தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தோரோ பக்கம் - சாட்சி


[தோரோ எழுதிய வால்டன் என்ற நூலில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டது. 160 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கவின் பாஸ்டன் நகர‌ம் மற்றும் மாசசூசட்சு மாநிலம், அன்றைய அமெரிக்காவின் கலாசாரத் தலைநகரமாய் இருந்தது. பாஸ்டன் அந்தணர்கள் (Boston Brahmins) என்று அங்குள்ள மேட்டுக் குடியினரைக் கூறுவர். அவர்களிடையே உடையும் நாகரிகமும் மிக இன்றியமையாதவையாக இருந்தன. அச்சூழலில் தோரோ எழுதிய இக்கருத்து அக்காலத்தில் பெரும் புரட்சிகரமாகவும், சினமூட்டுவதாகவும் இருந்தது.]

உடையைப் பொருத்தவரை, நம்முன் இருக்கும் கேள்விக்கு நேரடியாக வருவோமேயானால், நாம் உடைகள் வாங்க முற்படுவதே அவற்றில் உள்ள புதுமைக்கும், பிறர் நம்மை மதிக்க வேண்டுமே என்ற உந்துதலாலுமே; அவற்றின் தேவை இருக்கிறது என்பதால் அல்ல. புதிதாக ஒரு வேலை செய்ய முற்படுபவர்கள், உடையணிவதன் நோக்கம் முதலில் நம்மைக் குளிரில் இருந்து பாதுகாப்பதற்கும், அதன் பின்னர், இப்போது சமூகம் இருக்கும் நிலையில், நம் நிர்வாணத்தைக் காப்பதற்குமே என்று முதலில் உணர வேண்டும். தன் உடைகளைக் கூட்டாமலே எந்தவொரு முக்கிய வேலையும் செய்யலாம்! ஒரு உடையை ஒரு முறை மட்டுமே அணியும் அரசர்களும், அரசிகளும், உடலுடன் பொருந்தும் உடை அணிவதன் சுகத்தை அனுபவிக்கவே இயலாது. தோய்த்த துணிகளை உலர்த்தும் மரக்குதிரைகளை விட அவர்கள் எவ்விதத்திலும் உயர்ந்தவர்கள் இல்லை. நாம் தொடர்ந்து அணியும் உடைகள் ஒவ்வொரு நாளும் நம்முடன் இயைந்து நம் குணங்களைச் சேகரித்து நம்முடன் ஒன்றி விடுகின்றன - நாம் அவற்றைக் கழட்டும்போது உடலை விடுவதுபோல் தயங்குகிறோம்!

தன் உடையில் ஒரு ஒட்டு இருந்ததனால் எந்த ஒரு மனிதனையும் நான் கீழாக நினைத்ததில்லை; எனினும், பரவலான மக்கள், நவீனமாக - அல்லது குறைந்தபட்சம் சுத்தமான- கந்தலற்ற ஆடை அணிவதில் காட்டும் கவலையைத் தூய்மையான மனசாட்சியுடன் இருப்பதில் காட்டுவதில்லை. (உடையில் பொத்தல் இருப்பதைப் பற்றி நாம் படும் கவலை மனதில் பொத்தல் இருந்தால் படுவதில்லை). நம் உடையில் உள்ள பொத்தல் சரி செய்யப்ப‌டாவிடில் அதிகபட்சத் தவறாக கவனக்குறைவை மட்டுமே காட்டும் (மனசாட்சியில் பொத்தல் இருந்தாலோ?…). நான் சில சமயம் என் நண்பர்களை முட்டியில் கந்தலுடன் வெளியே செல்ல முடியுமா என்று பரிசோதித்தது உண்டு. கிட்டத் தட்ட அனைவருமே அவ்வாறு சென்றால் வாழ்வே நாசமாகி விடுவதுபோல் உணர்ந்திருக்கிறார்கள். ஊருக்குள் கிழிந்த கால்சட்டையுடன் செல்வதை விட உடைந்த காலுடன் செல்வது அவர்களுக்கு எளிதாக இருக்கும்!

ஒரு நல்ல செயலைக் கண்ட மனிதன் அதைச் செய்வதற்குப் புது ஆடையைத் தேட மாட்டான்; அவனுக்குப் பலநாள் அலமாரியில் தேங்கிய பழைய ஆடையே போதுமானது. வீரனுக்குப் பழைய செருப்பே பலநாள் உழைக்கும் - செருப்பை விடக் கால்கள் பழைமையானதால் அவன் செருப்பு பிய்ந்தாலும் வெறுங்காலில் செயலாற்றுவான்.

மாலை நடனத்திற்கும், சட்ட வழக்காடல்களுக்கும் போவோருக்குப் புது கோட், புது டை போன்றவை தேவையாய் இருக்கலாம் - உடைகளை அணியும் மனிதர்கள் மாறும் வேகத்திற்கு அவர்களின் உடைகளும் மாறத் தேவையாய் இருக்கலாம். ஆனால் என் (பழைய) கோட்டும், கால்சட்டையும், தொப்பியும், ஷூக்களும் கடவுளை வணங்கப் போதுமானதாய் இருந்தால் (மனிதச் செயல்களுக்கும்) போதுமல்லவா? தன் பழைய கோட் நைந்து, கிழிந்து, மக்கிப் போவதைக் கண்டவர்கள் யார்? நாம் அது சற்றுப் பழசாகியதும் அதை ஒரு ஏழைச் சிறுவனுக்குக் கொடுக்கிறோம் - அவன் தன்னிலும் ஏழையான (அல்லது செல்வந்தனான - ஏனெனில் அவன் இவனைவிடத் தேவை குறைந்தவன்!) இன்னொருவனுக்குக் கொடுக்கிறான் . நான் கூறுகிறேன் - புதிய ஆடைகள் தேவைப்படும் எல்லாச் செயல்களைக் கண்டும் ஜாக்கிரதையாய் இருங்கள்; புதிய அணிபவனைக் கண்டல்ல!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org