தலையங்கம்


யாருக்கு வாக்களிப்பது?


நம் மாநிலத் தேர்தல் நெருங்கி விட்டது. அடுத்த இதழ் வரும்பொழுது தேர்தல் முடிவுகளும், யார் நம்மை அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் சுரண்டப் போகிறார்கள் என்பதும் தெளிவாகி விடும். முன் செல்லும் பாதையைப் பார்க்கும் முன் நாம் கடந்து வந்தவற்றை நினைவு கூறுவது நன்று. சுதந்திரத்திற்குப் பின் உள்ள தமிழக வரலாற்றைப் பார்த்தால், ஆட்சி மாற்றம், கட்சிகளின் வளர்ச்சி போன்றவை பாமர மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டியே உருவாகி உள்ளன. அறிவு பூர்வமான வேட்கை அல்லது தீர்வு என்பது முற்றிலும் இல்லை. முதலில் வெள்ளையனை விரட்டியடிக்க உருவான காங்கிரஸ், பின்னர் தானே ஒரு பதவிப் பிசாசாக உருமாறியது. மேட்டுக் குடிகளின் அராஜகத்தைத் தட்டிக் கேட்க எழுந்த பெரியாரின் நேர்மையான திராவிட இயக்கத்தின் முதுகில் சவாரி செய்து திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் செய்து, தமிழ் மக்களைப் பிற இந்தியர்க‌ளிடம் இருந்து அந்நியமாக்கி அப்பாவி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுப் பதவிக்கு வந்தது. சினிமா என்னும் மகுடிக்கு மக்கள் மயங்குவதை நன்கு பயன்படுத்திக் கொண்ட தி.மு.க எம்.ஜி.ஆரை வளர்த்து அவரைப் பந்தயக் குதிரை ஆக்கிப் பல காலம் ஆட்சியில் இருந்தது.

தமிழ் நாட்டில் ஊழலை நிறுவனப் படுத்தியது தி.மு.க தான். அதுவரை இலை மறைவு காய் மறைவாக இருந்த ஊழல் வெளிப்படையாக, வெட்கமற்று, மட்டற்று இயங்கியதற்கு அக்கட்சியே காரணம். அதன் பின் வந்த அ.தி,மு.க எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த வரை ஆட்சியில் இருந்தது. தி.மு.க வை விட எந்தவித மாற்றுக் கொள்கையும் இல்லாமல், என் திரைப்படப் பாடல்களே என் கொள்கைகள் என்று எம்.ஜி.ஆர் கூறும் அளவு கொள்கை ஏதும் இன்றி, வெறும் தனி மனிதக் கவர்ச்சியிலேயே பலமுறை ஆட்சியில் இருந்தது. இல்லாத கொள்கையைப் பரப்பும் செயலாளராக இருந்த ஜெயலலிதா, கட்சியைக் கைப்பற்றி, அதன்பின் ஆட்சியைக் கைப்பற்றி கருணாநிதியின் ஊழல் எல்லாம் கமர்கட் மாதிரி என்கிற அளவில் சுரண்டலோ சுரண்டல் செய்து முதல் ஐந்தாண்டிலேயே தன் ஆட்சியை இழந்தார். ஆனால் அவர் மீண்டும் முதல்வராகிச் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 37ல் கூட்டணியின்றி வெற்றி பெறும் அளவிற்கு வலுப் பெற்றதற்கும் தி.மு.க வின் சுயநலமான, ஊழல், சுரண்டல் நிறைந்த ஆட்சியே காரணம். இதற்கிடையில் மக்கள் ஒரு மாற்றை விரும்புகிறார்கள் என்றறிந்த அரசியல்வாதிகள், சாதி உணர்வுகளைத் தூண்டி சாதிக் கட்சிகளை உருவாக்கி, அச்சாதிகளில் எவரையும் முன்னேற்றாமல் தத்தம் குடும்பங்களை நன்கு முன்னேற்றிக் கொண்டனர்.

தொழிற்சங்கங்கள் நிறைந்த தமிழ்நாட்டில், இடது சாரிகள் தனித்து வளரத் துணிவின்றி ஏதோ ஒரு திராவிடக் கட்சியுடன் இணைந்தே வலம் வந்தனர். 50% மேல் இளைஞர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கொள்கைகள் எடுபடவே இல்லை. தேசியக் கட்சிகளும் வளரவில்லை.

எத்தைத் தின்னால் பித்தம் தீரும் என்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் மக்களுக்கு ஒரு மாற்றாகத் தோன்றியது தே.மு.தி.க. இதுவும் தனிமனிதக் கவர்ச்சியால் உருவாகி வளர்வதே. கட்சியின் முதல் கூட்டத்தில் கன்னட, தெலுங்கு நாட்டவரும் திராவிடர்தான் என்று வரவேற்கத் தக்க சிந்தனையுடன் பேசிய விஜயகாந்த், சாதியையோ, மொழியையோ பிற பிரிவினைகளையோ இதுவரை பேசவில்லை என்பது ஒரு நல்ல விடயம். எனினும், வெளிப்படையாகக் குடிபோதையில் வலம் வரும் ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வது என்பது அறிவுள்ள யாருக்கும் கடினமே. மேலும் இக்கட்சியும் எக்கொள்கையையும் இதுவரை தெளிவுறுத்தவில்லை.

எஞ்சிய தமிழ்த் தேசம், நாம் தமிழர் போன்ற சிறு கட்சிகள் பிரிவினையைத் தூண்டி வளரப் பார்க்கின்றன. சுருங்கச் சொன்னால் நம்முன் இருக்கும் தெரிவுகள் யாவும் தேர்ந்தெடுக்க இயலாதவை ஆகவே உள்ளன.

இச்சூழலில், தாளாண்மையின் வாக்கு நோட்டாவிற்கே!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org