தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கிராமிய வாழ்வாதாரங்கள் - ராம்


திறன் மேம்பாடு


இந்த புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமல‌ர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?
- மகாகவி பாரதி

நமது கிராமத்து மக்களுக்கு தங்கள் வாழ்க்கைக்கு பொதுவாக தேவைப்படும் பெரும்பாலான திறன்கள் ஏற்கனவே உள்ளன. இவற்றைப் பெறுவதற்கு நமது மக்கள் எந்த விதமான பயிலரங்கோ, பள்ளியோ செல்லவில்லை; பெரிதாக எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. நமது இன்றைய பாடத்திட்டத்தையும் மீறித்தான் நமது மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்தத் தேவையான பல வித்தைகளை சாமானிய வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னால் இந்திய மனிதவியல் கருத்துக்கணிப்பு நிறுவனம் (Anthropological Survey of India) என்ற அரசு நிறுவனம், இந்தியாவைக் குறித்த ஒரு முக்கிய பதிப்பை வெளியிட்டது. “இந்தியாவின் மக்கள்” (People of India) என்ற இந்த 70க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட பதிப்பு, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சமூகங்களை குறித்து பல முக்கிய தகவல்களை ஏறத்தாழ 30 ஆண்டுகளின் ஆய்வின் முடிவாக வெளியிட்டது. இந்த ஆய்வில் நமது மக்களின் பாரம்பரிய திறன்களை குறித்து ஒரு முக்கிய உண்மை வெளியானது. என்னவென்றால், நமது கிராமப்புறத்து மக்கள் யாரும் ஒரு திறன் சார்ந்த தொழில் மட்டும் செய்வதில்லை. ஒவ்வொரு சமூகமும் சராசரியாக, 5.3 விதமான தொழில்களை செய்து வருகின்றது. அதில் 1.5 விதமான தொழில்கள் பாரம்பரியமாகவும், 3.8 விதமான தொழில்கள் புதிதாக அவர்கள் தாங்களாகவே கற்றுக்கொண்டு முனைவதாகவும் உள்ளது.

ஆனால், இந்த தொழில்களை கற்றுக்கொள்ளவும், அவற்றின் மூலமாக தொழில் செய்யவும், நமது மர‌பில் மிகப்பெரிய நிறுவன‌ங்களை நிறுவியோ அல்லது, தொடர்ந்து பயிலரங்கு நடத்தியோ மெனெக்கெட்டு நமது மக்கள் தொழில் பயின்றதாகத் தெரியவில்லை. பாரதியின் சொற்களை கொண்டு வர்ணிக்க வேண்டுமானால், “என்ன தொழில் மேம்பாட்டுக்கான திறங்கொண்டு வாழ்ந்தன‌ரோ” என்றே கேட்க வேண்டும். எப்படி நமது ஔடதங்களும், பூஞ்செடிகளும் தாங்களாகவே நமக்கு பயனளிக்கும் விதமாக வருகின்றனவோ அவ்வாறே, மக்களும் தங்களுக்கு தேவையான பல தொழில் சார்ந்த அறிவுகளை வெவ்வேறு முறைகளின் மூலம் கற்று வருகின்றனர்.

நமது மக்கள் மத்தியில் பல்வேறு விதமான திறன்கள் இருந்ததையும், பெரும்பாலான மக்கள் பலவித தொழில்களில் ஈடுபட்டதையும் நம் வரலாற்று சான்றுகளும் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சமூகங்கள் யாவும் போர் சமயத்தில் வீரர்களை அளித்தும் திகழ்ந்துள்ளன, பல மாடு மேய்க்கும் சமூகங்கள், இசை சார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ளன என்பதற்கு வரலாற்று சான்று உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், “புதிய’ தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் சில உதாரணங்களை கொண்டு இதனைப் புரிந்துகொள்ளலாம். தமிழகத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சில கிராமங்களைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உறுப்பினர் சிலர், அமெரிக்க மியாமி கடலோர பகுதிகளில் உலாவும் மிக பிரம்மாண்டமான சொகுசுக்கப்பல்களில் சமையல்காரர்களாக வேலை செய்கின்றனர். நத்தத்தை அடுத்த வெள்ளாலபட்டி புதூரை சேர்ந்த பலர், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சாலைகள் அமைப்பதிலும், அவற்றை செப்பனிடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தங்கள் இளைஞர்களை இந்த வேலைவாய்ப்பிற்கு கடனளித்து பல வருடங்களாக அனுப்பி வருகின்றனர். அதேபோல வேலூர் நாட்டரம்பள்ளியை சுற்றியுள்ள சில கிராமங்களைச் சேர்ந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த சிலர், அரபு நாடுகளில் உயர்ந்த மின்சார கம்பிகளை கட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேசுவரத்தை சேர்ந்த மிக கடினமான கடலிலும் மீன்பிடிக்கவல்லமை படைத்த மீனவர்கள், அரபுநாட்டு மீன்பிடி படகுகளில் வேலை செய்கின்றனர். யார் இவர்களுக்கு இந்த நவீன துறைகளுக்கான பயிற்சி அளிக்கிறார்கள்? ஆடு மாடு மேய்க்கவோ, மீன் பிடிக்கவோ அல்லது விவசாயத்தில் ஈடுபடவோ நமது மக்களுக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை, பயிற்சி வகுப்புகள் நடத்தவில்லை. இந்தத் துறைகளை நாம், “பாரம்பரியத்துறைகள்” என்று கூறலாம். ஆனால், மின் கம்பிகளை உயர்ந்த கம்பங்களுக்கு மத்தியில் இழுத்து கட்டுதல், நவீன சாலைகள் அமைத்தல் ஆகியவையும் யாரும் சொல்லிக்கொடுக்காத துறைகளே!

வெளியூர் மட்டுமன்றி, உள்ளூரிலும் கூட வெங்காயம் அதிகமாக உற்பத்தியாகும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் சென்னையில் பெரும்பாலான “சமொசா” தயாரிப்பதிலும், விற்பனையிலும் ஈடுபட்டுவருகின்றனர், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெருஞ்சாலைகளின் அருகாமையில் உள்ள உணவகங்களை ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் செய்துவருகின்றனர் என்று நமது நண்பர் திரு முத்து தெரிவிக்கின்றார். இன்றும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலுள்ள அண்மைக்கடைகள் யாவையும் விருதுநகர், தூத்துக்கூடி, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் நிர்வகித்து வருகின்றனர். பல தலைமுறைகளாகவே, சிறுகடன் வழங்கும் கடைகளை “சேட்டு” கடை என்று நாம் அழைக்கும் விதத்தில் வெகுதூரத்தில் இருந்து வந்து தஞ்சம் அடைந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். மிக துல்லியமாக கணக்குகளை மேலாண்மை செய்யும் இத்தகைய‌ வாணிபங்களில் யாரும் இந்த சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கவில்லை. நாம் அன்றாடம் பார்க்கும் வணிகமான பூ தொடுத்தல் முதல், வீடு கட்டுத‌ல்வரை எந்த துறைகளிலும் யாதொரு பயிற்சியும் இல்லாமலே தமது வாழ்க்கை மற்றும் வேலைகளை நடத்திவருகின்றனர் .

சமீபத்தில் ஒரு தொண்டு நிறுவனம் செய்த ஆய்வு, 300 வீடுகளைக் கொண்ட ஒரு கிராமத்தில் 48 விதமான தொழில்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கிறது. கடல் சமீபத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பம், “குல்பீ” என்னும் பனிக்கூழ் (kulfi icecream) தயாரித்து வருவதாக இந்த ஆய்வில் தெரியவந்தது. ஒரு நகரத்தின் அண்மையில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் தயாராகும் இந்த பனிக்கூழ் , இந்த கிராமத்திலுள்ள மாடுகளில் பாலைக்கொண்டு தயாராகின்றது மற்றும் நகரத்திற்குள் வினியோகிக்கப் படுகின்றது.

பாரம்பரிய திறன் வளர்ப்பதில் முக்கியக் கூறுகள் சில‌:

  1. தனியாக ஒரு பெரிய பயிற்சி என்று எதுவும் இல்லை
  2. இதற்காக யாரும் ‘வல்லுனர்’ என்று பயிலரங்கு நடத்தவில்லை
  3. இத்தகைய பயிற்சிகளுக்கு எந்த விதமான செலவும் இல்லை
  4. பெரும்பாலும் இந்தத் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதனால் மட்டுமே ஒரு திறனைக் கற்க இயலும். அதனால், பயிற்சி பெறும் பொழுது பொருள் ஈட்டுதலும் இயல்பாகவே நடக்கிறது.
  5. காலை முதல் மாலை வரை பயிலரங்குகள் மற்றும் வகுப்புகளில் ‘உட்கார்ந்து’ கொண்டு ஒருவர் பேசுவதை கேட்க வேண்டிய கொடுமை இத்தகைய‌ பயிற்சிகளில் நிச்சயமாக இல்லை
  6. இத்தகைய பயிற்சிக்காக மக்கள் மிகவும் சிரமப்பட வேண்டிய அவசியம் ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை, மற்றும் இத்தகைய தொழில் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் வளரும் பொழுது, அதனுடனே திறன் வளர்வதையும் நாம் காண்கின்றோம்

அப்படியானால் அரசாங்கம் இன்று பெரும் பொருட்செலவில் பயிற்சி அளித்துவரும் “திற‌ன் மேம்பாடு” எந்தத் துறைகளில் உள்ளது என்று ஒரு ஆய்வு செய்தால், பெரும்பாலும், பெரும் ஆலைகள் மற்றும் உற்பத்தித் துறைகளை நம்பியே இத்தகைய பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. பன்மைத்துறைகளில் திறன் பெற்ற நமது மக்கள் இந்த பயிற்சிகளில், ஒரு துறைக்கு மட்டுமே ‘சிப்பந்தி’ யாக மாற்றப்படுகின்றன‌ர்.

சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகையில் பாரம்பரிய அறிவுத்திறனை குறித்த பல ஆய்வுகளையும் செய்த வித்தகர்களில் ஒருவரான, திரு. முகுந்தன் அவர்கள் ஒரு அனுபவத்தைப் பகிர்ந்தார்: “கடலோரம் நான் வசிப்பதால் மீனவர்கள் சமூகத்தினரிடம் நல்ல பழக்கமுண்டு. அவர்களில் சில சிறுவர்கள் என்னிடம் தங்கள் பள்ளியில் ஆங்கலப் பயிற்சி சரியில்லை என்றும், அதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்கவேண்டும் என்றும் என்னை அணுகினர். அப்போது நான் அவர்களிடம், ‘உனக்கு தெரிந்தவற்றைப் பற்றி ஏதேனும் கட்டுரை எழுது என்றேன்’, 10 முதல்12 வயது நிறம்பிய சிறுவர்கள் இருவர், கடலைப் பற்றியும், கடல் காற்றைப் பற்றியும், மீன்களைப் பற்றியும், மீன்பிடித் தொழில் பற்றியும் மிக அருமையாக ஒரு கட்டுரையை எழுதினர். பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, இன்று இவர்கள் வெறும் 9000 ரூபாய்க்காக மாத சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண வேலைக்குச் சென்று கொண்டுள்ளனர்”.

நவீன கல்வித்திட்டத்தின் மிகப் பெரிய பாதிப்பு, பன்மைத்துறைகளில் திறம்படைத்த நமது மக்களை ஒரு துறையில் மட்டும் ‘வல்லுனர்’களாக மாற்றும் ஒரு சிறுமைப்படுத்தும் முயற்சியாக உள்ளதுதான்.

…தொடர்வோம்…

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org