தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்


பொன் விளையும் பூமி


கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஜமீன் காளியாபுரம் வழி, உனல்பதி வழியாக கேரள மாநிலத்திற்குள் செல்லும் வழியில் 2 ஆவது மைல்கல்லில் தார் சாலையை ஒட்டி அமைந்துள்ளது 'பொன் விளையும் பூமி'. இதன் மொத்தப்பரப்பளவு 50 ஏக்கர். இது 15 நபர்களுக்கு சொந்தமானது. அனைவரும் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்ப்பவர்கள். வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்து வந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் அறிமுகமாகி நண்பர்களானவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக பூமி வாங்கி விவசாயத்தில் ஈடுபட முயற்சி செய்துவந்தனர். இந்த காலகட்டத்தில் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் நிலம் வாங்க ஏற்பாடு செய்து இன்று வரை இணைந்து செயல்பட்டுவருபவர் கோவையை சேர்ந்த திரு. ஆனந்த் அவர்கள் (இவரும் தொழில்நுட்பத்துறையில் வேலை பார்த்து இன்று இயற்கை வாழ்வியல், தற்சார்பு விவசாயம் போன்ற எதிகால வாழ்வியலுக்கு உண்டான பயிற்சிகளை விரும்பி வருபவர்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டுள்ளார்).

இவர்கள் அனைவரது எண்ணமும் தங்களுக்கு சொந்தமான பூமியில் தங்கி தங்கள் குடும்பத்திற்கு தேவையானவற்றை உற்பத்தி செய்து கொண்டு தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி வீட்டிலிருந்தே வேலை பார்ப்பது ஆகும். தங்களது குடும்பம் ஆரோக்கியமான சூழலில் வாழும் வாய்ப்பும், நஞ்சில்லாத உணவும், ஆரோக்கிய வாழ்வும் இங்கு கிடைக்கும் என்று விரும்பினர். அவர்கள் அனைவரும் 28 இலிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களை சார்ந்து பெரியவர்களும் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த பூமியில் ரூபா என்பவர் தனது பெற்றோருடன் தங்கி விவசாயம் செய்துவருகிரார். நினு என்பவர் சில நாட்கள் மட்டும் தங்கி செல்கிறார். மற்றவர்கள் தங்களுக்கு சாதகமான கால கட்டத்தில் இங்கு வந்து தங்கி செல்கின்றனர். கூடிய விரைவில் ஒவ்வொருவராக இங்கு நிரந்தரமாக தங்கி வேலை செய்ய ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

இந்த பூமி வாங்கி சுமார் 5 வருடங்கள் முடிந்துவிட்டது. இந்த பூமி சர்க்கரை ஆலை அமைப்பதற்காக வாங்கி கம்பனியாக பதிவு செய்யப்பட்டு, அதில் ஏற்பட்ட கால தாமதத்தினால் அதில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. பல வருடங்களுக்குப்பின் அது தரிசாக விடப்பட்டுவிட்டது. காரணம் என்னவென்றால் ஓரின பயிர் செய்ததால் மண் தரம் கெட்டு களர் நிலமாக மாறியதே. மழை காலத்தில் நீர் தேங்கி, கோடை காலத்தில் மண் கடினத்தன்மை பெற்று காய்ந்து பாறை போல ஆகிவிட்டது. கிணற்றிலும் நீர் மட்டம் மிக மோசமான நிலையை அடைந்தது. 15 வருடங்களுக்கு முன் பூமி முழுவதும் தென்னை பயிர் செய்யப்பட்டிருந்தது. அதில் இன்று 10 ஏக்கர் பரப்பில் சுமார் 400 மரங்கள் மட்டுமே உள்ளன. மற்ற இடங்களில் மஞ்சனத்தி மற்றும் வேலிகாத்தான் மரங்கள் ஆக்கிரமித்துவிட்டன.

ஊடே ம‌ரங்கள் இல்லாத தென்னைத் தோப்பு

பிற மரங்கள் நட்டபின்பு

வேலையாட்களோ, உழவோ தேவைப்படாத மேட்டுப் பாத்தி

இந்த சூழலில் இவர்களால் வாங்கப்பட்ட பூமி மொத்தப்பரப்பும் அளக்கப்பட்டு ஒவ்வொரு ஏக்கராக தோராயமாக பிரிக்கப்பட்டது. அந்த ஒவ்வொரு ஏக்கரும் 30 அடி பாதையை ஒட்டி அமையுமாறு தோட்டம் முழுவதும் செல்லும் 30 அடி பாதை அமைக்கப்பட்டது. தார் சாலையை ஒட்டியுள்ள 3.5 ஏக்கர் பூமி இவர்களால் துவங்கப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.பிற்காலத்தில் இதில் பலவிதமான பயிற்சிகள் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு ஏக்கரும் ஒரு யூனிட்டாக பிரிக்கப்பட்டதில் 15 நபர்களும் அவர்களது தேவைக்கு ஏற்ப வாங்கியுள்ளனர். முதலில் தென்னை உள்ள பகுதியில் இரண்டு தென்னை மரங்களுக்கு இடையில் JCB இயந்திரத்தை கொண்டு 2 1/2 அடி அகலம், 1 1/2 அடி ஆழத்திற்கு வாணி எடுக்கப்பட்டு அதில் மட்டும் 5 அடிக்கு ஒரு இடத்தில் நீர் சொட்டும்படி சொட்டு நீர் குழாய் அமைக்கப்பட்டது. அந்த வாணியில் 5 அடிக்கு ஒரு தடி மரக்கன்றும் அடுத்த 5 அடியில் ஒரு பழ மரக்கன்றும் என பல ரகங்கள் மாற்றி மாற்றி நடவு செய்யப்பட்டுள்ளது. வேண்டாத கழிவுகள் மற்றும் களைச்செடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு அந்த வாணியில் போடப்பட்டு மூடாக்காக பயன்படுத்தப்பட்டன. இன்று தென்னை மரங்கள் குறைவான நீர்ப்பாசனத்திலேயே நன்றாக உள்ளன. கடந்த 3 வருடங்களாக ஏற்பட்ட கடுமையான வறட்சியிலும் பாதிப்பு ஏற்படவில்லை. இன்று களைகள் மிகவும் கட்டுப்பாட்டிலுள்ளது. (முந்தைய காலத்தில் களை என்பது தோப்பில் மிகவும் பிரச்சினைக்குரியதாக இருந்தது. கோடைக்காலத்தில் களைகள் காய்ந்த பின் அதில் சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டு பெரும் சேதத்தை உண்டாக்கியது. இன்று இந்த பிரச்சினை இல்லை). மற்ற பகுதியிலும் 25 அடிக்கு ஒரு 2 1/2 அகல, 1 1/2 அடி ஆழ வாணி எடுக்கப்பட்டு, அதில் தேவையில்லாத களைச்செடிகள் மற்றும் மரக்கிளைகள் இடப்பட்டு அதிலும் பலவிதமான மரங்களும் பழக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. இடையில் உள்ள இடங்களில் நெல், வரகு, தினை, நிலக்கடலை போன்ற தானியங்களும் பயிர் வகைகளும் பயிர் செய்யப்படுகின்றன.

பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருந்து 10 க்கும் மேற்பட்ட பெண்கள் தினமும் இங்கு வந்து வேலை செய்கின்றனர், நிரந்தரமாக. இங்கு விளையும் பொருட்களில் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துச்செல்கின்றனர். விளை பொருட்களுக்கு விலை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தோட்டத்திலுள்ளவர்கள் விதைகளை சேகரித்து தாங்களும் பயன்படுத்தி, விரும்பி கேட்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களது வசதிக்கேற்ப மேட்டுப்பாத்திஅமைத்து காய்கறி, கீரை வகைகளை பயிர் செய்துவருகின்றனர். வருடம் முழுவதும் இங்கு வேலை தொடர்ந்து நடந்துகொண்டுள்ளது. ஒரு காலத்தில் தரிசாகக்கிடந்த கரிசல் மண் பூமி இன்று எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கின்றது. தேவைக்கு ஏற்ப மரங்கள் ஒழுங்குடன் நடப்பட்டு வளர்ந்து நிமிர்ந்து நிற்கின்றன. மனிதர்கள், கால்நடைகள், மரங்கள் என்று இணைந்து ஒரு உயிரோட்டமான பூமியாக காட்சியளிக்கின்றது. மண்ணும் சிறிது வளம் அடைந்துள்ளது. இன்று கிட்டத்தட்ட 50 நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பூமியாக மாறியுள்ளது.

தொழிற்சாலை அமைப்பதற்காக பல விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட பூமி தரிசாக விடப்பட்டு பின்னர் விவசாயம் பற்றி தெரியாத பல நபர்களிடம் கிடைத்து விவசாய பூமியாக மாறியுள்ளது. இது எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்தை போக்கக்கூடியதாக, நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிவிடுகிறது. இன்று தொழில்நுட்பத்துறையில் வேலை பார்க்கும் பெரும்பான்மையானவர்கள் விவசாயத்தில் இறங்க விரும்பி வருகின்றனர். அவர்களுக்கு சரியான வழிகாட்டியாக இந்த 'பொன் விளையும் பூமி' அமைந்துள்ளது பெருமைக்குரியது ஆகும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org