தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கவிதைப் பக்கம் - கவிஞர் சாரல்

தாளாண்மை இல்லாமல் தவிப்பதுதான் சரியோ!


மலைமடியில் தவழ்ந்திறங்கும் மழைநீரின் வேகம்
மண்ணுயிர்க்கோ வறட்சியினால் மாளாத தாகம்
அலைகடல்போல் புரண்டெங்கும் ஆர்ப்பரித்தே ஓடும்
அதிவிரைவாய்க் கலந்துவிட ஆறுதனை நாடும்
நில்லாமல் ஓடுமதை நிறுத்திவிட்ட பின்னால்
நிலைத்துவிட்ட வறட்சியென்றும் நீங்காதோ முன்னால்
வலைப்பின்னல் போலெங்கும் தடுப்பணைகள் இருந்தால்
வற்றாமல் நீரென்றும் கிடைத்திருக்கும் விருந்தாய்


நீர்த்தேக்கம் பலஅமைத்தார் நிறைமதியோர் முன்னாள்
நிலையில்லா தழித்திங்கே நீக்கிவிட்டார் இந்நாள்
பேரணைகள் கட்டுவதால் பெரும்பயன்கள் உண்டோ
பெரிதாகக் கானழித்தால் பெருமழையும் உண்டோ
வேரோடு மரம்பலவும் வீழ்த்தியதால் இன்றும்
வீணாக நிலச்சரிவால் வீழுதுயிர் என்றும்
ஊரோடு சேர்ந்தென்றும் உழைத்தினிமேல் ஒன்றாய்
உருவாக்கும் தடுப்பணைகள் உதவாதோ நன்றாய்


மாய்ந்துவிட்ட குளம்பலவும் மறுபடியும் தோண்டி
மண்ணில்நீர் இறங்கபல வழிகாண வேண்டும்
பாய்ந்தோடும் மழைநீரைச் சேர்த்துவைக்கும் குட்டை
பாங்காகப் பலவின்றேல் பாழாகும் படப்பை
ஓயாமல் ஆழ்துளைகள் போடுவதைக் குறைப்போம்
உருப்படியாய்த் தடுப்பணைகள் உருவாக்கி நிறைப்போம்
தாய்போன்ற வேளாண்மை தளர்வதுவும் நன்றோ
தாளாண்மை இல்லாமல் தவிப்பதுதான் சரியோ!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org