தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா


நல்வாழ்வுக் குறியீடு

ஒரு அரசையும், அது ஆளப் போகும் மக்களையும், அவர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது என்றும் திட்டமிடும் போது பற்பல கேள்விகள் நம்முன் நிற்கின்றன. உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சியான இந்தியாவில் எண்ணற்ற பிரிவினைகளும், எதிரும், புதிருமான தேவைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தை ஒரு குறிப்பிட்ட கொள்கையால் நிர்வாகம் செய்து விடலாம் என்பது இயலாத எதிர்பார்ப்பே. எனினும், உலகெங்கிலும், எல்லாப் பிரிவினைகளையும் தாண்டி, இன, மத,நிற, மொழி வேறுபாடுகளைக் கடந்து, நாகரிக மனிதர்கள் என்று சொல்லக்கூடிய அனைவருக்கும், நாடுகள் என்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பூகோளப் பகுதிகளுக்கும் ஒரே ஒரு அடிப்படைக் கொள்கை இழையூடி நிற்கிறது. அதுதான் பணம். உண்மையில் புத்தர், ஏசு, அல்லா, ராமர் என்பது எல்லாம் வெளிமயக்கே; நவீன மனிதனின் முழுமுதற் கடவுளும், மதமும் பணம் மட்டுமே. பொருளாதார முன்னேற்றமே எல்லா அரசுகளின் முக்கியக் கொள்கையாக இருக்கிறது. எனவே பொருளாதாரக் கொள்கையும், அதன் விளைவாகத் தீட்டப் படும் செயற்திட்டங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. பொருளாதார முன்னேற்றம் என்று நாகரிகமாகச் சொல்வது முடிவில் பணத்தையும், தங்கத்தையும் அதிக அளவில் பதுக்குவதும், திரை கடலோடித் திரவியம் தேடுவதுமாக முடிகிறது.

“ஆசைக்கு ஓர் அளவில்லை, அகில‌ம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர். அளகேசன் (குபேரன்) நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்” என்று தாயுமானவர் பாடியது போல் உலகம் முழுவதும் ஒரு குடைக்கீழ்க் கொண்டு வந்து பொருள் ஈட்ட வேண்டும் என்று அலையும் வல்லரசுகள்தான் இன்று பிற நாடுகளுக்குக் கொள்கைகளையும், திசையையும் காட்டுகின்றன. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி போல், இருக்கும் இடத்தில் நிறைவாய் வாழ்ந்த வளரும் நாடுகள், இப்போது தாங்களும் வளர்ச்சி, நவீன மயமாக்கல் என்று குருட்டுக் கொள்கைகளுடன் புலியைக் கண்ட பூனையைப் போல் தங்களைத் தாங்களே சுட்டுக் கொள்ளுகின்றன.

தற்காலச் சூழலில், பசி, கடன், நோய் போன்றவை இல்லாமல், நல்ல நிறைவான வாழ்க்கை வாழ்வதற்குப் பணம் ஒரு அடிப்படைத் தேவை என்பதை மறுக்க இயலாது. ஆனால் பொருள் ஈட்டுதல் என்பது நல்வாழ்விற்கு வழியாக ஆரம்பித்துப் பின்னர் அதுவே ஒரு முடிவு ஆகி விட்டது. இதே போலவே, பொருள் ஈட்டுவதற்கு நல்ல வேலை ஒரு வழியாகத் தொடங்கிப் பின் அதிக வருவாய் தரும் வேலை தேடுவதே ஒரு முடிவாகி விடுகிறது. இப்படியே நாம் ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு வழியைத் தொடங்கி அவ்வழியே முடிவு ஆகி விடுகிறது. ஊருக்குப் போகக் கிளம்பிய ஒருவன், வரும் வழியில் ஒரு திருவிழாவைக் கண்டு அதில் புகுந்து, அங்குள்ள எண்ணற்ற கேளிக்கைகளில் தன்னை மறந்து பின் ஊருக்குப் போவதையே கைவிடுவதுபோல, நாம் நலவாழ்விற்கு வழி எனத் தொடங்கிய பொருள் ஈட்டல், போதும் என்ற மனம் இன்மையால் அதுவே வாழ்வின் முழுநேரப் பணி ஆகி விடுகிறது. மக்களாட்சியில் அரசு என்பது தனிமனிதர்களின் ஒட்டு மொத்த இச்சைகளைப் பிரதிபலிப்பதாக இருப்பதால், அரசின் கொள்கையும் ஒட்டுமொத்தப் பொருள் ஈட்டல், ஒட்டுமொத்த உற்பத்தி என்று உருமாறி வெறும் எண்களே கொள்கைகள் ஆகி விடுகின்றன.

பண்ட மாற்று முறைகளில் பொருட்களைக் காபந்து செய்வது கடினம் என்பதால் பணம் என்பது மாற்றுக் கருவியாகக் கண்டு பிடிக்கப்பட்டது. சந்தையை எளிமைப் படுத்த வழியாக உருவக்கப் பட்ட காசு பின்னர் அதுவே ஒரு முடிவாகி விட்டது. இப்போது பற்பல நாட்டு நாணயங்களை வாங்கி விற்பதே தொழிலாகப் பல லட்சம் பேர் வேலை செய்கின்றனர். ஊக வணிகம், பங்குச் சந்தை, காப்பீடு, அந்நியச்செலாவணி வாணிபம் போன்று எத்தனை எத்தனை பொருளற்ற வேலைகள் உருவாகி விட்டன !

நல்வாழ்விற்குப் பல்வகைச் சுவையுடன் நுகர்ச்சி என்பது விரும்ப‌ப்பட்டதால், சமூக ஏணியில், அதிகம் நுகர்வோர் அதிகம் மதிக்கப் படுகின்ற‌னர். நம் உடல், மன நலத்தைவிடப் பிறர் நம்மைக் கண்டு பொறாமைப் பட வேண்டும் என்ற உந்துதலினால், நுகர்ச்சி என்பது முடிவாகவும், அதற்குப் பல்வகையான சந்தைப் பொருட்கள் வழியாகவும் தொடங்கின. வரலாற்றில் மார்கோ போலோ சீனாவிலிருந்து பட்டுத் துணியைக் கொண்டு அரசருக்குப் பரிசளித்தது போல், கிட்டாப் பொருட்களை நுகர்வது மிகவும் சமுக மரியாதையைப் பெற்றுத் தந்தது (தருகிறது). செல்வந்தர்களுக்குச் சேவகம் செய்து செல்வந்தராகத் துவங்கிய வணிகர்கள் பின் ஏழைகளுக்கும் வாணிபம் செய்து செல்வந்தர்களாயினர். ஆக சந்தை என்பது எல்லாருக்கும் அடிப்படைத் தேவையான ஒன்றாக மாறியது. வழியே முடிவாகிய இச்சந்தைகள், இன்று சமூகத்தை மாற்றும் அளவு வலுப்பெற்று விட்டன. சந்தை இல்லையேல் சமூகமே இல்லை என்ற அளவில் நம் மனித வாழ்வுடன் இவை புரையோடி விட்டன.

சந்தை என்பது ஆழ்ந்த வன்முறையை உள்ளடக்கியது என்று நாம் கூறியிருந்தோம். இது சற்றுப் புரிவதற்குக் கடினம். “நான் ஒரு பொருளை விற்கிறேன், வேறொருவன் வாங்குகிறான்; இதில் என்ன வன்முறை” என்று தோன்றலாம். வாணிபம் என்பது வெளிவன்முறையற்றது. தன் செயற்பாட்டிற்கு மிகுந்த அமைதியான சூழலை எதிர்பார்க்கிறது. ஆனால் வாணிபத்தை இயக்கும் பணத்தாசையோ வேறு எல்லாவற்றையும் அழித்துக் கிளம்பி நம் மனத்தை முழுமையாய் ஆக்கிரமிக்கிறது. இதற்கு இரண்டு உதாரணங்களைக் கூற விரும்புகிறேன்.

ஒரு முறை நான், ஜெய்சங்கர், அனந்து ஆகிய மூவரும் திருமங்கலத்தில் பாமயனின் பண்ணைக்குச் சென்று கொண்டிருந்தோம். அப்போது வழியில் அங்கு 3 பேர் ஒரு ஆட்டுக்கிடாவிற்கு வாயில் டியூப் மூலம் தண்ணீர் செலுத்திக் கொண்டிருந்தனர். நாங்கள் சில பண்ணைகளைப் பார்வையிட்டு சுமார் 2 மணிநேரம் கழித்து வந்தபோது இன்னும் தண்ணீர் ஊட்டிக் கொண்டிருந்தனர். 'ஆட்டிற்கு என்னவாயிற்று' என்ற கேட்டதற்கு, 'ஒன்றுமில்லை அது எடை கூடுவதற்காக நாங்கள் வயிற்றில் நீர் நிரப்புகிறோம்' என்றனர்! 'சில சமயங்களில் ஆடு நீர் அதிகமானால் இறந்து விடும் அபாயம் உள்ளது' என்றார் பாமயன். அப்போது நாங்கள் சந்தையின், சந்தையால் சாத்தியமாகும் லாபவெறியின் ஆளுமையை உணர்ந்தோம். இந்த லாப வெறி என்பது நம் எல்லா நுண்ணுணர்வுகளையும் மழுக்கடித்துக் கொலைகாரகள் கூட ஆக்கி விடும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி நாட்டில் பான் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆர்மின் ஃபாக் என்னும் பொருளியல் முனைவரும், பாம்பெர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நோரா செக் என்னும் பொருளியல் முனைவரும் சந்தையின் தாக்கத்தப் பற்றி ஒரு பரிசோதனை நடத்தினர். இதில் சாதாரண மனிதர்கள் சந்தை விளையாட்டு ஒன்றில் பங்கு கொண்டனர். இதன்படி பங்கு கொள்வோருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்கப் பட்டு அவர்களிடம் வெள்ளெலிகளைக் காட்டுவார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு அவர்கள் அவ்வெலிகளை வாங்கினால் அவை உயிருடன் விட்டு விடப் படும். அவர்கள் வாங்கவில்லையென்றால் அவை கொல்லப்பட்டு விடும்.

முதலில் தனிமனிதர்களாக இப்பரிசோதனையை மேற்கொண்ட பலரும், 'பாவம் எலிகள்' என்று இருந்த காசுக்கு எலிகளை வாங்கி உயிர் காப்பாற்றினர். பின்னர் இதே பரிசோதனையில் இருமுனைச் சந்தை (வாங்குபவர் ~ விற்பவர்) மற்றும் பன்முனைச் சந்தை (விற்பவர் ~ வாங்குபவர் பலர்; ஏலம் மூலம் வியாபாரம்) போன்ற அமைப்புக்களில் அதே நபர்கள் கலந்து கொண்ட போது பலரும் லாபம் வேண்டும் என்று எலிகளைக் கொல்லத் துணிந்தனர். 'தார்மிக உணர்வுகளைச் சந்தை அரித்து விடும்' என்ற மிக முக்கியமான கண்டறிதல் செய்யப்பட்டது. “சந்தை என்ற சூழலில் பொறுப்பேற்பதையும், குற்ற உணர்வு கொள்வதையும் குறைப்பதற்குப் பல கருவிகள் உள்ளன. மக்கள் போட்டியையும், வெற்றியையும் முன்னிறுத்தி அறச் சிந்தனைகளை எளிதாக இழக்கிறார்கள். எல்லாரும் தவறு செய்யும்போது நாமும் தவறு செய்யலாம் என்ற உணர்வு மேலோங்கி விடுகிறது” என்று அவ்வாய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். “நான் வாங்கவோ, விற்கவோ இல்லையெனில், வேறு ஒருவர் வாங்கப் போகிறார்” என்று அலட்சியமாகக் கூறினராம்!

தனிமனிதர்களின் தொகையே ஒரு ஊராக, நாடாக மாறுவதால், ஒரு நாட்டில் பொருளாதாரக் கொள்கை என்பது அதன் அறநெறிகளைப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும். இன்று உலகிலேயே மிகப் பெரிய சந்தையான ஐக்கிய அமெரிக்க நாட்டில்தான் உலகிலேயே மிக அதிகமான குற்றங்கள் நிகழ்கின்றன. கல்யாணம் ஆகாத பெண் கருச்சிதைவு செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பது அமெரிக்காவில் ஒரு பெரும் சர்ச்சை. தேர்தல் வாக்குறுதிகளில் நாங்கள் கருச்சிதைவை ஆதரிப்போம் என்று ஒரு கட்சியும், கருச்சிதைவை எதிர்ப்போம் என்று இன்னொரு கட்சியும் கூறுவார்கள். குற்றங்கள் நிகழ்வதில் மிகக் குறைவாக இருந்த இந்தியா இப்போது தாராளமயமாக்கலுக்குப் பின் “வளர்ந்து, ஒளிர்ந்து” உலகில் பத்தாம் இடத்தை எட்டி விட்டது. (சமீபத்திய நிகழ்வுகளைப் பார்த்தால் விரைவில் முதல் மூன்று இடங்களுக்கு 'வளர்ந்து விடும்' போலிருக்கிறது!). ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது வெறும் எண்ணே. அதை வளர்ப்பது மட்டுமே நம் குறிக்கோளாய் இருந்தால் நாம் அழிவை மட்டுமே நோக்கிச் செல்கிறோம் என்று பொருள்.

ஒரு நாட்டின் வளர்ச்சியை எப்படிச் சரியாகக் கணிப்பது? நாம் முன்னரே எழுதியது போல் வளர்ச்சி என்பது உடல் நலம், மன நலம், புவி நலம் என்ற மூன்றையும் ஒருமித்து உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதை எப்படிக் கணிப்பது? சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்கலாம்.

 1. எத்தனை சதவிகிதம் மக்கள் மூன்று வேளை உணவின்றிப் பசியுடன் இருக்கிறார்கள்?
 2. ஏழ்மை ஒழிக்க என்ன திட்டங்கள் உள்ளன? ஏற்கனவே தீட்டிய திட்டங்களில் எவ்வளவு எட்டப்பட்டன?
 3. உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றின் அடிப்படை உற்பத்தியில் இருப்பவர்களின் தனி நபர் வருட வருமானம் எவ்வளவு?
 4. அத்தியாவசியப் பொருட்களின் விலை வருடா வருடம் எவ்வளவு வளர்கிறது?
 5. கடந்த ஐந்தாண்டுகளில் காடுகளின் நிலப் பரப்பு எவ்வளவு மாறியுள்ளது?
 6. எவ்வளவு நதிகளில் மாசுக்கட்டுப்பாடு தீவிர‌மாகக் கண்காணித்து நெறிப்படுத்தப் படுகிறது?
 7. கனிம வளங்களில் எவ்வளவு விழுக்காடு பாதுகாக்கப் படுகிறது?
 8. நாட்டின் விளைநிலங்களில் உணவுப் பயிர்களின் விழுக்காடு எவ்வளவு?
 9. வருமான வரி கட்டுபவர்களில் எவ்வளவு பேர் அரசின் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர்?
 10. வருமான வரி கட்டுபவர்களில் எவ்வளவு பேர் அரசின் மருத்துவமனைகளைப் பயன்படுத்துகிறார்கள்?
 11. இது போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு அளிக்கப்படும் விடைகளை வைத்து நல்வாழ்வுக் குறியீடு என்று ஒன்றை உருவாக்கலாம். (இவை இன்னும் ஆழ்ந்தும், பரந்தும் இருக்க வேண்டும்).

நம் நல்வாழ்வுக் குறியீட்டை உயர்த்துவதாக அரசியல் கொள்கைகளும், பொருளாதாரக் கொள்கைகளும் இருக்க வேண்டும். அன்றி மேற்கு நாடுகளைக் காப்பியடிப்பதாக அல்ல.

(தொடரும்)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org