தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பீடையிலாததோர் கூடு - ஜெய்சங்கர்


மண் பயனுற வேண்டும்

இந்த மாதம் செலவு கணக்கு பார்க்க வேணுமல்லவா… அதற்கு முன்னால் வீட்டின் அளவு தெரிய வேண்டுமே… நமது வீடு மொத்தம் சுமாராக 1660 சதுர அடி. இது வெளிக்கூடு. மூன்று திண்ணைகளையும் சேர்த்தது. உள் கூடு (திண்ணைகளையும் சேர்த்து) சுமார் 1330 சதுர அடி. மொத்த செலவு 16,90,000 ரூபாய். அப்படியானால், சதுர அடிக்கு ஆன செலவு ரூபாய் 1020. இதில் வீட்டின் எல்லா செலவுகளும் அடக்கம். கதவுகள், சாளரங்கள், வண்ணப் பூச்சு ஆகிய எல்லாம் அடக்கம். வடிவமைப்புச் செலவும் இதில் அடங்கும். சூரிய ஒளிக் கண்ணாடி(Solar Panels), மின்கலம்(Battery), விளக்குகள், குழாய்கள், தண்ணீர் பைப்புகள் ஆகியவற்றை சேர்க்கவில்லை. சுவற்றின் உள்ளே மின் இழைகள் (Wires), பைப்புகள் ஆகியவற்றை வைக்காமல், வெளியே தெரிவது போல்தான் பதிக்கப் போவதால் அதற்கு அதிக செலவு பிடிக்காது என்று எண்ணுகிறேன்.

சென்னையில், இப்போது ஒரு சாதாரண வீட்டைக் கட்ட, குறைந்த பட்சம் சதுர அடிக்கு 1500 ரூபாய் ஆகிறது என்கின்றனர். அதுவும் நாமே வேலைகளையும், வேலையாட்களையும் மேற்பார்வை செய்தால் மட்டுமே இந்த அளவில் செலவு இருக்கும். பொதுவாக கட்டுமானக் கம்பெனிகளின் மூலம் கட்டினால் சதுர அடிக்கு 2000 ரூபாய் ஆகிறது. சென்னை போன்ற நகரங்களை விட இங்கு, பண்ணையில் கட்டிட வேலை ஆட்களின் சம்பளம் சற்று குறைவு. சுமார் 30 விழுக்காடு கொத்தனார்களுக்கும், 25 விழுக்காடு வேலையாட்களுக்கும் சம்பளம் குறைவு. எனவே, இதே வீட்டை சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெரு நகரங்களில் கட்டினால் ஆட்கள் சம்பளம் சுமார் 30 விழுக்காடு அதிகமாகி இருக்கும். ஆனால், கட்டுமானப் பொருட்களின் விலை நாங்கள் கட்டிய இடத்தில் சற்றே அதிகம். இரும்பு, சிமெண்ட் போன்ற பொருட்கள் 5 முதல் 10 விழுக்காடு அதிக விலைக்கு வாங்க வேண்டி வந்தது. மேலும், செங்கல், மணல் ஆகியவை தரமானதாக இருக்க வேண்டியதால் சற்று தொலைவிலிருந்து தருவிக்க வேண்டி வந்தது. இதனால், அந்த பொருட்களை நம் இடத்திற்கு எடுத்து வர அதிக போக்குவரத்து செலவு ஆனது. இதனால், அதன் அடக்க விலை சுமாராக 35 விழுக்காடு அதிகமானது. இவை தவிர, மற்ற கட்டுமானப் பொருட்களின் விலையில் பெரிய வித்தியாசம் இல்லை.

வழக்கமாக, வீடு கட்டும் போது, வேலையாட்களின் சம்பளத்தை விட கட்டுமானப் பொருட்களுக்கான செலவு அதிகமாக இருக்கும். கட்டுமானப் பொருட்களுக்கான செலவு மொத்த செலவில் 60 முதல் 70 விழுக்காடு வரை கூட வந்து விடும். ஆனால், இந்த வீட்டில் 45 விழுக்காடு மட்டுமே பொருட்களுக்கான செலவு. (மேற்சொன்னது போல், பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி வந்தும்) 55 விடுக்காடு வேலையாட்களின் சம்பளம் (சம்பளம் பெரு நகரங்களை விட குறைவாக இருந்தும்). பொருட்களுக்கு ஆன செலவை விட ஆட்களின் சம்பளம் அதிகமாக இருந்ததில் ஒரு மன நிறைவு. ஏனெனில், ஆரம்பம் முதலே, பணக்காரக் கம்பெனிகளுக்கு காசு கொடுப்பதை தவிர்க்கவே நாங்கள் விரும்பினோமல்லவா!

வீடு கட்ட ஆன செலவை மற்றொரு கோணத்தில் பிரித்துப் பார்த்தோம். மூன்று பெரும் பகுதிகளாக வீட்டின் வேலைகளை வகுத்தோம். ஒன்று வடிவமைப்பு (Design), இரண்டு வீட்டின் கூடு (Structure), மூன்று முடிவமைப்பு (Finishing). இந்த முறையில் பார்த்தால், வடிவமைப்பிற்கு 7 விழுக்காடும், கூட்டிற்கு 57 விழுக்காடும், முடிவமைப்பிற்கு 36 விழுக்காடும் செலவு ஆனது. இது பொருட்கள் மற்றும் சம்பளம் இரண்டும் சேர்ந்தது.

பொருட்களுக்கு ஆன செலவுகளை ஆராய்ந்ததில் மொத்த பொருட்கள் வழி செலவில், எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு ஆனது என்று பிரித்ததில், கீழ்க்கண்ட பட்டியல் கிடைத்தது.

  1. சிமெண்ட் 9% இரும்பு 10% மணல் 9%
  2. கடப்பா கற்கள் 3% மண் ஓடுகள் (Terracotta Tiles) 13%
  3. சுண்ணாம்பு 5% செங்கல் 13% கல் அரவை நிலையம் (ஜல்லி, பாறைப் பொடி போன்றவை) 8% மரம் 9%
  4. உடை கற்கள் (பண்ணையிலேயே உடைத்த செலவு மட்டும்) 10% மண் (பண்ணையிலேயே எடுத்தது, போக்குவரத்து செலவு மட்டும்) 1%
  5. இதர பொருட்கள் 10%

இதில், முதலில் உள்ள சிமெண்ட், இரும்பு மற்றும் மணல் ஆகியவை பெரிய நிறுவனங்கள் மூலம் கிடைக்கப் பெறுவது. அதற்கு மொத்தம் 28 விழுக்காடு செலவு. அடுத்து உள்ள கடப்பா கற்களும் (ஆந்திரா) மண் ஓடுகளும் (கேரளா) தொலைவிலிருந்து வந்தாலும் பெரிய நிறுவனங்களல்ல. அவற்றிற்கு ஆன மொத்த செலவு 16 விழுக்காடு. சுண்ணாம்பு, செங்கல், கல் அரவை நிலையம் மற்றும் மரம் அண்மையில் கிடைக்கப் பெறுவது. மேலும், அவை தனி நபர்களால் நிர்வகிக்கப்படுவது. அவற்றுக்கு ஆன மொத்த செலவு 35 விழுக்காடு. உடை கற்களும் மண்ணும் நமது பண்ணையிலேயே எடுக்கப்பட்டது. அதற்கு ஆன மொத்த செலவு 11 விழுக்காடு. இந்த 11 விழுக்காடு பொருட்கள் நமது வீட்டில் கூரை வரை உள்ள கூட்டின் 90 விழுக்காடு பொருட் செலவு என்பது ஆச்சரியம். இதனால் தான் வீடு கட்ட ஆன மொத்த செலவு குறைவாக இருக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும். மேலும், இந்த விழுக்காடுகள் அனைத்தும் செலவான பணத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. பொருட்களின் கொள்ளளவில் (Volume) பார்த்தால் இந்த விகிதம் இன்னும் நன்றாக இருக்கும். ஏனென்றால், கொள்ளளவில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டிற்கும் மேல் உடை கற்களும், மண்ணும் தான் இருக்கும்.

வீட்டின் கூட்டை அமைக்கும் போது ஆன செலவினங்களை அஸ்திவாரம் அல்லது கடைகால், சுவர்கள், கூரை மற்றும் மரத்தினாலான கதவு சாளரங்கள் என்று நான்கு பகுதிகளாக பிரித்து பார்த்தோம். இந்த நான்கு படிகளிலும் பொருட்கள் மற்றும் சம்பளத்தின் செலவையும் தனியாக பகுத்து பார்த்ததில் ஒன்று புலனானது. மொத்தமாக கூடு வரை உள்ள செலவில் பொருட்களுக்கும், ஊதியத்திற்கும் ஆன செலவு சரி பாதியாக இருந்தாலும் கூரை அமைக்க பொருட்களுக்கு ஆன செலவு 63 விழுக்காடு, ஊதியம் வெறும் 37 விழுக்காடு மட்டுமே. கடைகால் மற்றும் சுவர்களுக்கு பொருட்செலவு குறைவே. காரணம் அவற்றை அமைத்ததில் பெரும்பாலும் பண்ணையில் உள்ள பொருட்களைக் கொண்டே கட்டியது. மற்றொரு வகையில் பார்த்தால், கூடு வரை உள்ள மொத்த செலவில் 40 விழுக்காடு கூரைக்கு மட்டுமே ஆனது. இது எந்த விதமான வீடு கட்டும் போதும் எல்லோரும் ஒப்புக் கொள்ளும் அனுபவமே. சாதாரண, வலிவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் கூரைக்கு இன்னும் அதிகம் செலவே ஆகும்.

முடிவமைப்பில் மொட்டை மாடியில் கைப்பிடி சுவர் அமைத்தது, மொட்டை மாடியில் மண் ஓடுகள் பதித்தது, மழைநீர் சேகரிக்கும் தொட்டி அமைத்தது, மாடிப்படிக்கு மண் ஓடுகள் பதித்தது, வெளி சுவற்றுக்கு சந்துகள் அடைத்தது (Pointing), உள் சுவற்றுக்கு பூசு வேலை, அலமாரிகள் அமைத்தது, சமையலறை மற்றும் குளியலறை சுவர்களுக்கு ஓடுகள் ஒட்டியது, குளியலறை மற்றும் கழிவறையில் தரை, அறைகளின் தரைக்கு மண் ஓடுகள் பதித்தது, திண்ணைகளுக்கு தரை அமைத்தது ஆகியவை அடங்கும். இதற்கு முன் சொன்னதுபோல் மொத்த செலவில் 36 விழுக்காடு செலவு ஆனது. ஆனால், இதில் பொருட்களின் செலவு குறைவு, 35 விழுக்காடு மட்டுமே. மீதி 65 விழுக்காடு செலவு ஊதியத்திற்கு ஆனது.

விலையைப் பொறுத்து அல்லாமல், அளவைப் பொறுத்து மதிப்பிட்டதில் இப்போது, மொத்தம் 180 மூட்டை சிமெண்ட் பயன்படுத்தியுள்ளோம். முழுவதும் சிமெண்ட் மூலம், சாதாரண கட்டுமானத்திற்கு, இந்த அளவு கட்டிடத்திற்கு குறைந்தது இன்னும் 320 மூட்டை, அதாவது 500 மூட்டை சிமெண்ட் செலவாகி இருக்கும். இரும்பு கம்பிகள் இப்போது செலவானது சுமார் 1,100 கிலோ. வழக்கமான கட்டிடமாக இருந்திருந்தால் குறைந்தது 4,500 கிலோ இரும்பாவது செலவாகி இருக்கும். இயன்றவரை மணலுக்கு பதிலாக பாறைப்பொடியை பயன்படுத்தினோமல்லவா… மொத்த மணல் உபயோகம் இப்போது 9 யூனிட்டுகள். அதாவது 9 கன மீட்டர் அல்லது 315 கன அடி. மொத்த பாறைப்பொடியின் பயன்பாடு 15 யூனிட்டுகள். அதாவது 15 கன மீட்டர் அல்லது 525 கன அடி. எனவே, 525 கன அடி மணல் மிச்சப்படுத்தப்பட்டது. சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய இடு பொருட்களான சிமெண்ட், இரும்பு மற்றும் மணல் போன்றவற்றில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கொள்ளளவு மட்டுமே செலவு செய்து இரண்டு பங்கு சேமித்துள்ளோம். சூழல் மாசு குறைந்தது மட்டுமல்லாமல், இந்த முறையில் செலவும் குறைந்தது. கரும்பு தின்னக் கூலி.

இந்த மூன்று கட்டுமானப் பொருட்களின் சிக்கனம் மூலம் கிடைத்த மொத்த சேமிப்பு சுமார் மூன்று இலட்சம் ரூபாய். சிமெண்டில் சுமார் ஒரு இலட்சம், இரும்பில் ஒன்றரை இலட்சம் மற்றும் மணலில் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் சேமிக்க முடிந்தது.

வீடு கட்ட மற்றொரு முக்கியமான பொருள் தண்ணீர். முன்பே சொன்னது போல், இங்கு மின்சாரம் இல்லாததால், நமக்கு தண்ணீர் கை பம்ப்பிலிருந்து கிடைத்ததே. தண்ணீர் அதிகம் தேவையான நாட்களில் ஒருவர் மாற்றி ஒருவர் கை பம்ப்பில் தண்ணீர் ஆட்டி, 1600 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தரைத் தொட்டியில் சேமித்துக் கோண்டே இருந்தோம். மழை பெய்த நாட்களில் மழைத்தண்ணீரை சேமித்தும் பயன்படுத்தினோம். நான்கைந்து முறை மட்டுமே, அவசியம் ஏற்பட்ட போது, சுமார் 10,000 லிட்டர் வரை தண்ணீரை டீசல் பம்ப்பின் மூலம் இறைக்க வேண்டி வந்தது. சேற்றின் மூலம் கட்டியதால் தண்ணீர் தேவை மிகவும் குறைவே. சேற்றுக் கலவை செய்ய மட்டுமே தண்ணீர். சிமெண்ட் மூலம் கட்டினால், குறைந்தது இருபது நாட்களுக்காவது அதனை தண்ணீர் ஊற்றி மெதுவாக உலர வைக்க வேண்டும். அதற்கு, கலவைக்கு ஆகும் தண்ணீர் செலவை விட குறைந்தது பத்து மடங்கு தண்ணீர் பிடிக்கும். இந்த மாதிரி சேற்றை வைத்து கட்டுவதற்கே சுமார் 80,000 லிட்டர் தண்ணீர் செலவானது. முழுவதும் சிமெண்ட்டினால் கட்டி இருந்தால் 8,00,000 லிட்டர் தண்ணீர் செலவாகி இருக்கும். சிமெண்டினால் கட்டிய சில பகுதிகளுக்கும் கைத் தெளிப்பான் மூலம் தண்ணீர் அடித்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தினோம்.

மின்சாரமும் இல்லாமலே தான் பெரும்பாலான கட்டிட வேலைகள் நடந்துள்ளன. இன்றைய சூழலில் அதுவே ஒரு பெரிய காரியமாகிறது. “மின்சாரம் இல்லாமல் எப்படி வேலை செய்வது?” என்று கேட்கும் இளைய தலைமுறையினரே இன்றைய தொழிலாளிகள். மர வேலைகளுக்கு, ஆசாரி, தனது பட்டறையில் செய்த வேலைகளுக்கு மட்டும் மின்சாரம் பயன்படுத்தினார். இங்கேயே செய்த, துளையிடும் வேலைகள் மற்றும் அறுப்பு, இழைப்புகள் யாவும் கை இயந்திரங்களாலேயே செய்யப்பட்டது.

சரி, இவையெல்லாம் ஒரு பண்ணையில் செயலாக்க முடியும். நகரங்களில் கட்டும் வீடுகளை இப்படி வடிவமைக்க இயலுமா? இது மாதிரியான வடிவமைப்பைக் கொண்ட வீட்டை பெரு நகரங்களில் கூட கட்டலாம். நகரங்களில் கட்டப்படும் வீடுகளின் எல்லா பொருட்களும் எப்படியும் வெளியிலிருந்து தான் வர வேண்டும். மணலுக்கு பதிலாக மண்ணை தருவிக்கலாம். செங்கற்களுக்கு பதிலாக கருங்கற்களை தருவிக்கலாம். செலவு சற்றே அதிகமாகக் கூடும். ஆனாலும், சாதாரண கட்டிடத்திற்கு ஆகும் செலவை விட குறைவாகவே ஆகும் என்பது எனது ஊகம். எப்படி இதை கண்டுபிடிப்பது? யாரேனும் நகரத்தில் அல்லது பெரிய ஊர்களில் கட்டிப் பார்த்து, அவர்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org