தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

செவிக்குணவு இல்லாத போழ்து


தினையரிசிப் பெசரெட்டு

தினையின் பெருமை

சிறுதானியங்கள் என்று குறிப்பிடப்படும் அருந்தவசங்களான தினை, வரகு, குதிரைவாலி, சாமை, காடைக்கண்ணி போன்றவை இன்று மக்களிடம் புதியதொரு வாய்ப்பைப் பெற்று வருவதைக் காண முடிகிறது. Foxtail millet என்றும் அழைக்கப்படும் தினை தமிழ்க் கலாச்சாரத்துடன் மிகப் பண்டைக் காலம் முதல் பின்னிப் பிணைந்தது. சங்க இலக்கியங்களில் உழாமல் விதைத்த‌ தினை வயல் பற்றியும் புறநானூறு கூறுகிறது. (உழாதுவித்திய பரூஉக்குரல் சிறுதினை - புறம் - 163). தினைப் புனம் காப்பதும், பரண்களில் இருந்து பாடுவதும், காதல‌னைச் சந்திப்பதும் பண்டைத் தமிழர்களின் பண்பட்ட நிகழ்வுகள். குறிஞ்சிப் பாட்டின் பாடுபொருளே இதுதான். சங்கரதாஸ் சுவாமிகள் குறிஞ்சிப்பாட்டையே வள்ளி திருமணம் என்ற நாடகமாக ஆக்கினார். தினைக் கதிர் அறுத்த தாள்களைக் கொண்டு கூரை வேய்ந்தனர். 'இருவி வேந்த குறுங்கால் குரம்பை' என்று குறிஞ்சிப்பாட்டு 153 ஆம் வரி குறிப்பிடும்.

தினையரிசி பெசரெட்டு

கர்நாடகத்தில் பெசரெட்டு என்று பச்சைப்பயறை ஊற வைத்த மாவில் ஒரு விதமான தோசை மிகப் புகழ் பெற்றது. இன்று நாம் தினையரிசியில் எவ்வாறு பெசரெட்டு செய்வது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்

( 7 முதல் 8 பெசரெட்டு செய்ய)

  1. தினையரிசி : 1/2 கோப்பை
  2. பச்சைப்பயறு : 1/2 கோப்பை
  3. வர மிளகாய் : 2 அல்லது 3
  4. இஞ்சி : ஒரு சிறிய துண்டு
  5. பெரிய வெங்காயம் : 1
  6. உப்பு : தேவையான‌ அளவு
  7. பெருங்காயம் சிறிதளவு
  8. கருவேப்பிலை : சில இலைகள்

செய்முறை

தினையரிசியையும், பச்சைப் பயறையும் 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.(காலை உணவுக்காயின் முன் இரவே ஊற வைக்கலாம்) நீரை வடித்து விட்டு, இஞ்சி, மிளகாய் இவற்றுடன் நன்கு அரைத்துக் கொள்ளவும். விரும்பினால் கருவேப்பிலையையும் இதில் சேர்க்கலாம்.

அரைத்த மாவில், உப்பு, பெருங்காயம் சேர்த்து அதனுடன் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். மாவின் இளகிய பதம் அவரவர் தேவைக்கேற்பத் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் செக்கு எண்ணையுடன் மிதமான சூட்டில் இருபுறமும் பொன்னிறமாக தோசை வார்க்கவும்.

காரச் சட்னியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

- நன்றி : www.jeyashriskitchen.com

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org