குருஜீ என்று அவரை தெரிந்தவர்கள் பலரால் மரியாதயுடன் அழைக்கப்படும், திரு. ரவீந்தர சர்மா, ஒரு ஆன்மீக நெறியையோ அல்லது மடத்தையோ சார்ந்தவர் அல்ல. அவர் முப்பது காலமாக இன்றைய தெலுங்கானா மாநிலத்தின் ஒரு முக்கியமான ஊராக விளங்கும், அதிலாபாதில், அதைச் சுற்றியுள்ள பழங்குடியினர் சமூகத்தினுடன் வாழ்ந்தும், அவர்களிடமிருந்து கற்றும், தான் கற்றவற்றைப் பிறரிடம் பகிர்ந்தும் வருகிறார். வருடம் முழுவதும் பல கலைகளைச் செய்துவரும், திரு. சர்மா, வருடத்தின் வெவ்வேறு காலங்களில், மண்ணையும், கல்லையும், உலோகத்தையும் மரத்தையும் கொண்டு கலைநயம் மிக்க பொருட்களைத் தன் கைகளினால் படைத்து வருகின்றார். இவர் படிக்கும் காலத்திலிருந்தே தம்மைச் சுற்றியுள்ள இதர சமூகத்தினருடன் பழகியும், அவர்களிடம் இருந்து பல கலைகளைக் கற்றும் வந்தார். முதுகலைப் பட்டம் படிக்க போபாலில் உள்ள பல்கலைகழகத்திற்க்கு இவர் சென்றபோது, அங்குள்ள பேராசிரியர்களைவிட இவருக்கு அதிகம் தெரிந்திருந்ததால், இவரை ஒரு ஆசிரியராகவே அந்தக் கல்லூரி நடத்தியது. சிறிது காலத்திற்க்குப் பின் கல்லூரி வாழ்க்கை தமக்கு ஒத்துவராது என்று விட்டு விலகிய திரு. சர்மா, தமது அடுத்த 30 வருடங்களில் பெரும்பாலும், “பாண்டு” (காற்சட்டை) அணிந்தவர்களின் சகவாசத்தையும், பேசுவதையுமே தவிர்த்து, பழங்குடிமக்களிடமிருந்தே தனது கலை, இலக்கியம் மற்றும் சித்தாந்த பாடங்களை கற்றார். இப்பகுதியில் இவர் செல்லாத கிராமமே இல்லை என்கிற அளவில், இவர் அனைத்து தரப்பட்ட பழங்குடியினருடனும் பழகி, அவர்களின் ஊர்களில் தங்கியும், அவர்களுடன் கற்றும் வந்துள்ளார். தண்டகாரண்யம் என்று அழைக்கப்படும் இந்திய மையப் பகுதியில் பெரும் பழங்குடியை சேர்ந்தவர்கள் வாழும் பகுதியின் தெற்கு கோடியான தெலுங்கானா பகுதியில் வாழும் பழங்குடி ஜாதிகளின் புராணங்களை அவர்களின் கலைகளைக் கொண்டே, “சித்திரபாடம்” என்னும் ஒவியமாக வரையச்செய்து அவர்களது மறைந்துவரும் பாரம்பரிய சித்தாந்தம், வாழ்க்கைமுறை, மற்றும் கலைகளைக் காக்கும் பணியில் திரு. சர்மா ஈடு பட்டு வருகிறார். இந்த சித்திரபாடம் இப்பகுதியில் வாழும் பழங்குடியைச் சேர்ந்த பல திருவிழாக்களில் பார்வைக்கு வைக்கப்பட்டு அவர்களாலேயே பாதுகாக்கப்படுகின்றது. மாவோயிஸ்டுகள், தனி தெலுங்கானா, என்று பல அரசியல் இயக்கங்களும் இயங்கும் சூழலில், அமைதியாக, “கலாஆஷ்ரம்” எங்கின்ற பெயரால் ஒரு எளிய கலை சாலையை நிறுவி அங்கு வசித்தும், வாழ்ந்தும் வருகின்றார். சமீபத்தில் நடந்த ஒரு கலந்துரையாடலில், திரு. சர்மா, இந்திய பாரம்பரியத்தைக் குறித்தும், அதன் சில பரிமாணங்களைக் குறித்தும் பேசியதை நேரில் கேட்டு, தொகுத்தது :
நவீன நாகரீகத்தின் தாக்கம், இந்திய சமூகத்தை எப்படிப் பாதித்துள்ளது என்ற கேள்விக்கு, பதிலளித்த குருஜீ, “நமது நாகரீகத்தில், பாரம்பரியமாக சாதாரண மனிதன் என்றும் தன் உயிர்வாழ்தலுக்காக மிகவும் மெனெக்கட வெண்டியதில்லை”, என்று பேசத்துவங்கினார். “இந்திய பாரம்பரியத்தில் தனி நபர் சம்பாதித்தல் மிக முக்கியமாக கருதப்பட்டதில்லை. ஒரு சமூகம் சம்பாத்தித்ததெல்லாம், அந்த சமூகத்தின் நலனுக்காகவும், அதுவே அந்த சமூகத்தின் அரணாகவும் கருதப்பட்டது. இதனாலேயே தனி நபர் வருமானத்திற்கும், தனிநபர் சொத்திற்கும் தேவையில்லா முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை, அவர்களது ஆன்மீக வாழ்விற்கு முக்கியமான அகங்கார நீக்கலுக்கும் இத்தகைய நிலையே உகந்ததாகக் கருதப்பட்டது. இந்திய சமுதாயத்தில், உணவு என்றும் விற்கப்படவில்லை என்பதும் நாம் முக்கியமாக அறியவேண்டிய விவரம். பகிர்ந்துண்ணும் தன்மை இதனாலேயே நமது சமூகத்தில் பெருகியிருந்தது.
“நான் வசித்துவரும் பழங்குடியினர் மத்தியில் 1980 களில் தான், “முன்னேற்றம்” ஏற்பட துவங்கியது, அதற்கு முன் நாங்கள் தற்சாற்புடன் வாழ்ந்துவந்தோம். நாங்கள் வசிக்கும் பகுதிகளில், கானகங்கள் பெரியதாகவும், வீட்டில் அடுப்பு சிறியதாகவும் இருந்தது. எங்களுக்குத் தேவையான பல உணவுகளும், காட்டிலிருந்தே கிடைத்ததே இதற்குக் காரணம். சமீபத்தில், பஞ்சாபிற்கு சென்றச் போது கவனித்தேன், அங்கு கானகங்கள் சிறிதாகவும், அடுப்புகள் பெரியதாகவும், மொத்த சமூகத்திற்கு உணவளிக்கும் விதத்திலும் அமைந்திருந்தன. நாங்கள் சித்திரை மாதத்தில் எந்த மரத்தின் கிளைகளையும் ஒடிக்க மட்டோம். புதிய துளிர் விடும் காலத்தில், புளி உட்பட அனைத்து மரங்களையும் விட்டு வைப்பது என்பது எங்கள் சமூகத்தின் கோட்பாடாகவே இருந்துவந்துள்ளது. ஆனால், இன்று, இத்தகைய கோட்பாடுகளை “மூட நம்பிக்கை” என்றே சித்தரிக்கபடுகின்றன.
நமது சமூகங்களில் முன்பு மானத்திற்கு அதிக மகத்துவம் தரப்பட்டது, இன்று வெறும் ‘இனாம்’ (கூலிக்கு) மாத்திரமே மகத்தானதாக கருதப்படுகிறது. இந்த நிலை ஏற்புடையதல்ல, மாற்றபடவேண்டியது. ஒரு சமூகம் தன்னிறைவு பெற்றிருந்தால் தான் அந்த சமூகத்தில், பண்டிகைகளும், சடங்குகளும் அதிகம் நிறைந்து இருக்கும். இந்திய சமூகத்தில் பெரும்பாலான சடங்குகள் மற்றும் பண்டிகைகள் அந்தந்த சமூகத்தில் உள்ள கலை வினைஞர்களை ஆதரிக்கும் விதத்தில் அமைந்ததாகவே நான் கருதுகிறேன். எங்களது ஊர்களில் 21 ஜாதியைச் சேர்ந்தவர்கள் கோயிலைச் சுற்றி வசித்து வந்துள்ளனர். முக்கியமான ஊர் திருவிழாவில், இவர்கள் அனைவருக்கும் பங்கு உண்டு. முக்கிய பங்குதாரர்கள் பலர் 1 மாதம் விரதம் இருந்து இந்த திருவழா சிறக்கப் பாடுபட்டனர். இவர்களை ஜாதி வேற்றுமை பாராமல் முழு ஊரும் கௌரவித்தது. இத்தகைய 1 மாதம் விரதமிருத்தலை மிகப்பெரிய மரியாதையாகவே மக்களும் நோக்கினர். இதை தங்கள் குடும்ப மானத்திற்கு ஒப்பிட்டு வந்தனர்.
இறந்தவருக்கு கோயில் மரியாதை
தென் தமிழகத்தின் முக்கியமான கோயில்களில் ஒன்றில் ஒருமுறை நிகழ்ந்தது, நேரில் கண்டது – கோவிலின் வாசலில் அர்ச்சகரிடம் ஒரு வயதானவர் மிகவும் வருத்ததுடன் பெசிக்கொண்டிருந்தார், “இவர் சம்சாரம் மறைந்துவிட்டார், அதனால் கோவிலின் தரப்பில் மரியாதை செய்யவேண்டும் என்று விரும்புகிறார்”, நம்மை கண்ட அர்ச்சகர் விளக்கினார்: “இவர்களின் பூர்வீகம் இந்தபக்கம், ஆனால், இப்பொது வேறு ஊருக்குக் குடிபெயர்ந்து விட்டனர், ஆனால், இவர்கள் பல பரம்பரையாகக் கோவில் பணியில் இருந்த குடும்பம், இப்போது இவர்களால் பங்கு கொள்ள இயலவில்லை”, “அப்படியானால் இன்னமும் அவர்கள் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு மரியாதை செய்வீர்களா?” என்றேன் நான். “நிச்சயமாக! என்னதான் இருந்தாலும் குடும்ப மதிப்பு விட்டுக்கொடுக்கக் கூடாது” என்றார். குருஜீ மதிப்பு மற்றும் மரியாதை நமது சமூகங்களில் மிக முக்கியமான இடத்தில் இருந்தது என்று குறிப்பிட்டபொழுது, இந்த நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.
இன்றய நிலை என்னவென்றால், நமது மக்கள், இத்தகய சமூகக் கோட்பாடுகளை நமது பாரம்பரிய நோக்கினை விடுத்து, வேற்று, வெளியோர் கண்ணோட்டதின் வாயிலாகக் காண்கின்றனர். அதனால், இத்தகைய சமூகத்தை ஒண்றிணைக்கும் பண்டிகையும், சடங்குகளும், இன்று, தேவையில்லாத ஒரு மூடநம்பிக்கை என்று நமது மக்களே எண்ணத் தொடங்கியுள்ளனர்.
நமது நாட்டில், கல்வியின் அடிப்படை நோக்கம், இத்தகைய சமூகத்தின் தன்னிறைவைத் தக்கவைப்பதும், மேம்படுத்துவதுமே ஆகும் என்று நான் கருதுகிறேன். ஊர், என்னும் சொல், இந்தியாவின் பல பகுதிகளில், ‘பிண்ட்’, ‘ஷரீர்’, என்று, உடலைக் குறிக்கும் சொற்களுடன் இணைந்தே பயன்படுத்தப்படுகின்றது. அதாவது, ஊர் என்பது நமது மக்களின் புரிதலில், பொருளாதார அடிப்படையிலான ஒரு உடலாகவே பாவிக்கபட்டது.
நமது ஊர்களில் ஒரு பழமொழி உண்டு, “பகிர்தல் நாடினால் விவசாயம் செய்வோம், சுகத்தை நாடினால் வேலை செய்வோம், பொருளீட்டலை நாடினால், வியாபாரம் செய்வோம்” என்று. இன்று பெரும்பாலானவர்கள், வெரும் சுகத்தை நாடி, வேலை செய்பவர்களாகவே வாழ விழைவதுதான் இன்றைய கெடு நிலைக்கு முக்கிய காரணம். இந்த “வேலையாள்” மனப்பான்மையை நமது மக்கள் மத்தியிலிருந்து அகற்றுவதே நமது கடமையாகும்.
நமது சமூகங்களில் பெரும்பாலும் விளைபொருட்கள் சொந்த தேவைகளுக்காகவும், மிஞ்சியவை தானத்திற்க்கும், சில சமயங்களில், வெளி கிராமத்துடன் வியாபாரத்திற்கும் பயன்படுத்தப்ப்பட்டன. தானம் தருவதின் மூலம், சமூகம் மேம்பட்டது, உள்ளூரில் வியாபாரம் தவிர்க்கப்பட்டது. சிறு தொழில் நுட்பங்கள் கொண்டு இயங்கும் சிறு வர்த்தகங்கள் இத்தகைய சூழலில் செழித்தன. இத்தகைய தொழில்நுட்பம் சமூகத்தின் நிர்ணயத்தில் இயங்கின, ஆனால், பெரிய தொழில்நுட்பங்கள், பெரும் பொருள் மூலதனம் கொண்டு நிறுவப்பட்டு, இன்னமும் பெரிய அளவில் அதனைப் பராமரிக்க ஆட்களும், பொருளும் தேவை என்னும் நிலையில், சமூகத்தின் நிர்ணயத்தின் பெயரில் அவை இயங்க வழியில்லாமல் போகின்றன. இத்தகைய தொழில் நுட்பங்கள் இதனாலேயே தவிர்க்கப்பட்டன. நமது சக்திகள் பல்வேறுபட்ட விதத்திலும் இயங்கின, இதனாலேயே, நமது மூலதனத்தின் மற்றும் தனத்தின் கணக்கும் பலதரப்பட்டு இயங்கிவந்தன, ஆனால், இன்று அவை அனைத்தும் ஒரே விதமான சக்தி (அல்லது மின்சாரம்) கொண்டும் அதனை ஒத்த மூலதனம் மூலமாகவே கணக்கிடப்படுகின்றன.
நவீனமயமாக்கல், நம்மிடம் இருந்த பாரம்பரியத்தை குறைசொல்லித் தன்னை பெரிதுபடுத்தி கொண்டுள்ளதே தவிர, தனக்குள்ள நன்மைகள் எதையும் பெரிதுபடுத்தி அது முன்னேறவில்லை. எங்கள் பகுதி கிராமங்களில் எந்த ஒரு தீர்வும் விவாதங்கள் இல்லாமல் முடிவு செய்யப்படவில்லை. விவாதம் நடந்தால் அனைத்து தரப்பினரின் பங்கும் அதில் அடங்கும், அத்தகைய தீர்வில் அனைவரின் பங்களிப்பும் தொடர்ந்து இருக்கும். தனிநபர் ஆர்வமும், பயமும் அத்தகைய தீர்வுகளில் சமூகத்தின் பொது நலனிடம் அடங்கிவிடும்.
இன்றைய சமூகவியலில் நாம் நமது இத்தகைய கூறுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்பில்லாமல் போகின்றது; ஏனெனில், இன்றய சமூகவியலில் நாம் நமது ஜாதி புராணங்களை படிப்பதில்லை. நமது ஜாதி புராணங்களில், சமயங்களுக்கு பெரிய பங்கு இருப்பதாகத் தெரியவில்லை. மனிதருக்கு இடையேயான இணைப்புகளையும், சுற்றுபுற சூழலுடன் மனிதருக்கு இருந்த இணைப்புகளையும் இந்த புராணங்கள் பெரும்பாலும் தொகுத்துள்ளன. “குடும்பம்” என்னும் சொல் நமது கிராமங்களில் அனைத்து சடங்குகளில் பங்கு கொள்ளும் இதர ஜாதியை சேர்ந்தவர்களையும் சேர்த்தே குறிக்கின்றது. இதில் பெரும்பாலும் பங்கு கொள்ளும் கலைஞர்களும் அடக்கம்.
மாடில்லா மனை பாழ்
இந்தியாவின் கீழ்க்கோடியில் உள்ளது நிகொபார் தீவு. இந்த தீவு 2004இல் ஏற்பட்ட சுனாமியின் போது முழுவதுமாக சிதிலம் அடைந்திருந்தது. புனர் அமைப்புப்பணிகள் நடந்த சமயத்தில் இந்திய பெருநகரங்களை சேர்ந்த சில கட்டிட நிபுணர்கள், அங்குள்ள மக்களுக்கான புதிய வீடுகளை கட்டும் பணியில் ஈடுபட்டனர். உயிர்களையும், உறவுகளையும் இழந்த பலரும் இந்தப்பணிகளை பல மாதங்கள் கழித்துத்தான் பார்வையிட முடிந்தது. பார்வையிட்டவர்களோ அன்று முகம் சுழிக்கும் அளவில் அந்த வீடுகள் அமைந்தது, ஏன்? “மாடு கட்டவே இடமில்லாது இந்த புதிய குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது!” என்று கூறிய அவர்கள், மாடுகளுக்கு இடமில்லாத சூழலில் தாங்களும் அங்கு குடியிருக்க இயலாது என்று தெரிவித்தனர். கிராமத்து வாழ்க்கையில் வீடுகளின் அமைப்பும், அதன் தேவைகளும், நவீன கட்டிடத்தொழிலைப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் உணர்வதில்லை. பெரும் நகரத்தில் குடிசைப்புற மேம்பாடு என்று அமைக்கப்படும் பல கட்டிடங்களும், யாரும் குடிபுகாமல் இருக்க காரணம் இதுவே!
நமது இன்றைய தலைமுறை நமது கிராமங்களைக் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் –
(1) வெறும் வருமானத்திற்காக யாரும் ஊரைவிட்டு ஒரு இரவு கூட வெளியில் தங்கவேண்டிய தேவை இல்லாதிருந்தது
(2) ஊருக்குள் வந்த அனைவருக்கும் எந்த எதிர்பார்ப்புமின்றி அன்னமிடப்பட்டது
(3) மக்களின் வசிப்பிடம், அதாவது, வீடு மற்றும் கிராம அமைப்பு, இத்தகைய வாழ்க்கை நெறியைப் பேணுவதற்கு உகந்ததாகவே கட்டமைப்பட்டது. இன்றைய வீடுகளும், கிராமங்களும் எந்த ஒரு தொடர்புகளையும் பேணுவதற்காக கட்டமைக்கப்படவில்லை, மாறாக, உலகமயமாக்கப்பட்ட பொறுளாதார சந்தையில் நம்மை ஒரு அங்கதினராக்குவதற்கு உகந்ததாக உள்ளன என்பதே உண்மை.”
திரு. சர்மா, நாம் ஒரு தற்சார்பு சமூகமாக வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து மிகத் தொலைவிற்க்கு சென்றுவிட்டதாக நினைக்கவில்லை. அவர் இதற்குச் சான்றாக பழங்குடியினரின் வாழ்வின் பல பழக்க வழக்கங்களை எடுத்துரைக்கிறார். இவரின் சொற்பொழிவு, தொலைந்துபோன வாழ்முறை தொலைவில் இல்லை என்று நம்பிக்கை ஊட்டுகின்றது. இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நமது சமூகத்தை மேற்கத்திய சமூகவியல் கண்ணாடிகளை அணியாமல் நோக்க, ஆணித்தரமாகவும், அதிகாரபூர்வமாகவும், தனது அனுபவத்தின் வாயிலாகவும் நமக்கு இந்திய வாழ்வியல் கோட்பாடுகளை கற்பிக்கிறார் திரு.சர்மா. பேசுவதை வாழ்வதை விடத் தன் வாழ்வே தன் பேச்சாக நடந்து காட்டும் திரு. சர்மா உண்மையிலேயே, பெருமைமிக்க இந்திய குருமார்கள் எப்படிச் சாதாரண மக்களின் மத்தியில் வாழ்ந்திருப்பார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.