தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா


இப்போது அரசியல் தொடங்கி அனைத்திலும் மேம்படுத்துதல், அந்நிய முதலீடு, பொருளாதார வளர்ச்சி, ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்று பற்பல பெயர்களில் தொழில் வளர்ச்சியைத் தேடுகிறோம். நாகரிக வாழ்விற்குத் தொழில் என்பது மிக இன்றியமையாதது; இதில் மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லை. நிறையத் தொழில் வளர்ந்தால் நிறையப் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும்; வறுமை ஒழியும். இதுவும் மிகச் சரியான ஒரு எதிர்பார்ப்பே. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக தாராளமயமாக்கல், உலக மயமாக்கல் என்ற பெயரில் நம் நாட்டுச் சந்தையை அந்நிய முதலீடுகளுக்குத் திறந்து விட்டுள்ளோம் ; ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ந்துள்ளது - ஆனால் வறுமை ஒழியவே இல்லையே. அதிகமாக அல்லவோ ஆகி விட்டது? எங்கோ இடிக்கிறதே? இதில் எங்கே கோட்டை விட்டோம்?

முதலில் ஜி.டி.பி (GDP) என்பதே ஒரு மிகத் தவறான குறியீடு. உதாரணமாக, சுனாமி, பூகம்பம் போன்ற பெரும் அழிவுகள் ஏற்பட்டுப் பாதிக்கப் பட்டவர்களுக்கு செய்யப் படும் மருத்துவச் செலவு ஜி.டி.பியில் சேர்க்கப் படுகிறது. ஒரு போர் நிகழ்ந்து நாம் பல்லயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ தளவாடங்கள் வாங்கினால் அதுவும் ஜி.டி.பியில் சேர்க்கப் படுகிறது. நாட்டில் சாதாரண மக்கள் கடன் வாங்கினால் அதுவும் ஜி.டி.பி வளர்ச்சி. அரசியல்வாதிகள் மேடை ஏறிப் புளுகுவதற்கு ஹெலிகாப்டர்களில் பறந்தால் அதுவும் ஜி.டி.பி வளர்ச்சி. சாராய வியாபாரமும் ஜி.டி.பி வளர்ச்சி! இப்படி நல்ல செலவு, கெட்ட செலவு என்ற தெளிவு இன்றி எல்லாச் செலவும் (வேறு ஒரு தொழிலுக்கு வருமானம் என்பதால்) ஜி.டி.பி எனப்படும் ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சியாகிறது. இது இப்படியிருக்க வளர்ச்சி என்பது என்ன என்று நாம் பின்னர் ஆராய்வோம். தற்போதைக்கு ஜி.டி.பி என்னும் மாயக் கணக்குத்தான் வளர்ச்சி என்று கொள்வோம். அதன் நிலைமை எப்படி இருக்கிறது?

திட்டக் குழு தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி 1999-2000 முதல் 2013-14 ஆகிய 15 ஆண்டுகளில் ஜி.டி.பி ஆகப்பட்டது, இரண்டு ம‌டங்கு ஆகி உள்ளது (2.05). சராசரியாக வருடா வருடம் 5.25% வளர்ந்துள்ளது. இதில் ஏற்றுமதியானது 37.5 பில்லியன் அமெரிக்க டாலர்களில் (1999-00) இருந்து 323.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (2013-14) 8.5 மடங்கு உய‌ர்ந்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு வளர்ச்சி. பன்னாட்டுச் சந்தையில் இந்தியா ஒரு வலுவான சக்தியாக வளர்கிறது. ஆனால் இதன் எதிர்மறையான இறக்குமதியின் நிலை என்ன? 1999ல் 55.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இறக்குமதி, 2014ல் 472.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகி அதுவும் 8.5 மடங்கு வளர்ந்துள்ள‌து! வாணிபப் பற்றாக்குறை (trade deficit) 17.8 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 148.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக விசுவரூபம் எடுக்கிறது. 101 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த கடன் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாகி விட்டது. இதனால் 45.9 ரூபாயாக இருந்த டாலர் 61.5 ரூபாய் ஆகி விட்டது. ஏற்றுமதி செய்வோருக்கு மட்டுமே சாதகமான சூழல் இது. கடன் இல்லாதவன் செல்வந்தன் என்னும் பழமொழியை நாம் மறந்து விடக் கூடாது. உற்பத்தி வளர்வதை விடக் கடன் அதி வேகமாக வளர்கிறது.

மன்மோகன் சிங் உள்ளடிக்கிய வளர்ச்சி (inclusive growth) என்று ஒரு சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார் (பத்தாண்டு கால ஆட்சியில் அதைச் செயல் படுத்தவே இல்லை என்பது வேறு விஷயம்). அனைவரும் சேர்ந்து வளர்வது, ஏழைகளையும் செல்வந்தர்கள் ஆக்குவது என்று நாம் புரிந்துகொள்ளலாம். இது ஒரு மிக உயர்ந்த நோக்கம். இதை நடைமுறைப்படுத்துமாறு நம் பொருளாதாரக் கொள்கை இருக்கவேண்டும்.ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் ஏழ்மையை நாம் வெல்லவில்லை என்பது இப்போது கிராமப் புறங்களுக்குச் சென்றால் தெளிவாய்த் தெரிந்து விடும். இன்னும் சொல்லப்போனால், தாராள மய‌மாக்கல் ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி விட்டது.எளியோரைப் பாதிக்கும் விலைவாசியின் நிலை என்ன? நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index) எனப்படும் CPI 1999ல் 100க்கும் குறைவாக இருந்தது; இப்போது 240ஐத் தாண்டி விட்டது (அதாவது அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் 1999ஐ விட 2014ல் 2.5 ம‌டங்கு வேகமாக உயர்கிறது!). 1999ல் வருடம் 3.6% ஏறிய அத்தியாவசியப் பொருட்களின் விலை இப்போது வருடம் 10%-11% உயர்கிறது. இதற்கு நேரடிக் காரணம் அரசும், திட்டமிடுவோரும் வரையும் பொருளாதாரக் கொள்கைதான். இயந்திர மயமாக்கலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி ஒரு முக்கியக் காரணம்.

இயந்திர மய‌மாக்கலின் அடிப்படைத் தத்துவம், உற்பத்தியை பெரும் இயந்திரங்களைக் கொண்டு செய்து விட்டு, மக்கள் மென்வேலைகள் (white collar jobs) எனப்படும் உடலுழைப்பு இல்லாத வேலைகளில் ஈடுபடுவதே. நடைமுறைப் படுத்த முடிந்தால் இது ஒரு மிகக் கவர்ச்சியான சமூகத்தை உருவாக்குகிறது. எல்லோரும் உல்லாசமாக இருப்பது ஒரு மிக இனிமையான கனவு. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகள் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. யாரும் உடல்வருத்தத் தேவை இல்லை - எல்லாம் இயந்திரங்களும் , அவற்றை இயக்கும் 2-5% மனிதர்களும் பார்த்துக் கொள்வார்கள். மற்ற 95 விழுக்காடு மக்கள் விநியோகம், சில்லறை விற்பனை, விளம்பரம், ஊடகம், சேவைப்பிரிவுகள் என்று எல்லாவற்றிலும் வேலை செய்யலாம். வேலை இல்லாதவர்களுக்கு அரசாங்கம் dole எனப்படும் இலவச சம்பளம் அளிக்கும். உணவு எளிதாய்க் கிடைக்கும். மொத்த மாதச் செலவில் உணவுக்கென 10-15 % தான் ஆகும். ஆகா, என்ன இனிமையான வாழ்க்கை! வளர்ந்த நாடுகள் என்றால் சும்மாவா? நாமும் இதுபோல் வளர வேண்டாமா?

நியாயமான ஆசைதான். ஆனால் நம் நாடும், நம்போன்ற நாடுகளும், மிகவும் மாறுபட்டவை. அதனால்தான் காந்தி “அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் சரியாய் இருப்பது இந்தியாவிற்குச் சரியாய் இருக்காது” என்று இத்திட்ட வரைவை ஒதுக்கினார். இத் திட்டமானது ஒரு சில சொல்லப்படாத அடிப்படை அனுமானங்களை (tacit assumptions) உள்ளடக்கியது. எடுத்துக்காட்டாகச் சில:

  1. இயந்திரங்களால் உற்பத்தியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க முடியும்
  2. எல்லோராலும் மென்வேலைகள் செய்ய இயலும்
  3. வளரும் மக்கள் தொகைக்கு, இருக்கும் நிலப்பரப்பிலேயே இயந்திர விவசாயம், வேளாண் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் உணவு உற்பத்தி செய்ய முடியும்
  4. மையப் பொருளாதாரம் ஒன்றே உற்பத்தி வளர்ச்சிக்கு வழி. மனித சமுதாயத்தால் வளர்ந்து கொண்டே போக முடியும்
  5. ஒரு திட்ட வரைவு இருந்தால் அதை அனைத்து மக்களும் பின்பற்றுவார்கள்
  6. இயந்திர உற்பத்தியால் அனைவருக்கும் வேலைகள் உருவாக்க முடியும்
    எல்லாவற்றிற்கும் மேலாக,
  7. எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைத்து விட்டால் நிறைவான சமுதாயம் உருவாகிவிடும் .

இவற்றை ஒவ்வொன்றாக ஆரோய்வோம்.

1.இயந்திரங்களால் உற்பத்தியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க முடியும்

இயந்திர உற்பத்திக்கு மூலப் பொருட்கள், ஆற்றல், இயற்கை வளங்கள் அனைத்தும் தேவை. இதில் ஆற்றலின் நிலைமை ஏற்கனவே மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்கள், மின்சாரம் ஆகிய இரண்டுமே தற்போது ஆற்றலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மின்னுற்பத்தியில் அணைகள் மற்றும் நிலக்கரி மிக அதிகமாகத் தேவைப் படுகின்றன. வெறும் 1000 மெகாவாட் உற்பத்தி செய்வதற்குக் கூட‌ங்குளம் போன்ற ராட்சத அணுமின் நிலையங்கள் தேவைப்படுகின்றன. நாம் இயந்திர உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்தால் 120 கோடிப் பேரின் அடிப்படைத் தேவைகளை உற்பத்திசெய்வதற்கான ஆற்றல் கூட நம்மிடம் இல்லை என்பதே உண்மை. நம் நாட்டில், இன்றும், பெரும் பகுதி உணவு எளிய மக்களின் உடல் உழைப்பால் உற்பத்தி செய்யப் படுகிறது. அதை இயந்திரங்களால் மாற்றினால் நம் நாட்டில் உள்ள எல்லா ஆற்றலும் உணவு உற்பத்திக்கே செலவாகி விடும்.எனவே இயந்திர உற்பத்தி என்பது ஒரு பெரும் மலையைக் குடைந்து கொண்டே இருப்பது போல - விரைவில் மலை தரை மட்டமாகி விடும் - உற்பத்தி முற்றிலும் நின்று விடும்.

2. எல்லோராலும் மென்வேலைகள் செய்ய இயலும்

எல்லாம் இயந்திரங்கள் உற்பத்தி செய்தால், மக்களுக்கு எப்படி வேலை அளிப்பது? சேவைப் பிரிவில் வேலைசெய்யும் அளவு 60 கோடிப் பேரை எப்படித் தயார் செய்வது? பெரும்பாலான இந்திய மக்கள் அடிப்படைக் கல்விக்கு மேல் பெறாதவர்கள். மென்வேலைகள் செய்யத் தேவையான தொழில்நுட்ப அறிவோ, கணினி போன்றவற்றைப் பயன்படுத்தும் அறிவோ அவர்களிடம் இல்லையே. 60 கோடிப் பேருக்குப் பயிற்சி அளித்து அவர்களை மென்வேலைகளுக்கு மாற்றத் தேவையான நிதி, மனித ஆற்றல் , காலம் போன்றவை அரசிடம் உள்ளதா?

3. வளரும் மக்கள் தொகைக்கு, இருக்கும் நிலப்பரப்பிலேயே இயந்திர விவசாயம், வேளாண் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் உணவு உற்பத்தி செய்ய முடியும்

இப்போது 600 கோடியாக இருக்கும் மக்கள் தொகை வளர்ந்து 2050ல் 900 கோடியில் நிலை பெறும் என்று பல கணிப்புக்கள் கூறுகின்றன. இருக்கும் நிலப்பரப்பில் 900 கோடிப் பேருக்கு எளிதாக உணவு உற்பத்தி செய்ய முடியும் - ஆனால் அது இயந்திர வேளாண்மையால் இயலாது. ஓரினப் பயிர் செய்து வேதி உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் உற்பத்தி செய்யச்செய்ய மேல்மண்ணின் வளம் கெட்டு இருக்கும் விளை நிலப் பரப்பு குறைந்து கொண்டே வரும். நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் உவர், அமிலத் தன்மை கொண்டதாய் மாறிவிடும். உணவுப் பஞ்சம் என்பது இயந்திர வேளாண்மையின் நேரடி விளைவாகும்.

4. மையப் பொருளாதாரம் ஒன்றே உற்பத்தி வளர்ச்சிக்கு வழி. மனித சமுதாயத்தால் வளர்ந்து கொண்டே போக முடியும்

புவி என்பது வரையறுக்கப் பட்ட வளங்களைக் கொண்ட ஒரு உயிர்ச்சூழல். நம்மால் வேறு கிரகங்களுக்குப் போய் வாழ‌ முடியாது. இருக்கும் வளங்களைப் பாதுகாத்து சிக்கனமாகச் செலவழிப்பதே அறிவுள்ள வழி. வளர்ச்சி என்று நாம் கூறுவது இயற்கை வளங்களை ஆளுமை கொண்டு , அழித்து அவற்றைப் பணமாய் மாற்றுவதைத்தான். மனித இனம் வளர்கிறேன் என்று தன்னைத் தானே அழித்துக் கொள்கிறது; பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்பது போல் இதைப் பற்றிப் பேசாமல் இருந்தால் இது தானாகச் சரி ஆகி விடும் என்ற கொள்கையை அனைத்துத் திட்டமிடுவோரும் கடைப்பிடிக்கின்றனர். அண்மைப் பொருளாதார வடிவமைப்பால் உற்பத்தி செய்ய இயலாது என்று நாம் ஏன் பரிசோதிக்காமலே முடிவு கட்ட வேண்டும்?

5. ஒரு திட்ட வரைவு இருந்தால் அதை அனைத்து மக்களும் பின்பற்றுவார்கள்

“நாம் எல்லோரும் மிக நல்ல திட்டங்களைக் கனவு காண்கிறோம்; அதில் உள்ள யாருமே நல்லவர்களாய் இருக்கத் தேவை இல்லை என்பது போல்!” என்று காந்தி நம் திட்டமிடலை நையாடுவார் (We dream of systems so good that no one in it needs to be good). சாலை விதிகளைக் கூடச் சரியாக மதிக்க விருப்பமில்லாத நம் நாட்டில் மிகப் பெரும் மையப் படுத்தப்பட்ட திட்டங்களைத் தீட்டி அவற்றை 120 கோடி மக்கள் பின்பற்றுவார்கள், அத்திட்டச் செயல் பாட்டில் எந்த ஊழலும் இருக்காது என்று எண்ணுவது என்ன மூடத்தனம்!

6. இயந்திர உற்பத்தியால் அனைவருக்கும் வேலைகள் உருவாக்க முடியும்

நவீனத் தொழிற்சாலைகளில் ஒரு வேலை உருவாக்க 10 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு தேவைப்படுகிறது. இவ்வளவு பேருக்கும் வேலைகள் உருவாக்க எவ்வளவு லட்சம் கோடி தேவை! யார் முதலீடு செய்வார்கள்? மேலும் முதலீடு செய்யும் அந்நிய வியாபாரிகள் தங்கள் சுயலாபத்திற்குத் தானே முதலீடு செய்கிறார்கள் - தேச சேவைக்கா?

7. எல்லோருக்கும் அடிப்படைத் தேவைகள் கிடைத்து விட்டால் நிறைவான சமுதாயம் உருவாகிவிடும்
இதைப் போன்ற ஒரு வெகுளித்தனமான அனுமானம் எதுவுமே இல்லை! உடல் வருத்தாமலே அனைத்து அடிப்படைத் தேவைகளையும் அனுபவித்து வரும் மேலை நாடுகளில் , பொழுது போகாமல் பற்பல போதைப் பொருட்களின் புழக்கமும், நெறியற்ற உறவு முறைகளும், பாலியல் குற்றங்களும், துப்பாக்கிக் கலாச்சாரங்களும், கொலை, களவு போன்ற குற்றங்களும், மனநல மருத்துவர்களும் பெருகி வரும் அவல நிலைமை எல்லாரும் அறிந்ததே. மனிதனிடத்து உள்ள மிருக வெறியை நெறிப்படுத்த உடலுழைப்பு மிக வசியம் என்று குமரப்பா அன்றே எழுதியுள்ளார்.

எல்லாம் சரி, ஆனால் எதையும் குறை சொல்வது எளிது; தீர்வுகள் காண்பது கடினம் என்று நீங்கள் சொல்வது தெளிவாய்க் கேட்கிறது. எனவே குறைகளை மட்டும் பட்டியிலிடாமல், தீர்வுகளையும் முன்வைத்து, அவை எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியம் என்பதையும் எடுத்துக் காட்டுக்களின் மூலம் ஆராய்வோம். அனைவரையும் உள்ளடக்கிய, இயற்கை வளங்களைச் சிக்கனமாகச் செலவழிக்கும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய ஒரு பொருளாதாரக் கொள்கை சாத்தியமா? அதை எப்படி வரைவது, எப்படிச் செயல் படுத்துவது என்று அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org