தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


ஆம் ஆத்மி கட்சியில் பிளவு


ஆம் ஆத்மி கட்சி , உண்மையில் எளிய மக்களின் கட்சியாக எதிர்பார்க்கப் படுகிறது. இன்று அங்கிங்கு எனாதபடி எங்கும் ஊடுருவி நிற்கும் ஊழலை எதிர்க்க ஒரு இயக்கமாகத் துவங்கி, அதன் பின் வெளியில் இருந்து எதிர்ப்பதை விட உள்ளிருந்து சுத்தம் செய்வது எளிது என்று ஒரு அரசியல் கட்சியாக வடிவம் எடுத்தது. முதலில் டில்லியில் 28 இடங்களில் வென்றதும் அதன் பின்னர் தற்போது 67 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளதும் அரசியல் வரலாற்றில் மிகவும் புரட்சிகரமான புதுமைகள். சென்ற ஆண்டு பாரதிய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று மத்தியில் வென்றதற்கும் அதன் பின்னர் டில்லியில் ஆம் ஆத்மி வென்றதற்கும் மிக நுட்பமான வேறுபாடு ஒன்று உள்ளது. பாரதிய ஜனதா பெரும் பணவலுவுடன் ஊடகங்களை ஊடுருவல் செய்து, அவற்றை விளம்பரங்கள் மூலம் குத்தகைக்கு எடுத்து மோடியைத் தவிர யாருமே திரையில் தெரியாத அளவில் 10,000 கோடி ரூபாய் செலவில் பாமர மக்களை ஓயாத மூளைச் சல‌வை செய்து வென்றது. ஆனால் ஆம் ஆத்மிக் கட்சி, மிகக் குறைந்த பணவலுவுடன், மக்களால் ஒரு தீர்வாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.

எல்லா மரபுகளுமே அவை துவங்குகையில் ஒரு புரட்சியாகத்தான் துவங்குகின்றன‌. பின் நாட்பட, நாட்பட அவை தனக்கென ஒரு வழக்கம், சடங்கு, பின்பற்றுவோர், அவரின் விருப்பு வெறுப்புக்கள், சட்டங்கள் என்று மருவி புரட்சியாய்த் துவங்கியது மரபாகி விடுகிறது. தற்போது மதங்கள் என்று உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படும் எல்லாம் அவற்றைத் தோற்றுவித்தவரின் காலத்தில் புரட்சியாய் எழுந்தவையே. இது ஆம் ஆத்மிக் கட்சிக்கும் பொருந்தும். இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஆக்டன் என்னும் அரசியல் சிந்தனையாளர், தான் ஒரு பெரிய பிரபுவாக, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு மிராசுதாராக இருந்த போதிலும், “ஆள்வன்மை (power) என்பது பெரும்பாலும் களங்கப்படுத்தவே செய்கிறது; பரிபூரண ஆளுமை என்பது பரிபூரணமாகக் களங்கப்படுத்துகிறது. பெரிய மனிதர்கள் எல்லோரும் பெரும்பாலும் தீய மனிதர்களே” என்று கூறியுள்ளார். நன்மை செய்வோம் என்று பதவியைக் கைப்பற்றியவர்கள், பத‌விக்கு வந்ததும் அதன் மரபுகளுக்காகக் கொள்கைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துறப்பதும், மறப்பதும் வரலாற்றில் ஏராளம்.

1970களில் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், அதன் செயற்திட்டங்கள் பிடிக்காத சந்தைச் சக்திகள், அதனுள் பிளவை ஏற்படுத்தி, 3 ஆண்டுகளுக்குள் மக்களுக்கு அதன்மேல் நம்பிக்கையின்றிச் செய்து தங்களுக்கு வால்பிடிக்கும் காங்கிரஸ் அரசு மீண்டும் வருமாறு செய்தன. இன்றும் அதுவே நடக்கிறது. பணத்தால் ஆளும் கட்சியை வாங்க‌ இயலாவிட்டால், பணவலுவால் அதில் பிளவு ஏற்படச் செய்யலாமே. அச்சிறு விரிசலை ஊதி, ஊதிப் பெரிதாக்க ஊடகங்கள்தான் உள்ளனவே!

பாராளுமன்றத் தேர்தலின் போதும், அதன் பின்னர் டில்லி சட்ட மன்றத் தேர்தலின்போதும் ஆம் ஆத்மி என்ற கட்சியே இல்லை என்ற அளவில் இருட்டடிப்புச் செய்த தொலைக்கட்சிகளும், பத்திரிக்கைகளும், இன்று அதில் உள்ள பிளவைத் தவிர வேறு செய்தியே இல்லை என்ற அளவில் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? இந்திய ஊடகங்கள் மிகப்பெரும் அளவில் அரசியல் கட்சிகளாலும், பெருவணிக நிறுவனங்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது கொள்கையால் ஏற்பட்ட பிளவு என்பதை விடக் கருத்து வேறுபாடுகள் வெளிச்சக்திகளால் ஊதிப் பெரிதாக்கப் பட்டன என்றே நமக்குத் தோன்றுகிறது .

ஆம் ஆத்மிக் கட்சி என்ன ஆனாலும், அது காட்டும் மாற்று நம்மைப் பிடித்த தீமைகளுக்கு ஒரு தீர்வு என்பதை மறுக்க இயலாது. மாற்றுத் தேவைப்படாத கட்சி என்று எதுவுமே இல்லை என்பதும் மாற்ற முடியாத உண்மை. ஆனால் நம் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆட்சி மாற்றம் அல்ல - ஆட்சி முறையில் மாற்றமே. காந்தி கூறிய கிராம சுயராச்சியமே நமக்கு ஏற்ற அரசியல் அமைப்பு என்பதை இனிமேலாவது ஒப்புக் கொள்ளத் துணிவு வேண்டும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org