தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் தீர்வு - அனந்து


காலை எழுந்தவுடன் புசிப்பு

காலை உணவு மிகவும் இன்றியமையாதது. அது நல் உணவாக இருத்தல் மிக அவசியம். இரவு தூக்கத்திற்குப் பிறகு நல்ல ஆரோக்கியமான சத்தான காலை உணவு மிக முக்கியம். நாள் முழுவதும் நாம் உழைத்துத் திரிய சரியான உணவு அவசியம்.

முதலில் பெரும்பாலானோர் இன்று வசதி மற்றும் எளிது என்னும் காரணங்களால் மிகத்தவறான உணவுகளைத் தேர்ந்தெடுத்து அதனால் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம்.

பிரெட் என்னும் செத்த ரொட்டியை, சத்தற்ற உணவினை உட்கொள்கிறோம். பல நாட்கள் அலமாரியில் இருப்புக்கொள்ளும் இந்த செத்த உணவு, உணவே அல்ல‌. ஒரு முறை இஸ்ரேலிய நண்பர் ஒருவர் பூடானில், சுற்றுலா சென்ற போது, கடை கடையாக பிரெட் உள்ளதா என்று அலைந்தாராம். அப்பொழுது ஒரு கடையில் பெரியவர் ஒருவர் மெலிதாக சிரித்தாராம். இவர் ஏன் என்று கேட்டதற்கு 'இதற்குத் தான் எல்லா கடைகளுக்கும் அலைகிறாயா?” என்றாராம். ஆம், அதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறதென்று இவர் கோபத்துடன் கேட்க, அவர் அதே சிரிப்புடன், ' அங்கே பார். உயிருடனும் முழு சத்துடனும் இருக்கும் புத்துணர்வுமிக்க சப்பாத்தி (ரொட்டி)யை செய்துக்கொண்டிருக்கும் இடத்தில் செத்த ரொட்டியை தேடுகிறாய். அது தான் சிரித்தேன்” என்றாராம். இதில் இருக்கும் பாடம் புரிகிறதா?

பிரெட் இல்லையேல் இன்று “கார்ன் ஃப்லேக்ஸ்” என்னும் சோளத்துகள்கள்! மக்காச் சோளத்தினின்று பதப்படுத்தப்பட்ட இது நல்லுணவு அல்ல. வில்லையிடல் (extrusion) என்னும் ஒரு ஆலைத் தயாரிப்புத் தொழில் நுட்பத்தால் இது மக்காச் சோளத்தை (உயிரும் சத்தும் சாகும் அளவிற்கு) மிக உயர்ந்த சூட்டிற்குக் கொண்டு சென்று ஒரு சிறிய வாய் மூலம் அதிகபட்ச அழுத்ததில் செலுத்தி துகள்களாக வெளிக்கொணரப்பட்டு, பல கொடிய ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு நமது தட்டிற்கு வருகின்றது. இவற்றில் புரதம், நார்ச் சத்து போன்ற எந்த சத்தும் இல்லாத, பெரும்பாலும் சக்கரை (அல்லது அதை விட கேடு விளைவிக்கும் கார்ன் சிரப்) போன்றவை நிரம்பியது.

விளம்பரங்களாலும், மேற்கத்திய நாடு சென்று திரும்பியவர்களின் டம்பத்தாலும் இவை பிரபலம் அடைந்துள்ளன.

அடுத்து “நூடில்ஸ்”! அதுவும் இன்று விளம்பரங்களினால் மட்டுமே பிரபலம் அடைந்துள்ள இந்த பதப்படுத்தப்பட்ட பொருள், பல கொடிய விஷ ரசாயனங்கள், மிக அதிக உப்பு, அடிமைத்தன்மைக்காக சில கேடு நிறைந்த பொருட்கள், என பலவற்றை உள்ளடக்கியவை.

இதனுள் , அமிலம் சமன்படுத்துபவை, மணம் கூட்டுபவை, கெட்டிப்படுத்துபவை, ஈரப்பதம் காப்பவை, வண்ணமூட்டிகள், திடப்படுத்துபவை, மாவை வெளுக்கும் காரணிகள், பதப்படுத்துபவை, கட்டியாகாமல் தடுப்பவை என்று ஒரு மிக நீண்ட வேதிப் பட்டியலே உண்டு! நமது உடல் (குடல்!) மற்ற சத்துக்களை ஈர்ப்பதைத் தடுத்து மேலும் பல துன்பங்களை இவை விளைவிக்கும் என்று பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. புற்று நோய் முதல் பல நோய்களை பயக்கின்றன என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல மணி நேரம் இவை செரிமானம் ஆகாமல் அப்படியே இருக்கும். பல உப்புக்களையும் அமிலத்தன்மையும் கொண்ட இந்த நூடில்ஸ் பெரும் ஆபத்தைப் பயக்கக்கூடிய பொருள். இந்த 'உடனடி' நூடில்ஸ் பல்வேறு உபாதைகளை அளிப்பதாக பல வெளி நாட்டு படிப்பினைகள் தெரிவிக்கின்றன.

சரி, இவை எல்லாம் கடந்த சில பத்தாண்டுகளில் பிரபலமானவைதான் என்று பெருமை கொள்வதா? இல்லை, எல்லாவற்றையும் உற்று நோக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, ஜவ்வரிசி! இது மரவள்ளிக் கிழங்கிலிருந்து எடுக்கப்படுகிறது என்பதே பலருக்குத் தெரிவதில்லை! எப்படித் தயாரிக்கின்றனர் என்று தெரியுமா? கிழங்கைக் கூழாக்கி, பெரும் குழிகளில் ஆற‌ப்போட்டு, அவற்றைக் கிளர மக்கள் அதனுள் இறங்கி நடப்பர். பெரும் இயந்திரங்கள் வந்த பின் இந்த முறை குறைந்தாலும், பல்வேறு கொடிய விஷ ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. ஜைனர்கள் மற்றும் வட நாட்டவர்கள் பெரும்பாலும் தங்கள் உண்ணாநோன்பில் இருந்து இதனையே உட்கொண்டு, உண்ணா நோன்பை முறிக்கின்றனர். இவை தயாரிப்பில், மரவள்ளியின் தோலைக்கூட உரிக்காமல் அரைக்கப்படுகின்றன. நற்செயல்கள் எல்லாம் செலவு கட்டுபடி ஆகாததால் கைவிடப் படுவதுபோல், உற்பத்திச் செலவைக் குறைக்கத் தோலுடன் அரைத்துப் பின் அது வெள்ளையாவதற்குக் கொடிய அமிலங்களும், வெளுக்கும் (bleaching) ரசாயனங்களும் பயன்படுத்த‌ப்படுகின்றன.

ஹைட்ரோ க்ளோரிக் அமிலம், சல்ஃபுரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம், க்ளோரின், சோடியம் ஹைபோ க்ளோரைட், கால்சியம் ஹைபோ க்ளோரைட், டினோபால் பவுடர், ரானிபால் பவுடர், ஹைட்ரொஜன் பெர் ஆக்சைடு என்று ஒரு பெரும் விஷப்பட்டியலை உபயோகிக்கின்றனர். இவை யாவும் தடை செய்யப்பட்டவை, ஆனால் புழக்கத்தில் உள்ளது. இந்தப் பட்டியலை கொடுத்திருப்பது வேறு யாரும் அல்ல- தமிழ் நாடு மரவெள்ளி இயற்கை உற்பத்தியாளர்கள் சங்கம்!

அகிம்சையைப் பெரிதும் கடைப் பிடிக்கும் ஜைனர்களே “சாகோ” என்னும் இந்த ஜவ்வரிசி உற்பத்தியில் பெரும் ஆலைகள் கொண்டு, பல நஞ்சுகளைக் கலந்து, தயாரிக்கின்றனர்!

சரி இதற்கு என்ன தீர்வு?

நாம் பல மணி நேரத் தூக்கத்திற்குப் பின் விழிக்கும் போது, நமது குடலில் அமிலம் (acid) அதிகம் சுரந்து இருக்கும். ஆகவே காரத்தன்மை (alkaline) கொண்ட உணவுகள் சிறந்தவை. எப்பொழுதுமே காரத்தன்மை உடைய உணவே சிறந்தது. காரத்தன்மை என்பது வேறு ; காரம் என்பது வேறு. காரச் சுவை உடைய உணவுகள் அமிலத் தன்மை கொண்டவை. பொதுவாக‌ அறுசுவையில் உப்பு, புளிப்பு, காரம் ஆகியவை அமிலத்தன்மை கொண்டவை. துவர்ப்பு, கசப்பு , இயற்கை இனிப்பு (வெண்சர்க்கரை இல்லாதவை) ஆகியவை காரத்தன்மை கொண்டவை. காரத்தன்மை கொண்ட உணவுகளை மட்டுமே உட்கொண்டால் புற்றுநோய் அண்டாது என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றது.

பாரம்பரியமாக அவல், பழங்கள் போன்றவை பெரிதும் உட்கொள்ளப்பட்டன. அவல் போன்ற அதிகம் மென்று தின்னும் உணவுகள் மிகவும் ஆரோக்கியாமானவை. மென்று தின்பதால் உமிழ் நீர் அதிகம் சுரக்கும். பாரம்பரிய மருத்துவ வழிகள் கையிலிருந்து ஜீரணம் தொடங்குகிறது என்கின்றனர். அடுத்து வாயில், உமிழ் நீருடன். பின்னரே வயிற்றில். அதனால் தான் நன்கு மென்று தின்றால் ஜீரனம் மற்றும் வாயு தொல்லைகள் இருப்பதில்லை.

iஅவல் ஒரு சிறந்த உணவு. ரிபொஃப்ளாவின் மற்றும் பல சத்துக்கள் கொண்ட அவலை சமைக்காமலும் மிகவும் சுவையாக உண்ண முடியும். வெல்லம், தேங்காயுடன் சேர்த்தால் அது ஒரு முழுமையான உணவாகிறது. கொஞ்ச நேரம் ஊர வைத்து தேங்காய் சாதம், நெல்லிக்காய் சோறு, என்று பல எளிதான உணவு வகைகள் (பச்சையாகவும், சமைத்தும்!) செய்யலாம்.

பொங்கலைப்போல முழுமையான உணவை பார்க்க முடியாது. காலை தின்றால் நெடு நேரம் வரை தாங்கும். அரிசியும் பாசிப்பருப்பும் சேர்ந்து வெந்தால் அரிசியின் சர்க்கரைக் குறியீடு (glycemic index) மூன்றில் ஒரு பங்காகிறது. மாவுச்சத்து, புரதம், கொழுப்பு என்று மட்டுமில்லாமல் மிளகு (எதிர்ப்பு சக்தி, உடல் திடம்), ஜீரகம் (வாயுக்கட்டுப்பாடு, செரிமானம்) போன்ற‌ பல குணங்களைக் கொண்டு வந்து இந்தப் பொங்கல் பெரும் ஆற்றலைப் பெருக்குகின்றது. இதனையே தினை, சாமை, வரகு என்று பல்வேறு சிறுதானியங்களிலும் செய்யலாம். அப்பொழுது அதினின்று கிட்டும் சக்தி மிகவும் சிறந்ததாகவும் சீரியதாகவும் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பல காய்கறிகளைப் போட்டு கிச்சடி, உப்புமா என்றும் சத்தானதாக செய்யலாம்.

பழங்கள் பலவும் காரத்தன்மை கொண்டவை. பல நோய்களினின்று மீள இன்று காரத்தன்மை கொண்ட உணவு (alkaline diet for disease reversal) முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

பழைய சோறு சாப்பிட்டு விட்டு கழனிக்கு சென்று உழைக்கும் பலரை பார்த்திருக்கிறோம். பழையது எனப்படும் நீராகாரம் காரத்தன்மை கொண்டது. அதினின்று கிடைக்கும் சத்து மிக பிரமாதம். நுண்ணுயிரி பெருகும், குளிரிச்சியும் கூட. அதுவும் ஒரு முழுமையான சக்தி வாய்ந்த உணவு. இதையும் இயற்கையாய் விளைவித்த அரிசியினின்று உட்கொண்டால் ருசியிலும், சத்திலும் பெரும் வேறுபாடு காணலாம்.

அதே போல கம்பங்கூழுக்கும், கேப்பங்கூழுக்கும் இணை? அவையும் காரத்தன்மை, குளிர்ச்சி, சக்தி எல்லாவற்றிலும் மேன்மை வாய்ந்தது. மேற்கூறிய இவை எல்லாம் (மற்றும் பாரம்பரிய உணவு என்றாலே) ஏதோ கடினமானது அன்று நினைக்கத்தேவை இல்லை. அது உண்மையும் இல்லை. மிக எளிதாக பல வகைகளை நாம் செய்து பரிமாறி/உண்டு மகிழ முடியும். எளிது என்று நாம் நினைக்கும் ஓட்ஸ், நூடில்ஸ் எல்லாம் பதப்படுத்தப்பட்ட, இருப்புத்தன்மைக்காக‌ பல ரசாயனங்கள் கூட்டிய பொருட்கள்.

அவற்றுக்கு பதிலாக கோதுமை ரவை, சிறுதானியங்களை (முழுதாக அல்லது ரவையாக) முதலியவற்றை உபயோகிக்கலாம்.

சமீபத்தில் வந்த ஒரு ஆய்வில் நமது இட்லி தான் எல்லா சத்துக்களும் (புரதம், மாவு & கொழுப்பு) நிரம்பி இருக்கும் ஒரு முழுமையான காலை உணவாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதனையே அரிசியுடன் (அல்லது அரிசிக்கு பதில்) சிறு தானியங்களை கொண்டும் செய்யலாம்.

விரைவாக, எளிதாக செய்யக்கூடிய பல தானியங்களின் சுண்டல்- வேக வைத்த நல்லுணவுகள் மிக‌வும் சிறந்தது. முளை கட்டிய பயிர்களின் சுண்டல் (அல்லது அப்படியே உட்கொள்வதும்) நலம். முளை கட்டுவதால் நம் உடல் கிரகிக்கக்கூடிய புரதங்கள் அதிகமாக கிட்டும்.

காலை உணவு சிறப்பாக, சத்துள்ளதாக அமைய வேண்டும். அரசனைப்போல காலை உணவு, இள‌வரசனைப் போல மதிய உணவு, பிச்சைகாரனைப்போல இரவு உணவு என்று சும்மாவா சொன்னார்கள்? நம்மை நாள் முழுதும் புத்துணர்வுடனும் சத்துடனும் வேலை செய்ய நல்லுணவு முக்கியம். இதில் நாம் எளிமை, நேரமின்மை என்னும் காரணங்களில் சறுக்கினால் பல உடல் உபாதைகள் காத்திருக்கின்றன. மேற்கூறிய எல்லா நல்லுணவுகளும் இயற்கையாய், ரசாயன விஷங்களற்று இருத்தல் மிக அவசியம்.

அடுத்த கட்டுரையில் நாம் நம் உணவின் பிற அம்சங்களைப் பற்றிக் காண்போம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org