தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம்

மருந்தா, மாயமா?

தமிழில் அமரந்தா

திட்டமிடுவதன் நோக்கம் மக்கள்திரளின் வருவாயை உயர்த்துவதே என்று பலமுறை நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. தெரிந்த விஷயம்தான். ஆனால் அதை எவ்வாறு செய்வது என்பதுதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது. தனிநபர் வரும்படி மூன்று அல்லது நான்கு மடங்கு உயரவேண்டும் என்று விரும்புவது நியாயமானதே. ஆனால் விருப்பங்களெல்லாம் குதிரைகளல்ல, ஏறிச் சவாரி செய்வதற்கு! எந்த ஒரு குழுவின் வரும்படியை உயர்த்த நினைக்கிறோமோ, அந்த குழுவின் பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டாக வேண்டும். ஆலை முதலாளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதன் மூலம் கிராமத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியாது. இப்படியெல்லாம் சாதாரணமான விஷயங்களைக் குறிப்பிடுவது பைத்தியகாரத்தனமாகத் தோன்றலாம். ஆனால் நடைமுறையில் இவை சாத்தியமாவதே இல்லை.

அதிகமான மக்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற பிரச்சனையை நாம் கண்டு கொள்ளாமல் விடமுடியாது. இதற்காக நாம் திட்டமிட வேண்டும். திட்டத்தை கிராமத்திலிருந்து தொடங்கவேண்டும். எனவே நமது முதல் நோக்கம் கிராம மக்களின் வேலைக்கு திட்டமிடுவது. காப்பியடிப்பது திட்டமிடுவதாகாது. ஒரு குறிப்பிட்ட நிலையில் பொருத்தமானது வேறொரு இடத்திற்குப் பொருந்தாது. வறுமையைத் தீர்க்க மாயமந்திரம் ஏதுமில்லை. தீர்வைக் கண்டடைய நாம் கிராம மக்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

இயந்திரமயமாக்கல்

கிராமங்களில் உள்ள நிலையைக் கருத்தில் கொண்டு (1) சிறு முதலீடு அல்லது முதலீடு இன்றி (2) அதிகபட்ச உழைப்பாளிகளைக் கொண்டதாக நாம் திட்டத்தின் அடிப்படையை உருவாக்க வேண்டும் அவ்வாறு செய்தால், உடனடியாக திட்டத்தின் வடிவம் துலங்கிவிடும். நமது கருவிகள் மலிவானதாகவும்,உற்பத்திக்கு மனித உழைப்பையே அதிகமாகப் பயன்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். “கிராமங்களை இயந்திரமயமாக்குங்கள்”என்ற கோஷம் கேட்கிறது. மேற்கத்திய உற்பத்தி முறையை மேலோட்டமாக கவனித்ததன் விளைவாகவே இந்த இயந்திரமயமாக்கல் கோஷம் எழுப்பப்பட்டது. கிராமப்புறங்களை இயந்திரமயமாக்க நமக்கு மலிவு விலையில் மின்சாரம் தேவைப்படும். இன்றைய நிலைமையில் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வழங்க முடியுமா? அப்படியே செய்துவிட்டாலும், ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சார மோட்டார் வழங்க முடியுமா? அனைத்து வெளிநாட்டு உதவிகள் முழுவதையும் நாம் பெற்று விட்டாலும் கூட, இது நிறைவேறுவது கடினம். இதற்கெல்லாம் யார் பணம் தருவது? ஆண்டுக்கு வெறும் 25 ரூபாய் ஈட்டும் மனிதனால் இது முடியுமா? தவிர தேவையான கருவிகளையும் உபகரணங்களையும் பெற அந்நிய‌ய நிறுவனங்களை நம்பியிருக்கவும் கூடாது. நாமே அவற்றை உருவாக்க வேண்டும். தொழிற்சாலைகளில் பணிக்கமர்த்தும் வயதில் ஏறத்தாழ 5 கோடி ஆண்கள் இங்கே இருக்கிறார்கள். இவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு மோட்டார் வேண்டுமானால், மோட்டார்கள் எங்கிருந்து வரும்? யார் இந்த திட்டத்திற்கு நிதியளிப்பது? எனவே இன்றைய நிலையில் கிராமங்களை இயந்திரமயமாக்குவது இயலாத காரியம்.

'ஃபார்வர்ட் ப்ளாக்'* (Forward Bloc) கட்சியின் செயல் திட்டத்தில் உள்ள உறுப்பு எண் 15 தேசிய மறுகட்டமைப்பு குறித்தது. ஃபார்வர்ட் ப்ளாக் தொழில் வளர்ச்சிக்குப் பாடுபடும் என்று கூறுகிறது. இதனை நாம் பெருவாரி உற்பத்திக்கான மையப்படுத்தப்பட்ட தொழில்கள் என்று புரிந்து கொள்ளலாம். இத்தகைய மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையில் ஏற்படும் கேடுகளைப் பற்றி இங்கே நாம் பேசப் போவதில்லை. குடிசைத் தொழில் அல்லது கிராமப்புற தொழில்களுக்கு மாற்றாக மையப்படுத்தப்பட்ட தொழில் நிறுவனங்களில் சாதக பாதகங்களை மட்டுமே கருத்தில் கொள்வோம். ஏற்கெனவே இந்தியாவின் வறுமையைப் பற்றிப் பேசிவிட்டோம். மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறை என்றால் ஒன்வொரு தொழிற்சாலைக்கும் மிக அதிகமாக முதலீடு தேவைப்படும்.

இந்த இரண்டு முறைகளில் ஒவ்வொன்றிலும் தனிப்பட்ட நன்மைகள் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. நம் நாட்டு நிலைமைகளுக்கு ஏற்ற பொருத்தமான முறை எது இன்று அறிந்து அதை தேர்ந்தெடுப்பதே நம்முன் உள்ள சவால். நாம் ஏழைகளே என்றாலும், ந‌ம்மிடம் கடலளவு உழைப்புச் சக்தி இருக்கிறது. குடிசைத் தொழில்முறையே நாட்டுக்குப் பொருத்தமான முறை என்று புத்திசாலித்தனமான‌ திட்டம் காட்டும். நல்ல களி மண்ணும், மரமும் நிறைந்த‌ நாட்டில் வீடு கட்டும் பொறியாளர் செங்கல்லும் மரமும் பயன்படுத்திக் கட்டடம் கட்டுவதும், சிமெண்ட்டும் இரும்பும் நிறைந்த நாட்டில் வீடு கட்டுபவர் உறுதிப்படுத்தப்பட்ட கான்கிரீட் பயன்படுத்துவதும் இயல்பு. அவ்வாறில்லாமல், பரிந்துரை முரணாக இருக்குமானால் அது முட்டாள்தனமாகும். முன்னேற்றத்திற்கென தனிப்பாட்டை ஏதும் கிடையது. திட்டமிடும்போது உற்பத்திக் கூறுகளை ஒருங்கிணைத்து, சமூகத்துக்கும் பண்பாட்டுக்கும் உகந்த வகையில் உற்பத்தியைக் கூடியவரை அதிகரிக்க முற்பட‌ வேண்டும். உழைப்புச் சக்தி எனும் வளத்தைப் பயன்படுத்தாமல் புறங்கணிக்கும் எந்தவொரு திட்டமும் நம் நாட்டிற்கு உகந்ததலல்ல. மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையில் எவ்வளவுதான் உற்பத்தித்திறன் இருந்தாலும், வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என்றால், அதனால் பயன் ஒன்றுமில்லை என்பதே நாம் ஆய்ந்தறிந்த உண்மை. அத்தகைய உற்பத்திமுறை இந்த நாட்டிற்குப் பொருந்தாது.

வேலைவாய்ப்புகள்

உற்பத்தி இயந்திரங்களின் விலை அதிகரிக்கும் போது சுயவேலை வாய்ப்புக்கான சாத்தியம் குறைந்துவிடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறைகள் வேலைவாய்ப்பைக் குறைத்துவிடும் தன்மை கொண்டவை என்பதை மறந்துவிடக்கூடாது. நம் நாட்டிலோ ஏகப்பட்ட உழைப்புத்திறன் வாளாவிருப்பதால், அதனை உற்பத்தியில் ஈடுபடுத்தவேண்டிட அவசியம் உள்ளது. எனவே இத்தகைய மையப்படுத்தப்பட்டஉற்பத்தி முறையை நம் நாட்டிற்குள் புகுத்துவது தற்கொலைக்கு ஈடாகும்.

மேலும் இன்று உலகில் உள்ள பிரச்சனை பகிர்வு பற்றியதேயன்றி உற்பத்தி பற்றியதல்ல. உண்மையைச் சொல்லப் போனால், அதிக உற்பத்தியினால் உலகம் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே உற்பத்தியை அதிகரிக்கும் தேவை இல்லை. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தாலும் நமது குழப்பத்திற்கு விடை கிடைக்கவில்லை.

பெரு-உற்பத்தித் தொழிற்சாலைகள்

இத்தகைய தொழிற்சாலைகளில் திட்டமிடுதலின் நோக்கம் என்ன? தனியாரின் மூலம் நடத்தமுடியாத இத்தகைய தொழிற்சாலைகளை நாம் முதலில் தவிர்க்க வேண்டும். இப்போது நிலைமைகளில் கூட மேற்கூறிய காரணங்களாக நாம் மையப்படுத்தப்பட்ட உற்பத்திமுறைகளைப் பின்பற்றாவிடினும், ஒருசில தொழில்கள் அடிப்படையிலேயே அவ்வாறு இருக்கவேண்டுமென்று கோரலாம். இத்தகைய தொழில்களுக்கு திட்டத்தில் நிதிஒதுக்கி அரசே தனது நிவாகத்தின் கீழ் வைத்துக்கொள்ளும்படி செய்யலாம்.

footnote: *சுபாஷ் சந்திரபோஸ் இரண்டாம் முறை காங்கிரஸ் தலைவராக தேர்வாகி இருந்தபோது 1936 ஆம் ஆண்டு ஃபார்வர்ட் ப்ளாக்கைத் தொடங்கினார். அப்போது காந்தி அவரை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்.

மண்டலங்களுக்கான திட்டமிடுதல்

இரண்டாவதாக, மக்களின் தேவைகளை நிறைவு செய்ய எத்தகைய சரக்குகள் தேவை என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். கிராமபுறங்களிலோ அல்லது பிற பகுதிகளிலோ செயல்படும் தொழிற்சாலைகள் மூலம் அந்தச்சரக்குகளை உற்பத்தி செய்வதை நமது நாட்டில் முடிவு செய்ய வேண்டும். இதனை மண்டலங்களுக்கான திட்டமிடுதல் என்று பெயரிடலாம்,

நடைமுறையை திட்டமிடுதல்

மூன்றாவது மிகக் கடினமானதுமான பகுதி ஒவ்வொரு தொழிலின் நடைமுறையையும் திட்டமிடுவதுதான். எடுத்துகாட்டாக, தோல் பொருள்களை உற்பத்திசெய்யும் தொழிலை எடுத்துக்கொள்வோம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை பாதிக்குமொரு தொழில் இது. இத்தொழிலில் உள்ள ஒவ்வொரு கட்டத்தையும் நாம் சட்டரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக,தொழில் ரீதியாக அணுகியாக வேண்டும். இத்தொழிலில் சில கட்டங்கள் சட்டரீதியாக அனுமதியைக் ருபவை. இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் கெளர‌வத்தைக் காக்க சமூக பழக்க வழக்கங்களைக் கடந்து செல்ல வேண்டும். அவற்றிற்குரிய இடத்தை அளிக்க வேண்டும். இத்தொழிலின் பொருளாதார நடவடிக்கையொடு பிற தொழில்களை ஒன்றிணைக்க வேண்டும். இத்தொழிலின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்து, உற்பத்தியாகும் பொருள்களுக்கு சந்தையில் எத்தகைய தேவை உள்ளது என்பதை கவனமாக ஆய்வு செய்து பின்னர் விற்பனை செய்யப்பட‌ வேண்டும்

இறந்துபோன கால்ந‌டைகளின் தோலைக் கையாள்வது குறித்து வெவ்வேறு பகுதி மக்களிடையே வெவ்வேறு சடங்குகள் உள்ளன. தோல் பதப்படுத்தும் வேலையைக் குறிப்பிட்ட சில சாதிகளே செய்கின்றன. ஆனால் தோல் பொருள்களை செய்பவர்கள் வேறு சாதியினர். தோல் பொருள்களை செய்ய நீண்டகாலம் பிடிக்கிறது. அதனால் இந்தத் தொழிலுக்கு அதிகமான மூலதனம் தேவை. ஆனால், இதில் ஈடுபடும் மக்கள் மிகவும் வறியவர். எனவே நிதி ஆதாரம் இல்லாததால் நாட்டின் செல்வம் பெரும்பகுதி வீணடிக்கப்படுகிறது . இத்தொழில் குறித்த பல்வேறு நடைமுறைகள் முறையாக ஆராயப்பட்டு, அதன் தேவைகள் போதுமான அளவுக்கு நிறைவு செய்யப்பட்டால், நாம் பெருமளவு தேசிய வளத்தை மிச்சப்படுத்தலாம்.

இதுபோல ஒவ்வொரு தொழிலின் நடைமுறை குறித்து அறிவும் வளரவேண்டுமானால், அதற்கு முறையான திட்டமும் நம்பிக்கையும் தொலைநோக்கமும் தேவை. இவ்வாறு நாம் திட்டமிடலில் போதிய கவனம் செலுத்தாவிட்டால், நம்முன் உள்ள வறுமையை எதிர்கொள்வது கடினம்.

- கிராம உத்யோக் பத்திரிகா, ஜூலை 1939

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org