குமரப்பாவிடம் கேட்போம் - பாபுஜி


உணவுக்கும், உழவுக்கும் ஒரு வரைபடம்

(சென்ற இதழ்த் தொடர்ச்சி)

குறுகிய காலத்தில் செய்யவேண்டியவை

குறுகிய காலத்தில் நாம் எடுக்கவேண்டிய சில நடவடிக்கைகளை இப்போது பார்ப்போம்.

உற்பத்தியாளர்களை ஊக்குவித்து அவர்களின் விளைபொருட்களை அரசின் கொள்முதல் கட்டாயங்களிலிருந்து விடுவிப்பது…சிறு உற்பத்தியாளர்கள் (விவசாயிகள்) தங்களின் உணவுத்தேவை போக (தானியங்களின் அடிப்படையிலான உணவுமுறை) தலைக்கு நாளொன்றுக்கு 16 ஔன்சுக்கு மேலே உற்பத்தி செய்வதை மட்டுமே அரசின் கொள்முதல் கோட்பாடுகள் தங்களின் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள கொள்முதல் கோட்பாடுகள் சிறு உற்பத்தியாளர்களை சாறு பிழிந்தும், பெரு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாகவும் இருப்பதால்தான் பெரு உற்பத்தியாளர்கள் தப்பித்து விடுகின்றனர். இவ்வாறு தப்பித்தவர்கள் தம் விளைபொருட்களை (கொள்முதல் போக மிஞ்சியவை) கருப்புச்சந்தையில் கொள்ளை லாபத்திற்கு விற்று நாடு முழுவதும் ஊழல் உற்பத்தியாகும் நிலமாக மாற்றிவிடுகின்றனர்.

நம் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க நம் அரசு செய்யும் செலவும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வரலாறு காணாத அளவில் வந்தவண்ணம் இருக்கும் அகதிகளுக்கு செய்யும் செலவும் நம் சமுதாயத்தின் மீதான ஒட்டுண்ணிகளின் அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளன. இந்த அழுத்தம், சுமை, குறையவேண்டுமேன்றால் இவ்விரு குழுக்களும் உட்பத்தியாளர்களாக மாறவேண்டும். நம் ராணுவம் யுத்தகாலம் தவிர மற்ற காலங்களில் தன் சொந்த உணவுத்தேவையை தானே உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படவேண்டும். அதுபோலவே அகதிகளும் தங்களுக்குதேவையான உணவை தாங்களே உற்பத்தி செய்யும் வகையில், அதாவது உற்பத்தியாளர்களாக மாறி ஒட்டுண்ணி நிலையிலிருந்து விடுபடவேண்டும். பெரு நகரங்களில் அவர்களுக்கு பெட்டிக்கடைகள் வைத்துகொடுத்து அதன் மூலம் வெளிநாட்டுப்பபொருட்களை அவர்கள் விற்பனை செய்து பிழைப்பதை உடனே நிறுத்தவேண்டும்.

பணப்பயிர்களை விளைவிக்கும் நிலங்களை மிகக்கவனத்துடன் கண்டுபிடித்து தடை செய்யவேண்டும். பஞ்சம் தலைவிரித்தாடும் நாட்டில் உணவுப்பயிர் தவிர்த்து வர்ஜினியா புகையிலை (வெளிநாட்டு புகையிலை) போன்ற பணப்பயிர்களை பயிர் செய்வதற்கு எந்தவிதமான சமாதானமும் சொல்ல இயலாதல்லவா (இவ்வாறு பயிரிடப்படும் நிலப்பரப்பு சிரியதுதானே என்ற கண்துடைப்பு சமாதானத்தையும் ஏற்கக்கூடாது).

நீண்டகால நடவடிக்கைகள்

உற்பத்தியை பெருக்க அநேக நீண்டகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அவற்றுள் சில இங்கே தரப்பட்டுள்ளது: நீர்நிலைகளை சரி செய்வது, ஆறுகளில் ஓடும் ஒவ்வொரு சொட்டு நீரையும் பயன்பாட்டில் கொண்டுவருவது, கரைகளை உயர்த்தியும் மரங்களை நட்டும் மண்ணரிப்பை தடுப்பது, காடுகளை மீளுருவாக்கம் செய்வது, புவிச்சரிவிர்கேற்ப கரைகள் அமைப்பது…

இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் பயனற்ற மற்றும் அதிக செலவுகள் நிறைந்த விவசாய ஆய்வுகளை திசை திருப்பி அந்த நிதி, மனித ஆற்றலை மேலான விதைகளை பெருமளவில் உற்பத்தி செய்வதற்கும் அவ்விதைகளை நிஜமான சாகுபடியாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் பயன்படுத்துவது…

ஆய்வுக்கூடங்களை தம்மிடம் கொண்ட விவசாயக்கல்லூரிகள் பஞ்சத்திற்கெதிரான காப்பீடாக கருதப்படவேண்டும். உச்ச ஊதியத்துடன் இத்துறையில் வேலை பார்க்கும் ஆய்வாளர்கள், மக்களுக்கு உணவுத்தட்டுப்பாடு வருமானால் தமது வேலை போய்விடும் என்ற புரிதலுடன், பொறுப்புணர்ந்து செயல்படவேண்டும். ஆய்வுக்கூட வேலைகளிலும் கள ஆய்வுகளிலும் ஈடுபடுவதில் மட்டுமே பெருமையடையாமல் தம் கண்டுபிடிப்புகள் நாட்டின் மூலை முடுக்குகள் எங்கும் சென்று சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் தம் பணியை செவ்வனே செய்யவேண்டும். நம் விவசாயத்துரையும் தம் எல்லைகளை விரிவுபடுத்தி நம் நாட்டின் எழுத்தறிவில்லாத விவசாயிக்கும் அறிவியல் ஆய்வுகளின் மகத்தான முன்னேற்றங்கள் எளிதில் சென்றடையும் வண்ணம் 'மாதிரி' பண்ணைகளை நாடெங்கும் அமைத்து அதன் மூலம் மக்களுக்கு விவசாய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அறிவியல் ஒளியை பரவச்செய்யவேண்டும்.

கால்நடை வளர்ப்பு

நமது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக விவசாய நடவடிக்கைகளுக்கு அச்சாணியாக இருப்பவை நம் காளைகள். அவை நிலத்தை மேம்படுத்துவது, நீர் இறைப்பது, தானியங்களை கதிரிலிருந்து பிரிப்பது (threshing) பொருட்களை சுமந்து இடம் மாற்றுவது என்று எல்லா வேலைகளுக்கும் ஆணிவேராக உள்ளன. பசுக்கள் பால் கொடுப்பது மற்றும் காளைகளை ஈனுவது மட்டுமல்லாம 'உரத்தொழிற்சாலைகளாகவும்' உள்ளன. மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீர்தான் நம் நிலவளத்தை மேம்படுத்தும் உச்சபட்ச காரணிகள். நம் கவனமின்மையினாலும், நெடு நீண்ட ஆண்டுகள் அன்னியரின் ஆதிக்கத்தில் இருந்ததாலும் நமது கால்நடை வளங்கள் கவனிப்பாரின்றி குன்றிவிட்டன. நம் அரசும் நல்லெண்ணம் கொண்ட மற்ற நிறுவனங்களும் நம் கால்நடை எண்ணிக்கையையும் வளத்தையும் முன்னிருந்த அளவுக்கு மீளுருவாக்கம் செய்ய கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

விளைபொருட்களின் விலை

படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடின்றி நம் நாட்டில் அடிக்கடி காதில் விழக்கூடிய கூப்பாடு என்னவென்றால் 'விவசாயம் லாபகரமானதல்ல' என்பதே. உண்மையில் தொழில்துறைகளில் செல்வத்தையும் வளத்தையும் உற்பத்தி செய்யக்கூடியது விவசாயத்துறை மட்டுமே. மற்ற துறை தொழிற்சாலைகள் அனைத்தும் உற்பத்திப்பொருட்களை சந்தைப்பொருட்களாக மாற்றும் வேலையை மட்டுமே செய்துவருகின்றன. இத்தைகைய தொழில் துறைகளே லாபம் சம்பாதிக்கும்போது இவற்றை விட 50, 60, 100 சதம் கூடுதலாக விளைவிக்கும் விவசாயத்துறை லாபம் சம்பாதிக்காமல் இருப்பதற்கு நமது கட்டமைப்பில் உள்ள கவலைக்கிடமான ஓட்டைகளே காரணமாகும்.

இந்த நிலை வந்ததற்கு முக்கிய காரணங்கள் ஒட்டுண்ணிகளாக வாழும் இடைத்தரகர்கள் (வியாபாரிகள்) மற்றும் உற்பத்தி செலவு சார்ந்த விளைபொருள் விலை இல்லாமல் சந்தை சார்ந்த விலையாக ஆகிப்போனதும்தான். நமது உடனடித்தேவை பணம் சாராத, உற்பத்தி செலவுகள் சார்ந்த சரியான பண்டமாற்று விலையை கண்டுபிடிக்கும் ஆய்வுகளே. இவ்வாறான ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால்தான் விளைவிப்பவர்களுக்கு (அவர்களின் விளைபொருட்களுக்கு) நியாயமான விலை கிட்டும், வளம் சேரும்.

நாம் மேலே முன்வைத்துள்ள கோரிக்கைகள் சுதந்திரமான ஒரு நாட்டினால் நடைமுறையில் செயல்படுத்தமுடியாதவை அல்ல. மேற்சொன்ன எந்தவொரு கோரிக்கையையும் 'நடைமுறையில் சாத்தியமில்லை' என்று ஒரு புதுமையான, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒதுக்குமானால் அது ஒரு ஆண்மையற்ற, கையாலாகாத அரசாகவே இருக்க முடியும். எனவே பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் எந்தவொரு நொல்லைக்காரனமும் கூறாமல், இத்திட்டங்களை முன்னடத்திச்செல்ல தோள்கொடுத்து நமது நாட்டினருக்கு நம்பிக்கையையும், நிஜமான விடுதலையையும் அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org