தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

இயற்கை உழவர் சங்கமம் - சண்டிகர் நிகழ்வுகள்


அனந்து

மாநாட்டின் தீர்மானம்

சென்ற இதழில் உலகின் மிகப் பெரிய இயற்கை உழவர் சங்கமாக நடந்தேறிய மாநாட்டைப் பற்றி எழுதியிருந்தோம். இந்த மாநாட்டில் கூடிய இயற்கை விவசாயிகளால் இயற்றப்பட்ட இயற்கை விவசாயிகள் சமூகத்தின் தீர்மானம்:

 1. இயற்கை விவசாயத்தால் நமது நாட்டின் உணவு மற்றும் சத்து (nutritional needs) தேவைகளை நிறைவேற்ற முடியும். சொல்லப்போனால் நிலைத்த தொடர்ச்சியான சாத்தியமான ஒரே வழி இது ஒன்றே. உணவு பாதுகாப்பு ( food security) அதுவும் பாதுகாப்பான உணவாக (safe food) கிட்ட ஒரே வழி இயற்கை வேளாண்மைதான். பெருகி வரும் இயற்கை விவசாயிக‌ளின் எண்ணிக்கையும் இயற்கைப் பொருட்களுக்கான நுகர்வோர் விருப்பமுமே இதற்குச் சான்று.
 2. 400 பன்னாட்டு ( ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர் உட்பட 58 நாடுகளின்) வல்லுனர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையானது, நஞ்சற்ற‌ இயற்கை வழி வேளாண்மையே, அதுவும் சிறு விவசாயிகளின் மூலம் (மட்டுமே) சிறந்தது என்கிறது. மேலும் மரபீனி மாற்றுப்பயிர், பசி மற்றும் ஏழ்மையைப் போக்கவோ சூழல் மற்றும் சக்தி/பொருளாதார சவால்களை எதிர்கொள்ளவோ லாயக்கற்றது என்கிறது.
 3. நாம் மரபீனி மாற்றுப் பயிர் மற்றும் உணவை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். அது கொடிய விஞ்ஞானம் ஆகும். பல கேடுகளை விளைவிக்கும். அதன் திறந்த வெளி பரிசோதனைகளையும் முழுமையாக எதிர்க்கிறோம்.
 4. மண், நில வளம், நீர் வளம், பன்மையம், விதை உரிமை, சூழலியல், எல்லாவற்றையும் காக்க உறுதி கொள்கிறோம்.
 5. நீர், நிலம் மற்ற வளங்களை வரும் காலத்திற்கும் சத்தான நிலைத்த எதிர் காலத்திற்கும் விழைவோம். விவசாய நிலங்களை, வேறு நோக்கங்களுக்கு, வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்புகள் மூலம் பயன்படுத்தக்கூடாது. பாசன நீர் பங்களிப்பும் அத்தியாவசிய உணவு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தண்ணீரை விழுங்கும் பணப்பயிர், ஓரினப்பயிர்களுக்கு விரயமாக்குதல் கூடாது.
 6. காடுகளின் வளங்களுக்கு பெறுவழி (access) , வசிப்பிடம் காடு நம்பி வாழும் பழங்குடியனுருக்கே முதன்மை உரிமை இருக்க வேண்டும். பயிர் செய்யாத காட்டு பொருட்களும் உணவுகளும், மருந்துகளும் அவர்களது வாழ்க்கையின் முக்கிய அம்சம்.
 7. வளம் குன்றும் இன்றைய ரசாயன வேளாண்மை, விவசாயிகளை வெளி நாட்டு/பன்னாட்டு கம்பனிகளிடம் சார்ந்து அவர்களிடம் கையேந்தும்படிச் செய்கிறது. இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
 8. விவசாய ரசாயனங்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டு, அந்த மானியங்கள் இயற்கை வேளாண்மைச் செயல்பாடுகளுக்கு அளிக்கப்பட வேண்டும். அரசு வரவு செலவுத் திட்டத்தில் இயற்கை விவசாயத்திற்குப் போதிய நிதி ஒதுக்கப்பட்டு, இவ்வியற்கை விவசாயம் நிலைக்க வழி வகுக்க வேண்டும்.
 9. கல்வி பாடத்திட்டத்திலும், கணக்கெடுப்பிலும், திட்டமிடுதலிலும் நாட்டுப்புற இந்தியாவின் தேவைகளையும், வயல்சார்ந்த‌ திட்டங்களையும் கணக்கிலெடுக்க வேண்டும்.
 10. வேளாண் பல்கலைக்கழகங்களும், விவசாயத்துறையும், இயற்கையுடன் இயைந்த வேளாண் வழிகளை பின்பற்றும் பாட திட்டங்கள், சுற்றுச்சூழல் அழிவு மற்றும் தொழில்நுட்பத்தின் பாதகங்களை கணக்கில் கொண்டு ஆராய்சிகளையும் பரிசீலனைகளையும் அளிக்க வேண்டும். அந்தந்த பகுதிகளின் தேவை மற்றும் சவால்களை மனதில் கொள்ள வேண்டும்.
 11. சுய சார்பு வேளாண்மையின் முதுகெலும்பான பெண்களின் பங்கினை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளவேண்டும் ( முக்கியமாக நில உரிமை மற்றும் அரசு உதவி திட்டங்களிலும்).
 12. இயற்கை விவசாயிகள் சமூகம், நாட்டு மாடு மீட்புக்கு ஹரியானா அரசை அவர்களின் முயற்சிகளுக்காக பாராட்டுகிறது. இது சுயசார்பு வேளாண்மைக்கான படியாக இருக்கும், அதனால் மத்திய அரசும் மற்ற மாநில அரசுகளும் இதனை பின்பற்ற வேண்டுகிறோம்.
 13. பொது வினியோக சந்தை (ரேஷன்) ஆங்காங்கே உள்ளுரிலேயே உணவுப்பொருட்களை கொள்முதல் செய்யவேண்டும். அண்மை சந்தைகளை (ஒரு வலைபின்னலாக, தொகுப்பாக, தொடராக) உருவாக்கி ஊக்குவிக்கவும் வேண்டும்.
 14. இயற்கைப் பொருட்களுக்கு நியாய விலை கிட்டவும் நல்ல சந்தைகள் இயங்கவும் அரசு உடனடியாகச் செயல்பட வேண்டும்.
 15. அரசின் பல்வேறு திட்டங்களும் (MGNREGS, NRLM and SLRM உட்பட) இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்.
 16. இந்தியா பெருமளவில் பன்மையமும், மருத்துவ மற்றும் சத்து மிக்க வகைகள், உவர் நிலத்தில் விளையக்கூடியவை, வெள்ளம், வற‌ட்சி,பூச்சித்தாக்குதல் எல்லாவற்றையும் தாங்கக்கூடிய பல விதைகள்/ரகங்கள் கொண்டது. இவை ஒரு திறந்த புத்தகமாக, மிக நேர்த்தியாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயிகளால் சேமிக்கப்பட்டு, பகிரப்பட்டு வந்துள்ளது. இதனை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது அநீதியான நெறியற்ற செயல்.

ஹரியானா அரசின் நம்பிக்கையூட்டும் செயல்பாடுகள்

ஹரியானா முதலமைச்சர் மனோக‌ர் லால் கட்டர் அவர்கள், இந்த மாபெரும் இயற்கை மாநாட்டைத் துவங்கி வைத்தார். அப்பொழுது, அவரது வேளாண் அமைச்சருடன் வந்திருந்து பல திட்டங்களை அறிவித்தார்.

அவர் “எம் அரசு படிப்படியான மாற்றம் கொண்டு வரும். முதலில் 10% நிலங்களை இயற்கை விவசாயத்தின் கீழ் மாற்றுவதற்கான வேலைகளைச் செய்வோம். அப்படியே படிப்படியாக முன்னேறுவோம். இதனை அமல் படுத்த ஒரு இயற்கை வேளாண் வல்லுனர் குழு அமைக்கப்படும். இங்கு இருக்கும் பலரும் மற்றும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சமூக அமைப்புக்களின் உதவியுடனும் அமைப்போம்” என்றார்.

'சந்தைப் படுத்தவும் பல திட்டங்கள் நிறைவேற்றுவோம். அதற்காகவே ” ஹரியானா ஃப்ரெஷ்” (Haryana Fresh) என்கிற வர்த்தக அமைப்பிற்குப் பெயரையும் பதிவு செய்துள்ளோம் ' என்றார். இது மட்டுமல்லாமல் பாரம்பரிய விவசாயத்தையும், பாரம்பரிய பயிர்களையும், பன்மையத்தையும் மீட்டெடுப்போம் என்றார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சர் மேனகா காந்தி அவர்கள் பூச்சிகொல்லிகளையும் அதன் தாக்கத்தையும் அதனால் ஏற்படும் உடல் மற்றும் சூழல் கேடினையும் எடுத்துரைத்து அவற்றின் ப‌யன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றார். மரபீனி மாற்றப்பட்ட விதைகளையும் (உணவையும்) நாம் அற‌வே தவிர்க்க வேண்டும் என்றார் (அவர் பங்கு பெறும் மோடி அரசு இவ்வளவு தீவிரமாக மரபீனி விதைக் கம்பனிகளுக்குச் சாமரம் வீசும் பொழுதும் அவர் இதனைக் கூறியது அங்குக் கூடியிருந்த விவசாயிகளுக்குப் பெரிய ஆறுதலை அளித்தது.)

அதே போலவே இந்த 3 நாள் மாநாட்டின் கடைசி நாள் பங்கேற்ற பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் அவர்களும் இயற்கை வேளாண்மையை தமது மாநிலம் பெரிதாக ஆதரிக்கும்; மிக விரைவில் பஞ்சாப் அதிலும் முதன்மை அடையுமாறு செய்வோம் என்றார். “இயற்கை விவசாய வாரியம்” ஒன்றினை அமைப்போம். அதற்கு உமேந்தர் தத் உட்பட பல்வேறு குழுக்களின் வல்லுனர்களையும் வருமாறு வேண்டினார். தம்மை இந்த மாபெரும் விழாவில் பங்கு கொள்வதில் மகிழ்ச்சி என்றாலும் மூன்றாவது நாளுக்கு மட்டுமே வந்தது வருத்தமாக உள்ளது என்றும் தமக்கு இப்படி பல மாநிலங்களிலிருந்து இவ்வளவு விவசாயிகளும் வல்லுனர்களும் வந்திருப்பது மிகவும் பெருமை அளிப்பதாகவும், தான் மூன்று நாளும் இங்கு வராதது பெரும் துயரம் என்றும் கூறினார். அரசின் பஞ்சாப் அக்ரோ ஒவ்வொரு ஆண்டும் 1000 இயற்கை விவசாயிகளை பதிவு செய்து ஒரு பெரும் இயக்கமாக இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைக்கும் என்றார். மேலும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும்/ப்ளாக்கிலும் பஞ்சாயத்தின் நிலத்தில் ஒரு மாதிரி இயற்கைப் பண்ணை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

பின்குறிப்பு

ஹரியான முதல்வர் இதனை வெறும் மேடைப் பேச்சாக இல்லாமல் அடுத்த வாரமே கேத்தி விராசட் மிஷனின் (ஆஷாவின் ஒரு தலைவரும் கூட) உமேந்தர் தத் அவர்களை உடனடியாக இவற்றை முன்னெடுத்து செல்ல ஆவணங்களைக் கொடுக்குமாறு பணித்தார். அவரது வேளாண் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் வேகமாக செயல்படப் பணித்தார். பஞ்சாபின் இயற்கை வேளாண் வீரன் உமேந்தர் தத் ஒரே வாரத்தில் முதல் அமைச்சரை சந்தித்து ஆவணங்களை கொடுத்தார். இது இப்பொழுது தீவிரமாக பரிசீலிக்கப்படுகிறது. நமது தமிழகத்தில் உயிர்ம (இயற்கை) வேளாண்மைக்கான கொள்கை வரைவு சமர்பிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக முதல் மந்திரியின் மேசையில் உறங்கிக்கொண்டிருக்கிறது! தமிழக‌த்திற்கு இந்த இயற்கை விடியல் வருமா?இயற்கை உழவர் சங்கமம் - சண்டிகர் நிகழ்வுகள்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org