தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - பரிதி


(இது காலின் டட்சு எனும் உயிரியலாளர் 2005-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை ஒன்றின் சுருக்கப்பட்ட தமிழாக்கம். இது இரண்டாம் பகுதி. அவருடைய இணையதள முகவரியும் ஆங்கில மூலக் கட்டுரைக்கான சுட்டியும் இந்தத் தமிழாக்கத்தின் இறுதியில் உள்ளன.கட்டுரையில் உள்ளவற்றில் அதிகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள், அருங்கலைச் சொற்கள், மற்றும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் போன்றவற்றின் ஆங்கில வடிவம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. - பரிதி (thiru.ramakrishnan@gmail.com), மொழிபெயர்ப்பாளர் )

செய்யவேண்டியவற்றை நாம் ஏன் செய்வதில்லை?


செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும். [குறள் 466]

தற்கால உலகம் மேற்கத்திய வல்லரசுகள், பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள், அனைத்துவகை வல்லுநர்கள் ஆகியோரின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டுள்ளது. (மேற்கத்திய வல்லரசுகள் பெரும்பாலும் அரசியலையே தம் முழு நேரத் தொழிலாகக் கொண்டவர்களின் கைகளில் உள்ளன.) பருண்மையான அதிகாரத்தையும் ஆற்றலையும் தம்மிடம் வைத்துக்கொண்டுள்ள இவர்கள்தாம் உலகை இப்போது வாட்டும் அனைத்து இன்னல்களுக்கும் பொறுப்பேற்கவேண்டும். ஏனெனில், பொறுப்புணர்வற்ற அதிகாரம் இருக்கலாகாது.

மேற்படி தலைவர்களில் பெரும்பாலானோர் நல்லவர்களாக இருக்கக்கூடும். ஆனால் அவர்கள் சிக்கல்களின் உண்மைத் தன்மையை, இயல்பை அறிந்துணரவில்லை. கெடுதல் உண்டாக்கும் யோசனைகள் அவர்களுடைய மூளைகளில் நிறைந்துள்ளன. இதற்கான காரணங்களை இனிப் பார்க்கலாம்.

ஊடாடு கருத்தியலின் தவிர்க்கவியலா அழுத்தம்

மக்களில் ஒரு சிலர் எப்படித் தலைமைப் பொறுப்புக்கு வளர்கிறார்கள் என்பதை ஊடாடு கருத்தியலாளர்கள் துல்லியமாக ஆராய்ச்சி செய்கிறார்கள். தலைமைப் பொறுப்பேற்பதில் ஆர்வம் உள்ளவர்களிடம் அதிகாரம் சேர்கிறது என்பது நடைமுறை உண்மை. அத்தன்மை உள்ளவர்கள் தம்மிடம் தலைமைப் பொறுப்பு வந்தடைவதற்கேற்ற திட்டக் கொள்கைகளைப் பின்பற்றுகின்றனர். அவர்களில் தன்னலம் மிக்கவர்களைப் பொறுத்தவரை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதே தம் செயல்களை நியாயப்படுத்துவதற்குப் போதுமான காரணம்.; மீதமுள்ளவர்கள் தம் தலைமை மக்களுக்குத் தேவை என்று தம் செயல்களை நியாயப்படுத்திக்கொள்கின்றனர். தாம் இல்லாவிடில் குழப்பமே மிஞ்சும் என்று அவர்கள் கருதுகின்றனர். இது சில சமயங்களில் உண்மையாக இருக்கக்கூடும். ஆனால் சில சமயங்களிலாவது தலைவர்களே குழப்பத்தையும் போர்களையும் உண்டாக்குகின்றனர்; அதன் மூலம் தம் தலைமையின் தேவையை நியாயப்படுத்திக்கொள்கின்றனர். (மக்கள் கலைஞர் பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் சொன்னவாறு, ஏழைகளுக்குப் பணக்காரர்கள் எவ்வளவு தேவையோ அதைவிடப் பணக்காரர்களுக்கு ஏழைகள் பன்மடங்கு தேவைப்படுகின்றர். ஆனால், ஏழைகள் இதை உணர்வதில்லை; அல்லது, உணர்ந்தாலும் அவர்களால் அதைப் பயன்படுத்த முடிவதில்லை.)

நாம் நம் உயிரியல் வேர்களைத் தொலைத்துவிட்டோம்

மனிதர்கள் பிற விலங்குகளை விட மிக மேன்மையானவர்கள் என்று பண்டைக்காலந்தொட்டு ப்லேட்டோ போன்ற மெய்யறிஞர்களும் முன்னுணர்ந்துரைப்போரும் கூறிவந்துள்ளனர். மனித இனம் இயற்கையை வெல்லும் வலு படைத்தது என்று கூறுவதன்மூலம் நவீன அறிவியலும் மேற்படிக் கருத்தை வலியுறுத்துகிறது: நம் வசதிகளை அதிகரித்துக்கொள்வதற்கேற்ப உலகை மாற்றி வடிவமைத்துக்கொள்ளவேண்டும் என்கிறது அறிவியல்.

இந்தப் போலித் தற்பெருமைகள் நவீன வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் எதிரொலிக்கின்றன. அவை வேளாண்மையைப் பொறுத்தவரை மிக நேரடியாகவும் வெளிப்படையாகவும் பெருந்துயருக்கு வழிவகுத்துள்ளன – ஏனெனில், நிலத்தின் தன்மை, சூழல், விலங்குகள் மற்றும் புதலிகளின் உடலியல் யதார்த்தங்கள், சொல்லப்போனால் உலகின் ஒட்டுமொத்தச் சூழலியல் ஆகியவற்றின் தாக்கங்களை மீறிச் செல்லும் நோக்கில் நவீன வேளாண்மை வடிவமைக்கப்படுகிறது.

நிலைத்த வேளாண்மை இல்லாவிடில் நமக்கு விடிவே இல்லை. வேளாண்மை நிலைபெற வேண்டுமானால் அது உயிரியல் கோட்பாடுகளின் அடிப்படையில் அமையவேண்டும். வேளாண்மை மட்டுமன்றி, அனைத்துப் பொருளாதாரக் கோட்பாடுகளும், அரசியலும், உயிரியல் பருண்மையை உணரவேண்டும், அதில் ஆழமாக வேரூன்றி வளரவேண்டும். பிரித்தானியத் தலைமை அமைச்சரைப் போல அரசியலே தொழிலாகக் கொண்டவர்கள் இந்த உயிரியல் பருண்மையைக் கொஞ்சம் உணர்ந்திருப்பதுபோலப் பேசுகிறார்கள். ஆனால், ப்ரிட்டனும் அதன் முதன்மைக் கூட்டாளி வல்லரசுகளும் இந்தப் பருண்மையை முற்றிலும் மீறிக்கொண்டே இருக்கிறார்கள்.

படிமுறைகளைத் தேடி …

மாந்த இன வரலாறு நெடுகிலும் மக்கள் தம் வாழ்க்கையை வழிநடத்திச் செல்வதற்கான எளிய படிமுறைகளை என்றென்றைக்கும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். ஒருவகையான பொருளாதாரம் தற்காலப் படிமுறையாக உள்ளது: (உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உள்ளது எனும்) பணவியத்தின் அடிப்படையில் அமைந்த முதலாண்மைப் பொருளாதாரமும் உலக அளவில் செயல்படும் தங்குதடையற்ற சந்தையும் அதன் கூறுகள். உலகளாவிய இந்தச் சந்தை முழுக்க முழுக்கப் 'போட்டி'யால் இயக்கப்படுகிறது. இந்தப் போட்டியானது, டார்வின் கண்டறிந்த [கூர்தலறக் கருத்தியலின் ஒரு கூறான] இயற்கையான தெரிவு எனும் கருத்துப்படிவத்துடன் தொடர்புடையதென்ற [தவறான] கருத்து நிலவுகிறது. [அதன் காரணமாக, மக்கள் இயல்பாகவே போட்டி மனப்பான்மை உடையவர்கள் என்ற மிகத் தவறான, இழிவான கருத்து இந்தப் பொருளாதார முறையைத் தாங்கிப் பிடிப்பவர்களால் பரப்பப்படுகிறது.]

ஒரு பொருள் அல்லது சேவையைக் குறிப்பிட்ட விலைக்கு ஒருவர் விற்கையில் உலகின் ஏதாவதொரு மூலையில் உள்ள வேறொருவர் அதைவிடக் குறைந்த விலைக்கு அந்தப் பொருளை விற்பதன் மூலம் போட்டியில் எந்த நேரத்திலும் தோற்கடிக்கப்படலாம் என்பது இந்தப்போட்டிக் கருத்தியல். இதனடிப்படையிலான பொருளாதர முறை 'புது-தாராளமயம்' எனப்படுகிறது. பிற படிமுறைகளைப் போலவே இதுவும் நம்மை எதிர்கொண்டுள்ள அனைத்து வகையான சிக்கல்களுக்கும் தீர்வாக முன்வைக்கப்படுகிறது. (ஆனால், [ஆளும் வர்க்கத்தினருக்குத் தேவைப்படுகையில்] இந்தப் போட்டிக் கருத்தியலில் விதிவிலக்குகள் செய்யப்படும்.)

வேளாண்மையும் ஒரு தொழிலே

வேளாண்மையைப் பொறுத்தவரை மேற்கண்ட பொருளாதாரப் படிமுறை ஒரு மந்திரமாகவே மாற்றப்பட்டுவிட்டது. உலகின் இப்போதைய பேரிடர்களுக்கான காரணிகளில் அநேகமாக இதுவே தனிப்பெரும் காரணியாக இருக்கும். “வேளாண்மையும் ஒரு தொழில்தான்” என்பதுவே அந்த மந்திரம். உண்மையில் ஒவ்வொரு தொழிலும் வெவ்வேறு தன்மைகளை உடையது. மகிழுந்துத் தொழிலுக்கு உகந்த படிமுறையை வேளாண்மையில் பயன்படுத்தினால் உலகளாவிய பேரிடர் விளையக்கூடும்.

குறுகிய காலத்தில் உயர்ந்த அளவு உபரி ஈட்டவேண்டும் என்பதுதான் அந்த மந்திரத்தின் விளைவு. போட்டிகளின் உச்சத்தில் இருக்கும் இவ்வுலகில் அவ்வாறு செயல்படாதவர்கள் புறந்தள்ளப்படுவர்.

எந்தவொரு தொழிலிலும் உபரியை அதிகப்படுத்துவதற்கு மூன்று அடிப்படை ஒழுங்குவிதிகள் உள்ளன. வேளாண்மையைப் பொறுத்தவரை, அம்மூன்றுமே மாந்த குலத்தின் மெய்யான தேவைகளுக்கு, ஏன் விருப்பங்களுக்கு, முற்றிலும் எதிரானவை. மேலும், மாந்த இன நலனை என்றென்றைக்கும் தக்கவைத்துக்கொள்வதற்கு அவை முழுக்க முழுக்க எதிரானவை.

உற்பத்தியை அதிகப்படுத்தவேண்டும் என்பது முதல் ஒழுங்குவிதி. உழவர்கள் தொடர்ந்து விளைச்சலை அதிகப்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். எத்தகைய நிலமானாலும், அது விளைச்சலுக்கு ஒவ்வாத தரிசு நிலமாகவே இருப்பினும், அதில் அதிகப்படியான விளைச்சலை எடுக்கவேண்டும் என்று அவர்கள் உந்தப்படுகின்றார்கள். அதனால் இடுபொருள்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. சாகுபடி செய்யப்படாத, அல்லது சாகுபடிக்கு ஒத்துவராத, தரிசு நிலங்களிலும் தேவையின்றி வேளாண்மை செய்யப்படுகிறது. (எ. கா. கலிபோர்னியாவின் மொகாவி பாலைவனத்தில் மேய்ச்சல் நிலங்களை உருவாக்கியிருத்தல், கிரீசிலும் இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியிலும் [இயல்புக்கு எதிராக] கோதுமை பயிரிடுதல்.) இதற்கேற்ப, குறிப்பிட்ட உணவு வகைகளை மேன்மேலும் அதிகமாக உட்கொள்ளுமாறு நுகர்வோர் [மக்கள்] தொடர்ந்து தூண்டப்படுகிறார்கள். (சந்தைப்படுத்தலின் திறமை காரணமாக இந்தத் தூண்டுதல் பெரும் எண்ணிக்கையிலான மக்களை பருமனாக்குவதில் வெற்றியடைகிறது.)

[விளை]பொருள்களுக்கு மதிப்புக் கூட்டவேண்டும் என்பது இரண்டாவது ஒழுங்குவிதி. இது தவிர்க்கக்கூடிய கழிவுகளை மிகப் பெரிய அளவில் உருவாக்குகிறது:

நுகர்வோரைக் கவரும்வண்ணம் பொதி கட்டும்போது பயன்படுத்தப்படும் அட்டைகள், வண்ண நெகிழித் தாள்கள் உள்ளிட்டவை; [விளைபொருள்கள் கெடாமல் இருப்பதற்காக] மீப்பெரும் எண்ணிக்கையிலான சேர்க்கைப் பொருள்கள் (அவற்றில் பெரும்பாலானவை தனித்தனியாகவும் கூட்டாகவும் நம் நலனையும் சூழலையும் எப்படிப் பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது); “வாடாத,” புத்தம்புதியதென விளம்பரப்படுத்தப்படும் பழங்கள், காய்கறிகள் (அவை இயற்கையில் அந்தப் பருவத்தில் விளையாவிடினும் நவீன வேளாண்மையால் விளைவிக்கப்பட்டு) உலகின் ஒரு மூலையில் இருந்து வானூர்திகள் மூலம் வேறொரு மூலைக்கு எடுத்துச் செல்லப்படுதல் மிக அதிக அளவில் சூழலைக் கெடுக்கிறது; [எ.கா. ஆசுத்திரேலியா, அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்து இங்கு வானூர்தி மூலம் ஆப்பிள் பழங்களைக் கொணர்தல்; நண்பர்கள் அல்லது உறவினர்கள் கொய்யா, வாழை முதலிய உள்ளூர்ப் பழங்களை வாங்கிவருவதைக் காட்டிலும் ஆப்பிள் போன்றவற்றை வாங்கிவருவதைப் பெருமையாகக் கருதுதல்; நோயாளிகளுக்கும் இவ்வாறே 'வெளிநாட்டுப்' பழங்களை வாங்கி உண்ணுமாறு பரிந்துரைத்தல்.] அந்தப் போக்குவரத்துக்குத் தேவையான வானூர்தி எரிபொருளுக்கு வரி விலக்குத் தருவதன் மூலம் செலவு செயற்கையாகக் குறைக்கப்படுகிறது;

இவையனைத்தைக் காட்டிலும் இறைச்சி உருவாக்கமும் போக்குவரத்தும் மிகவும் சூழல் கேடு உண்டாக்கும் செயல்கள்.

கால்நடை உற்பத்தி தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சிற்சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளபோதும், அந்த உற்பத்தி முறை சூழல் மீது பெருந்தாக்கம் செலுத்துவதாகவே உள்ளது; விலங்குகளுக்கும் மிகவும் தீங்குபயக்கிறது. சில 'நவீன' பன்றி ஆலைகள் பத்து லட்சம் பன்றிகளை அடைத்துவைத்து வளர்க்கின்றன. மக்களிடையே தேவை இருப்பதுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது; நாம் எல்லோருமே மூன்று நேரமும் இறைச்சி உண்பவர்களாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை இது தருகிறது.

ஆனால், இதன் பின்னணியில் உள்ள உண்மை இதுதான்: உலகில் தேவைக்கு அதிக அளவில் தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன; அவற்றைப் பயன்படுத்துவதற்கு எளிய வழி கால்நடைகளுக்குத் தீவனமாகத் தருவதுதான். இந்தத் 'தேவை'யைக் காரணமாகக் காட்டி மேன்மேலும் உணவுத் தானியங்கள், பருப்புகள் ஆகியவற்றை விளைவிக்க உழவர்கள் தூண்டப்படுகிறார்கள். உலகில் விளையும் தானியங்களையும் பருப்பு வகைகளையும் மக்கள் [மட்டுமே] உணவாகக் கொள்வார்களெனில் இப்போது விளைவதில் சிறு பங்கு இருந்தாலே போதும். இப்போது விளைவதைக் குறைந்த விலையில் மக்களுக்குத் தருவதற்கு மாறாக விலங்குகளுக்கு உணவாக்கி பின்னர் இறைச்சியாக விற்பதன் மூலம் அவற்றை மிக அதிக விலை கொண்ட உணவுப் பொருள்களாக மாற்றிவிடுகின்றனர். [அதன் மூலம் உணவுத் தொழிலில் உள்ள பெருநிறுவனங்கள் கொள்ளை உபரி ஈட்டுகின்றன. அதற்காகத்தான் இவ்வளவும்!]

நவீன ஆலைமயமான பெரும் பண்ணைகளில் நிகழும் கால்நடை வளர்ப்பு மிகவும் ஆபத்தானது, கொடுமையானது, சூழலை மாசுபடுத்துவது. (அமெரிக்க ஒன்றிய மாநிலங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான டன்கள் எடையுள்ள எதிர்உயிர்மமருந்துகள் 'வளர்ச்சி ஊக்கி'களாகப் பயன்படுத்தப்படுகின்றன; இது அந்த மருந்துகளுக்கு எதிர்ப்பாற்றல் பெற்ற குச்சில்களை உருவாக்குகின்றது) அத்தகைய வளர்ப்பு முறை நிலைத்த தன்மையுடைதன்று என்பது சொல்லாமலே விளங்கும். பாரம்பரிய வளர்ப்பு முறையில் கால்நடைகள் புல் மேயும் (எருமை, மாடு, ஆடு போன்றவை) அல்லது சமையல் மற்றும் வேளாண் கழிவுகளைத் தின்னும் (பன்றி, கோழி போன்றவை).

ஆலைப் பண்ணைகளில் செறிவான தீனி தந்து வளர்க்கப்படும் கால்நடைகள் மனிதர்களுடைய முதன்மை உணவுகளை உண்கின்றன. 2050-ஆம் ஆண்டு வாக்கில் உலகில் 900 கோடி மக்கள் இருப்பார்கள் என்று ஒன்றிய நாடுகளவை தெரிவிக்கிறது. உலகக் கால்நடை எண்ணிக்கை இப்போதிருக்கும் வளர்ச்சி விகிதப்படி உயர்ந்தால் 2050-இல் மேலும் 400 கோடி மக்களுக்குப் போதுமான உணவைக் கால்நடைகள் உண்ணும். நுகர்வு அதிகமாகி வருகிறது; இதற்குக் காரணம் மக்கள் சிங்கங்களைப் போல உண்பது அன்று, சந்தைப்படுத்துதலின் வெற்றிதான் இந்த நுகர்வுக்குக் காரணம்.

இவை அனைத்தைக் காட்டிலும் மோசமாக, உபரியை அதிகரிப்பதற்கு உற்பத்தியாளர் செலவைக் குறைக்கவேண்டும். [இது மூன்றாவது ஒழுங்குவிதி.] அப்படியானால் செயல்முறையை எளிமைப்படுத்தவேண்டும், விலை குறைவான இடுபொருள்களைப் பயன்படுத்தவேண்டும், மொத்தத்தில் கருமித்தனமாகச் செயல்படவேண்டும். இத்தகைய செயல்பாடு கால்நடை வளர்ப்பைப் பொறுத்தவரை மிகவும் ஆபத்தானது. ப்ரிட்டனில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் எண்ணிக்கையிலான மாடுகள் இறப்பதற்குக் காரணமாக இருந்த மாட்டு மூளைக் கோளாறுத் தொற்றுநோய் மற்றும் வாய்ச் சப்பை நோய்களுக்கு ஒரே நேரடிக் காரணம் மேற்படிச் செயல்பாடுதான். (மாட்டு மூளைக் கோளாறு நோய் மனிதர்களுக்கும் அதையொத்த ஒரு நோயாக - creutzfelt-jacob disease - மாறி இப்போதும் அவ்வப்போது சில உயிர்களைக் காவு வாங்குகிறது.)

-மேலும் வரும்

பதவுரை

 1. பருண்மை real
 2. ஊடாடு கருத்தியல் game theory (வெவ்வேறு சூழ்நிலைகளில் மக்கள் ஒருவரோடொருவர் எப்படி உறவாடுகிறார்கள், முடிவெடுக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வுகள்; மேலும், குழுக்களிடையே நிலவும் பிணக்குகள் மற்றும் செயலுத்திகள் தொடர்பான ஆய்வுகள்)
 3. திட்டக் கொள்கை policy
 4. பெர்ட்டோல்ட் ப்ரெக்ட் bertolt brechtப்லேட்டோ plato
 5. மெய்யறிஞர் ('தத்துவஞானி') philosopher
 6. முன்னுணர்ந்துரைப்போர் prophets
 7. புதலிகள் [செடி, கொடிகள்] ('தாவரங்கள்') plants
 8. பிரித்தானிய british
 9. தலைமை அமைச்சர் prime minister
 10. ப்ரிட்டன் britain
 11. படிமுறைகள் algorithms
 12. பணவியம் monetarism
 13. முதலாண்மை capitalism
 14. டார்வின் charles darwin
 15. கூர்தலறக் கருத்தியல் the theory of evolution
 16. இயற்கையான தெரிவு (தேர்ந்தெடுப்பு) natural selection
 17. கருத்துப்படிவம் concept
 18. புது-தாராளமயம் neo-liberalism
 19. உபரி profit
 20. மொகாவி mojave
 21. கலிபோர்னியா california
 22. கிரீசு greece
 23. கார்ன்வால் conwall
 24. பொதி கட்டும்போது packaging
 25. சேர்க்கைப் பொருள்கள் additives
 26. “வாடாத,” புத்தம்புதிய fresh
 27. ஆசுத்திரேலியா australia
 28. அமெரிக்க ஒன்றிய மாநிலங்கள் the united states of america
 29. எதிர்உயிர்மமருந்துகள் antibiotics
 30. குச்சில்கள் bacteria
 31. ஒன்றிய நாடுகளவை the united nations
 32. மாட்டு மூளைக் கோளாறு நோய் bovine spongiform encephalopathy – mad cow disease
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org