழிவதும் என்னவோ
பட்டெனப் பசுமை படர்வதன் குறிப்போ
வளர்சிதை மாற்றம் வருடந் தோறும்
குளிர்பூந் தென்றலைக் கொடுக்கும் நேரம்
மொட்டும் பூவும் முழுதாய் நிறைந்தே
கொட்டிக் கிடக்கும் கொள்ளை அழகாம்
புள்ளினம் பலவும் பூந்தே னீக்களும்
கள்ளினை உண்ணக் கான்மரஞ் சுற்றும்
காய்களும் கனிகளும் கால்நடை உணவும்
தேயா தளிக்கும் தெவிட்டாக் களஞ்சியம்
உணவுச் சுழற்சியால் உயிர்பல பேண
அணிவகுத் திருக்கும் அழகாம் மரங்கள்
பொல்லாக் கரிவளி பொய்க்கா தீர்த்தே
நல்வாழ் வளிக்கும் நற்றுணைச் செல்வம்
வளர்ப்பதோ அவற்றை வம்பாய்ச் சாய்ப்பதோ
வளமதைப் பொறுத்தே வாய்க்குந் தானே!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org